Wednesday, December 29, 2010

செம்மொழிப் பூங்காவுக்கு ஒரு விசிட்!'எட்டு கோடி ரூபாயில்..சுமார் எட்டு ஏக்கரில் (7.94 ஏக்கர்) ஊருக்கு மத்தியில் சென்னையில் ஒரு பூங்கா'ன்னு விளம்பரம்.. சன் டிவியில் மக்கள் கூட்டத்தை வேறு காட்டினார்களா.. ஒரு நடை போயிட்டு வந்திடனும்னு தோணிச்சு. தவிரவும், ப்லாக் பக்கம் வந்து ரொம்ம்ம்ப்ப்ப நாளாச்சா..இதையும் ஒரு பதிவா போட்டு கணக்கையும் புதுப்பிச்சிரலாம்னு முடிவு பண்ணி போயாச்சு..

பரபரப்பான சாலையில்..வாகனப் புகைகளுக்கு மத்தியில்...சட்டென்று ஒரு பசுமைக்கான இடம்... நிஜமானத் தேவைதான். முன்னாள் உட்லண்ட்ஸ் 'ட்ரைவ்-இன்' போய் வந்தவர்கள், அந்தத் தனிமை இழப்பை உணரக் கூடும்.

கார் நிறுத்த 3 மணி நேரத்திற்கு பத்து ரூபாயும், இரண்டு சக்கர வாகனத்திற்கு 5 ரூபாயும் வசூலிக்கிறார்கள். மேலதிக ஒவ்வொரு மணி நேரத்திற்கும், கூடுதல் 5 ரூபாயாம்.
கட்டணம் கண்டிப்பாய்த் தேவைதான், 5 ரூபாய் என்பது குறைவுதான். குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாய் என்று கூட வைத்திருக்கலாம். 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசம், என்பது வரவேற்கத்தக்கது.

நிறையப் பூங்காக்களைப் பார்த்ததின் எண்ணச்சிதறலோடு, எட்டு கோடியும், எட்டு ஏக்கரும் ஏற்படுத்திய எதிர்பார்ப்போடு காரை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தேன். 'செம்மொழிப் பூங்காவின் வாயில் முகப்பு' அழகு. 'செம்மொழிப் பூங்கா' என்று எழுதிய எழுத்து சற்று வித்தியாசமாய் இருக்கவே, வரலாற்றுப் பாணியோ என்று எண்ணினேன், அப்புறம்தான் தெரிந்தது, அது கலைஞரின் கையெழுத்து வடிவாம். 'இந்த வயதிலும் கலைஞரின் தெளிவும்/உழைப்பும் வியக்கத்தக்கதுதான்' என்று எண்ணிக்கொண்டே உள்ளே நுழைந்தேன்.


முகப்பு நன்றாய்ப் பசுமையாய் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. நிறைய மக்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
உள்ளே நுழைந்ததும், சாரலாய்த் தூறல் விழுந்தது... உபயம்..பக்கத்திலிருந்த நீர்வீழ்ச்சி. எதிர்புறத்திலும் சிறுகுளம் கட்டி நீர் விட்டிருந்தார்கள். நவம்பர் 23, 2010 அன்றுதான் திறந்திருக்கிறார்கள், இன்னமும் சில வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. Musical fountain-க்கான வேலைப்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. இன்னும் ஓரிரு நாளில் ரெடியாகிவிடுமாம். பூங்கா திறந்து ஒரு மாதம்தான் ஆகியிருக்கின்றது, அதற்குள் குளத்தின் உட்புறம் பாசி படியத்துவங்கிவிட்டது. வருகின்ற குழந்தைகள், அதில் கை வைத்து விளையாடும்போது.. 'அது நல்ல தண்ணியா..கை வைக்காதே' போன்ற குரல்கள் பெற்றோரிடமிருந்து...
பூங்கா உள்நுழைந்த இடப்புறமே, குழந்தைகள் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு இருக்கின்றது. இன்னும் கொஞ்சம் தள்ளி, பூங்காவின் மையத்தில் வைத்திருக்கலாம். உள்ளே நுழைகின்ற கூட்டம், இங்கேயே தங்கிவிடுவதால், புதிய பார்வையாளர்கள் உள்ளே நுழையத் தாமதாமாகிறது. புதிய பூங்காவாக இருப்பதாலும், பள்ளி விடுமுறையாக இருப்பதாலும் இந்தச் சிரமம் இருக்கலாம். மேலும், எட்டு ஏக்கர் பூங்காவில், இது ஒரே ஒரு ஆடுகளம் மட்டுமே.

