Thursday, June 26, 2008

பெர்ரீரீரீய திருப்புமுனை - 'கிறிஸ்டோபர் ஜார்ஜ்'நண்பர் சர்வேசனுக்கு நன்றி சொல்ல வேண்டும், ரொம்ப நாளா இது பத்தி எழுதணும்னு நினைச்சிருந்தேன். அப்புறம் 'தமிழ்மண ஸ்டார்' பதிவுக்கு என்ன எல்லாம் எழுதலாம்னு யோசிச்சப்பவும், இதைப் பத்தி எழுதணும்னு வரிசைப் படுத்து வைத்திருந்தேன். நிஜமா சொல்லணும்னா, இந்தச் சமயத்துல மறந்துதான் போனேன். ஆனா, சமயத்துல அதை ஞாபகப்படுத்தி எழுதத் தூண்டின சர்வேசருக்கு நன்றி. இந்தப் பதிவுக்கு நான் முதல்ல நினைத்திருந்த தலைப்பு 'கிறிஸ்டோபர் ஜார்ஜ்', சர்வேசனுடைய வேண்டுகோளையும் இணைச்சுட்டேன்...
********
சின்ன வயசுலயிருந்தே தமிழன்னை கற்றுக் கொடுத்தது 'மாதா- பிதா - குரு -தெய்வம்னு. சந்தேகத்துக்கே இடமில்லாமல், வேண்டியபோதெல்லாம் அணைத்தும், ஆதரித்தும், அடித்தும், திருத்தியும் வழிநடத்துகின்ற பெற்றோர்கள் பல சமயங்களில் திருப்புமுனைக்கு காரணமாயிருந்திருக்கிறார்கள். அது எல்லோருடைய வாழ்க்கைக்கும் பொருந்தும்..பொருந்த வேண்டிய ஒன்றும் கூட. அதனை அடுத்து ....குரு...
திருநெல்வேலி ஊர்ல வசித்திருந்தவர்களுக்கு, சாஃப்டர் மேல்நிலைப் பள்ளி தெரியாமலிருந்திருக்காது. ஊர்ல பிரசித்திப் பெற்ற 'Boys School'. நான் படிச்சதும் அங்கதான். எட்டாம் வகுப்பு முடிச்சு, ஒன்பதாம் வகுப்பு போகும்போது துவக்க நாள். ப்ரேயர் நடந்துட்டு இருக்கு. அப்ப நான் கொஞ்சம் உயரமா இருந்ததால, வரிசையில கடைசியா, நின்னுகிட்டு இருந்தேன்.
புதிய ஆண்டின் முதல் நாளாகையால், தலைமையாசிரியர் மிகப் பல அறிவுரைகளைக் கூறிக் கொண்டிருக்க, நேரம் போய்க் கொண்டேயிருந்தது. திடிரென கண்ணக் கட்டுற மாதிரி இருக்கவே சற்றே தள்ளாடினதுதான் தெரியும்.. யாரோ கைத்தாங்கலா பிடிச்சு ஓரமா உட்கார வைக்கிறாங்க. தண்ணீர் கொடுக்கிறாங்க.. ரெண்டொரு நிமிடம் பரபரப்பாய்க் கழிகிறது. அப்புறம் சுதாரிக்கிறேன். என்னுடைய வகுப்பின் ஆசிரியர். சட்டென எழுந்து வரிசையில் நின்று கொள்ள முற்படுகிறேன். ப்ரேயர் இன்னமும் நடந்துகொண்டிருந்தது.

'நீ..இங்க நிற்க வேண்டாம். போயி க்ளாஸ்-ல உட்காருன்னு சொல்லி, அடுத்து நின்று கொண்டிருந்த பையனையும் உடன் அனுப்பி வைக்கிறார்'. அந்த நிமிடம் என்மேல் தோன்றிய அக்கறை தொடரும் என்று நான் உணர்ந்திராத ஒன்று.சத்தியமாய் எனக்கும் தெரியாது, இந்த ஆசிரியர்தான் என்னுடைய வாழ்க்கைக்குத் திருப்புமுனையாய் நிற்கப் போகிறார் என்று. இன்னமும் அந்த நிமிடமும், காலை 9.30 மணி வெயிலும், நடந்து சென்ற மணல் தரையும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது.

