Tuesday, June 24, 2008

கமலுக்கென்று ஒரு மனம் - தசாவதாரம் விமர்சனம்

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில்...ஏன் இந்தியத் திரையுலகைப் பொறுத்தவரையில் கமல் படம் என்றால் 'அறிவுஜீவி'த்தனமான எதிர்பார்ப்புகள் ஏகத்துக்கும் சேர்ந்துவிடும். அது ரசிகர்களின் தவறுன்னு சொல்ல முடியாது, கமல் அப்படி வளர்த்து வைத்திருக்கிறார்னுதான் சொல்வேன்.


ரஜினி படத்துக்கு என்றால் 'லாஜிக்' பார்க்கிற வேலையைச் செய்யாத ரசிகனுக்கு, கமல் படம் என்றால் அத்தனை செல்களும் விழித்துக் கொள்ளும்..கமலுக்கென்று ஒரு மனம்..ரசிகனிடத்தில்..அந்த வகையில்தான் இப்ப வந்திருக்கின்ற தசாவதாரமும் 'இருவேறு' கருத்துக்களுடன் மோதிக் கொண்டிருக்கின்றது. இனி..என்னோட கருத்து என்னன்னு பார்க்கலாமா?
*******
ஆர்ப்பாட்டமான விளம்பரங்களோடும், ஏகப்பட்ட கருத்து மோதல்களோடும் சமாளித்து ஒரு வழியா வந்தப் படமாச்சேங்கிற ஆவலோட படம் பார்க்க சீட்டில் உட்கார்ந்தாச்சு.

பரபரப்பாய் டைட்டில் ம்யூசிக் இருக்கும், 'உலக நாயகனே' என்று கும்மாளமிடும் என்ற எதிர்பார்ப்புகளோடு, திரையை நோக்கி இருந்தால், 'சப்' என்ற இசையுடன் டைட்டில் துவக்கம். தொடரும் நம்பி கதாபாத்திர நகர்வுகள், 'டக்'கென்று நமது ஆர்ப்பரிக்கும் மனசை அடக்கி, தொடருகின்ற 15 நிமிடங்களை தனதாக்கிக் கொள்கிறது. மிகச் சிறப்பாய் நகர்கிறது, காமிரா உட்பட அனைத்து கலைஞர்களின் பங்களிப்பும், including 'அப்பா.. வேணாம்ப்பா..ங்கிற சிறுவனின் பங்களிப்பு உட்பட. செம டச்சிங்க். (ஆமா..இந்தக் காட்சிக்கா கும்மினாங்க.. ந்ம்ம ஊரு அரசியல்வாதிங்கள நினைச்சா சிரிப்புதான் வருது.)


