Saturday, April 28, 2007

Super World Cup, Congrats Aussies!

வல்லவன் தோற்கணும் என பெரும்பாலோனோர் எண்ணியபோதும், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், திடமாய் கலக்கி விட்டார்கள் ஆஸ்திரேலியர்கள். 'சேம்பியன்' என்ற பட்டத்துக்கு முழுத் தகுதியுடையவர்கள். சேம்பியன் என்ற வார்த்தையை மாற்றி, 'ஆஸ்திரெலியன்' ன்னு சொல்லலாம் போல.

இவ்வளவு வலுவான அணி இதுவரை பார்த்ததேயில்லை. ஆடிய அனைத்து ஆட்டங்களிலும், வலுவான ஸ்ஹோர். எதிரணியினரை கிட்ட நெருங்க விட்டதேயில்லை.

ஆடிய நிதானமும், வெற்றி நமக்குத்தான் என்ற நம்பிக்கையும், அபரிமிதமாய் பாவனைகளை வெளிக்காட்டாமல், அருமையாய் ஆடினார்கள்.

கடைசி 15 நிமிடத்திற்கு முன்பே வெற்றி என்று தீர்மான பிறகு, மீண்டும் அழைத்து ஆட வைத்து 'கேம்'மை முழுமையாக்கினார்கள்.

ஸ்ரீலங்காவும், நல்ல எதிரணியாய்ச் செயல்பட்டனர்.

வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துக்கள், விடாமுயற்சியுடன் தளராது ஆடிய அருமை ஸ்ரீலங்காவுக்கும் வாழ்த்துக்கள்.

Wednesday, April 25, 2007

வலைப்பதிவர் சந்திப்பு - ஒரு புதிய தொடக்கம்

ஒவ்வொரு முறையும் வலைப்பதிவர் சந்திப்பு குறித்த அறிவிப்பு வரும்போது ஆர்வமாயிருக்கும். புதியதாய் ஏதாவது ஒரு நற்பலன் அந்தக் கூட்டத்தின் பயனாய் விளையும் என்ற நம்பிக்கையும் இருக்கும். ஆனால், கூட்டம் முடிந்த பின், அதைத் தொடர்ந்து வரும் பதிவர் கூட்டம் சார்ந்த பதிவுகளை படிக்க நேரும் போது, ஒரு வித ஏமாற்றமே எதிரொலிக்கும்.

இது குறித்து நண்பர் ரவிசங்கர் ஏற்கனவே, 'வலைப்பதிவர் சந்திப்பால் என்ன பயன்?" என்ற கேள்விக்கணையோடு ஒரு பதிவு எழுதியிருந்தார். அதில் நானிட்ட பின்னூட்டத்தின் ஒரு பகுதி கீழே:

//நானும் கூட உங்கள் சிந்தனையோடு ஒத்துப் போகிறேன்,புதுசா கல்லூரி திறந்து ஓரிரு வாரங்கள் ஜாலியாகப் போவதில்லையா, அதுமாதிரிதான் இதுவும் என நினைக்கிறேன்.ஆரம்பகால சந்திப்புகள், இப்படித்தான் போகும், போகப்போக ஆக்கமாய் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. //

இம்முறை வெளிவந்த/வந்துகொண்டிருக்கின்ற வலைப்பதிவர் சந்திப்பு குறித்த பதிவுகளைப் படிக்கும் போது, எனது நம்பிக்கைகள் காக்கப் பட்டிருக்கின்ற சந்தோஷம் கிட்டுகிறது.

'பொன்ஸ்' அவர்களின் பதிவும், லக்கிலுக்-கின் பதிவும் படிக்க, நேர்முக வர்ணணை போலிருக்கின்றது.

படித்த வரையில், எனக்குப் பிடித்த சில பகுதிகளை 'ஹைலைட்' பண்ணி, மீட்டிங்க் அட்டெண்ட் பண்ணாத குறையை தீர்த்துக்கிறேன்


"வலைபதிவுகளை எழுதுபவர்களே படிப்பவர்கள் என்ற நிலையை மாற்றி நம்மைத் தவிர்த்த சமுகமும் வலைபதிவுகளைப் படிக்கத் தொடங்கும் பொழுது தான் இவற்றிற்கு ஒரு பயன் இருக்கும். அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையாக கோவையில் நடத்தப் போகும் ப்ளாக் கேம்ப் வழிவகுக்கும்" - செல்லா

