Saturday, September 08, 2007

இரைச்சலாய் இசைத்திருந்தால் கேட்டிருக்குமோ?


"இரைச்சலாய்
இசைத்திருந்தால்
கேளாத
செவிகளுக்கும்
கேட்டிருக்குமோ?
மெல்லிசையாய்
இசைத்ததாலேயே
நல்லிசை ஒரமாய்ப்
போனதோ?"
- என்று கேட்கத் தோணுகிறது, நம் மெல்லிசைமன்னரின் இசைக்கு அங்கீகாரம் வழங்கக் கோரும் 'பத்மபூஷனும் விபூஷனனும் ஈயம் பித்தளைக்கு வாங்கரோமுங்கோ... ' என்ற சர்வேசனின் பதிவைப் படித்த போது.

சரி, அங்கீகாரம் வழங்கக் கோரி அவர் எழுப்பியிருக்கிற ஆன்லைன் பெட்டிசன்-ல எத்தனைபேரு கையெழுத்திட்டிருக்காங்கன்னு பாத்தா, மின்மினி மூலமாய் நானிட்ட கையெழுத்தும் சேர்த்து, 60 - தான் வருகிறது.

இப்ப வந்த பசங்க கூட டாக்டர், கம்பவுண்டர் பட்டங்கள எளிதா வாங்கிடறாங்க, ஆனா நம்ம எம்.எஸ்.விக்கு....? என்ன கொடுமை சரவணன் இது?-ன்னுதான் கேட்கத் தோணுது.

இசையில் எவ்வளவோ சாதித்திருந்த போதும், அடக்கமாய் இருப்பவர் அவர், அதனால்தானோ என்னவோ 'விருதார்'கள் கவனிக்காமல் விட்டார்களோ?

நம்ம ஊருல விருது கொடுக்குறதுக்குன்னே சில சட்டதிட்டங்கள் வைத்திருக்காங்க.
1. விருது கொடுக்குறதுனால, தங்களுக்கு பப்ளிசிட்டி கிடைக்கும்னா, வலியக் கூப்பிட்டு வகைக்கொரு பட்டம் கொடுப்பாங்க
2. காசு கொடுத்தா பட்டம் கொடுப்பாங்க
3. பெரிய இடத்து சிபாரிசு இருந்தா பட்டம் கொடுப்பாங்க
4. அனுசரித்துப் போனா, பட்டம் வாங்குறவங்கள விளம்பரப்படுத்த பட்டம் கொடுப்பாங்க
5. நாங்கதான் முதல்ல பட்டம் கொடுத்தோம்-னு சொல்லிக்க, பாப்புலரா இருக்கறவங்களுக்கு முந்தியடிச்சு பட்டம் கொடுப்பாங்க..

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். ம்ம்ம்...MSV இந்த வகை எதிலும் சேர்த்தி இல்லாமல் இருப்பதினாலா என்னவோ, இன்னமும் பட்டம் வாங்காமல் இருக்கிறார். கலையுலகை ஆதரிக்கின்ற எம்ஜியாரும், கருணாநிதியும் கூட கண்டுக்காமல் விட்டது/விட்டுக் கொண்டிருப்பது கூட மன்னிக்கமுடியாதது.

மெட்டுக்கு பாட்டெழுதக் கேட்கிற இசையமைப்பாளர்கள் நடுவே, எழுதுகின்ற கவிஞரின் சிந்தனையைக் கட்டுப்படுத்தாமல் வந்து விழுகின்ற வரிகளுக்கு வாத்தியம் கட்டியவர் அவர்.
'வறுமையின் நிறம் சிகப்பு' படத்தில் வருகின்ற 'சிப்பியிருக்குது ..முத்துமிருக்குது' பாடலைக் கேட்டிருக்கிறீர்களா? இரைச்சலோ, இடியோசையோ இல்லாமல், இனிதாயில்லை?
'பூக்காரி' படத்தில் வருகின்ற, 'காதலின் பொன்வீதியில்....' பாடல் மென்மை கூறுவதாயில்லை?
'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் வருகின்ற 'எங்கேயும்..எப்போதும்..', 'யாதும் ஊரே..', 'சிவ சம்போ' பாடல்களெல்லாம், இன்னைக்கும் உங்கள் காதில் ரீங்காரம் இடவில்லையா?
ஹெட்போனிலோ, ஐ-பாடிலோ அல்லது உங்க கார் ஆடியோவிலோ, 'சம்போ..சிவ சம்போ...' பாடலைக் கேட்டுப் பாருங்கள். அதில் இசைத்திருக்கின்ற கருவிகளும், மெட்டும், குரலும் பின்னிப்பிணைந்திருப்பதை உணர முடியும். பாடல் முடிந்த பிறகும் கூட, உங்கள் காதுகளில் அந்த இசை உங்களை ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும்.

எத்தனையோ பேரைக் கவர்ந்த, 'சிம்லா ஸ்பெசல்' படத்தில் வருகின்ற 'உனக்கென்ன மேலே நின்றாய்' பாடல், இப்போதைய இளைஞர்களையும் வசீகரிக்கக் கூடிய ஒன்று.


KanaKaanumKangazl....
பாலசந்தரின் 'அக்னிசாட்சி' படத்தில் வரும், எஸ்பிபி பாடிய 'கனாக் காணும் கண்கள் மெல்ல' பாடல் கேட்டிருக்கிறீர்களா? காட்சியையும், கதையின் கருவையும், அர்த்தமிக்க வரிகளையும் தாலாட்டும் விதமாய் 'அருமை' என்ற வார்த்தைக்கு இலக்கணமாய் மனதை உலுக்கும். கேட்காதவர்கள், கேட்டுப் பாருங்கள்.
எத்தனை பேருக்குத் தெரியும், 'ஆயர் பாடி மாளிகையில்' பாடலும், 'புல்லாங்குழல் கொடுத்த' - கண்ணன் பக்திப் பாடலும் MSV-யின் இசை வடிவம் என்று?

அவரது பாடல்களில் மனம் கவர்ந்தது என்றால், பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். MSV ஒரு நிஜக் கலைஞன், சக கலைஞர்களை மதிக்கத் தெரிந்த, 'ஈகோ' இல்லாத, இசையை இசையால் ரசிக்கத் தெரிந்த மனிதன்.
நல்ல கலைஞனுக்கு விருதுகளெல்லாம் இரண்டாம் பட்சம்தான், அது கலைஞனின் பார்வையில். கலைஞனின் ரசிகனின் பார்வையில், விருதும் தேவையான ஒன்று.
அவருடைய பாடல்கள் எத்தனையோ நம்முடைய மனதைத் தொட்டிருக்கின்றது, பிசைந்திருக்கின்றது. அவருடைய ஏதாவது ஒரு பாடல், உங்க மனதை தொட்டிருந்தால் கூட, நீங்கள் உங்களுடைய கையொப்பத்தை, இந்த ஆன்லைன் மனுவில் பதிப்பிக்க கடமைப்பட்டவராகின்றீர்கள்.
'விருதார்கள்' போல, மெத்தனமாய் இல்லாமல், சுறுசுறுப்பாய் இரண்டு நிமிடம் செலவழியுங்கள், அந்த முதுபெரும் இசைக் கலைஞனுக்கு.