Sunday, January 28, 2007

புது பிளாக்கருக்கு மாறீட்டேங்க!

ரொம்ப நாளா ஆசை..புது பிளாக்கருக்கு மாறணும்னு. ஆனா, மாறினவங்க எல்லாம், அங்க பிரச்னை, இங்க பிரச்னைன்னு சொல்லவே, பயமா இருந்துச்சு. சரி, கொஞ்ச நாளாகட்டும்னு விட்டுட்டேன்.

அப்புறம் பாத்தா, நம்ம பாலாஜி, அவரோட பதிவுல 'புதிய பிளாக்கருக்கு மாறலாம் வாங்க!!! ன்னு அழைப்பு விடுத்திருந்ததைப் படிச்சேன். சூப்பரா சொல்லியிருந்தாரு, தேங்க்ஸ்ங்கண்ணா! புதிய பொலிவில், அவரது ப்ளாக்கும் இருக்கிறதைப் பாத்துட்டு, உடனே செயல்ல இறங்கினேன். அதன் விளைவுதான் புதுப் பொலிவில் 'மின்மினி'
http://vettipaiyal.blogspot.com/2007/01/blog-post_1921.html

டெம்ப்ளேட்-ஐ மாற்றிய பிற்பாடு, ஏற்கனவே பின்னூட்டம் இட்டவங்க பேரெல்லாம், பூச்சிபூச்சியாய்த் தெரிய, 'அடடான்னு' வாயைப் பிளக்கிறப்ப, வந்தாரு நம்ம 'ஜெகத்', சரியான கைக்கண்ணாடியாய். அவரு காட்டிய வழியைப் பின்பற்றி, பூச்சியை அடிச்சனுப்பியாச்சு.
http://kaiman-alavu.blogspot.com/2007/01/blog-post_23.html

அதுக்கப்புறம், 'தமிழ்மண்த்தின்' பதிவு அட்டையை சரிபடுத்த வேண்டியிருந்தது. அதுக்கும் அவங்க ஒரு குறிப்பேடு, எளிதாய்க் கொடுத்திருந்தாங்க. அத முடிச்சேன்.
http://blog.thamizmanam.com/archives/51

அப்புறம், தேன்கூட்டின் 'கமெண்ட்'-க்காக வேண்டியவற்றைச் சரிபடுத்தினேன். அவங்களும் குறிப்பு கொடுத்திருக்காங்க.
http://www.thenkoodu.com/wiki/doku.php?id=betablogger_pinger_code


அப்புறம், ஏற்கனவே, எழுதியிருந்த பதிவுகளுக்கெல்லாம், 'Label'-இட்டு, அதையும் முகப்பில கொண்டு வந்தாச்சு.

ஆக, அப்படி, இப்படி எல்லாத்தையும் முடிக்க கிட்டதட்ட, இரண்டு மணிநேரம் ஆனது, எல்லாத்தையும் முடிக்க. எப்படி இருக்குன்னு சொல்லுங்க!


இதற்கு காரணமாக இருந்த, பாலாஜி,ஜெகத்,தமிழ்மணம்,தேன்கூட்டிற்கு நன்றி!..


நான் மாறிட்டேன்...அப்ப நீங்க!!!!!!?

Thursday, January 25, 2007

கடவுளுடன் ஒரு சந்திப்பு?

வழக்கமா வெள்ளிக்கிழமை-ன்னாலேயே நிறைய 'பார்வர்டு' இ-மெயில் வரும். வெள்ளிக்கிழமைன்னாலே, நம்ம மக்கள் 'குஜால்' ஆகிடுவாங்க. சனி,ஞாயிறு விடுமுறை வருதுன்னுட்டு. அதுவும், இந்த முறை குடியரசுதினம் வேற 'வெள்ளிக்கிழமையில வந்ததுனால, கூடுதலா ஒரு நாள் லீவு. நிறைய பார்வர்டு இ-மெயில் வந்தது, அதுல இந்த மெயில் என்னைக் கவர்ந்தது,

நீங்களும் பார்க்க, இங்க 'க்ளிக்' பண்ணுங்க..

வலையன்பர்களுக்கு 'மின்மினியின்' குடியரசுதின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்! வாழ்க பாரதம்!

Wednesday, January 24, 2007

2006 ன் சிறந்தத் தமிழ் வலைதிரட்டி எது?

கடந்து போன இரண்டாயிரத்து ஆறாம் வருடம், வலையுலகிற்கு ஒரு சிறப்பான வருடமாயிருந்திருக்கும். நிறைய புதுப்புது வலைஞர்கள் உருவானார்கள். ஒரு புதிய உலகம் பிறந்தது போலிருந்தது.

கூகிளில் தமிழ் என்று தேட, தமிழ்மணம் பார்வைக்கு வந்து விழ, உள்ளே எட்டிப் பார்த்தால், 'கலகல' - என தமிழின் மணம். ஒரே சந்தோஷம் தாங்க. அப்போதைய தமிழ்மண டெம்ப்ளேட் நல்லாயிருந்த மாதிரி ஞாபகம். அப்புறம், எழுதியிருந்த மக்களின் ப்ளாக் மூலமாக, தேன்கூடு அறிமுகமானது.

இந்த இரு வலைதிரட்டிகளின் செயல்பாடுகளும், மிகவும் பாராட்டுக்குரியது. பணி நிமித்தமாய், நாடு விட்டு நாடு தாண்டி, நம் மொழி பேசுவோர் இருப்பாரா என்று தேட விடாமல், virtual-ஆய் ஒரு நண்பர் குழாமை அடிச்சிக்கவும், புடிச்சிக்கவும் தேடிக் கொடுக்கின்ற இந்தத் தளங்கள் பாராட்டுக்குரியவை. இலவசமாக எழுதப் படுகின்ற ப்ளாக்கிற்கு, மேடை அமைத்து, விளம்பரமும் தேடிக் கொடுக்கின்ற இவர்களது தமிழ்ப்பணிக்கு வாழ்த்துக்கள்!