மாணவர்களை வலைபதிவுக்கு அழைத்து வரவேண்டும், அழைத்து வரும் பணிகளில் ஏற்கனவே சிலர் ஈடுபட்டிருக்கிறார்கள் - பாலபாரதி

"சிறுவர்கள் படிக்கும் அளவுக்கு முதலில் வலைபதிவுகளை ஆரோக்கியமாக்குவோம், அதன்பின் அவர்களை அழைத்துவருவது நல்லது"
- ஓகைரசித்த நகைச்சுவை:

//"எனக்கு Writing-ஐவிட Visualதான் ஸார் அதிகம் பிடிச்சது.." என்றார் ஓசை செல்லா. இதற்கும் ஒரு ஏவுகணையை உடனே வீசினார் மா.சி. "அப்புறம் எதுக்கு ஸார் இங்க வந்தீங்க.. விஷ¥வல்தான் முக்கியம்னா நீங்க இங்க வந்திருக்கவே கூடாது. இங்க இருக்குறவங்க writers.." என்று ஆணித்தரமாக தன் வாதத்தை எடுத்து வைத்தார் மா.சி. "பெண் பதிவர்களும் நிறைய பேர் உங்க தளத்துக்குள்ள வர்றாங்க.. நீங்க இப்படி பண்ணா யார் பின்னூட்டம் போடுவாங்க..?" என்று மா.சி. 'உடன்பிறப்பாகவே' மாறி உணர்ச்சி பொங்க.. உள்ளன்போடு கண்டிப்பான குரலில் கேட்க.. இதை ஆமோதிப்பதைப் போல் சகோதரி பொன்ஸ், ஓசை செல்லாவை நிமிர்ந்து பார்க்காமலேயே 'ஆமாம்' என்று தலையாட்ட.. செல்லா அமைதியானார்//


'குங்குமம்' கவரேஜ், 'மக்கள் டிவி கவரேஜ்' என வலையுலகை வெளியுலகிற்கு பிரபலப் படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகளும் பாராட்டுக்குரியது.

அடுத்த கட்ட நம்பிக்கைக்கு 'வலைஞர் கூட்டத்தை' முன்னேற்றிய பாலபாரதிக்கும், தெளிவாய் நிகழ்வை படம் பிடித்துக்காட்டிய சகோதரி பொன்ஸுக்கும் Special Thanks!

Saturday, April 07, 2007

சீறி வரும் சிவாஜி

மே மாதம் அக்னி நட்சத்திர வெயிலில் சும்மாவே அனல் பறக்கும், இந்த அனலோடு, தணல் பறக்க மே 17-ல் வெளிவர இருக்கிறது சூப்பர் ஸ்டாரின் சிவாஜி. சும்மாவே ரஜினி படமென்றால், ஆளாளுக்கு ஒரு 'ஹைப்' கிரியேட் பண்ணுவாங்க, அத்தோடு இது 'பிரம்மாண்டம்' புகழ் ஷங்கரின் இயக்கம் வேறு, ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்புக்குக் கேட்கவா வேணும்?

Image and video hosting by TinyPic 'பாய்ஸில்' கோட்டை விட்ட ஷங்கர், 'அன்னியனில்' எழுந்து நின்றார். அந்த வெற்றியில், உற்சாகமாய் உழைத்திருப்பது வெளிவந்திருக்கும் 'சிவாஜி' புகைப்படங்களைப் பார்க்கையில் தெரிகிறது.

ரஜினிக்கும் அதே போல்தான், 'பாபா'வின் அதிர்ச்சி தோல்விக்குப் பிறகு, சந்திரமுகியின் வெற்றி, தொடர்ந்து நடிக்க ஆசையைத் தூண்டியிருக்க வேண்டும். சிவாஜி பிலிம்சின் சந்திரமுகி வெற்றிக்கு நன்றியாய், இந்த படத்திற்கு 'சிவாஜி' என்றே பெயர் வைத்து விட்டாரோ?

ஹாரிஸை விட்டுவிட்டு மீண்டும் ரஹ்மானை நாடியிருக்கிறார் ஷங்கர், தயாரிப்பு 'ஏவிஎம்' என்பதாலும் இருக்கலாம். பொதுவாக ரஹ்மான் பாடல்கள், கேட்ட முதல் நாளே இனிப்பதில்லை, 'சிவாஜி'யின் இசை கொஞ்சம் விதிவிலக்கு. சஹாரா டூயட்டும், பல்லேலக்காவும் கேட்ட மாத்திரத்திலேயே பிடித்துப் போனது. பல்லேலக்கா பாடல் கொஞ்சம் சந்திரமுகி 'தேவுடா' பாடலை நினைவுபடுத்திகிறது. எஸ்பிபியும், அதே ஸ்டைலில் பாடியிருப்பதால் அப்படித் தோன்றலாமோ?