எனக்குக் கிடைத்த பெரும்பாலான ஆசிரியர்கள் திறனுள்ளவர்கள்தான். ஆனால், அதையும் மீறி, தனிக் கவனம் எடுத்து, யாருக்கு எப்படிச் சொன்னால் புரியும், எப்படி படிக்கவேண்டும் என்பதை உணரச்செய்து, படிக்கத் தூண்டியவர்.
அவ்வப்போது, இவரிடம் படித்த மாணவர்கள், வேலைக்குப் போனவுடன் வந்து பார்த்துச் சொல்லிச் செல்வதுண்டு. ஒவ்வொருவரின் பலம் சொல்லி, இவன் இங்க உக்காந்திருந்தான், இப்ப பெரிய ஆளாயிட்டான், அப்படின்னு அறிமுகப் படுத்துவார். அந்த இடத்தில உக்காந்திருக்கிற பையன், 'ராசியான இடம்டா..நானும் பெரியாளாயிடுவேன்'னு விளையாட்டாய்ச் சொல்வான். நான் ஒருவன் மட்டுமே உணர்ந்ததில்லை, ஒட்டு மொத்த க்ளாஸுமே உணர்ந்த உண்மை. மற்ற வாத்தியாரிடம் வீரியம் காட்டுகின்ற மாணவன் கூட, இவரிடம் உணர்ந்து நடந்து கொள்வான்.
அத்தனைச் சுலபமில்லை, எல்லா மாணவனும் மெச்சும் விதமாய் ஆசானாக இருப்பது பிரம்பை வச்சு மிரட்டாமல், personal care எடுத்து எந்த critical-ஆன வயசுல இருக்கிறீர்கள், உன்னுடைய கவனம் இப்ப சிதறிச்சுன்னா, பின்னாடி வாழ்க்கை எப்படிச் சிதறிப் போகும் என்பதையெல்லாம், பாடமாய்ச் சொல்லாமல் நட்பாய் உணர்த்தின ஆசிரியர்.
கார்ட்டூன் சித்திரங்களையும், டிஸ்னி லேண்டினையும், அமெரிக்காவையும், ஷேக்ஸ்பியரையும் ஆர்வம் தோன்றும் வண்ணம் கற்றுக் கொடுத்தவர். சென்னையையேப் பார்த்திராத எனக்கு அதெல்லாம் கேட்கும் போது பெரியவிசயமாயிருக்கும். நிறையப் புத்தகம் படிக்க ஆவலைத் தூண்டியவர்.
பள்ளி நூலகம் என்பது, மழைக்குக் கூட ஒதுங்காத இடமாயிருந்த பொழுதில், எளிதாய்ப் புரியக் கூடிய வகையில் உள்ள ஆங்கில நாவல்களை படிக்க அறிமுகப் படுத்தியவர். பொதுவாகவே தமிழ் மீடியத்தில் படிக்கிறவங்களுக்கு ஆங்கிலம் அலர்ஜிதானே.. ஆங்கிலத்தின் மீதிருந்த பயத்தை விரட்டியவர். பிரம்பால் மிரட்டாமல், அன்பால் மிரட்டியவர். ஆசிரியருக்கு இலக்கணம். படிக்கிறதுல ஆர்வத்தைத் தூண்டிய ஆசான்.
ஒன்பதாம் வகுப்போடு அவருடைய கண்ட்ரோல் முடிந்தாலும், அவருடைய 'care' தொடர்ந்து கொண்டுதானிருந்தது. அவர் எதிர்பார்த்த படியே நிறைய பேர், அதிக மதிப்பெண் எடுத்து அவருடைய பெயரைக் காப்பாற்றினோம். 10-ஆம் வகுப்பு முடிந்து 11-ஆம் வகுப்புக்கு போகவேண்டும். தமிழ் மீடியத்திலேயே தொடர எண்ணி, வேறு பள்ளிக்குச் செல்ல எண்ணம். தவிரவும், ஆரம்பக் கட்டணம் போக, மாதாமாதம் கூடுதாலாய் 20ரூபாய் அதிகம் செலுத்த வேண்டும். படிக்க வைக்கவே கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அந்த நேரத்தில், கூடுதலாய் எதற்கு அந்தச் செலவையும் வைக்க வேண்டும், என்ற எண்ணம் வேறு.
