Wednesday, February 28, 2007

நீங்க 30 ப்ளஸ்-ஆ?

தர்ட்டி ப்ளஸ்-னாலே ஒதுக்கப் படறோமோன்னு நினைக்க ஆரம்பிப்பாங்க, தர்ட்டி ப்ளஸ் தாண்டின இளம் வயோதிகர்கள்? :) அந்த 'தர்ட்டி ப்ளஸ்' அலர்ஜி, தமிழ்மண பின்னூட்ட இடுகைகளுக்கும் வந்தாச்சு.

என்னைப் பொறுத்த வரையில், இது ஒரு நல்ல முயற்சிதான். பரீட்சித்துப் பார்ப்பதில் தவறில்லை. இது ஏதோ, மின்மினியின் பதிவுகள் இளமையாகவே இருப்பதினால் - அதாங்க, 30 மைனஸ் :)) சொல்றேன்னு நினைச்சுக்காதீங்க. ஏற்கனவே, இந்தப் பின்னூட்டங்கள் குறித்து எனது இரு வேறு பதிவுகளில் கருத்துச் சொல்லியிருக்கிறேன். ஒன்று கதை நடையில், இன்னொன்று ஜாதீயம் குறித்த பதிவில்.

சகபதிவர் சேதுக்கரசி மிகச் சரியாய்ச் சொல்லியிருப்பது போல, தமிழ்மணத்தின் இந்தப் முகப்புப் பின்னூட்டப் பகுதி Prime Real Estate-தான். இந்த இடத்தை தக்க வைத்துக்கொள்ள, ஏகப்பட்ட போட்டிகளும், தனக்குத்தானே பின்னூட்டமிடுதலும், அரட்டை கச்சேரிகளும்.. என வகைவகையான யுக்திகளைக் கையாளப்பட்டு வந்தன. இது பறிபோவது, இவர்களுக்கு வருத்தத்துக்குரிய விசயமாக இருக்கலாம்.

ஆனால், தமிழ்மணத்தின் இந்த முயற்சி, ஒரு வகையில் ஜாதீயச் சண்டைகளும், தனிநபர் தாக்குதல்களும் குறைய வாய்ப்பளிக்கும் என்றே தோன்றுகிறது. தேவையில்லாமல், அத்தைகைய பதிவுகள், கண்ணில் பட்டு, எரிச்சலூட்டிக் கொண்டிருக்காது.


இது ஒரு சோதனை முயற்சி என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள் தமிழ்மண நிர்வாகத்தினர். மேலும், சேதுக்கரசி அவர்கள் விடுத்திருக்கும் இன்னொரு வேண்டுகோளான, '24 மணி நேரத்தில் மறுமொழியப்பட்ட இடுகைகள்' பகுதியில் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல், 30+ உட்பட எல்லா மறுமொழிகளும் தெரியவைக்க முயல்கிறோம் என்றும் சொல்லி இருக்கிறார்கள்.

தவிரவும், இம்முயற்சி குழு மனப்பான்மையும், மதவாதங்களும், ஜாதீயமும், தனிநபர் தாக்குதல்களும் மட்டுமே Prime Real Estate-ஐ ஆக்ரமிக்காமல், சில புதிய பதிவர்களின் எழுத்துக்களுக்கும் இடம் கொடுத்து வெளிச்சம் கிட்டச் செய்யும் என்றும் தோன்றுகிறது.

தமிழ்மணத்தாரின் முயற்சிகள், இங்கேயே நின்றுவிடப் போவதில்லை, நல்ல பதிவர்களையும், நல்ல எழுத்துக்களையும் அடையாளம் காண, இன்னமும் முயற்சித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். அந்த வகையில், இந்தச் சோதனை முயற்சியை, சோதனையாகவே எதிர்கொண்டு, தமிழ்மணத்திற்கு உதவலாமே!