அடுத்து ஆரம்பிக்கிறார் 'அறிவு ஜீவி' கமல்.. சக்தி.. கடவுள்' ங்கிற பேதங்களோடு, அவருக்கே உரித்தான தமிழ்ப்பேச்சு நடையோடு. சற்றே சலிப்பு தட்டுகிறது. அடுத்து நகர்கிற அறிவியல் கண்டுபிடிப்பும், குரங்கின் சாவும் என்னாடா இதுங்கிற மாதிரி இருக்கு. அமெரிக்க விஞ்ஞானிங் கிறதுக்காக காட்டியிருக்கின்ற சூழலும் படு செயற்கையாய் இருக்கிறது. லைட்டிங்கும் சரியில்லை. வட்டு வண்டியில ஓடுவது, 'U' சர்டிபிகேட் குழந்தைகளுக்காயிருக்கலாம்.
உடனே விறுவிறு என நகர ஆரம்பிக்கிறது கதை. காட்சியில் இருக்கின்ற விறுவிறுப்பும், பரபரப்பும் விஞ்ஞானி கமலிடம் மிஸ்ஸிங். அதனாலேயே சில 'சேஸிங்'-கில் மனசும் ஒட்ட மறுக்கிறது. வில்லனாய் வரும் ப்ளட்சர் பாத்திரம் அருமை. சிடுசிடுப்பும், பாடிலாங்கேஜும் அபாரம். கடைசி வரை கலக்கியிருக்கிறார்.
பத்து கமலுக்கிடையில், படத்தில் நடித்து இருக்கிற சின்னச்சின்ன கேரக்டர்களும் பரவலாய்த் தெரிய வேண்டுமென்பதற்காக, வையாபுரி, சிட்டிபாபு என பரிச்சயமான நட்சத்திரங்களை உபயோகப் படுத்தியிருப்பது சிறப்பான உத்தி. ஆனால், கே.ஆர்.விஜயா,நாகேஷ் கொஞ்சம் அதிகம்தான். தன்னுடைய 'மைல்கல்' படத்தில், தனக்குப் பிடித்த மக்களும் இருக்கணும்னு நினைத்தாரோ என்னவோ?
'பல்ராம் நாயுடு' கேரக்டர் சுவாரஸ்யமில்லாமல் மிகவேகமாக ஓடிக்கொண்டிருக்கும் படத்தை சற்றே நிதானமாக்கி, ஆசுவாசப் படுத்துகிறது. அடுத்து அசின் வருகை, உடன் கமல் பாட்டியோடு. பாட்டி கமல் மிகப் பிரதானம். அந்தக் கூனும், 'ஆ'ன்னு வாயைப் பிளந்து கொண்டு பேசுவதும்...'வாவ்' ...நிறையவே உழைத்திருக்கிறார் கமல். அதே மாதிரிதான் 'பூவராகவன்' கமலும். நிஜமாலுமே நடிப்புச் சக்கரவர்த்திதான். அவரது எண்ட்ரியும், சற்றே எதிர்பாராத ஒன்று. 'சிம்ப்ளி சூப்பர்ப்'. அதே மாதிரி இன்னொரு பிடித்த கமல்-னா, 'ஜப்பானிய' பாத்திரம். நல்ல கெட்டப், அதுமாதிரி கடைசி காட்சி சண்டையும் பிரமாதம். சிரத்தை எடுத்து பண்ணியிருக்கிறார். அதனைப் பார்க்கும் போது, தமிழ்சினிமாவின் அடுத்தகட்ட நகர்வுங்கிறதுக்காக, கமல் எடுத்துக் கொண்ட சிரத்தைகளைக் கண்டிப்பாய்ப் பாரட்டத்தான் வேண்டும்.
'சலசல'ன்னு சலம்பினாலும், அசினுக்கு நல்ல வேடமே. 'கஜினி'க்குப் பிறகு அவர் தெரிவது இந்தப் படத்தில்தான்.பத்து கமலுக்கு இடையிலும், பரிமளிக்கிறார்.
இவ்வளவு +இருந்தாலும், அப்பப்ப விஞ்ஞானி கமல் எரிச்சலூட்டுகிறார், காமெடி என்று அரதப் பழசான டயலாக் வேறு. ('ok..ரெங்கசாமி நாயக்கர்ன்னு கமல் சொல்ல, அதுக்கு அசின் ஒகே ரெங்கசாமி நாயக்காரன்னு கேட்பது..கமலே மங்கம்மா சபதத்துல மாதவிகிட்ட பேசுற வசனம்..) கற்பனை வரட்சியா...? சில கிரேசி ஸ்டைல் டைப் வேறு. அடுத்த படத்துக்காவது வேறு யார்கிட்டயாவது வசனம் எழுதக் கொடுங்க கமல் சார்..
இன்னொரு சலிப்புத்தட்டுவது கடவுள் இருக்காரு..இல்லைங்கிற விவாதம். இத்த ஏன் கமல் கையிலெடுக்கிறார்னு புரியவே மாட்டேங்குது. ரஜினி கடவுள் கடவுள்னு சொல்றதுனால, இவரு எதிர்க்கிறாரோ? தவிரவும், ஆங்காங்கே பகுத்தறிவு வாதம்னு ஏதாவது விதண்டாவாதம் பண்ணுறது.. இதெல்லாம், இந்தப் படத்துக்கு தேவையா? நீங்கதான் அரசியலும் வேண்டான்னுட்டீங்க, அப்புறம் எதுக்கு கடவுள்,மணல் கொள்ளை மாதிரி சமாசாரங்கள் எல்லாம்.. யாரைச் சமாதனப்படுத்த இந்த முயற்சி? கமலுக்கே வெளிச்சம்.
பாடல்களும் பார்க்க அவ்வளவு சுவாரஸ்யமில்லை, பின்னனி இசையும் 'ஓகே' ரகம்தான். கமல், அசினுடன் சேர்ந்து மிகப் பெரிதாய்ப் பாரட்டப் படவேண்டியவர் கே.எஸ். ரவிக்குமார். பத்து கமலையும் மேய்த்து, சிதைக்காமல் படத்தைக் கொடுத்ததற்காக.