அதை அவரிடம் பகிர்ந்து கொண்ட போது, 'ஆங்கிலத்தின் மேல் உள்ள பயத்துல அப்படிச் சொல்லாதே, பைசாவ பத்தி கவலைப்படாதே.. தைரியமா படி. பின்னால், கல்லூரிப் படிப்பு எளிதாக இருக்கும். அதுனால ஆங்கில மீடியத்துலதான் சேரணும்' கண்டிப்பாய்ச் சொல்ல, வீட்டில் அண்ணாவும் தைரியப் படுத்த பீஸைக் கட்டியாச்சு.
கிட்டத்தட்ட எட்டு பேர், இவர் கொட்டுத்த நம்பிக்கையில் ஆங்கில மீடியத்தில் முதல் பிரிவில் சேர்ந்தாச்சு. காய்ச்சல் காரணமா, 11-ம் வகுப்பின் முதல் வாரம் என்னால் பள்ளிக்குச் செல்லவில்லை. அடுத்த வாரம் போனா, என் கூட சேர்ந்த தமிழ் மீடியப் பசங்க எல்லாம் டிசி வாங்கிட்டு போயிட்டாங்க. என்னோட பெஸ்ட் பிரண்டும் அன்னைக்குத்தான் வாங்கிட்டுப் போனான். எனக்கும் கிலி எடுக்க ஆரம்பிச்சுது. காணாக் குறைக்கு அந்தச் சம்பவம் வேறு
வளந்து கெட்டதால கடைசி பெஞ்சுல உக்காந்திருந்தேன்.
வந்தாரு 'botony' வாத்தியாரு, 'xylem,pholem..verticalsection..' ன்னு என்னவெல்லாமே புரியாத பாஷையில பேசிக்கிட்டிருந்தாரு. ஏதோ இங்கிலிசு படம் பார்க்கிற மாதிரி அவரு வாயவே பாத்திட்டுருக்க, திடீர்னு 'Last row, last boy from my left, stand up and answer this' அப்படின்னிருக்கார்.
நானும் அவரையே பாத்திட்டுருக்கேன், நல்லா புரிஞ்சு கவனிக்கிற மாதிரி. ஓரிரு நிமிஷத்துல 'க்ளாஸே' சிரிக்குது. எனக்கு ஒன்னும் புரியல. எம் பக்கத்துல இருந்த பையன், என் இடுப்பைக் கிள்ளி, காது பக்கமா வந்து, 'எலே உன்னத்தான்ல சொல்றாரு, எழுந்திரு' அப்படிங்கிறான். வெட்கமும், அவமானமுமாய் எழுந்திருச்சு நிக்கிறேன்.
கிட்ட வந்து நின்னார், 'என்ன கேட்டேன்னு தெரியுமா? தெரியாதா? இல்ல மாப்பிள்ள பெஞ்சு திமிராடா?' ன்னு கேட்கிறார். அதுக்குள்ள யாரோ ஒரு பையன், 'சார் அவன் தமிழ் மீடியம்' - அப்படிங்கிறான். 'அப்படியாடா..'ங்கிறார். 'ஆமா சார்'ங்கிறேன் பயந்து கொண்டே. 'டிசிய வாங்கிட்டு எங்கயாவது தமிழ்மீடியத்துல போய் சேர்ந்துக்கோ இதுக்கே இப்படி முழிச்சேன்னா என்னத்தடா படிக்கப்போறே..புரியுதா?'ன்னு ஆங்கிலத்திலேயே கேட்கிறார். 'சரி'ங்கிற மாதிரி தலையாட்டினேன். 'Idiot'-nu அரைகுறையாய் முணுமுணுத்துகிட்டே நகர்கிறார்.
போன வருசம் வரைக்கும் ஆசிரியர் மெச்சுற பையனா இருந்துட்டு, இப்ப முத நாளே இப்படியாகிப் போச்சே'ன்னு நினைச்சுகிட்டு இருக்கையிலே பாதி தைரியம் போயிடுச்சு. அவரு பீரியட் முடிஞ்சதும் மதிய உணவு இடைவேளை.
'கடகட'ன்னு PT ரூமுக்குப் போனேன். அங்கதான் இருப்பார் என்னோட ஆசான். போனா, ஆளக் காணோம். 'யாருடா வேணும்'ங்கிறார் பி.டி. மாஸ்டர், 'கிறிஸ்டோபர் சார்'ன்னு சொல்றேன்.. 'கீழே சைடுல வந்துட்டு இருக்கார் பார்'ங்கிறார்.
