Wednesday, March 26, 2008

சுஜாதா...கமலின் பார்வையிலிருந்து....

கமல் மூலமாய்....சுஜாதா ஒரு பார்வை: (மூலம்: சினிசவுத்)

(சினிசவுத் வெளியிட்டிருந்த தகவல்)"சுஜாதா அவர்களுடைய மரணம் நெருங்குவதை நான் உணர்ந்தேன். அவரும்தான்.
வழக்கமாக எழுத்தாளர்கள் சமரசம் செய்வதை இழுக்காகவும், தோல்வியாகவும் நினைப்பார்கள். ஆனால் சுஜாதா அவர்கள், சமரசம் செய்து கொள்வது அவசியம், சமுதாயக் கடமை என்றே நினைத்தார். அதனால்தான் சிலசமயம் நாம் எதிர்பார்க்கிற வீரியம் குறைந்ததுபோல ஒரு பிரமை தோன்றும். அவருடைய வாழ்க்கைமுறை, நெறி அது.
விஞ்ஞானம் கற்றறிந்தவர் என்பதால் எழுத்தை அவர் தொழிலாக நினைக்கவில்லை. தொடரும் ஒரு காதலைகவே நினைத்தார். அதனால் அவருக்கு தன் எழுத்தை பற்றி செறுக்கு இல்லை. அவருடைய சினிமா எழுத்தை வைத்து தயவுசெய்து யாரும் சுஜாதாவை கணித்துவிடாதீர்கள். அதுவும் பெரும் சமரசம்தான். சினிமாவுக்காகவும், நட்புக்காகவும், அன்புக்காகவும் அவர் செய்துகொண்ட சமரசம். இருந்தாலும் சுஜாதா என்னும் அந்தப் பெயரை பெரியதாக வட்டம் போட்டுக்காட்டிய சினிமாவுக்கு ஓரளவுக்கு வேண்டுமென்றால் நன்றி சொல்லாம். மற்றதெல்லாம் இலக்கியத்திற்கே உரித்தானது.

தர்மம் கிடைக்கும் இடத்தில்தான் பிச்சைக்காரர்கள் கூடுவதுபோல், கொடுக்கும் இடத்தில்தான் இன்னும் எதிர்பார்பார்கள். அப்படிப் பார்க்கும்பொழுது சுஜாதா இன்னும் கொடுத்திருக்கலாம் என்று சொல்வதைவிட கொடுத்ததற்கு நன்றி சொல்லவேண்டிய நேரமாகவே இதை நான் கருதுகிறேன்.


பல விஷயங்களில் அவருக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். என்னுடைய எழுத்து ரசனையை, என்னுடைய தமிழ் வாசிப்பு ரசனையை உயர்த்திய முக்கியமான எழுத்தாளர்களில் அவரும் ஒருவர். என்னுடைய வாசிப்பு என்று சொல்லும்போது ஏதோ குறுகிய வட்டம்போல் ஆகியது. தமிழகத்தில் சுஜாதாவைப் படித்தவர்கள் எல்லோருமே வாசக தரத்தில் உயர்ந்தவர்களாகவே நான் கருதுகிறேன். நன்றி தமிழ் உலகம் அவருக்கு சொல்லும்." - கமல்நன்றி: சினிசவுத்

http://tamil.cinesouth.com/masala/hotnews/new/28022008-7.shtml

இந்தவார ஸ்டார் பதிவர் சுப்பையா வாத்தியாரின் சுஜாதா பதிவு காண

Tuesday, March 25, 2008

என் இனிய சுஜாதா...


சுஜாதா... எண்ணற்ற தமிழ் இதயங்களில், தனியொரு இடத்தைப் பிடித்தவர்.... அறிவும், அறிவியலும் உணரப்படும் விதமாய், எளிதான தமிழில் எழுதியவர்.


'காயத்ரி'-தான் அவர் எழுதி, நான் படித்த முதல் கதை. அரசு பொது நூலகத்தில்தான் கதை படிக்க ஆரம்பித்த சமயம்.. சாண்டில்யன்,ஜெயகாந்தன், லட்சுமி, இந்துமதி, புதுமைப்பித்தன், தமிழ்வாணன் என பிடித்த எழுத்தாளர்களின் எழுத்துக்களை, நாள் முழுக்க படித்த காலம்.. அப்படியொரு சமயத்தில்தான், நூலின் முதல் பக்கத்தில், 'பெஸ்ட்' என ஏற்கனவே படித்த வாசகரால் அடிக்கோடு இடப்பட்டு எழுதப்பட்டு இருக்க, 'படிச்சுப் பார்க்கலாம்' என்று அசுவாரஸ்யமாய்ப் படிக்க ஆரம்பித்தேன். எப்படி அதில் மூழ்கினேன், என்று தெரியாமல், முழுசாய் ஒரே மூச்சில் வாசித்து முடித்தது. அவ்வளவு விறுவிறுப்பு. விறுவிறுப்பு மட்டுமல்ல.. புத்திசாலித்தனமான ட்விஸ்ட்களும் கூட..