10-ல் நாலு பழுதில்லை. (பாட்டி,பூவராகவன்,ப்ளட்சர்,ஜப்பானிய கமல்)
சொதப்பல் கமல்-னா, விஞ்ஞானி கமல்தான்.
இனி நானறிந்த நண்பர்கள் மூலமாய் அவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து வந்த/கேட்ட கமெண்டு:

திருநெவேலி - நல்லாருக்கு, குழந்தை,குடும்பமாய் பார்க்கலாம்

சென்னை - கமல் ஏமாத்திட்டார், இவ்வளவு எதிர்பார்ப்புக்கு ஒரே வரியில 'சூப்பர்'ங்கிற கமெண்டுதான் வரணும். 'ஒகே..' 'பார்க்கலாம்'ங்கிறதெல்லாம் கமல் standard-க்கு non-acceptable.

அமெரிக்கா - ஆம்...கமல் நல்லா பண்ணியிருக்கார்

பர்மிங்காம்,UK - 'என்னடா....தலைவர் சொதப்பிட்டாரு'

சென்னை, பெட்ரோல் பங்கில் : 'சும்மா சுத்துறாரு..குழப்பந்தேன்..'
என்னோட கமெண்டு:

எவ்வளவு சொன்னாலும், படம் கண்டிப்பாய் ஒரு முறை தியேட்டரில் பார்க்க வேண்டிய படம்தான்...

18 Comments:

said...

//இன்னொரு சலிப்புத்தட்டுவது கடவுள் இருக்காரு..இல்லைங்கிற விவாதம். இத்த ஏன் கமல் கையிலெடுக்கிறார்னு புரியவே மாட்டேங்குது. ரஜினி கடவுள் கடவுள்னு சொல்றதுனால, இவரு எதிர்க்கிறாரோ? தவிரவும், ஆங்காங்கே பகுத்தறிவு வாதம்னு ஏதாவது விதண்டாவாதம் பண்ணுறது.. இதெல்லாம், இந்தப் படத்துக்கு தேவையா? நீங்கதான் அரசியலும் வேண்டான்னுட்டீங்க, அப்புறம் எதுக்கு கடவுள்,மணல் கொள்ளை மாதிரி சமாசாரங்கள் எல்லாம்.. யாரைச் சமாதனப்படுத்த இந்த முயற்சி? கமலுக்கே வெளிச்சம்.//

என்ன அண்ணாச்சி சோமா இருக்கேளா? விவாதம் உள்ள விஷயங்களை காட்டினால் விறுவிறுப்பாக இருக்கும் என்பதற்காக இருக்கும். இதுவும் ஒரு வகை பப்ளிசிட்டிதான் அண்ணாச்சி...

said...

////கமல் படம் என்றால் 'அறிவுஜீவி'த்தனமான எதிர்பார்ப்புகள் ஏகத்துக்கும் சேர்ந்துவிடும்.////
லாஜிக் எதிர் பார்ப்பது அறிவு ஜீவித்தனம் -ளா?

////கமல் அப்படி வளர்த்து வைத்திருக்கிறார்னுதான் சொல்வேன்.////
உண்மைதான், லாஜிக் உள்ள படங்களை கொடுத்து கெடுத்து வைத்திருக்கிறார் மக்களை. கொடிய குற்றமல்லவா?

////அமெரிக்க விஞ்ஞானிங் கிறதுக்காக காட்டியிருக்கின்ற சூழலும் படு செயற்கையாய் இருக்கிறது./////
எவ்வளவு கட்சிதமாக சூழலை அமைத்திருக்கிறார் என்று அச்சூழலை நேரில் பார்க்க நேர்ந்தால் உங்களுக்கு புரியும்

////அசினுக்கு நல்ல வேடமே. 'கஜினி'க்குப் பிறகு அவர் தெரிவது இந்தப் படத்தில்தான்.பத்து கமலுக்கு இடையிலும், பரிமளிக்கிறார். /////
நீங்க, காமெடி கீமெடி பண்ணலையே? ஏன்னா அவர்தான் ஸ்பாய்லர் -னு பேசிக்கிறாங்க.

