Tuesday, June 24, 2008

******** ஸ்டார் *******


நள்ளிரவு 12.00 மணி. மழை 'சோர்'னு கொட்டிக் கொண்டிருந்தது. வலுவான மழையில் சிக்னல் விளக்குகள் ஒளிச்சிதறலுடன் மின்னிக் கொண்டிருந்தது. இடியும், மின்னலும் விட்டுவிட்டு தாக்கிக் கொண்டிருந்தது. இரவு பன்னிரண்டு மணியானதால், அண்ணா சாலையிலும் போக்குவரத்து குறைந்து இரண்டும் ஒன்றுமாய் அவ்வப்போது கார்கள் பறந்து கொண்டிருந்தன. நிசப்தமான நேரமாகையால், வண்டிகளின் சக்கரங்கள் தண்ணீருடன் உராய்ந்து 'சலக்சலக்' என்று சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தது. தூரத்தே மழையைக் கிழித்துக் கொண்டு வருவதுபோல், வேகமாய் அந்த டோயோட்டோ கார் ஓளிப்பாய்ச்சலுடன், தரையின் தண்ணீரைக் கிழித்து நீரலைகளை எழுப்பிக் கொண்டு வந்தது. ஆளரவம் இல்லாததால், அந்த வண்டியின் ஓட்டுநரும் அழுத்திக் கொண்டு வந்தார் போலும்.
ஸ்பென்சர் ப்ளாசாவைத் தாண்டிய வேகத்தில், சடுதியில் அண்ணா மேம்பாலம் நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தது. 'ட்ரைவர், பாலத்து வழியா போக வேண்டாம், கீழ்பக்கமா போங்க'ன்னு ஒரு கிளிப்பேச்சு பாவை பேசியது. எதிரே வந்த வாகனத்தின் ஒளி பட்டு, அவளது கழுத்தின் நகை மின்னியது. மேனியும்தான். மெல்லிய உதட்டுச் சாயமும், எலுமிச்சை நிறமும் அந்த மெல்லிய் ஒளியிலும், அவளை மேலும் அழகாய்க் காட்டியது. சன்னமாய் ஓடிக் கொண்டிருந்த ஏஸியும், அவள் உபயோகப் படுத்திய ஃபெர்ப்யூம் மணத்தோடு ரம்மியமாய் மணந்து கொண்டிருந்தது.


இத்தனையையும் ரசித்துக் கொண்டு ஓட்டிக் கொண்டிருந்ததாலோ என்னவோ, ட்ரைவருக்கு அவள் பேசியது காதில் சரியாய் விழவில்லை போலும். அரைகுறையாய் ஏதோ கேட்டது போல் தோன்றியதே என்ற எண்ணத்தோடு, 'மேடம்.. எதுனாச்சும் சொன்னீங்களாம்மா?' என்றான். 'அட..ஆமாய்யா.. ரூட்ட விட்டுடப் போற..பாலத்துக்கு கீழே வழியா போன்னேன்' என்றது பாவை. அதற்குள் பாலம் அருகில் கார் வந்துவிடவே, சர்ரக் என்று ஒடித்து பாலத்தின் கீழே வண்டியைத் திருப்பினான். லேசாய் ப்ரேக்கை அழுத்தியதாலே, மழையின் வழுக்கலோடு, சின்னதாய்ச் சத்தம் எழுப்பி அமெரிக்கத் தூதரக அலுவலகம் வழியே திரும்ப எத்தனித்தது. திரும்பியவன், பக்கவாட்டில் வண்டிவரவே வேகத்தை மிதப்படுத்தினான்.


