Wednesday, January 24, 2007

2006 ன் சிறந்தத் தமிழ் வலைதிரட்டி எது?

கடந்து போன இரண்டாயிரத்து ஆறாம் வருடம், வலையுலகிற்கு ஒரு சிறப்பான வருடமாயிருந்திருக்கும். நிறைய புதுப்புது வலைஞர்கள் உருவானார்கள். ஒரு புதிய உலகம் பிறந்தது போலிருந்தது.

கூகிளில் தமிழ் என்று தேட, தமிழ்மணம் பார்வைக்கு வந்து விழ, உள்ளே எட்டிப் பார்த்தால், 'கலகல' - என தமிழின் மணம். ஒரே சந்தோஷம் தாங்க. அப்போதைய தமிழ்மண டெம்ப்ளேட் நல்லாயிருந்த மாதிரி ஞாபகம். அப்புறம், எழுதியிருந்த மக்களின் ப்ளாக் மூலமாக, தேன்கூடு அறிமுகமானது.

இந்த இரு வலைதிரட்டிகளின் செயல்பாடுகளும், மிகவும் பாராட்டுக்குரியது. பணி நிமித்தமாய், நாடு விட்டு நாடு தாண்டி, நம் மொழி பேசுவோர் இருப்பாரா என்று தேட விடாமல், virtual-ஆய் ஒரு நண்பர் குழாமை அடிச்சிக்கவும், புடிச்சிக்கவும் தேடிக் கொடுக்கின்ற இந்தத் தளங்கள் பாராட்டுக்குரியவை. இலவசமாக எழுதப் படுகின்ற ப்ளாக்கிற்கு, மேடை அமைத்து, விளம்பரமும் தேடிக் கொடுக்கின்ற இவர்களது தமிழ்ப்பணிக்கு வாழ்த்துக்கள்!

துவக்கத்தில், இந்த இரண்டு வலைதிரட்டிகளில் தமிழ்மணம் என்னைப் பெரிதும் கவர்ந்தது. எழுதவேண்டும் என்ற ஆர்வத்தை அதிகப்படுத்துவதாய், வந்து கொண்டிருந்த பதிவுகளும், சூடாகப் போய்க் கொண்டிருந்த தேர்தல் விவகாரங்களும் ஒரு காரணமாயிருக்கலாம்.

அப்போது பார்க்கையில், தேன்கூடு ஒரு சிறு கூடு போலத்தான் தோன்றியது. தவிரவும் தமிழ்மணத்தில் பதிப்பிக்கப் படுபவைதான் அங்கும் இருக்கும் என்பதால், விசேஷமான கவர்தல் இல்லாமலிருந்தது. ஆனால், திடிரென்று ஒரு வேகம் எடுத்தாற்போல, நிறைய செயல்பாடுகள் தோன்றியது.

அவர்களது தேன்கூடு-தமிழோவியம், இணையப் போட்டி வலைஞரிடையே ஒரு எதிர்பார்ப்பைத் தோற்றுவித்து , மின்மினி போன்ற நிறைய வலைப்பூக்களுக்கு தீனி கொடுத்தது என்றால் மிகையில்லை. ஒவ்வொரு மாதப் போட்டியும் ஒருஒரு எதிர்பார்ப்பையும், கதாசிரியர்களையும், விமர்சகர்களையும் உருவாக்கிக் கொடுத்தது. அது ஒரு 'ஹைலைட்'-ஆன விசயம். ஒரு புதிய நட்புறவை, இந்தப் போட்டி உருவாக்கியது என்பதும், இதன் சிறப்பம்சம்.

டெம்ளேட்டையும் கவர்ச்சிகரமாய் ஆக்கியதோடு, வலைஞர்களின் பதிவுகளில் பதியப் படுகின்ற படங்கள், முகப்பில் தெரியச் செய்து அலங்கரித்தது. பெட்டகம், பிடித்தவர்களின் பதிவுகளை கொண்டு 'என் தேன்கூடு', திரட்டிஜி என குட்டிகுட்டி 'Tools'- பயனர்களின் உபயோகித்ததற்கு அளித்தது, என 'டெக்னிகலாக' - மேம்பட ஆரம்பித்தது.

சமீபத்தில், எத்தனை 'க்ளிக்' உங்கள் பதிவுக்கு கிடைத்தது, எத்தனை மறுமொழிகள் கிடைத்தன என்பனவற்றை எல்லாம் பதிவுக்குப் பக்கத்திலேயே தெரிய வைத்தது என சின்னச்சின்ன பரிசு எனலாம்.