ஏவிஎம்-ஷங்கர்--ரஜினி-ரஹ்மான் எனப் பிரம்மாண்டங்கள் இணைந்திருப்பதில் எதிர்பார்ப்புகள் கூடியிருக்கும் அதே வேளையில், எதிர்ப்புகளும் சம அளவு விளம்பரம் பெறுகின்றன. அது சரி, காய்ச்ச மரத்தில்தானே கல்லடி படும்!

அதிக பொருட்செலவில் தயாராவதால், சீக்கிரமே போட்ட முதலை எடுக்க, டிக்கெட் விலையை, திரையிட்ட சில நாட்களுக்கு அதிகமாக விற்க முயற்சிக்கின்றனர் விநியோகஸ்தர்கள், அப்படி விற்றால் 'போராடுவேன்' என்று வீர முழக்கமிடுகிறார் விஜய.டி.ராஜேந்தர்.

Image and video hosting by TinyPic இன்னொரு பக்கம், காவிரி பிரச்னையை வைத்து ரஜினியின் சார்புநிலையை விமர்சித்து 'தமிழினத் துரோகி' பட்டம் கட்டுகிறது ஒரு கூட்டம். கன்னடத்தில், ''சிவாஜியை'த் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட அமைப்பொன்று முழக்கமிட்டுக் கொண்டிருக்கின்றது.

சிவாஜியின் திரைப்பாடல்கள், காட்சிகள் முறையாக வெளிவரும் முன்பே, இணையம், சிடி என அங்கங்கே கசிந்து கொண்டிருக்கின்றது.

சந்திரமுகியின் வெற்றிக்குப் பிறகு வருவதால், 'சிவாஜி'யின் வெற்றி பெரிதாக எதிர்பார்க்கப் படுகிறது. வெளிவந்திருக்கின்ற ஸ்டில்ஸ்கள், ரஜினியின் பொலிவையும், ஸ்டைலையும் காட்டுகிறது. பாடல்களும் அவ்விதமே, கதைக்களமோ, கருவோ தென்படவில்லை. பொதுவாக, ஷங்கரின் படத்தின் கருவில், ஏதாவது ஒரு அழுத்தமான 'மெஸேஜ்' இருக்கும். இந்தப் படத்தில் அது என்னவாய் இருக்கும் என்பது சஸ்பென்சாகவே வைக்கப்பட்டிருக்கின்றது.

Image and video hosting by TinyPic
ரஜினியைப் பொறுத்த வரையில் வெற்றிப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டாலும், ஷங்கரைப் பொறுத்த வரையில் இன்னொரு ஜெண்டில்மேனாக, 'இந்தியனா'க, 'முதல்வனா'க, தமிழ்த் திரையுலகிற்கு ஒரு முன் மாதிரியாக இருக்குமா என்பது, ஸ்டில்ஸ்களைப் பார்க்கும் போது, நம்பிக்கையாய்த் தெரியவில்லை.

எதுவாயினும், தமிழ்த்திரை ரசிகர்கள், 'மே - மாதத்தில் ஒரு தீபாவளி' காணத்தயாராகிவிட்டார்கள். ஏப்ரல்-14 ரீலிஸிலிருந்து, மே-17 -க்குத் தள்ளிப் போட்டிருக்கின்றார்கள். ஒரு வெற்றி ஒத்திப் போடப்பட்டிருக்கின்றது என்று சொல்லலாமா? பொறுத்திருப்போம்.

Tuesday, April 03, 2007

'ஒரு மாதிரி' எல்லாம் ஒரு மாதிரியா???!!!!

கடந்த சில வாரங்களா தமிழ்ப்பதிவுலகம் 'ஒரு மாதிரி' வியர்டு பதிவுகளா பதிப்பிக்க ஆரம்பிச்சு, இப்பதான் கொஞ்சம் குறையறா மாதிரி இருக்கு. நம்மளயும் வியர்டு பதிவுக்கு அழைத்திருந்தார், சர்வே புகழ் சர்வேசர். கொஞ்சம் வேலை அதிகமிருந்ததால், பதிவிட நேரமில்லாது போனது.