Sunday, February 18, 2007

கண்மணியின் முதல் வருகைக்குப் பரிசு - காய்கறிக்கலை - 3


இந்தக் காய்கறிக் கலை படங்களை போட்டு, படம் காட்டிட்டு இருக்கறப்பா, நம்ம கண்மணியின் கண் 'மின்மினி' பக்கம் பட்டுடுச்சு. முதல் வருகைக்கு பரிசு எங்கப்பா?-ன்னு ஒரு கேள்விய போட்டுட்டாங்க, கொடுக்காம போக முடியுமா? அதாங்க, இந்த பாகம் - 3 - ஐ, அவங்களுக்கான ஸ்பெஷலா போட்டிராலாம், திருப்திதானுங்களே கண்மணி.. :))யாரு இந்த கண்மணி-ன்னு கேக்கறவங்க அவங்களோட 'பல்சுவை பக்கம்'
போய்ப் பாருங்க..

"அ....முதல்...ஃ வரை கவிதை...முதல்...கடிஜோக் வரை... கோலம்..முதல்..கோழிகுருமா வரை பழமொழி...முதல்...பாட்டிவைத்தியம் வரை எல்லாம்..பேசுவோம் வாங்க வந்து சிரிச்சிட்டுப் போங்க" -ன்னு கூப்பிட்டு வச்சு விருந்து போட்டிருக்காங்க, போய்ப் பாருங்க.சூப்பரா இதுவரைக்கும் எங்க குடும்பப் படங்கள்ளாம் பாத்தீங்களா? ஜாலியா வந்துட்டுப் போனதுக்கு 'டாங்க்ஸ்-ங்கண்ணா'?

இனிமே சமைக்கிறப்போ, காய்கறி வெட்ட முன்னாடி, என்ன பாவனை காட்டுறோம்-னு பாத்துட்டு வெட்டுறீங்களா?

- முற்றும்


Saturday, February 17, 2007

நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த காய்கறிக் கலை - 2


'கல்லிலே கலை வண்ணம் கண்டார்'னு பாடினவங்க, இந்த காய்கறில வித்தை பண்றவங்கள பாத்திருந்தா மாத்திப் பாடியிருப்பாங்களோ? ஆனா, கல்லிலே கண்ட கலைவண்ணம், காலத்துக்கும் நிலைத்து இருக்கும். காய்கறி வாடிபோகுமே?

ஆனாலும், மக்களுக்கு தோணியிருக்கிற கற்பனை ஊற்று, ஆச்சரியமாத் தானிருக்கு,
எங்க வீட்டு குட்டிப் பசங்க எல்லோருக்கும் இந்தப் படங்கள்ளாம், ரொம்பப் பிடிச்சிருக்கு, அதுலேயும் அந்த மீனும், அழுகிற (cry) ஆரஞ்சும் சூப்பரோ சூப்பர்..ஆவலோட எதிர்பார்த்த உங்க பார்வைக்கு, விடுபட்ட படங்கள் இங்கே..

நீங்க மட்டும் பாக்காதீங்க, உங்க வீட்டுப் பாப்பாவுக்கும் காட்டுங்க. இது மாதிரி விசயங்கள், அவங்களோட கற்பனா சக்தியை கூட்டும்.

இன்னும் மூணு படம் மிச்சமிருக்கு, அதுல தான் அந்த மீனும் வருது. இதுவே, பக்கம் பெரிசானதுனால, அடுத்ததுல போடறேன்.


Friday, February 16, 2007

காய்கறிக் கலை - 1காய்கறி புகைப்பட போட்டி ஜோரா நடந்துட்டுருக்கு, அதுல ஒரு அனானி வாசகர், போட்டிருந்த கமெண்ட் இது.