தமிழ்மணம், இது போன்ற டெக்னிகலான விசயங்களில், அதிக முன்னிறுத்தலைத் தராவிடினும், 'பூங்கா' , விவாதக்களம் போன்ற இன்னொரு உலகினைப் படைப்பிக்க முயற்சி எடுத்தது. தமிழ்மண நிர்வாக மாற்றமும், 'சாதீயக் குற்றச் சாட்டுகளும்' இதன் கவனங்களை சற்று தாமதிக்கச் செய்துவிட்டனவோ, தெரியவில்லை. இருப்பினும், இன்னமும் இதுதான் அதிக வாசகர்களைக் கொண்டிருக்கின்றது.

சர்வேசன், சென்ற வருடத்திய சிறந்த பதிவர்களுக்குச் சர்வே வைத்தார், ஆனால் நம் பதிவுகளை மக்களைச் சென்றடைய வைத்த திரட்டிகளை ஏன் மறந்தார் என்று தெரியவில்லை, அதனால என்ன, நமக்கெல்லாம் ஏணியா இருக்கிற இந்தத் திரட்டிகளுக்கு, நாம ஒரு சர்வே வச்சிரலாம்? :)

என்னைப் பொறுத்தவரையில், தேன்கூட்டில் 'டெக்னிகலாகச் சிறந்தாகவும், புதிதுபுதிதாய் செய்யத் துடிக்கின்ற ஆர்வத்தையும் பார்க்க முடிகின்றது, அது தமிழ்மணத்தில் மிஸ்ஸிங்.

இது போன்ற கருத்துக்களை, விமர்சன நோக்கோடு எடுத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் இதனைப் பதிகிறேன், எதிர்வினை இருக்காது என்ற நம்பிக்கையில்.

சரி, நீங்களும் உங்க கருத்தச் சொல்லுங்க..


32 Comments:

said...

அன்பின் சிவா

எல்லா வளர்ச்சிக்கும் ஒரு கட்டத்தில் ஒரு தேக்கநிலை உண்டு. அது போலவே காசியால் உருவாக்கி வளர்தெதடுக்கப் பட்ட தமிழ்மணம் சிறுகச்சிறுக தன் சிறகை விரித்து பறக்கும் வரை அது செதுக்கிச் செதுக்கி வளர்க்கப் பட்டது. இன்று அது வளச்சி அடைந்துவிட்டது மட்டுமல்ல இன்னொரு நிர்வாகத்தின் கீழ் வந்துவிட்டது. சொந்த தாய்க்கும் தத்தெடுத்த தாய்க்கும் உள்ள வேறுபாடு என்று சொல்லாவிட்டாலும் தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றக் கூடியவர்கள் தொடர்ந்து உள்ளே இருந்தால் தான் அது சாத்தியப் படும். ஆனால் நிர்வாக ரீதியாக தமிழ்மணம் தொடர்ந்து செம்மையாகவே செயல்படுவதாக நான் நம்புகிறேன். தவிர வலைப்பதிவுகளின் மொத்த வாசக வருகையில் 60 சதவீதம் வரை தமிழ்மணத்தின் மூலமாகவே இன்னும் வந்து கொண்டிருக்கிறது.எனவே வாசகர்களையும் வலைப்பதிவர்களையும் பொறுத்தவரை இன்றுவரை தமிழ்மணம்தான் தமிழின் முதன்மைத் திரட்டியாக இருந்து வருகிறது.

மாறாக தேன்கூடு இன்னும் வளர்ந்து கொண்டிருக்கும் திரட்டி. அதன் வளர்ச்சி இன்னும் அதை உருவாக்கிய நண்பர்களின் கையில் தான் இருக்கிறது. நீங்கள் கூறியது மாதிரி புதுப்புது நுட்பங்கள் அறிமுகம் செய்யப் படுவதும் சிறப்பான தொழில்நுட்ப மேம்பாடுகளும் தேன்கூட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கின்றன என்பதில் ஐயமில்லை. வலைப்பதிவுகள் மட்டுமல்லாமல் செய்தித் தளங்கள், மின்னிதழ்களையும் திரட்டுவதும் புதுப்பபுது சேவைகளைஅறிமுகம் செய்வதும் தேன்கூட்டின் வளர்ச்சியை விரைவுபடுத்த உதவும்.

எனினும் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் என்று பார்த்தால் இப்போதைக்கு தேன்கூட்டிற்கு இரண்டாமிடம் தான்.

said...

