Tuesday, February 13, 2007

வலைப்பூ வித்தகன் 'சாகரன்' கல்யாண்

'சாகரன்' கல்யாண்...தான் யாரென்றே அறியாதவாறு, தேன்கூட்டின் பின்பலமாய் நின்றவர், 'சட்' டென வந்த காலனால், எல்லோரும் துயருற அறியப்பட்டவர். வருத்தமாய்த்தானிருக்கிறது, 29 - வயது என்ன காலனைச் சந்திக்கும் வயதா?நேற்று மதி அவர்களின் பதிவு மூலமாய், அவர் மறைவு பற்றிய செய்தியுடன், அவர் எழுத்துக்களின் முன்னோட்டமும் கிடைக்க, தொடர்ந்து எழுதிய வலை நண்பர்களின் மூலமாக அவரின் பல்வேறு முயற்சிகள் தெரிய வந்தன.

இத்தனை சிறிய வயதில், எத்தனை ஆற்றல்? அவரின் தமிழ் ஆர்வமும், பிற நண்பர்கள் வலைப்பூ துவக்க உதவி கோரியபோது, போட்டியாளனாய்ப் பார்க்காது, சகஜமாய் உதவியது, தொலைபேசி வழியாக உதவிய போதும், அதற்காக கட்டணமெல்லாம் வசூலிக்காமல், இலவசமாக தமிழுக்கு பணியாற்றியது, என ஒவ்வொரு முகமாய், அவரின் பல்வேறு தமிழ் முகங்கள் புலப்பட்டது.

தேன்கூட்டினை வெறும் வலைதிரட்டியாய் மட்டும் பார்க்கப்படாமல், அதையும் தாண்டி, வலைஞர்களை இணைக்கும் ஒரு கருவியாய் ஆக்கியது, தேன்கூடு சிறுகதைப்போட்டி, சுடர் என வகை வகையாய் வலைப்பதிவர்களின் பசிக்குத் தீனி போட்டுக்கொண்டிருந்த அந்தத் தமிழார்வன், செய்துகொண்டிருந்த புதுமைகளுக்கு காலன் இட்ட புள்ளி, தமிழ் வலையுலகிற்கு பேரிழப்பு.

பரபரப்பாய் விளம்பரம் தேடும் உலகில், அரிய செயல் பல செய்தும் அடக்கமாய் இருந்த அந்தச் சாதனையாளன் மறைவு, நம்முள் ஏற்படுத்துகின்ற தாக்கங்கள், ஆக்கமாய் அவரது இன்னபிற கனவுகளை நனவாக்குவதில் இணையவேண்டுமாய் வேண்டுகிறேன். அதுவே, அந்த ஆன்மாவுக்கு கடன் பட்ட நெஞ்சங்களின் காணிக்கையாய் மாறும்.

இழப்பின் துயரை வார்த்தைகள் ஈடுகட்ட முடியாது, ஆயினும் சற்றே ஆறுதலாவது தரும், அவரை இழந்து தவிக்கின்ற அவர்தம் குடும்பத்தினர்க்கும், அவர்தம் செல்லச் சிறுமகளுக்கும், தேன்கூட்டின் நண்பர்களுக்கும் ஆண்டவன் தாங்கும் திடத்தையும், ஆறுதலையும் அளிப்பானாக!

இன்று மாலை இந்திய நேரப்படி ஆறு மணிக்கு, கூட்டு வழிபாட்டிற்கு நேரம் குறித்து, கருத்துக் கேட்டிருக்கின்றார் நண்பர் முத்துக்குமரன், தொடர்ந்து வெளியாகும் அறிவிப்பினை பின்பற்றி, சாகரனின் ஆன்மா சாந்தியுற பிரார்த்திப்போமாக!


2 Comments:

said...

"நீங்கள் எங்கிருந்த போதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும், நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!" [திருக்குரான் 4:78]

"உங்களுக்கு ஒரு நாள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதிலிருந்து நீங்கள் ஒரு நாழிகை பிந்தவும் மாட்டீர்கள், முந்தவும் மாட்டீர்கள்" [திருக்குரான் 34:30]

நம் அனைவருக்கும் மரணம் என்பது சத்தியம் என்றும் அது இன்றில்லையேல் நாளை நம்மை வந்தடையப் போகிறது என்பது நிச்சியமாகத் தெரிந்திருந்தும் நம்முடன் வாழ்பவர்களுக்கு மரணம் நேரும் பொழுது நாம் கலங்கித்தான் போகிறோம்...

சற்றுமுன் சந்தித்தேன் நன்றாகத்தான் போனார் ஆனால் அடுத்த கனம் அவர் நம்முடன் இல்லை என்னால் நம்பவே முடியவில்லை ஒரு நண்பர் சொல்லி சொல்லி ஆற்றிப்போனார்...

மற்றொருவரோ அவருடன்தான் லிப்டில் இறங்கி வந்தேன், சற்று நேரத்திற்கெல்லாம் அவர் உடலை மார்ச்சுவரியில் வைத்துவிட்டு நான் மட்டும் திரும்பி வந்தேன், என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை..