"சர்வேசாதலைப்பை மாத்து !புகைப்பட வித்தகர் போட்டியா இல்லை வெஜிடபிள் கார்வார் போட்டியா !கார்வ் பண்ணத் தெரியாத ஒரு போட்டியாளன்.( சும்மா டமாஸூக்குத்தான் ):-))"


இது பத்தி யோசிச்சுகிட்டு இருக்கையில, நண்பர் சக்திவேலோட ஈ-மெயில் 'டங்'னு சத்தம் போட்டது.
சில புரபஷனல் கார்வர்ஸ், செம கலக்கு கலக்கியிருக்காங்க. அழகான படங்கள், நீங்களும் பாருங்க.

- இன்னும் வரும்.

Thursday, February 15, 2007

வந்துட்டேண்ணா...வந்துட்டேன்..

சில விசயங்கள் நாம செய்யணும்னு ஆசைப்படறது, ஆனா அத முயற்சிக்கையில ஆசைப்பட்ட அளவு அவ்வளவு எளிதான விசயமாகிவிடாது.


அதுமாதிரிதான், 'வலைஜாலிஞர்' சர்வேசர், பாட்டுக்குப் பாட்டு போட்டிக்குப் பெயர் கொடுக்கையில் எளிதாக இருந்தது . ஆனா, நம்ம ஷைலஜா மேடம் 'ய்'-ல முடிக்க, சர்வேசர் 'ய'கர வரிசையில ஆரம்ப்பிக்கச் சொல்லிட்டார். யகர வரிசையில, பெண்கள் பாடுறதுக்கு நிறைய பாடல் இருக்கு. ஆண்குரலில் பாட, சோகப் பாடல்தான் நினைவுக்கு வந்தது. 'யார் வீட்டு ரோஜா' பாடலாம்னா, சில peak curve அலர்ஜியாகுது. கடைசியா ரெண்டு மூணு, முயற்சி பண்ணி ஏதோ சுமாரா தேறினத அனுப்பியாச்சு.


சர்வேசர் வேற, அதுக்குள்ள 'எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்'னு அறிவிப்பு வேற விட்டுட்டார். ஓசியில ஒரு விளம்பரம் கிடைக்குதே, இன்னொரு அறிவிப்பு வரும் வரை காத்திருக்கலாமான்னு நினச்சேன்.. அடுத்து வரிசையில இருக்கிறவங்க அடிக்க வந்துரக் கூடாதே-ன்னுட்டு அனுப்பி வச்சுட்டேன்.


அவரு ப்ளாக்ல போட்டப்புறம், இங்கேயும் 'லிங்கி'ரலாம். ஏற்கனவே, நிறைய பேர் பாடியிருக்காங்க, கேட்க இங்க 'க்ளிக்' குங்க.


இந்தக் குரலிசைக்கு முன்னோடியா இருந்தது, சிறில் அலெக்ஸ்தான். அவருடைய செய்தி வாசிப்பு பதிவுதான் முதல் குரல் பதிவு. அதைக் கேட்ட பொழுதே அவருக்கு வாழ்த்துச் சொல்லி, விரிவாக பின்னூட்டமிட வேண்டுமென்று நினைத்தேன். (இந்தப் பதிவின் ஆரம்ப வரிகளை ஒரு முறை படிச்சுடுங்க.) இதன் மூலமா சொல்லிக்கிறேன். வித்தியாசமா, முயற்சிக்கிற வலைப்பதிவர்கள்ளே அலெக்ஸும் ஒருவர், 200 பதிவு தாண்டினவரு, இரண்டாயிரமும் தாண்ட வல்லவர். மேலும் பல புதுமைகளை தமிழ் வலைப்பூவுக்கு அறிமுகப் படுத்த வாழ்த்துக்கள், அலெக்ஸ்.


பாட்டுக்குப் பாட்டுக்கு பாட தாமதமானதுக்கு, அடுத்து பாட இருக்கிற பதிவர்கள் மன்னிக்க. இதுவரைக்கும், பாட தயாராகதவங்க, இப்ப ரெடியாகுங்க.. பேர் கொடுக்க சர்வேசனைப் பாருங்க..
மெல்லிசை மன்னர் உடல் நலம் குறித்துச் சொன்ன பிறகே, இந்தப் போட்டியை ஆரம்பித்து இருந்தார், மெல்லிசையார் எனது அபிமான இசை அமைப்பாளர்களில் ஒருவர், இசையில் இளையராஜா என்றால், 'ட்யூனில்' மெல்லிசையார் என்பது மறுக்க முடியாத ஒன்று. அவர் பற்றி தனிப் பதிவு எழுத எண்ணம். மெல்லிசையாரின், உடல்நலம் நன்றாக, கடவுள் அருளட்டும்.