தேன் கூடு ஒரு பொது தளமே அல்ல. தமிழ் மணத்தையும் தேன் கூட்டையும் ஒப்பிடுவதே தவறு. ஏனேனில் தமிழ்மணம் ஒரு ஜனநாயகமான தளமாக செயல்படுவதில் உள்ள சிக்கல்கள் அனைத்தையும் ச்ந்தித்து வெற்றிகரகமாக உலாவிவருகிறது. தேன்கூடோ பொது அரசியல் அல்லது ஆளும் வர்க்க அரசியல் பேசுபவர்களை மட்டுமே அனுமதிக்கும் ஒரு தளமாக உள்ளது. எனது தளத்தை நான் வலைப்பு ஆரம்பித்த புதிதில் சேர்க்க விண்ணபித்த போது என்னிடம் பல விளக்கங்களை கேட்டார்காள். நானும் கொடுத்தேன், ஆயினும் அதற்க்குப் பிறகும் எனது இணைப்பு குறித்து எந்த விளக்கமும் கொடுக்காமல் பல ஞாபகப்படுத்ததல்களுக்குப் பிறகும் கள்ள மௌனத்தையோ அல்லது பரிசீலனையில் உள்ளது என்ற ஸ்டாண்டர்ட் பதிலையோ அளித்து வந்தார்கள்.

இதே அனுபவம்தான் மாற்று அரசியல் பேசும் பலருக்கும்,

இது ஒரு பெரிய சாதனை கிடையாது. அனைத்து கருத்துக்களையும் மோதவிட்டு குறைவான resource உள்ள இடத்தில் ஜனநாயகத்தை கடைபிடிப்பதும் அதற்க்கு நேர்மையாக இருப்பதை உறுதிப்படுத்துவமெ சாதனை அந்த வகையில் தமிழ்மணம் பல மடங்கு வேறு எந்த தளங்களை விடவும் முன்னே நிற்ப்பதாகவே கருதுகிறேன்.(வேறு மொழிகளில் தமிழ்மணம் போன்ற முயற்சிகள் இருக்கிறதா என்று தெரியவில்லை).

ஏனேனில் தேன்கூட்டில், இந்தியாவின் சாதனைகள் என்று கூறி பதிவு இடுவதோ அல்லது பார்ப்ப்னிய கலாச்சார கூறுகளை சிறபித்து பதிவு இடுவதோ சாத்தியம் ஆனால் இவற்றை விமர்சித்து பதிவு இடுவது, அரசை விமர்சித்து பதிவு இடுவது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை(நான் அங்கு போய் பார்த்து மாதக் கணக்காகிறது. தற்போதைய நிலை தெரியவில்லை).

முன்னுறுதி செய்த நிலைப்பாட்டிற்க்கேற்ற கருத்து வட்டத்திற்க்குள் மட்டும் கருத்துச் சொல்ல சுதந்திரம் கொடுக்கும் தேன் கூடும், எல்லா கருத்துக்களும் முட்டி மோதி வாசக்ர்களின் சிந்தனைக்கு விருந்தளிக்கும் தமிழ்மணமும் உறுதியாக ஒன்றல்ல.


அசுரன்

said...

இப்போ இப்படி ஒரு வாக்கெடுப்பு தேவை என்பதற்கு எந்த காரணமும்(சும்மா பரபரப்பு உண்டாக்குவதை தவிர) இருப்பதாக நான் நினைக்கவில்லை .மன்னிக்கவும்!

said...

எந்தவித விருப்பு வெறுப்புகளும் இன்றி என் பாட்டுக்கு அய்யா பெரியாரின் கொள்கைகளை எழுதிக் கொண்டிருந்தேன். என்னை திராவிடன் என்ற ஒரே ஒரு காரணத்தினால் குத்திக்காட்டி ஏளனம் செய்தனர் பலர். அவர்களில் பார்ப்பனர்கள்தான் 99% பேர். என்னை ஆளாக்கி வளர்த்தது தமிழ்மணம். அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லக் கடமைப் பட்டு இருக்கிறேன்.

எனது பதிவினை நான் தேன்கூட்டில் இணைக்கவே இல்லை. அவர்களாக திரடினார்கள். பின்னர் அவர்களாகவே நீக்கினார்கள். தேன்கூட்டில் என் பதிவு வரவில்லை என்று நண்பர் சொல்ல மீண்டும் அங்கு சென்று இணைத்தேன். ஆனால் நிராகரித்து விட்டனர். அப்போதுதான் தெரிந்து கொண்டேன். அது பார்ப்பனர்களுக்காக மட்டுமே தயாரிக்கப்பட்ட பிரத்தியேக திரட்டி என்று!

விடுதலைப்புலி ஆதரவாளர்களும் ஈழத் தமிழர்களும்கூட அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர். கேப்பிடல் என்பவர் சொல்வார் கதை கதையாக!

உங்களைத் தூண்டி விட்டு எழுதச் சொன்ன தேன்கூடு வாழ்க வளர்க. தமிழ்மணத்தின் வளர்ச்சியினை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.

நன்றி.

said...