குழந்தைகளுக்கான விளையாடுகளமாயிருந்தாலும், சில 'பெருங்' குழந்தைகளும் அதைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். மேற்பார்வைக்கு யாரும் இல்லை. குழந்தைகள் அவர்களாகவே வரிசையில் வந்தது அழகு.
பூங்காவைச் சுற்றி வருவதற்கென கற்களால் அமைக்கப் பெற்ற பாதை, மேடு பள்ளங்களுடன் சமமில்லாமல் அகன்ற இடைவெளி விட்டு இருந்தது. அகன்ற இடைவெளி ஊடே புற்கள் வைக்கத் திட்டமாய் இருக்கலாமோ? ஊரினுள் ஆங்காங்கே இருக்கும் 'லோக்கல்' பூங்காக்களின் நடைபாதைகள் கூட அழகாய் இருக்க, 'உலகத்தரம் வாய்ந்தாய் விளம்பரப்படுத்தப் படுகின்ற 'செம்மொழிப்பூங்கா' மேடுபள்ளத்தோடு இருப்பது அழகல்ல. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்தால் நலம். நடைப்பயிற்சிக்கென வருபவர்களிடம் மாதம் ரூபாய் 150 வசூலிக்கப்படுவதைக் கொண்டு கூட சிறப்பாக வைத்திருக்கலாம்.
கூடுமானவரையில் எல்லாச் செடிகளுக்கும் பெயர் எழுதி வைத்திருக்கிறார்கள். சிறு செடிகளுக்கான பெயர்ப்பலகைகள், மண்ணில் ஊன்றப் பட்டு இருந்தன. இந்தப் பலகைகள் எத்தனை நாள் நீடிக்குமோ? முகப்பில் பூத்திருந்த சிறுசிறு மலர்கள் நன்றாயிருந்தன.ஆங்காங்கே நீர்வீழ்ச்சிக்கென நீர்நிலைகளும், தொட்டிகளும் கட்டப்பட்டு இருந்தாலும், முழுமையாய் இன்னமும் செயல்படவில்லை. இருந்த நீர்நிலைகளில், நீரும் குறைவு, தூர்வாரப்படாமல் சேறும் சகதியும்தான் கண்ணில் தெரிந்தது. வாத்துக்களும் கூட, ஒற்றைக் காலில் தவம் புரிந்து கொண்டிருந்தன. பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்களிடம், 'என்ன இப்படி வச்சிருக்காங்க'ன்கிற 'கமெண்டுக'ளைக் கேட்க முடிந்தது.
மூங்கில் பூங்காவும், போன்சாய் மரங்களும் வைத்திருக்கிறார்கள். நல்ல விஷுவல். ஆங்காங்கே, சிறு படர்கொடி மண்டபங்கள் கட்டியிருக்கிறார்கள், இனிதான் கொடிகள் வளரவேண்டும். வருகின்ற மக்கள் கூட்டம், செடிகளைச் சேதப்படுத்தாமல் இருக்க வேண்டும்.
திறந்தவெளி அரங்கும் உள்ளே அமைத்திருக்கிறார்கள். இதற்கான பிரத்யேக வாடகை ரூபாய். 15 ஆயிரமாம். இப்போதைக்கு பார்வையாளர்கள் கூடுமிடம் இதுதான். மிகச் சிற்சில இடங்களிலேயே பார்வையாளர் இருக்கைகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. இன்னமும் நிறைய அமைக்கப் பெறலாம். நறுமண மலர்கள், வண்ணத்துப் பூச்சிகள் இருப்பதாய்ப்/பறப்பதாய் வர்ணனைகள்/விளம்பரங்கள் கொடுக்கப்பட்டாலும், அதை உணர முடியவில்லை. SLR-காமிராவுடன் வந்திருந்த பார்வையாளர் ஒருவர், 'ச்சே..சூப்பரா இருக்கும்னு நினைச்சு வந்தேண்டா'ன்னு புலம்பியதைக் கேட்க முடிந்தது. செடிகள் எல்லாம் இப்போதுதான் வைக்கப்பட்டு இருப்பதால், இன்னும் சில மாதங்கள் ஆகலாம், அப்பார்வையாளரின் எதிர்பார்ப்பு நிறைவேற..