Tuesday, February 13, 2007

போட்டி ஆரம்பிச்சாச்சு, குருமா பண்ணிடலாமா?

என்னா போட்டின்னு கேக்கறீங்களா?

தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்க வச்சு ஆரம்பிச்ச போட்டிக்கு புகைப்படங்கள்ளாம் வந்தாச்சு, சர்வேசன் கட்டம் கட்டி காட்டியிருக்காரு. ஓட்டு போட்டு, போட்டியை 'கமகம''க்க வைங்க பார்க்கலாம்.

ஒருஒரு போட்டோக்கும், சும்மா ஜாலியா கமெண்ட் போடலாமா? போட்டோ எடுத்த அண்ணன்மார்/அக்காமார், கோவிச்சுடாதீங்க.. :))

போட்டோ - A - எங்க நிறம் வேறேன்னாலும், ஒரே கோட்டுக்குள்ள வந்துட்டோம், நீங்களும் வந்துருவீங்கதானே, தமிழர்களே..அட்லீஸ்ட் ஓட்டுபோடவாவது?

போட்டோ - B - நாளக்கி காதலர்தினமாம், நானும் கொண்டாடத்தான் வந்திருக்கேன், ஆனா, உதட்டுலே வெங்காய வாசம், ஒகே வா?

போட்டோ - C - தக்காளிப் பொண்ணு, பல்லவன் பஸ்ஸிலே, வெங்காயப் பசங்க உரசரானுங்கோ, உருளைக்கிழங்கு பொடியங்கோ எஸ்கார்ட்டாம்.

போட்டோ - D - ஒரு கோப்பைக்குள் எங்கள் குடியிருப்பு..

போட்டோ - E - காமாலை கண்ணுக்கு மஞ்சள், இந்தக் காமிராவின் கண்ணுக்குமா? மஞ்சளின் மங்கலம், இந்தப் போட்டோலேயும் தங்கட்டும்.

போட்டோ - F - வெங்காயம் உரிச்சா கண்ணுக்கு அலர்ஜி, இங்க கண்ணுக்கு குளிர்ச்சி?

போட்டோ - G - வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டு..அது எல்லாத்துக்கும்தான்!

போட்டோ - H - நாமிருவர் (தக்காளி,வெங்காயம்), நமக்கு ஒருவர்(உருளை)

போட்டோ - I - கூட்டமாய் ஒரு கும்மாளம்.

போட்டோ - J - அரசியல்வாதியின் கூழைக் கும்பிடு, ஓட்டு போட்டுருங்க!

போட்டோ - K - சர்வேசன் போட்டியில எங்காளுங்க கலந்துக்குறாங்களாம், அதான் குடும்பத்தோட பார்க்க வந்துருக்கோம்!

போட்டோ - L - ஒடுக்கப்பட்ட தக்காளி, ஆர்ப்பரிக்கும் வெங்காயம்!

போட்டோ - M - ஆகாயத் தாமரை அல்ல..வெங்காயத் தாமரை, அல்லித் தக்காளி உடன்

போட்டோ - N - உ.வெ தாத்தா..அதாங்க உருளைக்கிழங்கு, வெங்காய தாத்தா

போட்டோ - O - கொடுவா மீசை கிழங்கு பாரு..ஓட்டுப் போடு தூள்!

போட்டோ - P - தக தக தக தக்காளி வேட்டை!

படங்களோட பாக்கணுமா? இங்க 'க்ளிக்' பண்ணுங்க!