அன்பு சிந்தாநதி,

'தமிழ்மணம் வளர்ச்சியடைந்து விட்டது' என்று முற்றுப் புள்ளியாய் இல்லாமல், அது தொடவேண்டிய சிகரங்கள் இன்னமும் இருக்கின்றது. நிர்வாக ரீதியாக, மிகச் செம்மையாகவே செயல்படுகிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

தேன்கூட்டின் புதுமை, அதை மேலும் வலுவாக்கும்.

என் கருத்திலும், அதிக வாசகர்பலம் என்பது, தமிழ்மணத்திற்கே.

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி, இவ்வார தமிழ்மண ஸ்டார்' ஆக இருப்பதற்கு வாழ்த்துக்கள்!

said...

பதிவுகளைத் திரட்டுவதில் குடுமிபிடிசண்டைப் பதிவுகளையும் திரட்டும் ஜனநாயகமான திரட்டி என்றால் அது தமிழ்மணம், இதற்குக் காரணம் ஆரிய ஆதரிப்புக் கருத்துப் பதிவுகளை விட ஆரிய எதிர்ப்பு திராவிடக் கருத்துக்களை நிலைநாட்டும், வெளிப்படுத்தும் எழுத்துக்களின் காரம் எப்போதும் கூடுதலாக இருப்பது என்பதும் காரணமாகிறது.

(பூங்காவில் வெளியாவது ஜனநாயகம் அல்ல; தனிச்சார்பு:-))) என்பது என் கருத்து அது அவர்கள் உரிமை :-)))

தேன்கூடு அரசியல் காரசார விவாதங்களுடன் வரும் பதிவுகளைத் திரட்டுவதில்லை என்பதைக் கொள்கையாகக் கொண்டிருப்பதாக அறிகிறேன். (என் வலைப்பூவும் எந்தவித முன்னறிவுப்பும் இன்றி நீக்கப்பட்டது, எனது மறுசேர்க்கை மனுவுக்கு பதிலேதும் இல்லை இதுநாள்வரையில்)

இத்திரட்டிகளில் எது நம்பர் ஒன் ரேஸ் க்ரேஸ் வேண்டாம். கும்மியடிக்க இன்னொரு மேட்டர் என்பதைத் தவிர ஆக்கமாக ஏதும் விளையப்போவதில்லை இதனால் :-))

இரு திரட்டிகளுமே இலவசமாகச் சேவைதருகின்றன பதிவர்களுக்கு.
திரட்டிகளின் கொள்கைகளுக்கு உட்பட்டுப் பதிகிறோமா / பதியவேண்டுமா என்பது பதிவர்களின் கையில் இருக்கும் விஷயம்.

இரு திரட்டிகளின் சேவையையும் பயன்படுத்தியவன் எனும் வகையில் இருதிரட்டி நிர்வாகிகளுக்கும் என் நன்றிகள்.

said...

அசுரன்,

இந்த ஒப்பிடுதல் 'திரட்டி' என்ற பார்வையில் மட்டுமே. அந்த வகையில் ஒப்பீடு என்பது தவறல்ல.

'கருத்துச் சுதந்திரம்' எதில் அதிகம் என்ற வகையிலான ஒப்பீடென்றால், உங்கள் கருத்துச் சரியாக இருக்கலாம்.

நீங்கள் தேன்கூட்டின் மீது சொல்கின்ற புகார்கள், இன்று கூட தமிழ்மணத்தின் மீதும் சொல்லியிருந்தார்கள்.


பொது அரசியல், ஆளும் வர்க்க அரசியல் பேசுவோர் புரிகிறது, அதென்ன 'மாற்று அரசியல்'? கொஞ்சம் விளக்கினால் நலம்.

//ஏனேனில் தேன்கூட்டில், இந்தியாவின் சாதனைகள் என்று கூறி பதிவு இடுவதோ அல்லது பார்ப்ப்னிய கலாச்சார கூறுகளை சிறபித்து பதிவு இடுவதோ சாத்தியம் ஆனால் இவற்றை விமர்சித்து பதிவு இடுவது, அரசை விமர்சித்து பதிவு இடுவது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை(நான் அங்கு போய் பார்த்து மாதக் கணக்காகிறது. தற்போதைய நிலை தெரியவில்லை//

தற்போதைய நிலை மாறியிருக்கிறது. தேன்கூட்டில் 'அதிகம் பார்வையிடப்பட்டவை' பகுதியைப் பார்க்கவும்.

said...