இரண்டு நாளைக்கு முன்னர்தான், 'Happy Feet' DVD ரீலிசாக, அதைப் பார்த்துக் கொண்டிருந்த போதுதான், இந்த வியர்டுக்கான அழைப்பு நினைவுக்கு வந்தது. 'Happy Feet'-ன் பெங்குயினுக்கு, கால் வியர்டாக இருக்க, அது பெங்குயின் கூட்டத்திடமிருந்து ஒரு வகையில் தனிமைப் படுத்தப் படுகிறது. அந்த வியர்டு காலை வைத்து, அது தன் இனம் காக்க எப்படி மெஸேஜ் சொல்லுதுன்னு அழகா படம் புடிச்சிருந்தாங்க.

இது மாதிரியே ஆபிரகாம் லிங்கனின் சிறுவயதுப் பருவம் பற்றி உலவும் கதைகளில் ஒன்றில் அவர், பலூன் வியாபாரியிடம் 'கருப்பு வண்ண' பலூனில் காற்றடைத்தால், பறக்குமா என்று கேட்பார், அதற்கு பலூன் வியாபாரி 'பலூனுக்கு வெளியே உள்ள நிறத்தில் ஒன்றுமில்லை, உள்ளே இருக்கும் காற்றுதான் மேலே பறக்க காரணம் என்பார். இந்தச் சம்பவம், அவர் மனதில் ஓரு ஆழ்ந்த சிந்தனையையும், நம்பிக்கையையும் தோற்றுவித்ததாகக் கூறுவார்கள்.

இதுமாதிரியான வித்தியாசமான சிந்தனைகள், வேறுபடுத்திக் காட்டுவதோடு, வாழ்வின் உயரேயும் கொண்டு செல்கின்றது. இப்படியான சிந்தனைகள் எல்லாம் நமக்கும் வந்தா நல்லாதான் இருக்கும். ஆனா நமக்கு வர்ரதெல்லாம், கிறுக்குச் சிந்தனையா இருக்கே, என்ன பண்ண? :)

எங்க வீட்டுல தங்கஅரளிப் பூமரம் உண்டு. கார்த்திகை, மார்கழி மாதங்களில், மரம் நிறைய பூ பூத்திருக்கும். பச்சை நிற இலைகளினூடே, மஞ்சள் நிறப் பூக்கள், பார்க்க ரம்மியமாய் இருக்கும். இதைப் பார்த்து ரசிப்பதற்காகவே, நண்பன் வீட்டு மொட்டை மாடிக்குச் சென்று, அங்கிருந்து பார்ப்போம். செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் அக்கா கிட்டேயிருந்து ரெக்வெஸ்ட் வரும், 'டேய்..தம்பி.. சாமிக்குக் கொஞ்சம் பூப் பறிச்சுக் கொடுடா' ன்னு கேப்பாங்க. 'பூ மரத்திலே இருந்தாதான் கொத்துக் கொத்தா பார்க்க அழகாயிருக்கு, சாமிக்கு வச்சா இரண்டுமணி நேரத்திலேயே வாடிடும்'னு சொல்லி மாட்டேன்னிடுவேன். சின்னவயசுல பண்ணினது, இப்ப நினைச்சா பறிச்சுக் கொடுத்திருக்கலாமோன்னு இருக்கும். இப்பவும், பூக்களைப் பறிக்காம ரசிக்கிறதுதான் புடிக்குது. ஆனா, ரங்கமணி வந்து வூட்டுல வளர்க்கிற ரோஜாவ பறிச்சுட்டுப் போனா, செடியில இருக்கிறத விட உன் தலையில இருக்கிறதுதான் அழகுன்னு சொல்லோணும்...ம்ம்..

அப்புறம் டிரெஸ் விசயத்திலேயும் கொஞ்சம் கிறுக்கு உண்டு. கலர் கலரா போடப் பிடிக்கும். அதுல கிறுக்கு என்னன்னா, நானா பார்த்து செலக்ட் பண்ணின டிரெஸ்-ஆ இருந்தாதான் அடிக்கடி போடப்பிடிக்கும். இல்லைன்னா, கொடுத்த அந்தச் சமயத்துக்கு போடுவேன், அப்புறம் கொடுத்தவங்க ஞாபகப் படுத்தறப்போதான் அந்த டிரெஸ் ஞாபகத்திற்கு வரும்.