திடிரென 'தடதட' என யாரோ வண்டியைத் தட்டும் சத்தம் கேட்கவே, பக்கவாட்டு வண்டி கடந்து செல்வதற்காக காத்திருந்தவன் பதறித்தான் போனான். பார்த்தால், வண்டிக்கு இடதுபுறம் மெல்லிய வெளிச்சத்தில் அழுக்கு லுங்கியுடன், மழையில் நடுங்கியவாரே கடாபுடா மீசையுடன் ரவுடிக்கு நெருங்கிய தோற்றத்தில் ஒருவன் நிற்பது தெரிந்தது. ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவதை உணர்ந்தவன் மாதிரி, ட்ரைவர் வண்டியை எடுக்க எத்தனிக்க... 'ங்கோ..' என்று வார்த்தையுடன் உறுமியபடியே மிகச் சத்தமாய் மீண்டும் ஓங்கி அடித்தான். இரண்டு அடி கூட நகர்ந்து இருக்காது, அதற்குள் இன்னொருவன் அந்த மழையிலும் பீடியை அணைப்பாய்ப் பத்திரப்படுத்தி, ரசித்துப் புகைத்தவாரே 'டபக்' கென்று காரின் முன்னால் குதித்து நின்றான். வேறு வழியில்லை, நிறுத்துவதைத் தவிர. 'அம்மா ஜாக்கிரதைம்மா'ன்னு பின்பக்கம் சொல்லியவாரே நிறுத்தி நின்றான்.


அந்த பீடிக்காரன் ஜன்னலை இறக்குமாறு சைகை பண்ணிக் கொண்டே, ட்ரைவர் இருப்பிடம் நோக்கி வந்தான். பயத்தில் ஜன்னலை இறக்கியவாரே, 'என்னப்பா?' என்று வினவ.. 'ஏண்டா..பொறம்போக்கு... வண்டிய நிறுத்தச் சொன்னா நிக்கமாட்ட'ன்னு சொல்லிக் கொண்டே அவன் தலையைப் பிடித்து கதவில் மோதினான். 'சாரிங்க...'ன்னு ட்ரைவர் முனகியபடியே தலையை உள்ளே இழுக்க முயல, ஜன்னலின் வழியே குனிந்து அவன் தலையை இழுக்க முற்பட்ட போதுதான், அந்த பீடிக்காரன் பின்சீட்டு பாவையைப் பார்த்தான். 'அட...ஷோக்கா கீராடா பிகரு'ன்னு முனகியபடியே பின்சீட்டு நோக்கி நகரலானான். பாவைக்கு உதறலெடுத்தது..ட்ரைவருக்கும்தான்.

'டேய் லோலு..பின்னாடி பிகருடா..'ன்னு அந்தப்புறம் இருந்த அழுக்கு லுங்கிக் காரணுக்கு தகவல் கொடுத்து, பின் பக்க கதவைத் திறந்தான்.., அந்தப் பக்கக் கதவை அழுக்கு லுங்கி திறந்தது. பார்த்த மாத்திரத்தில், 'மாப்பு...பார்ட்டி குத்தாட்ட குமுதஸ்ரீடா'ன்னான். 'என்னா மாமு சொல்றேன்னு' கேட்டுகிட்டே பீடிக்காரன் பாவையைப் பார்க்க, 'அட ஆமாடா.. திம்மு..திம்மு..திம்மு..திம்மு..திம்முன்னு திம்மு...கும்மு..கும்மு..கும்மு..கும்மு..கும்முன்னுதான் கும்மு'ங்கிற பாட்டுக்கு ஆடுவாளே..அந்தப் பிகருதானா இது, வசமா மாட்டிக் கிருச்சுடோய்'ன்னு.. சொல்லிக் கொண்டே அவளருகில் போனான்.
மழையையும், இசையையும் ரசித்துக் கொண்டு வந்த குமுதஸ்ரீக்கு அதிர்ச்சியாய்த்தான் இருந்தது. பீடி நாத்தமும், சாரய நெடியும்...குமட்டிக் கொண்டுதான் வந்தது அவளுக்கு. பயத்தில் சற்றே கையைக் குறுக்கிக் கொள்ள முயல, குளிருக்கு இதமா போர்த்தியிருந்த டவல் நழுவியது.

'இன்னா மாமே... ஏதாவது பொன்னு, காசு மாட்டும்னு பாத்தா, பொண்ணே மாட்டிக்கிச்சு.. மச்சம்டா உனக்கு..ன்னா குமுதா ஓகே தானே'ன்னு பீடிக்காரன் சொல்லிக் கொண்டே காரில் ஏற முற்பட..


'ஏய்ய்..ஏய்..நில்லு..நில்லு...'னு கத்தினாள் குமுதஸ்ரீ. 'இரு மாமு.. குட்டி கதறுதுல்ல'ன்னு லுங்கிக்காரன் கத்த, 'டேய்..அந்தப் பக்கம் போயி ட்ரைவர புடிடா..நீ..குட்டிய நா கவனிச்சுக்கிறேன்' ன்னு சொல்லிக்கிட்டே உள்ளே ஏறினான் பீடிக்காரன். லுங்கி ட்ரைவரை நோக்கி நகர்ந்தது.