சமீப காலமாக அசுரன் கூறியது போல பல வலைப் பதிவர்களும் தேன்கூட்டின் மீது இப்படியொரு குற்றச்சாட்டினைக் கூறி வருகிறார்கள். அது எந்த அளவுக்கு உண்மை என்று எனக்குத் தெரியவில்லை. என் தனிப் பட்ட அனுபவங்களைப் பொறுத்தவரை தேன்கூடு நிர்வாகமும் சரி, தமிழ்மணம் நிர்வாகமும் சரி வேண்டுமென்றே பாரபட்சமாக இருப்பதான உணர்வு எனக்குத் தோன்றியதில்லை.

எனினும் அனுபவங்களின் அடிப்படையில் அவர்கள் அதைக் கூறியதாக இருந்தால், அப்படியொரு நிலைப்பாடு தேன்கூட்டிற்கு இருக்குமானால் அது அத்திரட்டியின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடைக்கல்லாகத் தான் இருக்கும். சில ஈழப்பதிவர்களும் தங்கள் பதிவுகள் தேன்கூட்டில் திரட்டப் படுவதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்ததைப் பார்த்தேன். இது போன்ற குறைபாடுகளை அகற்றி தேன்கூடு நடுநிலையோடு செயல்படுவதான நம்பிக்கையை வலைப்பதிவர் மத்தியில் பெற்றாக வேண்டும்.

said...

//இப்போ இப்படி ஒரு வாக்கெடுப்பு தேவை என்பதற்கு எந்த காரணமும்(சும்மா பரபரப்பு உண்டாக்குவதை தவிர) இருப்பதாக நான் நினைக்கவில்லை .மன்னிக்கவும்! //

பதிவிலேயே சொல்லியிருக்கிறேன், விமர்சனப் பார்வையோடு பார்க்கவும் என்று.

விமர்சனங்களும், சர்வேக்களும் சில சமயங்களில், பரபரப்பு உண்டாக்கு பவையாகி விடலாம், அதற்கு விமர்சனங்கள் மட்டுமே காரணாமாகிவிட முடியாது.

அது சரி, 2006-ன் சிறந்த வலைப்பதிவாளர் யாருன்னு, நம்ம சர்வேசன் போட்டி வச்சாரே, அப்பவே அவரு, இதுக்கும் வச்சிருந்தார்னா, இந்தக் கேள்வி அவருக்குப் போயிருக்குமாயிருக்கும்.

//மன்னிக்கவும்//
அட என்ன தல நீங்க, be casual..

கருத்துக்கும், வருகைக்கும் நன்றி, ஜோ!

said...

அன்பின் விடாதுகருப்பு,

உங்களின் பதிவினை, தமிழ்மணம் தடைப்படுத்திய போதும், 'தேன்கூட்டின்' திரட்டி'ஜி' மூலமாக படித்திருக்கிறேன்.

//உங்களைத் தூண்டி விட்டு எழுதச் சொன்ன தேன்கூடு வாழ்க வளர்க. தமிழ்மணத்தின் வளர்ச்சியினை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்//

சந்தடி சாக்கில, அப்படி ஒரு குண்டைத்தூக்கி போட்டுட்டு போறீங்களே?

இந்தப் பதிவ எழுதுறதுக்கு, அவங்க தூண்டுகோல்தாங்க..அதாங்க, அவங்க செய்ல்முறையில அவங்க சைட்லேயே காட்டியிருக்காங்களே

நான் சொல்லியிருக்கிற டெக்னிகல் விசய்ங்கள், கண்கூடாக எல்லோருக்கும் தெரியும். அந்தப் பக்கம் போனீங்கன்னா, நீங்களும் பாத்திருக்கலாம்.

டெக்னிகலா சில விசயங்களைக் கொண்டு வருவது கஷ்டங்க, அதைச் சிறப்பாச் செய்திருப் பவங்கள 'appreciate' பண்ணனும், நானும் புரோகிராமரா இருந்து, இந்தமாதிரி எல்லாம் பண்ணி, appreciation வாங்கியிருக்கேன், அது தருகிற உந்து சக்தி, அதப் பண்ணுறப்ப உள்ள கஷ்டத்த மறக்கடிச்சுருங்க.

said...

//தேன்கூடு அரசியல் காரசார விவாதங்களுடன் வரும் பதிவுகளைத் திரட்டுவதில்லை என்பதைக் கொள்கையாகக் கொண்டிருப்பதாக அறிகிறேன். (என் வலைப்பூவும் எந்தவித முன்னறிவுப்பும் இன்றி நீக்கப்பட்டது, எனது மறுசேர்க்கை மனுவுக்கு பதிலேதும் இல்லை இதுநாள்வரையில்)//

- தங்களின் புரிதலை பிறர் அறியத் தந்திருக்கீறீர்கள்.


