Tuesday, March 25, 2008

என் இனிய சுஜாதா...


சுஜாதா... எண்ணற்ற தமிழ் இதயங்களில், தனியொரு இடத்தைப் பிடித்தவர்.... அறிவும், அறிவியலும் உணரப்படும் விதமாய், எளிதான தமிழில் எழுதியவர்.


'காயத்ரி'-தான் அவர் எழுதி, நான் படித்த முதல் கதை. அரசு பொது நூலகத்தில்தான் கதை படிக்க ஆரம்பித்த சமயம்.. சாண்டில்யன்,ஜெயகாந்தன், லட்சுமி, இந்துமதி, புதுமைப்பித்தன், தமிழ்வாணன் என பிடித்த எழுத்தாளர்களின் எழுத்துக்களை, நாள் முழுக்க படித்த காலம்.. அப்படியொரு சமயத்தில்தான், நூலின் முதல் பக்கத்தில், 'பெஸ்ட்' என ஏற்கனவே படித்த வாசகரால் அடிக்கோடு இடப்பட்டு எழுதப்பட்டு இருக்க, 'படிச்சுப் பார்க்கலாம்' என்று அசுவாரஸ்யமாய்ப் படிக்க ஆரம்பித்தேன். எப்படி அதில் மூழ்கினேன், என்று தெரியாமல், முழுசாய் ஒரே மூச்சில் வாசித்து முடித்தது. அவ்வளவு விறுவிறுப்பு. விறுவிறுப்பு மட்டுமல்ல.. புத்திசாலித்தனமான ட்விஸ்ட்களும் கூட..


சாண்டில்யனின் வர்ணனைகளிலும், ஜெயகாந்தனின் அழுத்தத்தையும், புதுமைப்பித்தனின் இயல்பு நிலை தாக்கத்தையும், பெண் எழுத்தாளர்களின் செண்டிமெண்ட் எழுத்துக்களிலும், தமிழ்வாணனின் வெளிநாட்டு கார்கள் பற்றிய தகவலுடன் கூடிய துப்பறியும் கதைகளிலும் லயித்துப் போய்க்கிடந்த என் மனது, இப்படி எந்தச் சாயலும் இல்லாமல், இயல்பான ஓட்டத்தில் ஒரு பரப்பான கதையைப் படித்தபோது, 'அட, இந்த எழுத்தாளினி வித்தியாசமானவரா இருக்காரே' என்று எண்ணத் தோன்றியது. அதற்குப் பிறகு, அவர் எழுத்துக்களை தேடி ஓடத்துவங்கி, படித்தது எல்லாம் ஒரு சுவாரஸ்யமான ஓட்டம்.


கதை படிக்கையில், உங்களை கதைக்குள் இழுத்து, உங்கள் சிந்தனையை மறக்கடித்து, தன் வசம் கொண்டு செல்வது ஒரு வகை எழுத்து. இன்னொரு வகை, உங்களை உங்கள் வசத்தில் விட்டு, கதையை தன் போக்கில் கையாண்டு, கதையின் போக்கை உங்களை யூகிக்க வைத்து, யூகிக்க முடியாத முடிவைக் கொடுப்பது. சுஜாதா, அதில் கில்லாடி. அவரது கதையைப் படிப்பது, ஒரு செஸ் கேம் ஆடுவது போல. நிறைய சமயம் அவர் ஜெயிப்பார், சில சமயம் நாமும் ஜெயிப்போம். But, intresting!


அறிவியல் கதைகளாகட்டும், நாடகமாகட்டும், அல்லது கட்டுரைகளாகட்டும், சட்டெனெ படித்து விட முடிவதோடு, பட்டென மனதிலும் நிற்கும். சின்ன வயதில், கையெழுத்துப் பத்திரிக்கை நடத்திய போது, அவரது கணேஷ்-வசந்த் காம்பினேஷனில் கதையெழுதி, வசந்த் சார்பாக எழுதிய எழுத்துக்களுக்காக வித்தியாசமாய்ப் பார்க்கப் பட்டதுமுண்டு. பிரிவோம்..சந்திப்போம் கதையில், 'பிரிவோம்...' எழுத்துக்கள் எனக்கு மிகப் பிடித்த ஒன்று. மதுமிதா.. ஒரு கனவுப் பெயர்.