கீழே இறங்கி அவர்கிட்ட போனேன். நான் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி அவர் ஆரம்பிக்கிறார். 'என்னடா..உடம்பு சரியாயிடுச்சா..போனவாரமே உன்னப் பத்திக் கேட்டேன்.. நீயும் டிசி வாங்கிட்டு ஓடிட்டியோன்னு...உம் பிரண்ட்ஸ் எல்லாம் டிசி வாங்கிட்டு போயிட்டாங்க்ன்னு, நீயும் ஓடிடாதே..'ன்னு ஆரம்பிக்கிறார்.
எனக்கு என்ன சொல்லன்னே தெரியலை..'இல்ல சார்... என்னைவிட கூட மார்க் எடுத்த தமிழ் மீடிய பசங்க எல்லாம், டிசி வாங்கிட்டுப் போயிட்டாங்க. அப்புறம் +2ல மார்க் குறைஞ்சுடுத்துன்னா..ன்னு இழுக்கிறேன்'
'நீ ஒன்னும் அதுக்கு கவலைப்படாத.. ஒழுங்கா கவனிச்சுப் படி. தினமும் சாயந்திரம் ட்யூசன் டைம்ல நீயும் வந்துக்க. நான் உனக்கு கத்துத் தர்ரண்டா'ங்கிறார்.ஆனாலும் அந்த 'idiot'ங்கிற வார்த்தை வந்து பயமுறுத்தவே, 'இல்ல சார்..நான் போயிடுறேன்..'ங்கிறேன்.
'ஏண்டா..நாந்தான் உனக்கு கத்துத்தர்ரேங்கிறேன்..போணும்ங்கிறீயே' சற்று கடுகடுக்க, நடந்த சம்பவத்த விவரிக்கிறேன். 'பிரண்ட்ஸும் போயிட்டாங்க, இப்படி திட்டு வாங்குறதும் அசிங்கமாயிருக்குங்கிறேன்'.
ஒரு கணம் நிதானிக்கிறார். என் தோள் மேல் கை போட்டபடி, 'சிவா.. கத்துக் கொடுக்கிற எல்லாரும் உன்னப் புரிஞ்சுகிட்டு கத்துக் கொடுக்கணும் நெனைக்காதே. முத டெஸ்ட்-டுல நீ prove பண்ணினா, அவரு தெரிஞ்சுக்கப் போறார். உன்னுடைய வாழ்க்கையத்தான் நீ பார்க்கணும். இதுக்காக நீ இத விட்ட்டுப் போயிட்டா, இதே சம்பவம் உன்னோட கல்லூரி வாழ்க்கையில நடக்காதா?. இந்தச் சம்பவம் உனக்கு உந்துசக்தியா இருக்கணும், அத விட்டுட்டு ஓடிப்போறேன்னு சொல்றது சரியில்லை. என் வார்த்தை மேலே நம்பிக்கை வை' அப்படிங்கிறார் என் தோளை அழுத்தியபடி.
'சரி'ன்னு சொல்லி அவருடைய மெஸ்மரிசப் பார்வைக்குக் கட்டுப்பட்டு நகர்கிறேன். அவர் சொல்லியபடியே, அடுத்த இரண்டு வருடமும் இலவசமாய் ட்யூசனுடன் கழிகிறது. நான் மட்டுமல்ல, என்னுடன் மேலும் மூணு மாணவர்கள் என்னை மாதிரியே. ரிசல்ட்-டும் வந்தது. வேண்டிய மார்க்குகள் இருந்தும், தனியார் பொறியியல் கல்லூரிகள்தான் 'வா'ன்னு அழைத்தது. பணம் ஒரு பெருங்குறையாயிருக்க, வேண்டாம்டான்னுட்டு பி.எஸ்.ஸி நோக்கி நகர்கிறேன். டிசி வாங்கப் போகையில், அவரைப் போயி பார்க்கிறேன். 'வருத்தப் படுறியாடா'ங்கிறார்.. என் அண்ணனும் கேட்ட கேள்வி. 'இல்ல..சார்..' 'கல்லூரியில நல்ல பண்ணுவேன்னு நம்பிக்கை இருக்கு'ன்னு சொன்னேன்.