//இத்திரட்டிகளில் எது நம்பர் ஒன் ரேஸ் க்ரேஸ் வேண்டாம். கும்மியடிக்க இன்னொரு மேட்டர் என்பதைத் தவிர ஆக்கமாக ஏதும் விளையப்போவதில்லை இதனால் :-))
//

:))

said...

தமிழ்மணம் வளரும் பதிவுகளின் எண்ணிக்கைகளுக்கேற்ப மாற்றிக்கொள்ளவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன் ஆனால் தேன்கூட்டைவிட தமிழ்மணம் புகழில் ஓங்கி நிற்கிறது. பாப்புலாரிட்டியால் தமிழ்மணத்துக்கே என் வாக்கு.

தேன்கூடு டெக்னிக்கலா பல புது விஷயங்களைத் தந்துள்ளது ஆனால் காரணம் சொல்லாமல் பதிவுகளை நீக்குகிறது எனும் குற்றச்சாட்டு உண்மையாயிருந்தால் அது வருந்தத்தக்கது.
இந்த விஷயத்தில் தெமிழ்மணம் நேர்மையாக செயல்படுகிறதென்றே சொல்வேன்.

said...

அட என்னங்க, நம்ம வேலைக்கு உலை வச்சிருவீங்க போலருக்கே :)

நல்ல முயற்சி.

தேன்கூட்டிலும், தமிழ்மணத்திலும் இருக்கும் நல்லது கெட்டதுகளை லிஸ்ட் பண்ணி ஒரு சர்வே போட்டா இன்னும் சூப்பரா இருக்கும்.

ஜமாய்ங்க!

said...

எனக்கென்னவோ நீங்கள் பார்ப்பனர்களின் திரட்டியை வேண்டும் என்றே விளம்பரப் படுத்துகிறீர்கள் என்று தோன்றுகிறது.

நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் எல்லாம் தமிழ்மணத்துடன் போட்டிக்கு வருவதா?

எனக்கு சிரிப்பாக இருக்கிறது.

சிவா உங்களின் நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள். தமிழ்மணம்தானே சிறப்பாகச் செயல்படுகிறது?

said...

ஐயா தேன் கூட்டின் மேல் புகார் செய்யும் பெரியவர்களே! மாற்று அரசியல் பேசும் மகான்களே! தமிழ்மணத்திலும் நீங்கள் சொல்லும் அதே குறைகள் இருக்கின்றன ஐயா. முடிந்தால் என்னுடைய இந்தப் பதிவை படித்து பாருங்கள்.

http://raajasampayil.blogspot.com/2007/01/blog-post_18.html

கள்ள மௌனம் சாதிப்பவர்கள் தமிழ்மண நிர்வாகத்திலும் இருக்கிறார்கள்.

சிவா, போன முறை நான் இந்த பதிவை பற்றி பின்னூட்டம் இட்ட போது பதிவிற்கு தொடர்பில்லாத ஒன்று என்று நீங்கள் அனுமதிக்கவில்லை. இந்த முறை பதிவிற்கு இது முற்றிலும் தொடர்புடையது. வெளியிடுவீர்கள் என்று நம்புகிறேன்.

said...

சுபமூகா. நல்ல ஜோக். என் பின்னூட்டத்தையும் பதிவையும் படித்த பின்னருமா உங்களுக்கு இந்த எண்ணம்? உங்கள் நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள்? தேன்கூடு பார்ப்பனத் திரட்டி என்றால் தமிழ்மணம் என்ன திரட்டி?

said...

நன்றி அலெக்ஸ், வெளிப்படையான கருத்துக்களுக்கு,

//தமிழ்மணம் வளரும் பதிவுகளின் எண்ணிக்கைகளுக்கேற்ப மாற்றிக்கொள்ளவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன் ஆனால் தேன்கூட்டைவிட தமிழ்மணம் புகழில் ஓங்கி நிற்கிறது.//

உண்மை, இதை என்னுடைய பதிவிலும் சுட்டிக்காட்டியிருக்கிறேன்,

//தேன்கூடு டெக்னிக்கலா பல புது விஷயங்களைத் தந்துள்ளது ஆனால் காரணம் சொல்லாமல் பதிவுகளை நீக்குகிறது எனும் குற்றச்சாட்டு உண்மையாயிருந்தால் அது வருந்தத்தக்கது.
இந்த விஷயத்தில் தெமிழ்மணம் நேர்மையாக செயல்படுகிறதென்றே சொல்வேன்//

மிகச் சரி, உங்கள் கருத்துக்கு உடன்படுகிறேன்.

said...

சுபமூகா, டெக்னிகலாக சிறந்த திரட்டி யென்றால் தேன்கூடு. அதே நேரத்தில் சிறப்பாக செயல்படும் திரட்டி, கருத்து சுதந்திரம் என்று சொன்னால் அது தமிழ்மணம் என்பதில் மாற்று கருத்தே இல்லை.

said...