'ஏய்..ஏய்..நில்லு.. நில்லு.'னு மீண்டும் குமுதஸ்ரீ கதற, 'கத்துனா..சும்மா சீவிடுவேன்..னு கத்தியைக் காட்ட, 'கொஞ்சம் இருப்பா..நீ கேக்குறத தர்ரேன்..' குமுதா கத்த..சற்றே அடங்கினான் பீடிக்காரன்..

'இந்தா..முதல்ல நனைஞ்சிருக்கிற துணிய கழைஞ்சுட்டு, இந்த துண்டக் கட்டிட்டு வா.. அதுக்கப்புறம் பாக்கலாம்..கார் சீட்ட கெடுத்துராத..'ன்னு மேலே போட்டு நழுவிய துண்டை எடுத்துக் கொடுத்தாள். 'அட..குட்டி புத்திசாலியாதான் இருக்குன்னு' சொன்னபடியே துண்டை வாங்கிய பீடிக்காரன், 'கத்தியை அந்தப் லுங்கிகிட்ட கொடுத்து, 'மாமு.. நா அந்தப் பக்கம் போயி ட்ரஸைக் கழட்டிட்டு துண்டைக் கட்டிட்டு வாரேன்..இந்தப் பக்கம் கத்தியப் புடிச்சுகிட்டு பிகருகிட்ட நில்லுன்னு, உள்ள போயி சீட்ட நனைச்சுராத..வெளியேவே காவலுக்கு நில்லுடின்னு' மிரட்டிட்டு அந்தப் பக்கம் ஒதுங்கினான்.


சற்று ஒதுங்கியது தெரிந்ததும், மிரண்டுபோயிருந்த ட்ரைவரைப் பார்த்து, 'ட்ரைவர், வண்டியை அழுத்துடா'ன்னு ஓங்கி கத்த... சுதாரித்த ட்ரைவர் 'டக்' கென்று வண்டியை அழுத்த, அருகே நின்று கொண்டிருந்த லுங்கிக்காரனைத் தள்ளிவிட்டு, வேகமாய்ப் பறந்தது கார். பறந்த வேகத்தில், அலையாய்ச் சிதறிய தண்ணீர் மீண்டும் சேர்ந்தது. மழை இன்னும் தூறிக் கொண்டிருந்தது. தூரத்தில் புள்ளியாய் செவ்விளக்குத் கண்சிமிட்டி மறைந்து கொண்டிருந்தது.


*****************

படம் உதவி: இணையம்.


4 Comments:

said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்

நல்லா இருக்கு!!

said...

நன்றி மங்களூர் சிவா, எல்லாரும் தசாவதாரம் பத்தி எழுதினாதான் பதில் போடுவாங்கன்னு நினைச்சுட்டேதான் இந்தக் கதையை எழுதினேன்.

நல்ல வேளை நீங்க பின்னூட்டம் இட்டீங்களா நான் தப்பிச்சேனா..

இப்பதான் புரியுது.. ஏன் கமல்..ஆஸ்கார் உட்பட கிரிக்கெட் மேட்ச் முடிஞ்ச பிறகு 'தசாவதாரத்த' வெளியிடனும்னு விரும்பினாங்கன்னு...

ஆத்து வெள்ளத்துல ஆம்பல் அடிச்சுட்டு போறது பெரிய இழப்பா என்னன்னு..

ம்ம்....ம்.. நல்ல வேளை நீங்க பின்னூட்டம் இட்டீங்களா நான் தப்பிச்சேனா..

நன்றிங்கண்ணா..

said...

அவ்வ்வ்வ்வ்-வெல்லாம் இல்லேங்க...

நல்லாத்தான் இருக்கு....

said...

குட்டிப்பையா..

நல்லா'த்தான்' இருக்குன்னு சொல்லப்புடாது...

நல்லாயிருக்குன்னு சொல்லோணும்

ஆமா..ச்சின்னப்பையன் எல்லாம் இந்தமாதிரி கதையப் படிக்கக் கூடாதே..வூட்டுக்குத் தெரியாம படிக்கிறீயா.

:)