Saturday, February 10, 2007

எங்காவது ஓர் புள்ளியில் என்றாவது இணைவோமா, என் தமிழா?


"எங்காவது ஓர் புள்ளியில்

என்றாவது இணைவோமா, என் தமிழா?

இணைவோம் என்றால்

அப்புள்ளி எப்புள்ளி?"

இன்றைய இணையத் தமிழ் வலை நடப்புகளைப் பார்க்கும்போது, இப்படித்தான் கேட்கத் தோன்றுகிறது. சென்ற சில நாட்கள், ஓரே போர்முகமாகவே கழிந்தது குறித்து நிறைய தமிழ்வலை ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்தும் பதிவிட்டிருந்தனர்.

போர்முகம் மட்டுமல்ல, சில சபைக்கு அழகில்லாத, பின்னூட்டங்களை சிலர் இடுவது, ஆண் பெண் வித்தியாசம் பாராமல், இத்தகு செயல்களை மின்னஞ்சலிலும் அனுப்புவது - இவை குறித்தும் எனக்கு வருத்தம்தான்.

இயல்பாகவே, நாம் அவ்வளவு எளிதாக நம்மை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டோம், அப்படி இருக்கையில், இது போன்ற செயல்கள், புதிதாக எழுத வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களையும் தூரப் போகச் செய்யும். முக்கியமாக, இணையத் தமிழ் உலகில் பெண்கள் பங்களிப்பும், அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும் நிலையில், இது மாதிரியான செயல்கள், நம் தமிழ்கூறும் நல்லுலகிற்கு நச்சாகும்.

ஏனிந்த இழிசெயல்கள், இதைச் செய்வதும் ஒரு தமிழன் தான்! நம்மைப் பிரித்தாள, ஏகப்பட்ட வழிகள் இருக்கின்றன. அதைத்தான், ஒவ்வொரு அரசியல்கட்சிகளும், அரசியல்வாதிகளும் சாமர்த்தியமாகவோ, இல்லை சாமர்த்தியக் குறைவாகவோ செய்து கொண்டிருக்கின்றார்களே, நாமும் அதற்கு தூபவிட வேண்டுமா? என்று கேட்கத் தோன்றுகிறது.

ஆதிக்கவெறியும், அடக்குமுறையும் நடக்கின்ற இடங்களில், தட்டிக் கேட்கலாம், தப்பில்லை. ஆனால், சும்மா பொழுது போகாமல், கிள்ளிவிட்டு 'ஹிட்' பார்ப்பது கண்டிப்பாய்த் தவறுதான்.

நல்ல விசயங்களை எழுதுவோம், நமக்குள் நட்புப்பாலம் பூக்க வகை செய்வோம், முதலில். எதை எழுதவேண்டும், எதை எழுதக் கூடாது என்பது, அவரவர் சுதந்திரம். ஆனால், எழுதப்படுகின்ற எழுத்து நன்மை பயக்காவிட்டாலும், இன்னலுறுத்தாது இருக்க வேண்டும்.

இந்தப் பதிவினை எழுதத் தூண்டியது, நண்பர்கள் கொழுவி, சிபி, மா.சிவகுமாரின் பதிவுகள்.

ஒரே நேர்கோட்டுச் சிந்தனைக்கு வா தமிழா என்றழைக்க முடியாது, 'நல்லெழுத்து' என்ற சிந்தனையிலாவது இணைவோம் வா தமிழா, என்றழைக்கிறேன்..

11 Comments:

said...

//நல்ல விசயங்களை எழுதுவோம், நமக்குள் நட்புப்பாலம் பூக்க வகை செய்வோம், முதலில். எதை எழுதவேண்டும், எதை எழுதக் கூடாது என்பது, அவரவர் சுதந்திரம். ஆனால், எழுதப்படுகின்ற எழுத்து நன்மை பயக்காவிட்டாலும், இன்னலுறுத்தாது இருக்க வேண்டும்//

இதுக்குத்தான ஆசைப்படுறோம்!

said...

சிபி,

எப்போதும் தமிழ்மணத்திலேயே இருக்கிறீர்கள் போல. இவ்வளவு துரிதமா பின்னூட்டம் இட்டு இருக்கீங்க.

நல்லது நடக்கட்டும்..நன்றி.

said...

//எப்போதும் தமிழ்மணத்திலேயே இருக்கிறீர்கள் போல//

ஹிஹி!
:))

said...

சிவா,

நீங்கள் சொல்வதை நான் ஆமோதிக்கிறேன். சண்டைகள் எதற்கு? அடுத்து வாரம் அன்பர் தினம். எல்லாருமே எல்லாரும் மேலேயும் அன்பாக இருப்போமே.. இன்றோடு இந்த போர் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.. :-)

said...

மை ஃபிரண்ட்.

/இன்றோடு இப்போர் முடிவுக்கு வர வேண்டும்/

எல்லா தமிழ் நெஞ்சங்களும் நினைத்தால், கண்டிப்பாய் நடக்கும். முதலில், ஒற்றுமைப் பூக்கள் பூத்தால், பிரிவினை வாதங்கள் தானாக ஓடிவிடும்.

இதிலெல்லாம், காயப்படாமல் வலைப்பூக்கள், அடுத்த கட்டத்திற்கு தாவினால் நன்றாக இருக்கும். ம்ம்..அன்பர்தினம், நிஜமாய் அன்புதரும் தினமாகட்டும்...

said...

அண்ணாத்த, தமிழங்கிட்டயே திராவிட தமிழன், ஆரிய தமிழன்றானுங்கோ.. எப்படி ஒன்னு சேருவானுங்கோ.. திட்டறுதுலதான் ஒன்னு சேருவோமுங்கோய்..

said...

இணைவோம் இணைவோம்.

இணைவதர்க்கு இதுவே நல்ல தருணம்.

said...

ஹும்!! பார்க்க வேண்டியவர்கள் பார்த்தால் சரிதான்.

said...

திட்டுவதில் வேண்டாமே, மற்ற நல்ல விசயங்களில் ஒன்னு சேரலாமேன்னுதான் கூப்பிடறேன், அனானி, வருவாங்க.

said...

/இணவதற்கு இதுவே நல்ல தருணம்/

ஆமாங்க பிஎன்ஐ. இணைவோம்..

said...

வடுவூர் சார்,

பார்க்க வேண்டியவங்க, பார்த்தால் மட்டுமல்ல, செயலிலும் காட்டணும்ங்கிறதுதான் விருப்பம். ம்..எண்ணித்துணிக கருமம்..