வாங்க சர்வேசா,

//தேன்கூட்டிலும், தமிழ்மணத்திலும் இருக்கும் நல்லது கெட்டதுகளை லிஸ்ட் பண்ணி ஒரு சர்வே போட்டா இன்னும் சூப்பரா இருக்கும்//

அட, நீங்க வேற, பாசிடிவ்-ஆன விசயங்களைச் சொன்னதுக்கே, இவ்வளவு விவாதங்கள், நீங்க சொல்ற மாதிரி போட்டா, களேபரம்தான்,

சுபமுகாவுக்கு சொல்லியிருக்கிற விசயங்கள பாருங்க.

said...

வணக்கம், சுபமூகா,

//எனக்கென்னவோ நீங்கள் பார்ப்பனர்களின் திரட்டியை வேண்டும் என்றே விளம்பரப் படுத்துகிறீர்கள் என்று தோன்றுகிறது//

மிகமிகத் தவறான கூற்று. எல்லா விசயங்களுக்கும், சாதியையும், மதத்தையும் இணைச்சுப் பார்த்து ஒரு வர்ணம் கொடுக்கறதுங்க பார்வை மாறணும்.

தேன்கூட்டை நடத்துவது யாரு, ஆரியமா? திராவிடமா?ன்னு கவனிக்கிறது என் வேலை கிடையாது, அது எனக்கு அவசியமும் இல்லை.

பதிவுகளிலும், பதிவரிடமும் கருத்தைப் பார்க்கிறேனே அன்றி, குலம்,கோத்திரம்,இனம், மதம் பார்ப்பதில்லை.

இரண்டு திரட்டிகளையும் உபயோகிப்பவன், என்ற பார்வையிலேயே என் எழுத்துக்கள் இருக்கின்றன.

தேவையில்லாத வர்ணம் பூசாதீர்கள்,ப்ளீஸ்.


//நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் எல்லாம் தமிழ்மணத்துடன் போட்டிக்கு வருவதா?//

ரொம்ப உணர்ச்சிவசப் பட்டிருக்கிறீர்கள் போல் தெரிகிறது, காளான்கள் கூட சாப்பாட்டுக்கும், சத்துக்கும் உதவுகிறது.

போட்டி என்பது ஆரோக்கியமான ஒன்று, ஒரு ரிலையன்ஸ் மொபைல் வந்ததால்தான், ஏர்டெல் போன்ற நிறுவனங்கள், உள்வரும் தொலைத்தொடர்புக்கு, இலவசம் என்று மாற்றியது. இதையும் ஆரோக்கியமான, கண்ணோட்டத்தில் பாருங்கள், நண்பரே.

//சிவா உங்களின் நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள். தமிழ்மணம்தானே சிறப்பாகச் செயல்படுகிறது//

கருத்துச் சுதந்திரம் என்ற வகையில், மிகச் சரி. ஹரிகரன் சொன்னது போல,
//தேன்கூடு அரசியல் காரசார விவாதங்களுடன் வரும் பதிவுகளைத் திரட்டுவதில்லை என்பதைக் கொள்கையாகக் கொண்டிருப்பதாக அறிகிறேன்//, தேன்கூட்டின் கொள்கை(?), இவ்விசயத்தில் அதனைப் பின் தள்ளுகிறது.

said...

ராஜாசன்,

உங்கள் போன்றோரின் கோரிக்கையை, மனதில் வைத்துதான் அசுரனின் வினாவிற்குப் பதிலுறுத்திருந்தேன்.

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி, பிரசுரித்துவிட்டேன்.

//கள்ள மௌனம் சாதிப்பவர்கள் தமிழ்மண நிர்வாகத்திலும் இருக்கிறார்கள்//

இப்போதும் சொல்கிறேன், இம்மாதிரியான விசயங்கள், பணியின் பளு,மற்றும் இத்திரட்டிகளில் இந்தப் பொறுப்பினைக் கையாண்டு கொண்டு இருப்பவர்களின் நேரம் இவை பொறுத்தே, தாமதம் இருக்கும் என்று நம்புகிறேன். அல்லாமல், விருப்பு,வெறுப்பு காரணம் இருக்குமாயின், அது சரியல்ல.

said...

சிண்டு முடிகிறீர்களே! நீங்கள்என்ன பிராமணரா!?

said...

செல்லா,

பார்க்க :சுபமூகாவுக்கான எனது பதிலை.

said...