சுஜாதாவின் மறைவுகுறித்து 'அய்யோ' என்று அதிர்ந்தபோதே, அவரின் படைப்புகள் குறித்த எண்ண ஓட்டம், மனதில் ஓடியபோதே எழுத்தாய்ப் பதியவேண்டும் என்று தோன்றியது. இத்தனை நாள் கழித்துதான், அதற்குச் சமயமே வாய்த்தது. இத்தனை வயதிலும், எழுத்து, இலக்கியம், தமிழ், அறிவியல், தொழில், சினிமா, ஹைகூ, கவிதை, குடும்பம் இது தவிர, உடம்பின் அவஸ்தை..இப்படி எல்லாமும் தாண்டி, எல்லாத் துறையிலும் வெற்றிகரமாய்ப் பணியாற்றிக் கொண்டேயிருந்த அந்தக் கைகள், தமிழ் கூறும் நல்லுலகிற்கு திலகமிட்ட நற்கைகள். படிக்கின்ற ஆர்வத்தையும், எழுதுகின்ற ஆர்வத்தையும் அவருடைய எழுத்துக்கள் தந்தன என்றால் அது மிகையில்லை.


பரவலாய்ச் சிகரம் தொட்டவர் அவர்... அவரின் நினைவுகள்/பாதிப்புகள் என்றும் தமிழுலகில் இருக்கும். அவருடைய மறைவிலும், விரோதம் கருதும் சில உணர்வுகளைப் படிக்கையில், இந்தியன் திரைப்படத்தில், 'இந்தியன்' கமல் மனிஷாவிடம் கேட்கிற மாதிரி க்ளைமாக்ஸ்-ல் ஒரு வசனம் எழுதியிருப்பார் சுஜாதா... அதுதான் நினைவுக்கு வருகிறது 'பச்சைக் குழந்தைங்கம்மா.. அதக் கொன்னுருக்கானே, தப்புன்னு தோணலையா?' - அப்படிம்பார். அதுக்கு மனீஷா, 'புத்திக்குத் தெரியுது, மனசுக்குத் தெரியலையே...'ம்பார். எது எப்படியோ, என்னைப் பொறுத்தவரையில், ('என் இனிய இயந்திரா' மாதிரி) என் இனிய சுஜாதா, தமிழ் எழுத்துலகின் சாகாவரம்!


5 Comments:

said...

வாசகர்கள் மனதைப் புரிந்து,
எது எழுத்து என்று அவர்களுக்கு புரிய வைத்து ,
ஒவ்வொரு எழுத்தும் ,
ரசனைக்கு வித்தென
எழுதும் வித்தை தெரிந்தவராக இருந்தார்.
அவர் விட்டுச் சென்ற
இடம் இனி
வெற்றிடம்தான்

said...

ஆமாங்க, சுஜாதாவின் இடம் யாராலும் நிரப்பப் பட முடியாத ஒன்று.

said...

இந்த வார ஸ்டார் சுப்பையா சார், அந்த அந்தந்த காலத்து படங்களுடன் சுஜாதா கதைகள் குறித்து போட்டிருக்கும் பதிவும் அசத்தல், என்னதான் புத்தகமாய்ப் படித்தாலும், முதலில் வந்த எழுத்துக்களுடன்,படங்களுடன் படிப்பது கூடுதல் சுகம்.

http://devakottai.blogspot.com/2008/03/star-posting_1977.html

said...

பள்ளி கல்லூரி நாட்களில் சுஜாதாவின் தொடர் நாவல்களை வார இதழ் வெளியான அன்று அதிகாலையிலேயே வாசித்து விட்டுச் சென்று (பாடங்களை.. எனக் கேட்டு விடாதீர்கள்..) தோழியருடன் டிஸ்கஸ் செய்தது சுகானுபவமாக இருந்திருக்கிறது. அப்போதெல்லாம் நடிகர்களுக்கு இருந்தது போல் சிவசங்கரி, இந்துமதிக்கு தனித்தனி ரசிகையர் பட்டாளமே உண்டு. அடிக்கடி காரசாரமாக மோதிக் கொள்வார்கள். சுஜாதா விதி விலக்காய் எல்லோருக்கும் எப்போதும் பிடித்தவராய் திகழ்ந்திருக்கிறார். அவரை "என் இனிய" என்ற வட்டத்துக்குள் சுருக்காமல் "நம் இனிய" சுஜாதா என்றால் இன்னும் நன்றாக இருக்கும்தானே!

said...

என்றைக்கும் வாத்தியாரின் இடம் நிரப்பப்படாத ஒன்று என்பதை அவர் இல்லாத இந்த இரண்டு மாதத்திலேயே புரிந்து கொண்டீர்கள் என்று நினைக்கிறேன்...

எனது அஞ்சலி பதிவிற்கு தொடர்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றிகள் சிவா..