வலைப்பூ வித்தகன் 'சாகரன்' கல்யாண்

'சாகரன்' கல்யாண்...தான் யாரென்றே அறியாதவாறு, தேன்கூட்டின் பின்பலமாய் நின்றவர், 'சட்' டென வந்த காலனால், எல்லோரும் துயருற அறியப்பட்டவர். வருத்தமாய்த்தானிருக்கிறது, 29 - வயது என்ன காலனைச் சந்திக்கும் வயதா?நேற்று மதி அவர்களின் பதிவு மூலமாய், அவர் மறைவு பற்றிய செய்தியுடன், அவர் எழுத்துக்களின் முன்னோட்டமும் கிடைக்க, தொடர்ந்து எழுதிய வலை நண்பர்களின் மூலமாக அவரின் பல்வேறு முயற்சிகள் தெரிய வந்தன.

இத்தனை சிறிய வயதில், எத்தனை ஆற்றல்? அவரின் தமிழ் ஆர்வமும், பிற நண்பர்கள் வலைப்பூ துவக்க உதவி கோரியபோது, போட்டியாளனாய்ப் பார்க்காது, சகஜமாய் உதவியது, தொலைபேசி வழியாக உதவிய போதும், அதற்காக கட்டணமெல்லாம் வசூலிக்காமல், இலவசமாக தமிழுக்கு பணியாற்றியது, என ஒவ்வொரு முகமாய், அவரின் பல்வேறு தமிழ் முகங்கள் புலப்பட்டது.

தேன்கூட்டினை வெறும் வலைதிரட்டியாய் மட்டும் பார்க்கப்படாமல், அதையும் தாண்டி, வலைஞர்களை இணைக்கும் ஒரு கருவியாய் ஆக்கியது, தேன்கூடு சிறுகதைப்போட்டி, சுடர் என வகை வகையாய் வலைப்பதிவர்களின் பசிக்குத் தீனி போட்டுக்கொண்டிருந்த அந்தத் தமிழார்வன், செய்துகொண்டிருந்த புதுமைகளுக்கு காலன் இட்ட புள்ளி, தமிழ் வலையுலகிற்கு பேரிழப்பு.

பரபரப்பாய் விளம்பரம் தேடும் உலகில், அரிய செயல் பல செய்தும் அடக்கமாய் இருந்த அந்தச் சாதனையாளன் மறைவு, நம்முள் ஏற்படுத்துகின்ற தாக்கங்கள், ஆக்கமாய் அவரது இன்னபிற கனவுகளை நனவாக்குவதில் இணையவேண்டுமாய் வேண்டுகிறேன். அதுவே, அந்த ஆன்மாவுக்கு கடன் பட்ட நெஞ்சங்களின் காணிக்கையாய் மாறும்.

இழப்பின் துயரை வார்த்தைகள் ஈடுகட்ட முடியாது, ஆயினும் சற்றே ஆறுதலாவது தரும், அவரை இழந்து தவிக்கின்ற அவர்தம் குடும்பத்தினர்க்கும், அவர்தம் செல்லச் சிறுமகளுக்கும், தேன்கூட்டின் நண்பர்களுக்கும் ஆண்டவன் தாங்கும் திடத்தையும், ஆறுதலையும் அளிப்பானாக!

இன்று மாலை இந்திய நேரப்படி ஆறு மணிக்கு, கூட்டு வழிபாட்டிற்கு நேரம் குறித்து, கருத்துக் கேட்டிருக்கின்றார் நண்பர் முத்துக்குமரன், தொடர்ந்து வெளியாகும் அறிவிப்பினை பின்பற்றி, சாகரனின் ஆன்மா சாந்தியுற பிரார்த்திப்போமாக!


Sunday, February 11, 2007

பச்சைக்கிளி முத்துச்சரம்


'வேட்டையாடு விளையாடு' - வெற்றிக்குப்பிறகு, கெளதமின் இயக்கத்தில் வெளிவர இருக்கின்ற படம் 'பச்சைக்கிளி முத்துச்சரம்'. வழக்கம் போல, ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசை. அந்த ஆர்வத்தில், இணையத்தில் தேடி, அதன் பாடல்களை கேட்டேன்..