//சுபமூகா, டெக்னிகலாக சிறந்த திரட்டி யென்றால் தேன்கூடு. அதே நேரத்தில் சிறப்பாக செயல்படும் திரட்டி, கருத்து சுதந்திரம் என்று சொன்னால் அது தமிழ்மணம் என்பதில் மாற்று கருத்தே இல்லை.//

அனானி,

இந்தப் பதிவின் சாரத்தை சில வரிகளில், எளிமையாய்ச் சொல்லிவிட்டீர்கள். பெயரும் சொல்லியிருந்தீர்களென்றால், இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும்.

said...

சுபமூகா என்ற பெயரில் இங்கே பின்னூட்டமிட்டிருப்பது சிண்டு முடியும் இன்னொரு போலி. புகழ்ந்து பேசுவதுமாதிரிப் பேசி தமிழ்மணத்தையோ வேறொரு திரட்டியையோ ஒழிக்க முயலும் இதுமாதிரி ஜந்துக்களை என்ன செய்வது!

said...

I dont know why everything is dealt with a crooked view in tamil blogs.
You have brought up a good topic to discuss, which will help improve both the aggregators.

I see some silly comments above which are written primarily for stirring up a controversy.

said...

சுபமூகா பற்றிய செய்திக்கு நன்றி அனானி, ஆனாலும் ஒரு விசயம்.. சுபமூகாவின் கேள்வியை ஒட்டியே, இணைய நாடோடியின் கேள்வியும் உள்ளதால், அவருக்குரிய பதிலுக்காக, அவற்றை அப்படியே விடுகிறேன். இதே எண்ணத்தில், வேறு எவருக்கும், அதுவே பதிலாய் இருக்கும் என்பதால், அப்படியே விட்டு விடுகிறேன்.

said...

You are right Arun, that is my intention to write this one. But things are unnecessarily getting diverted, by adding different colours to it, but thatz the way current tamil blog world is..hope will change soon..

said...

இன்னா தல, ஆளாளுக்கு நீ தேன்கூட்டு ஆசாமின்னு கூவினுகீராங்க?
ஆனா வாக்கு பதிவுல 75% ஓட்டு தமிழ்மணத்துக்குதான் வூந்துருக்கு.
இப்ப எங்க போயி மூஞ்சிய வச்சுப்பானுங்க இவனுங்கயெல்லாம்?

தலயறுத்துவிட்ட சேவல் மாதிரி ஓட வேண்டியதுதான் அல்லாரும்.

said...

சாயம் பூசுவது எனது வேலையல்ல நண்பரே? சிலரது சாயங்களை வெளுக்கவே நான் தமிழ் வளைப்பதிவுப் பக்கம் வந்தவன். நானும் இருவரையும் உபயோகிப்பவன் மட்டுமல்ல தனித் திரட்டியையே என்தேவைக்காக வைத்திருக்கும் ஒரே பதிவாலன் என்ற முறையுலும் சொல்கிறேன்... இவற்றின் நிறைகுறைகளே சம்பத்தப் பட்டவர்களுக்கோ அல்லது அலசல் பதிவாகவோ போடாமல் ஓட்டெடுப்பது தேவயற்ற வெத்து வேட்டுகளின் செயல் என்பது எனது தாழ்மையான கருத்து!

said...

செல்லா,

உங்களின் இரண்டாவது பின்னூட்டத்தினை, முதலில் சொல்லியிருந்தால், எனது முதல் பதில் தேவை இருந்திருக்காது.

எனது பதிவிலேயே சொல்லியிருக்கிறேன்,விமர்சன நோக்கோடு பார்க்க என்று, ஆலோசனை சொல்வதென்றால், தனியாகச் சொல்லலாம்.

வெத்து வேட்டுக்கள் இல்லாத பதிவுலகம் ஏது, உங்கள் ப்ளாக் உட்பட. மேலும், வெத்து வேட்டா, அதிர்வேட்டா என்பது, ஒவ்வொருவர் பார்வை சம்பந்த பட்ட விசயம், இது சிலருக்கு அதிர்வேட்டாய் இருந்திருக்கிறது.

உங்களது இரண்டாவது பின்னூட்டத்தில், சொற்பிழைகள் இருக்கின்றனவே, போலிப் பின்னூட்டமல்ல என்றே கருதுகிறேன்.

said...

நான் உண்மையான சுபமூகா [:-)] எழுதுகிறேன்.

நான் பதிவு எழுதி முடித்ததும் தமிழ் மணம், தேன்கூடு இரண்டுக்கும் அதைத் தெரிவித்து
விடுவேன். இன்னும் புதிய திரட்டிகள் எதுவும் இருப்பின் அதற்கும் அனுப்ப நான் தயார்.

அந்த 'இன்னொரு சுபமூகா' சொல்வதை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம்!

http://puthupunal.blogspot.com/2007/01/blog-post_30.html