'குட்.. கடவுள் உனக்கு இதக் கொடுக்கலேன்னா, இதவிட பெட்டரா உனக்குக் கொடுக்கணும்னு நினைச்சிருக்கார். நம்பிக்கையைத் தளரவிடாதே. அப்பப்ப, தொடர்பிலேயே இருந்துக்கோ'ங்கிறார். I trusted those words...Still it rings in my ears..'
காலச் சக்கரம் ஓடி, கணிணித்துறையில் சேர்ந்து, பின் அந்தச் செய்தியைச் சொல்ல அவரைப் பார்க்கச் செல்கிறேன். அதே மரத்தடி வகுப்பு. அவரைச் சுற்றி மூன்று நான்கு மாணவர்கள். சலசலக்கிற வகுப்புக்கு நடுவில் போய், 'சார்..'ங்கிறேன்.. 'டக்'கென்று நிமிர்ந்து பார்த்தவர்...'டேய்...எப்படிடா இருக்கே..'ன்னு ஆரம்பிக்க.. பணியையும் சொல்லி விளக்குகிறேன். எனது நம்பிக்கைக்கும், இந்தத் துவக்கத்துக்கும் உங்கள் guidance-க்கு பெரும் பங்கு இருக்கின்றது சார்' ன்னு சொல்ல, அதே தோழமையுடன் ரொம்பச் சந்தோஷம்டா'ன்னு சொல்லிக் கொண்டே மற்ற மாணவர்களிடம் என்னை அறிமுகப் படுத்துகிறார். 'இந்த பெஞ்சிலதாண்டா உக்காந்திருந்தே..'ன்னு இடத்தைச் சுட்டிக் காட்டுகிறார். அந்த இடத்துப் பையனுக்கும், உந்துதலாயிருந்திருக்கும். மெய்சிலிர்த்த நேரம்.
ஆசிரியப் பணிங்கிறது ஒரு அருந்தவப் பணி. அதை உணர்ந்து செயல்படக் கூடிய ஆசிரியர்கள் பலர் இருக்கிறார்கள், என்றாலும் அது விரல்விட்டு எண்ணக்கூடிய ஒன்றுதான். எனது செட் மக்கள் மட்டுமல்ல, முன்னாடியும் சரி, பின்னாடியும் சரி..நிறையப் பேர் இதை உணர்ந்திருப்பாங்கன்னு நம்புறேன். I am very much thankful to my Great Teacher Christopher George!
திருப்புமுனைங்கிறது வாழ்க்கையில ஒரு இடத்துல மட்டும்தான் வரும்னு சொல்ல முடியாது, இது மட்டுமில்லாம இன்னும் நிறைய நண்பர்கள், என் மேல் நம்பிக்கை வச்சு எனக்கு முதல்ல வேலை கொடுத்த பாஸ், channelize பண்ணி, ஷார்ப்பாக்கினவங்கன்னு இந்த திருப்புமுனை வளர்ந்துகிட்டுதான் போகும். இதுவே ரொம்பப் பெரிய பதிவா போயிடுச்சுன்னு நினைக்கிறேன், அப்புறம் 'சிவாவின் ஆட்டோகிராப்'-ன்னு சொல்லிடப் போறாங்க. அப்படி ஒன்னு செய்யுற எண்ணமும் இருக்கு. அப்ப அவங்களப் பத்தி எல்லாம் டிடெய்லா சொல்லுவேன்.
ஆசிரியப் பணி என்பது ஒரு ஏணிதான். சொல்லிக் கொடுத்த வாத்தியாரைவிட, படிச்ச மாணவன் அதிக வசதியோடு இருப்பான். ஆனாலும் சின்சியராய் அந்தப் பணியை, அதற்குரிய நேர்மையோடு செய்கின்ற ஆசிரியப் பெருந்தகைகள் அனைவருக்கும் இந்தப் பதிவினைச் சமர்ப்பிக்கிறேன். இதச் சமர்பிக்கிறதுக்கு இன்னொரு Special -காரணமும் இருக்கு...யாராவது கரெக்டா கண்டுபிடிச்சுட்டா...அவங்களுக்கு 100/100 கொடுக்கிறேன்...
கண்டுபிடிச்சிருப்பீங்க...ஆமா..இது என்னுடைய நூறாவது பதிவு! Hats off to my Sir, Christopher George!22 Comments:

said...

எல்லாத்துக்கும் வாழ்த்துகள்!!

நல்ல பதிவு.

நல்ல வாத்தியார்.

100 பதிவு!!

நல்லா இருடே!!

said...

simply superb.

very touching.

congrats on 100th :)

said...

கண்களில் நீரோடு படித்தேன். அதே மாதிரி ஆசிரியர்கள் எனக்கும் கிடைத்து, மீண்டும் பள்ளிக்குப் போய் அவர் காலில் விழுந்தெழுந்த அனுபவமும் உண்டு. இன்றைக்கும் ஆசிரியப் பணி மீது ரொம்ப ஆசை!

அவர்களால் தான் இன்னும் மழை பெய்கிறது!

நட்சத்திர வார வாழ்த்துக்கள்.

said...

நூறுக்கு வாழ்த்துக்கள்..

பத்து வரையும் தமிழில் படித்து, பதினொன்றில் திடீரென ஆங்கிலத்தில் படிப்பெதென்பது, கஷ்டம் தான்.. அந்த அனுபவத்தை நானும் உணர்ந்திருக்கிறேன்..

நல்ல பதிவு..

said...

வாழ்த்துக்கள் சிவா,

100 அடித்தற்கும் மிக அருமையான
கோர்வையான வார்த்தைகளுடன் கூடிய பதிவு.

ஆசிரியர் பணி மிக உன்னதமானது. பலர் அதை உண்ராமாலேயே இருந்து விடுகிறார்கள். சிலர் “ஆண்டவனாக” அருள் புரிந்து நம் வாழ்நாளில் மறக்க முடியாதவர்களாகி விடுகிறார்கள்.
என் கனகாம்புஜம் டீச்சரைப்போல.