///ரஜினி கடவுள் கடவுள்னு சொல்றதுனால, இவரு எதிர்க்கிறாரோ?////
அப்போ ரஜினி சிவாஜி எடுத்ததால் தான் கமல் தசாவதாரம் எடுத்தாரா? கமல் போயும் போயும் ரஜினியோடு போட்டி போடுவார்ன்னு நீங்க உண்மையிலேயே நினைக்கிறீங்களா?

///நீங்கதான் அரசியலும் வேண்டான்னுட்டீங்க,///
கொஞ்சம் திருத்திக்கலாம், நேரடி அரசியல் வேண்டாம்ன்னுட்டாரு, அரசியலே வேண்டாம்னு என்னைக்கும் அவர் சொல்லல. எப்பவும் அவர் பகுத்தறிவு வாதிதான். அத நிறைய படத்தில சொல்லிட்டாரு, இதுலயும் சொல்றாரு. அவ்ளோதான்.

///பெரிதாய்ப் பாரட்டப் படவேண்டியவர் கே.எஸ். ரவிக்குமார்./////
இந்த வரியை முன்னமே ஒழுங்கா பார்த்திருந்தேன்னா இந்த கமெண்ட்டே போட்ட்ருக்கத்தேவை இல்ல.

said...

//என்னோட கமெண்டு:
எவ்வளவு சொன்னாலும், படம் கண்டிப்பாய் ஒரு முறை தியேட்டரில் பார்க்க வேண்டிய படம்தான்...//

கடைசில இப்படி 'நச்'னு சொன்னது நல்லாருக்கு.

said...

---நல்லாருக்கு, குழந்தை,குடும்பமாய் பார்க்கலாம்---

:))

கூரிய ஆயுதத்தால் கழுத்தில் குத்துவது, தனியறையில் உரசி ஆடும் ஆட்டம் போன்ற பல காட்சிகள் அவர்கள் மனதில் பதிந்து வெகு ஆபத்தில் கொன்டு போய் விடக்கூடியது.

தமிழில் வன்முறை & செக்ஸ் கலந்த படங்கள் எல்லாத்துக்குமே 'யூ' முத்திரை தருவது நீண்ட காலமாக நடைமுறையில் இருந்தாலும், இந்த மாதிரி கொலைகளையும் ரொமான்டிசைஸ் செய்து பதின்ம வயதுக்குள் பார்த்து 'புரியாமல் புரிந்து கொள்வது' குழந்தைகளுக்கு உகந்ததல்ல.

said...

மோகன்,
உங்க பின்னூட்டம் சூப்பர். நீங்க சொல்றதை அப்படியே வழிமொழிகிறேன்.

said...

சொளரியமா இருக்கோம் தம்பியாபுள்ள, வந்து கருத்த பகிர்ந்துகிட்டதுக்கு நன்றி.

said...

//லாஜிக் எதிர் பார்ப்பது அறிவு ஜீவித்தனம் -ளா?//

தமிழ்ப் படத்துல எதிர்பார்க்கிறது அறிவு ஜீவித்தனம்தானுங்கோ..


//எவ்வளவு கட்சிதமாக சூழலை அமைத்திருக்கிறார் என்று அச்சூழலை நேரில் பார்க்க நேர்ந்தால் உங்களுக்கு புரியும்//

நேரிலும் பார்த்து இருக்கிறேன், இருந்த போதும், பின்னோக்கிய நூற்றாண்டுக்குப் பிறகு, காட்டப் படுகின்ற அந்த சீன்கள், ஏற்படுத்துகின்ற தாக்கம் குறைவுதான்.

//நீங்க, காமெடி கீமெடி பண்ணலையே? ஏன்னா அவர்தான் ஸ்பாய்லர் -னு பேசிக்கிறாங்க//

அவரைப் பொறுத்தவரையில் சிறப்பாய்த்தான் செய்திருக்கிறார், அதையும் மீறி ஸ்பாய்லர்னு சொன்னா, அது கதாசிரியருக்குத்தான் போய்ச் சேரணும்'

//கமல் போயும் போயும் ரஜினியோடு போட்டி போடுவார்ன்னு நீங்க உண்மையிலேயே நினைக்கிறீங்களா?//

ரசிகரா நீங்க வேணா இத ஒத்துக் கொள்ளாமலிருக்கலாம், கமலே போட்டிக்குன்னு சொல்லியிருக்கார்தான்'

said...