சர்வேசன் தயிர்சாதத்திற்கு, ரசம் ஊற்றி சாப்பிடறதப் பற்றிச் சொல்லியிருந்தாரு, எனக்கும் அந்த டேஸ்ட் உண்டு, ஆனா அதவிட, தயிர் சாதத்திற்கு Fish Fry வச்சு சாப்பிட ரொம்பப் பிடிக்கும். வேலை நிமித்தமா, கல்கத்தாவில் ஆறேழு மாதங்கள் தங்கினப்போ, என்னோட ஃபேவரிட் உணவு தயிர்சாதம்-பச்சை மிளகாய்-Fish Fry. தயிரோட, Fish Fry சேர்த்தா ஜீரணமாறது கஷ்டம்னு சொல்வானுங்க பிரண்ட்ஸுங்க, 'கல்லையும் செறிக்கிற வயசு, போடான்னிடுவேன்.'

படிக்கிறப்ப, பரீட்சை செண்டிமெண்ட் ரொம்பவே உண்டு. காலைல எழுந்திருக்கிறப்ப அம்மாதான் எழுப்பனும், சின்னக்காதான் காலை உணவு தட்டுல எடுத்து வைக்கணும், கடைசிப் பரீட்சை முடிஞ்ச அன்னிக்கு கண்டிப்பாய் ஏதாவது சினிமா பார்க்கணும்..இதெல்லாம் நடந்தாதான் ஸ்கோர் நல்லாருக்கும்னு ஒரு கிறுக்கு. இதே கிறுக்கு, பின்னாடி இந்தியா கிரிக்கெட் ஆடறப்போ இருந்துச்சு. இப்ப இல்லைங்க.

எங்காவது டூர் போயிட்டு வந்தா, அந்தந்த ஊர்களிலே, சில பொருட்கள் வீட்ல உள்ளவங்களுக்குப் பிடிச்ச மாதிரி இருக்கும், வாங்கணும்னு தோணும், ஆனா வாங்கிட்டு வந்து, விலை அதிகமா இருந்துச்சுன்னா, 'உன்ன ஏமாத்திட்டாண்டா'ன்னு சொல்லுவாங்களோன்னுட்டு இருக்கும். அதுனால, சிம்பிளா ஏதாவது வாங்கிக் கொடுத்துட்டு, 'அதப் பாத்தேன்..நல்லா இருந்துது..இதப் பாத்தேன் நல்லா இருந்துது..வாங்கிட்டு வந்தா திட்டுவியோன்னுட்டு வாங்கல'ன்னு சொல்லி, அதுக்கு திட்டு வாங்குவேன். கிப்ட் கொடுக்கிறதும் ஒரு வகையான ஆர்ட், அந்த ஆர்ட் நம்மகிட்ட தயக்கமான ஒன்னு.

அமெரிக்காவுல நிறைய 'வியர்டு'ங்க உண்டு. 'Sony Playstation 3' - வீடியோ விளையாட்டுச் சாதனம் விற்பனைக்கு வந்த புதிதில், நடுங்கும் குளிரில் முந்தைய நாள் நள்ளிரவே கூடாரம் அடித்து, காத்துக் கிடந்து முதல் ஆளாய்ப் போய், US$750 கொடுத்து ப்ளே ஸ்டேசனை வாங்கி, வெளியே வந்து, காத்துக் கிடக்கிற மற்ற எல்லோர்கிட்டேயும் அதக் காட்டி உபயோகிக்காமலேயே போட்டு உடைக்கிற பப்ளிசிட்டி கிறுக்குகளும் உண்டு. அந்தமாதிரி இல்லாம, நவீனமா வருகிற காட்ஜெட்டுகளை வாங்கி உபயோகிக்கிற மோகம் உண்டு.

இன்னும் நிறைய கிறுக்குகள் உண்டு, எல்லாத்தையும் சொல்லி மாட்டிக்க வேணாம்னு இத்தோடு நிறுத்திக்கலாம். இப்ப என் முறைக்கு, நானும் ஒரு ஐந்து பேரோட குணத்த காட்டச் சொல்ல வேணாமா?

1. வினையூக்கி
2.காட்டாறு
3.மாறன்
4.இட்லிவடை
5.நானானி

இவங்க எல்லாம் இதுவரை 'Weird'-ஆ எழுதலைன்னு நினைச்சு கூப்பிட்டிருக்கிறேன். உங்க கால நேரம் பார்த்து எழுதுங்க!

மற்ற வியர்டுங்க குறித்த குறிப்பு வேணுமா? அதுக்குன்னே ஒருத்தர் 'வியர்டு ஆஸ்பத்திரி' கட்டி வச்சு, கேஸ் ஹிஸ்டரி எல்லாம் பதிவுபண்ணியிருக்காரு, போய்ப் பாருங்க!