மொத்தம் ஐந்து பாடல்கள், ஒரு பாடல் இருமுறை வருகிறது. இரண்டு பாட்டு மிக அருமை. அதிலும் 'பாம்பே ஜெயஸ்ரீயின்' 'உனக்குள் நானே' பாடல் சூப்பரோ சூப்பர். அந்தக் குரலும், ட்யூனும், அவ்வப்போது 'வசீகரா'வை நினைவு படுத்தினாலும், குரலின் வசீகரத்திற்கு மன்னித்து விடலாம், இதே பாடலை 'மதுஸ்ரீ'-யும் பாடியிருக்கிறார், ஆயினும் வசீகரத்தின் வசீகரம் இல்லை.

இன்னொரு இனிமையான பாடல்: 'கருகரு விழிகளால் ஒரு கண்மை எனைக் கடத்துதே' எனத் தொடங்கும் கார்த்திக், கிரிஷ், நரேஷ் பாடிய பாடல். துடிப்பாய் இருக்கிறது. 'தாமரைஇலை நீர் நீதானா..' என்ற வரிகளில், இசையோடு வாய்ஸ் ப்ளெண்ட் ஆகிறமாதிரி பண்ணியிருப்பது அழகாய் இருக்கிறது.

அடுத்து சுமாராய்க் கவர்வது 'உன் சிரிப்பினில்' எனத் தொடங்கும் பாடல்..கெளதமிராவும், ராபியும் பாடியிருக்கிறார்கள், இதற்கு முன்னர் ஏதும் பாடியிருக்கிறாரா தெரியவில்லை. ட்ரெய்லரில் இந்தப்பாடலைத்தான் ஓட விட்டிருக்கிறார்கள். மென்மை தெரிகிற ஆண்குரலிசை, 'சரத்குமாருக்கு' ஒத்துப் போகுமா?

'காதல் கொஞ்சம்' பாடல் அவ்வளவு எனக்குப் பிடிக்கவில்லை.

கெளதம் - ஹாரிஸ் கூட்டணியில் பாடல்கள், இதுவரை நன்றாகவே வந்திருக்கிறது, இதுவும் அப்படியே.

ரஹ்மானின் வாரிசாக வந்தாலும், தனக்கென ஒரு பாணியை கொண்டுவந்துவிட்டார் ஹாரிஸ் என்றே சொல்லவேண்டும். தவிரவும், பின்னனி இசையிலும், ஒரு தனித்துவம் தெரிகிறது.


கெளதம் ஒரு தமிழ்ப் பிரியர், தன் கதாபாத்திரத்திற்கு தமிழ்ப் பெயரே வைப்பார், பாடல்களிலும் அந்தக் கவனம் தெரிகிறது..

சரத் ஒரு 'லைப்' எதிர்பார்த்து இருக்கிறார், 'ஹாட்' ட்ரிக் அடித்த கெளதம் அதைத் தக்கவைத்து, சரத்துக்கு உதவுவாரா? பார்க்கலாம்..

பாட்டு கேக்கணுமா:..இங்கே 'க்ளிக்'குங்க

Saturday, February 10, 2007

எங்காவது ஓர் புள்ளியில் என்றாவது இணைவோமா, என் தமிழா?


"எங்காவது ஓர் புள்ளியில்

என்றாவது இணைவோமா, என் தமிழா?

இணைவோம் என்றால்

அப்புள்ளி எப்புள்ளி?"

இன்றைய இணையத் தமிழ் வலை நடப்புகளைப் பார்க்கும்போது, இப்படித்தான் கேட்கத் தோன்றுகிறது. சென்ற சில நாட்கள், ஓரே போர்முகமாகவே கழிந்தது குறித்து நிறைய தமிழ்வலை ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்தும் பதிவிட்டிருந்தனர்.