பூங்காவின் முகப்பில் காணப்பெற்ற பசுமையும், ஈரப்பசையும் பூங்காவின் உட்புறம் உணரமுடியவில்லை. நிறையப் பராமரிப்புத் தேவைப்படும்/படுகின்றது. போகப்போகத்தான் தெரியும், எப்படிச் செய்யப் போகிறார்கள் என்பது.'எட்டு ஏக்கர்...எட்டு கோடிக்கு இவ்வளவுதான் செய்யமுடியுமா என்ற பொதுஜன ஏக்கத்தோடு பூங்காவைச் சுற்றிப்பார்த்து, வெளியேற , பூங்காவின் முகப்பிற்கு வருகையில், மேலே பார்த்தால் 'நன்றி...மீண்டும் வருக' என்றிருக்கும் என்று நினைத்தால், 'டாக்டர் கலைஞர் வாழ்க' என்றிருக்கிறது. 'ம்ம்ம்.... '...என்று அசைபோட்டுக் கொண்டே வெளியே வந்தேன்..
என்ன இருந்தாலும், நகருக்கு மத்தியில் இப்படியொரு பூங்கா...உண்மையிலேயே வரவேற்கத்தக்க முயற்சிதான்!

8 Comments:

said...

படங்களுடன் பகிர்வு அருமை.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

said...

'டாக்டர் கலைஞர் வாழ்க' என்றிருக்கிறது...
நான் சென்றிருந்த போது
மாண்புமிகு முதல்வர் கலைஞர் வாழ்க..என்றிருந்தது..[என் பதிவில் பார்க்க]http://haasya-rasam.blogspot.com/2010/12/blog-post_05.html
சும்மா சொல்லக் கூடாது இனிவரும் முதல்வரும் முதல்வரும் கலைஞராகத்தான் இருப்பார் என்று கணித்திருக்கிறார் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

said...

நன்றி ராமலஷ்மி மேடம்..

சென்ற வருடத்தில் நிறைய கலக்கியிருக்கீங்க..

புதுவருடத்திலும் உங்கள் 'செம்மொழிப் பணி' தொடர வாழ்த்துக்கள்!

said...

கோமா மேடம்...

இப்போதும் அப்படித்தான் இருக்கிறது..


முன்னாடியே போய்ப் பார்த்து கவிதை நடையில் கலக்கியிருக்கீங்க..

புதிய வருடம் இனிமையாய் இருக்க வாழ்த்துக்கள்!

said...

கலைஞர் ஆட்சியில் என்னன்னவோ மாறுது .
இதுவும் மாறிய்ருக்குமோ என்று நினைத்தேன் ...

said...

வருஷத்துக்கு ஒரு பதிவா? எ.கொ.இ நெ.சிவா அவர்களே?

//எட்டு ஏக்கர்...எட்டு கோடிக்கு இவ்வளவுதான் செய்யமுடியுமா?//

இப்ப இருக்கர விலைவாசியில் ரொம்ப பண்ண முடியாது போலருக்கே? கொத்தனாரு 600 கேக்கறாராமே? :)

தொடர்ந்து கவனிச்சு மேம்படுத்துவாங்கன்னு வேண்டுவோம்.

said...

ஆட்சியாளர்கள் மாறலாம். ஆனால் எல்லாம் எப்போதும் இப்படித்தான் நடக்கிறது :)

said...

“This is such a great site with tons of cool stuff. I’ll be sure to bookmark!”
Keep Posting.
Have a nice day :-)
Blogger Tips And Tricks