டீச்சர் என்றால் என் நினைவுக்கு வருவது அவர்தான்.

அருமையான பதிவு.

said...

வாழ்த்துகள்..

said...

தங்களின் நூறாவது பதிவு, சர்வேசரின் அழைப்பை ஏற்று 'திருப்புமுனை'யின் முதல் பதிவாக அமைந்து இரு விதத்திலும் சிறப்பு பெற்று விட்டது. ஆர்த்மார்த்தமான நன்றியுள்ளத்தோடு மனதைத் தொடும் வகையில் அழகாகப் பதிந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

said...

/
குட்.. கடவுள் உனக்கு இதக் கொடுக்கலேன்னா, இதவிட பெட்டரா உனக்குக் கொடுக்கணும்னு நினைச்சிருக்கார்
/

கண்டிப்பா!

நல்ல பதிவு.

நல்ல வாத்தியார்.

100 பதிவு!!

எல்லாத்துக்கும் வாழ்த்துகள்!!

said...

அருமையான பதிவு. நெகிழ வைத்தது.

said...

நீங்க திட்டு வாங்குற இடத்துல 'காதல் கோட்டை' தனுஷ் ஞாபகம் வரார். உங்களுக்கு தைரியம் சொன்ன உங்க மாஸ்டர் ஜெமினி படத்துல வர விக்ரமை திருத்தும் அந்த போலீஸ் அதிகாரி ஞாபகம் வரார். அதிகமா சினிமா பார்த்தால் இப்படி தான் எதிர் நீச்சல் பட சவுக்கார் ஜானகி மாதிரி பேச்சு மாறிடும்;) ரொம்ப டச்சிங்கா இருந்தது. இந்த மாதிரி பெர்ஸனலா அக்கறை கட்டுரை வாத்தியார் எல்லாருக்கும் கிடைக்க மாட்டார்கள். நீங்க கொடுத்து வைத்தவர்.

said...

வாழ்த்துக்களுக்கு நன்றி கொத்ஸண்ணா

said...

நன்றி சர்வேசன், இப்படி ஒரு தலைப்பை எடுத்துக் கொடுத்ததுக்கு!

said...

நன்றி கெக்கே சார், மிக்க மதிப்புக்குரிய பணி ஆசிரியர் பணி. உணர்ந்து செய்பவர்களை உயிருள்ளவும் நினைவில் வைத்திருக்கும்

said...

ஆமாம் ஜீவன்..அந்த ஆரம்ப காலங்கள் சற்று தடுமாற்றம்தான்..

said...

நன்றி புதுகைத்தென்றல்..உங்க ஆசிரியர் அனுபவத்தையும் சொன்னதுக்கும்..

said...

நன்றி கயல்விழி மேடம்..இந்த முறை நீங்க கொஞ்சம் முந்திக் கொண்டீர்கள்..அடுத்துதான் ராமலஷ்மி மேடம் வந்திருக்காங்க..

said...

நன்றி ராமலஷ்மி மேடம்..எங்க நட்பு வட்டாரத்துலேயே அவருக்கு மிக்க மதிப்பு உண்டு.

said...

நன்றி ராமலஷ்மி மேடம்..எங்க நட்பு வட்டாரத்துலேயே அவருக்கு மிக்க மதிப்பு உண்டு.

said...

நன்றி மங்களூர் சிவா..

said...

நன்றி சரவணன், இப்பதான் முதல் முறை என் பதிவுக்கு வருகிறீர்கள்னு நினைக்கிறேன்..வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

said...

getting an empty page when visiting the blog URL from thamizmanam.

java script errors?

said...

சத்தியா..

ரொம்ப சினிமா பாப்பீங்க போல..அட..விடுங்க..சினிமாவுக்கு மட்டும் தனியாவா போய் கதை தேடுகிறாங்க..சில வாழ்க்கைச் சம்பவங்களின் பிரதிபலிப்புதானே