நண்பர் கல்யாண் தஞ்சை மாவட்த்தைச் சேர்ந்த குரடாச்சேரியை சொந்த ஊராக கொண்டவர், தற்பொழுது சென்னை மயிலாப்பூரில் வசிக்கிறார், அவருக்கு 31 வயது மணைவிக்கு 24 வயது, ஒரு மூன்று வயது குழந்தை இருவருக்கும் உள்ளது. எனக்கும் அவருக்குமுண்டான நட்பு மாதமிருமுறை நடக்கும் எழுத்துக்கூடத்தின் மூலம்தான் தொடங்கியது, அவர் மற்றவர்களை ஊக்குவிப்பதை கண்டு அதிசயிப்பேன்.. ஒவ்வொருவரும் தன் தனித்தன்மையை உலகிற்கு தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளத் துடிக்கும் இவ்வுலகில் திறைமறைவில் நிறைய தமிழுக்கும், தமிழருக்கும் சேவைகள் பல செய்து வெளியில் காட்டிக்கொள்ளாத ஒரு வித்தியாசமானவர். ஒரு தடவை www.thenkoodu.com என்ற இணையதளத்தைப் பற்றி பேச்சு வந்தபொழுது எல்லாம் கேட்டுவிட்டு கடைசியில் அவர் நண்பர் மூலம் அவர்தான் அத்தளத்தின் ஒருங்கிணைப்பாளர் என்று கேட்டவுடன் எனக்கு பெரும் ஆச்சிரியம்தான்...

அடிக்கடி சொல்வார் மற்றவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று... அப்படி என்னை ஊக்குவிக்கும் பொழுதுதான் நாங்கள் கடைசியாக சந்தித்தோம்.. சமீபத்தில் எங்கள் அமைப்பு நடத்திய பட்டிமன்றம்தான் அவர் இறுதியாக கலந்து கொண்ட தமிழ் நிகழ்ச்சி என்று நினைக்கிறேன், கடந்தவாரம் அவரை எங்கள் சங்ககூட்டத்தில் சந்தித்த பொழுது தனியாக என்னை சந்தித்து என் இருகைகளையும் பிடித்துக்கொண்டு நாங்கள் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியதையும் நிகழ்ச்சியை தொடக்கம் முதல் இறுதிவரை மனம்விட்டு ரசித்து சிரித்தேன் என்றும் நிகழ்ச்சி அமைப்பு மிகவும் சிறப்பாக இருந்தது என்றும் வாயார பலமுறை மனம்திறந்து பாராட்டினார்.. அந்நிகழ்ச்சியின் குறுந்தகடை வாங்கிக்கொண்டு 50 ரியால் தந்தார் என்னிடம் பாக்கி சில்லரையில்லை பின்னர் தாருங்கள் என்று எவ்வளவோ கூறியும் ஒருவேளை நான் மறந்துவிடுவேன் பாக்கியை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் பின்னர் நாம் எழுத்துக்கூடத்தில் சந்திக்கும் பொழுது வாங்கிகொள்கிறேன் என்றார், எழுத்துக்கூடம் நடக்கலாம் ஆனால் அவரை சந்திக்கவே முடியாதே என்றெண்ணும் பொழுது மனது கனக்கிறது...

நேற்று செய்தியறிந்து ரியாத்தில்உள்ள தமிழர்கள் பெரும்பாலானோர் அவரைத் தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் துக்கம் விசாரிக்க வந்தார்கள்.. குடும்பத்துடன் உள்ளவர்கள் தங்கள் துனைவியாரை அழைத்துக்கொண்டு வந்திருந்து ஆறுதல் சொன்னார்கள், நண்பர்கள் வெற்றிவேல், ஜெயசீலன் போன்றோர் அவரின் உடலை உடன் தாயகத்திற்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்து கொண்டுயிருந்தார்கள், வீட்டில் உள்ள சாமான்களை விற்கவோ அல்லது அனுப்பவோ வேறுசிலர் பேசிக்கொண்டிருந்தார்கள் ஒரு நாளில் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டதே என்று மற்ற நண்பர்கள் கண்ணீர் விட்டுக்கொண்டு வீட்டு வாசலிலேயே நின்றிருந்தார்கள்.. அதுவரை என் கண்ணீரை அடக்க முடிந்த எனக்கு அவரின் துனைவியார் கீழே வந்து அவர்கள் உபயோகித்த காரைப் பார்த்து அழுதபொழுது நான் முதல் அங்கிருந்த அனைவரும் அதற்குமேலும் கண்ணீருக்கு திரைபோட முடியவில்லை...

said...

//இவ்வுலகில் திறைமறைவில் நிறைய தமிழுக்கும், தமிழருக்கும் சேவைகள் பல செய்து வெளியில் காட்டிக்கொள்ளாத ஒரு வித்தியாசமானவர். ஒரு தடவை www.thenkoodu.com என்ற இணையதளத்தைப் பற்றி பேச்சு வந்தபொழுது எல்லாம் கேட்டுவிட்டு கடைசியில் அவர் நண்பர் மூலம் அவர்தான் அத்தளத்தின் ஒருங்கிணைப்பாளர் என்று கேட்டவுடன் எனக்கு பெரும் ஆச்சிரியம்தான்//

மிகச் சரி, நிறைகுடம், தளும்பாமல் இருந்திருக்கிறார். உங்களின் தகவல் பரிமாற்றம், அவர் மேலான மதிப்பை அதிகரிக்கின்றது, நன்றி நண்பரே.