பாலா,

நீங்க சொல்றது சரி தான்.. கமல் ஏற்கனவே இந்தமாதிரி வினாவுக்கு, 'குருதிப் புனல்'-ல கமல் கவுதமிகிட்ட சொல்வாரே..'டிவி சானல் காட்டததையா நான் சொல்லிக்கொடுக்கிறேன்'ங்கிறதுதான் பதிலாயிருக்கும்.

said...

//என்னோட கமெண்டு:
எவ்வளவு சொன்னாலும், படம் கண்டிப்பாய் ஒரு முறை தியேட்டரில் பார்க்க வேண்டிய படம்தான்...//

//கடைசில இப்படி 'நச்'னு சொன்னது நல்லாருக்கு.//

நன்றி ராமலஷ்மி மேடம்..ஒரு தரம் பார்க்கலாம்தான்..

said...

அது ஒரு திரைப்படத்தில் கமல் கதாபாத்திரம் தன் மனைவியிடம் பேசும் வசனம். அதை அவரின் சொந்தக் கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது.

---.'டிவி சானல் காட்டததையா நான் சொல்லிக்கொடுக்கிறேன்'---

பக்கத்து வீட்டுக்காரன் கிணத்துல குதிக்கறான் என்பதுக்காக நீங்களும் குதிச்சுடுவீங்களா?

said...

பாலா,

'குழந்தைகளுக்கு உகந்ததல்ல.' - இந்த கருத்துக்கு நானும் உடன்படுகிறேன்..சந்தேகமே இல்லை.

அதற்காக,
//கமல் கதாபாத்திரம் தன் மனைவியிடம் பேசும் வசனம். அதை அவரின் சொந்தக் கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது.//

அப்படின்னா, இந்தப் படத்துல கடவுள் பத்தி சொல்றதும், அவரு சொந்தக் கருத்து இல்லையா.. வீரமணி முதல்கொண்டு பாராட்டினதா எங்கேயோ படிச்சேனே.. :)

said...

//நல்லாருக்கு, குழந்தை,குடும்பமாய் பார்க்கலாம்//
Rated as 14+ in Canada.

said...

சிவா

//
அடுத்து ஆரம்பிக்கிறார் 'அறிவு ஜீவி' கமல்.. சக்தி.. கடவுள்' ங்கிற பேதங்களோடு, அவருக்கே உரித்தான தமிழ்ப்பேச்சு நடையோடு. சற்றே சலிப்பு தட்டுகிறது. //

ரசிகர்களையும் 'அறிவு ஜீவி'ன்னு நக்கலடிச்சுட்டு கமலையும் 'அறிவு ஜீவின்னு நக்கலா சொல்றீங்களே - நியாயமா?

//அமெரிக்க விஞ்ஞானிங் கிறதுக்காக காட்டியிருக்கின்ற சூழலும் படு செயற்கையாய் இருக்கிறது. லைட்டிங்கும் சரியில்லை. //

அக்காட்சிகளில் அரங்க, ஒளி அமைப்புகளைச் சிறப்பாகத்தான் செய்திருக்கிறார்கள். ஏன் இப்படிச் சொல்கிறீர்கள் என்று புரியவில்லை.

//வட்டு வண்டியில ஓடுவது, 'U' சர்டிபிகேட் குழந்தைகளுக்காயிருக்கலாம்.//

Stand-up Electric Scooter என்ற வாகனத்தை பரவலாக அமெரிக்காவில் பல நகரங்களில் பார்க்கலாம். பேட்டரியில் இயங்கும் இந்த வண்டியை நிறைய சுற்றுலா தலங்களில் வாடகைக்கும் விடுகிறார்கள். சைக்கிள் ஓட்ட முடியாதவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். இது குழந்தைகளுக்கான வண்டியல்ல. பெரியவர்கள் ஓட்டுவதுதான். பிரம்மாண்ட அலுவலகங்களில் சைக்கிளையோ அல்லது இம்மாதிரி Standup வாகனங்களையோ உள்ளேயே ஓட்டிக்கொண்டு ஒரு துறையிலிருந்து இன்னொரு துறைக்குச் செல்வதும் சகஜம்தான்.