சாண்டில்யனின் வர்ணனைகளிலும், ஜெயகாந்தனின் அழுத்தத்தையும், புதுமைப்பித்தனின் இயல்பு நிலை தாக்கத்தையும், பெண் எழுத்தாளர்களின் செண்டிமெண்ட் எழுத்துக்களிலும், தமிழ்வாணனின் வெளிநாட்டு கார்கள் பற்றிய தகவலுடன் கூடிய துப்பறியும் கதைகளிலும் லயித்துப் போய்க்கிடந்த என் மனது, இப்படி எந்தச் சாயலும் இல்லாமல், இயல்பான ஓட்டத்தில் ஒரு பரப்பான கதையைப் படித்தபோது, 'அட, இந்த எழுத்தாளினி வித்தியாசமானவரா இருக்காரே' என்று எண்ணத் தோன்றியது. அதற்குப் பிறகு, அவர் எழுத்துக்களை தேடி ஓடத்துவங்கி, படித்தது எல்லாம் ஒரு சுவாரஸ்யமான ஓட்டம்.


கதை படிக்கையில், உங்களை கதைக்குள் இழுத்து, உங்கள் சிந்தனையை மறக்கடித்து, தன் வசம் கொண்டு செல்வது ஒரு வகை எழுத்து. இன்னொரு வகை, உங்களை உங்கள் வசத்தில் விட்டு, கதையை தன் போக்கில் கையாண்டு, கதையின் போக்கை உங்களை யூகிக்க வைத்து, யூகிக்க முடியாத முடிவைக் கொடுப்பது. சுஜாதா, அதில் கில்லாடி. அவரது கதையைப் படிப்பது, ஒரு செஸ் கேம் ஆடுவது போல. நிறைய சமயம் அவர் ஜெயிப்பார், சில சமயம் நாமும் ஜெயிப்போம். But, intresting!


அறிவியல் கதைகளாகட்டும், நாடகமாகட்டும், அல்லது கட்டுரைகளாகட்டும், சட்டெனெ படித்து விட முடிவதோடு, பட்டென மனதிலும் நிற்கும். சின்ன வயதில், கையெழுத்துப் பத்திரிக்கை நடத்திய போது, அவரது கணேஷ்-வசந்த் காம்பினேஷனில் கதையெழுதி, வசந்த் சார்பாக எழுதிய எழுத்துக்களுக்காக வித்தியாசமாய்ப் பார்க்கப் பட்டதுமுண்டு. பிரிவோம்..சந்திப்போம் கதையில், 'பிரிவோம்...' எழுத்துக்கள் எனக்கு மிகப் பிடித்த ஒன்று. மதுமிதா.. ஒரு கனவுப் பெயர்.


சுஜாதாவின் மறைவுகுறித்து 'அய்யோ' என்று அதிர்ந்தபோதே, அவரின் படைப்புகள் குறித்த எண்ண ஓட்டம், மனதில் ஓடியபோதே எழுத்தாய்ப் பதியவேண்டும் என்று தோன்றியது. இத்தனை நாள் கழித்துதான், அதற்குச் சமயமே வாய்த்தது. இத்தனை வயதிலும், எழுத்து, இலக்கியம், தமிழ், அறிவியல், தொழில், சினிமா, ஹைகூ, கவிதை, குடும்பம் இது தவிர, உடம்பின் அவஸ்தை..இப்படி எல்லாமும் தாண்டி, எல்லாத் துறையிலும் வெற்றிகரமாய்ப் பணியாற்றிக் கொண்டேயிருந்த அந்தக் கைகள், தமிழ் கூறும் நல்லுலகிற்கு திலகமிட்ட நற்கைகள். படிக்கின்ற ஆர்வத்தையும், எழுதுகின்ற ஆர்வத்தையும் அவருடைய எழுத்துக்கள் தந்தன என்றால் அது மிகையில்லை.


பரவலாய்ச் சிகரம் தொட்டவர் அவர்... அவரின் நினைவுகள்/பாதிப்புகள் என்றும் தமிழுலகில் இருக்கும். அவருடைய மறைவிலும், விரோதம் கருதும் சில உணர்வுகளைப் படிக்கையில், இந்தியன் திரைப்படத்தில், 'இந்தியன்' கமல் மனிஷாவிடம் கேட்கிற மாதிரி க்ளைமாக்ஸ்-ல் ஒரு வசனம் எழுதியிருப்பார் சுஜாதா... அதுதான் நினைவுக்கு வருகிறது 'பச்சைக் குழந்தைங்கம்மா.. அதக் கொன்னுருக்கானே, தப்புன்னு தோணலையா?' - அப்படிம்பார். அதுக்கு மனீஷா, 'புத்திக்குத் தெரியுது, மனசுக்குத் தெரியலையே...'ம்பார். எது எப்படியோ, என்னைப் பொறுத்தவரையில், ('என் இனிய இயந்திரா' மாதிரி) என் இனிய சுஜாதா, தமிழ் எழுத்துலகின் சாகாவரம்!


Monday, March 24, 2008

கணவர்கள் காப்பகம்??

Posted by Picasa

செஸ்டர் கடைத்தெரு அருகே

ஒரு

சுவாரஸ்யமான விளம்பரம்!!!

இது எப்படி இருக்கு?