போர்முகம் மட்டுமல்ல, சில சபைக்கு அழகில்லாத, பின்னூட்டங்களை சிலர் இடுவது, ஆண் பெண் வித்தியாசம் பாராமல், இத்தகு செயல்களை மின்னஞ்சலிலும் அனுப்புவது - இவை குறித்தும் எனக்கு வருத்தம்தான்.

இயல்பாகவே, நாம் அவ்வளவு எளிதாக நம்மை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டோம், அப்படி இருக்கையில், இது போன்ற செயல்கள், புதிதாக எழுத வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களையும் தூரப் போகச் செய்யும். முக்கியமாக, இணையத் தமிழ் உலகில் பெண்கள் பங்களிப்பும், அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும் நிலையில், இது மாதிரியான செயல்கள், நம் தமிழ்கூறும் நல்லுலகிற்கு நச்சாகும்.

ஏனிந்த இழிசெயல்கள், இதைச் செய்வதும் ஒரு தமிழன் தான்! நம்மைப் பிரித்தாள, ஏகப்பட்ட வழிகள் இருக்கின்றன. அதைத்தான், ஒவ்வொரு அரசியல்கட்சிகளும், அரசியல்வாதிகளும் சாமர்த்தியமாகவோ, இல்லை சாமர்த்தியக் குறைவாகவோ செய்து கொண்டிருக்கின்றார்களே, நாமும் அதற்கு தூபவிட வேண்டுமா? என்று கேட்கத் தோன்றுகிறது.

ஆதிக்கவெறியும், அடக்குமுறையும் நடக்கின்ற இடங்களில், தட்டிக் கேட்கலாம், தப்பில்லை. ஆனால், சும்மா பொழுது போகாமல், கிள்ளிவிட்டு 'ஹிட்' பார்ப்பது கண்டிப்பாய்த் தவறுதான்.

நல்ல விசயங்களை எழுதுவோம், நமக்குள் நட்புப்பாலம் பூக்க வகை செய்வோம், முதலில். எதை எழுதவேண்டும், எதை எழுதக் கூடாது என்பது, அவரவர் சுதந்திரம். ஆனால், எழுதப்படுகின்ற எழுத்து நன்மை பயக்காவிட்டாலும், இன்னலுறுத்தாது இருக்க வேண்டும்.

இந்தப் பதிவினை எழுதத் தூண்டியது, நண்பர்கள் கொழுவி, சிபி, மா.சிவகுமாரின் பதிவுகள்.

ஒரே நேர்கோட்டுச் சிந்தனைக்கு வா தமிழா என்றழைக்க முடியாது, 'நல்லெழுத்து' என்ற சிந்தனையிலாவது இணைவோம் வா தமிழா, என்றழைக்கிறேன்..

Monday, February 05, 2007

இட்லி வடை வராததால் தகராறு??!!

சமீபமா இப்பத்தான் வலைப்பதிவர் சந்திப்பு நடந்து முடிந்தது. இந்த முறை, இட்லிவடையார் அதில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது.

அவர் வராததுனால, அங்க சண்டை வந்ததோ, இல்லை 'போட்டோவை' முன்கூட்டியே வெளிவிட்டுவிட்டார் என்று சண்டை தவிர்க்கப்பட்டதோ என்பது பற்றி அல்ல இந்தப் பதிவு,...

இது ஒரு கல்யாண கலாட்டாங்க, கீழேயுள்ள நியூஸைப் படிங்க, செய்தியைப் பெரிதாகப் படிக்க, அதன் மேல் சொடுக்கவும்.


Sunday, February 04, 2007

சூப்பர் பவ்ல் - யாரு செயிப்பாக? - குரங்கு ஜோசியம்


'சூப்பர் பவ்ல்' பத்தி இன்னைக்கு வாசன் எழுதியிருக்கிற பதிவு படிச்சேன். நமக்கு 'வோர்ல்ட் கப் கிரிக்கெட்' மாதிரி, அமெரிக்க மக்களை கட்டிப் போடுகிற விளையாட்டு.Saturday, February 03, 2007

தீபாவளிக்கு அமெரிக்க முத்திரை வேணுமா?