//ரஜினி கடவுள் கடவுள்னு சொல்றதுனால, இவரு எதிர்க்கிறாரோ?//

ஏங்க சிண்டு முடியறீங்க? :)

//எவ்வளவு சொன்னாலும், படம் கண்டிப்பாய் ஒரு முறை தியேட்டரில் பார்க்க வேண்டிய படம்தான்...//

நன்றி.

said...

சுந்தரண்ணா..

//கமலையும் 'அறிவு ஜீவின்னு நக்கலா சொல்றீங்களே - நியாயமா?//

நிஜம்மா சொல்லணும்னா, இந்தியச் சினிமாவுலகைப் பொறுத்தவரையில், கமல் அறிவு ஜீவிதான்.. என்ன நினைப்போடு 'சகலகலாவல்லவன்' எடுத்தார்களோ..இன்றைய தேதி வரையில் அந்த டைட்டிலுக்கு அவரைவிட்டா வேற யாரும் கிடையாது..இது உலகறிந்த உண்மை. அதனை கிண்டலடிக்கின்ற எண்ணம் எனக்குத் துளியேனும் கிடையாது.

//வட்டு வண்டியில ஓடுவது, 'U' சர்டிபிகேட் குழந்தைகளுக்காயிருக்கலாம்.//

இந்தப் படம் அமெரிக்காவில் எடுக்கப்பட்டது என்ற உண்மை சாமான்யன் உணர இதைத் தவிர வேறு என்ன காட்சியமைப்புகள்னு சொல்லுங்க பார்க்கலாம், except meeting room and lab room etc. That all too..indoors..

பிரம்மாண்டம்..பிரம்மாண்டம்..என்று சொல்லிக்கொண்டு.. இந்தச் சின்ன காட்சியமைப்பில் கூட அமெரிக்காவைக் கொண்டுவராமல்..வெறும் டயலாக்கிலும்..இண்டோர் வட்டு வண்டியிலும்...சாரி.. I am not buying it..

//ரஜினி கடவுள் கடவுள்னு சொல்றதுனால, இவரு எதிர்க்கிறாரோ?//
சிண்டு முடிய்யவில்லை..தலைவரே.. கமலை ஒரு நடிகனாக 1000 முறை மேலாக மற்ற கலைஞர்களைவிட மதிக்கிறேன்..

மற்றபடி சினிமா மூலமாய், பின்னாடி இருந்து இதுமாதிரியான விசயங்களைப் புகுத்துவதை கண்டிப்பாய் ஏற்றுக் கொள்ள முடியாது.

ரஜினியாவது அரசியலுக்கு வருவார்..வரமாட்டார் என்ற போதிலும், சினிமா என்ற மீடியா இல்லாமல் தைரியமாய் பொது மீட்டிங்கில் பேசினார். (பலித்ததா..இல்லையா என்பது ரெண்டாம் பட்சம்..)

இப்படி கதா பாத்திரத்துக்குப் பின்னால் நின்று கொண்டு, கதைப்பது..சாரி..சார்..

said...

"இன்னொரு சலிப்புத்தட்டுவது கடவுள் இருக்காரு..இல்லைங்கிற விவாதம்."
இல்லையே நல்லாக இருந்தது.

"இத்த ஏன் கமல் கையிலெடுக்கிறார்னு புரியவே மாட்டேங்குது."
கமல் ஒரு பகுத்தறிவுவாதி.

said...

அனானிமஸ் சாரே:

//"இத்த ஏன் கமல் கையிலெடுக்கிறார்னு புரியவே மாட்டேங்குது."
கமல் ஒரு பகுத்தறிவுவாதி.

ஏதேது 'கடவுள் மறுப்பு' செய்பவர்தான் பகுத்தறிவுவாதின்னு சொல்லிருவேரு போலும்..

said...

அசத்தலான விமர்சனம், வலையில நான் படிச்ச விமர்சனத்துல நடுநிலையா அலசியிருக்கிற பதிவுகள்ள இதுவும் ஒன்னு.

- சத்தியா

said...

நன்றி சத்தியா!