சின்ன வயசு குட்டிப் பசங்கள்ள இருந்து, பெரியவங்க வரைக்கும் ஒரு குதூகலம் கொடுக்கிற பண்டிகை தீபாவளிப் பண்டிகை. வெடி கொளுத்துங்க, இல்ல கொளுத்தாம இருங்க.. எப்படியாயினும், தீபாவளிங்கிறது இன்னைவரைக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான பண்டிகைதான்.


இந்தப் பண்டிகையைச் சிறப்பித்து, அமெரிக்கத் தபால்தலை வெளியிட இந்திய நண்பர்கள் சிலர் முயற்சிக்கிறார்கள், அதற்காக 'ஈ - கையெழுத்து' வேட்டை நடத்துறாங்க. நீங்களும் கூட ஆதரவளிக்கலாம், கீழேயுள்ள URL-ஐ உபயோகிக்கவும்.

Thursday, February 01, 2007

மலைச்சிங்கம் வென்ற மாதரசி?


"காட்டு வழி போற பொண்ணே கவலைப்படாத,
காட்டுப் புலி வழிமறிக்கும் கலங்கி நிக்காத,
மம்பட்டியான் பேரு சொன்னா புலி ஒதுங்கும் பாரு"-ன்னு இளையராசா பாடினது மாதிரி, அமெரிக்காவுலயும் ஒரு மம்பட்டியான் இருந்திருந்தா, ஜிம்-நீல் ஹாம் குடும்பத்தாருக்கு வசதியாய் இருந்திருக்கும்.

ஜிம் (70) - நீல் ஹாம் (65) தம்பதியர் 60 வயதைக் கடந்தவர்கள். அமெரிக்கர்கள்தாம் எந்த வயதிலும் துடிப்போடு உடல்நலம் பேணுவாங்களே, அது மாதிரிதான் இந்தத் தம்பதியரும், மலை ஏற சென்ற வாரம், கலிஃபோர்னியாவில் உள்ள ரெட்வுட் பார்க்குக்குச் சென்றிருக்கின்றனர். இந்த மலைப்பகுதியில், 'பூமா' வகையைச் சார்ந்த மலைச்சிங்கங்கள் உண்டென்பது, இங்கு மலையேற வருபவர்களுக்குத் தெரியும்.பொதுவாகவே, இவ்வகை மலைச்சிங்கங்கள், துரத்தி வேட்டையாடுவதில் ஆர்வமுள்ளவையாம், மனிதனையும் வேட்டையாட வல்லவை என்றாலும், பெரும்பாலும் மனிதனைக் கண்டால் ஓடிவிடுமாம். ஆனால், இவர்கள் துரதிருஷ்டம், இவர்கள் போன வேளையில், இவர்களிருவரையும் கண்ட அது, ஜிம்-மைப் பிடித்துக் கொண்டது. அவரது தலையைக் கவ்வி இருக்கிறது. முறத்தால், புலி விரட்டிய பண்டைய தமிழ்ப்பெண் போல, நீல் ஹாம்தான், அருகிலிருந்த மரக்கிளைகளை ஒடித்து, அதனோடு சண்டையிட்டு, தன் கணவனை மீட்டிருக்கிறார். சாதாரண விசயமில்லை அது!


இருந்தபோதும், ஜிம் இன்னும் அபாய கட்டத்தை தாண்டவில்லை என்றே அவருக்குச் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்தமாதம், இவர்களுக்கு 50 - வது திருமணநாளைக் கொண்டாட இருக்கிறார்கள், நீலின் துணிச்சலான செயல், வீண்போகாமல் சீக்கிரமே உடல் தேற இறைவன் அருளட்டும்.