துவக்கத்தில், இந்த இரண்டு வலைதிரட்டிகளில் தமிழ்மணம் என்னைப் பெரிதும் கவர்ந்தது. எழுதவேண்டும் என்ற ஆர்வத்தை அதிகப்படுத்துவதாய், வந்து கொண்டிருந்த பதிவுகளும், சூடாகப் போய்க் கொண்டிருந்த தேர்தல் விவகாரங்களும் ஒரு காரணமாயிருக்கலாம்.

அப்போது பார்க்கையில், தேன்கூடு ஒரு சிறு கூடு போலத்தான் தோன்றியது. தவிரவும் தமிழ்மணத்தில் பதிப்பிக்கப் படுபவைதான் அங்கும் இருக்கும் என்பதால், விசேஷமான கவர்தல் இல்லாமலிருந்தது. ஆனால், திடிரென்று ஒரு வேகம் எடுத்தாற்போல, நிறைய செயல்பாடுகள் தோன்றியது.

அவர்களது தேன்கூடு-தமிழோவியம், இணையப் போட்டி வலைஞரிடையே ஒரு எதிர்பார்ப்பைத் தோற்றுவித்து , மின்மினி போன்ற நிறைய வலைப்பூக்களுக்கு தீனி கொடுத்தது என்றால் மிகையில்லை. ஒவ்வொரு மாதப் போட்டியும் ஒருஒரு எதிர்பார்ப்பையும், கதாசிரியர்களையும், விமர்சகர்களையும் உருவாக்கிக் கொடுத்தது. அது ஒரு 'ஹைலைட்'-ஆன விசயம். ஒரு புதிய நட்புறவை, இந்தப் போட்டி உருவாக்கியது என்பதும், இதன் சிறப்பம்சம்.

டெம்ளேட்டையும் கவர்ச்சிகரமாய் ஆக்கியதோடு, வலைஞர்களின் பதிவுகளில் பதியப் படுகின்ற படங்கள், முகப்பில் தெரியச் செய்து அலங்கரித்தது. பெட்டகம், பிடித்தவர்களின் பதிவுகளை கொண்டு 'என் தேன்கூடு', திரட்டிஜி என குட்டிகுட்டி 'Tools'- பயனர்களின் உபயோகித்ததற்கு அளித்தது, என 'டெக்னிகலாக' - மேம்பட ஆரம்பித்தது.

சமீபத்தில், எத்தனை 'க்ளிக்' உங்கள் பதிவுக்கு கிடைத்தது, எத்தனை மறுமொழிகள் கிடைத்தன என்பனவற்றை எல்லாம் பதிவுக்குப் பக்கத்திலேயே தெரிய வைத்தது என சின்னச்சின்ன பரிசு எனலாம்.

தமிழ்மணம், இது போன்ற டெக்னிகலான விசயங்களில், அதிக முன்னிறுத்தலைத் தராவிடினும், 'பூங்கா' , விவாதக்களம் போன்ற இன்னொரு உலகினைப் படைப்பிக்க முயற்சி எடுத்தது. தமிழ்மண நிர்வாக மாற்றமும், 'சாதீயக் குற்றச் சாட்டுகளும்' இதன் கவனங்களை சற்று தாமதிக்கச் செய்துவிட்டனவோ, தெரியவில்லை. இருப்பினும், இன்னமும் இதுதான் அதிக வாசகர்களைக் கொண்டிருக்கின்றது.

சர்வேசன், சென்ற வருடத்திய சிறந்த பதிவர்களுக்குச் சர்வே வைத்தார், ஆனால் நம் பதிவுகளை மக்களைச் சென்றடைய வைத்த திரட்டிகளை ஏன் மறந்தார் என்று தெரியவில்லை, அதனால என்ன, நமக்கெல்லாம் ஏணியா இருக்கிற இந்தத் திரட்டிகளுக்கு, நாம ஒரு சர்வே வச்சிரலாம்? :)

என்னைப் பொறுத்தவரையில், தேன்கூட்டில் 'டெக்னிகலாகச் சிறந்தாகவும், புதிதுபுதிதாய் செய்யத் துடிக்கின்ற ஆர்வத்தையும் பார்க்க முடிகின்றது, அது தமிழ்மணத்தில் மிஸ்ஸிங்.

இது போன்ற கருத்துக்களை, விமர்சன நோக்கோடு எடுத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் இதனைப் பதிகிறேன், எதிர்வினை இருக்காது என்ற நம்பிக்கையில்.

சரி, நீங்களும் உங்க கருத்தச் சொல்லுங்க..


Friday, January 19, 2007

வலைதிரட்டிகளும் சாதீயமும்

'சாதி இரண்டொழிய வேறில்லை' - என்று மூத்த புலவர் ஒளவையாரும், 'சாதிகள் இல்லையடி பாப்பா' - என்று பின் வந்த பாரதியாரும் பாடிய போதும், கற்காலம் தொட்டு இக்காலம் வரை, இந்தச் சாதிப் பித்து மட்டும் மனுசனை விட்டுப் போகவே மாட்டேங்குது. அது போவதற்கான சாத்தியக் கூறுகள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவே இல்லை.

பத்தாம் வகுப்பு வரை ஒரளவுக்கு இந்தச் சாதிகள் அறிந்தும் அறியாமல் இருப்பமையால், சக மாணவர்களோடு தோழமை உணர்வோடு இருக்கிறது. அதன் பிறகு மேல்படிப்பு, இட ஒதுக்கீடு என விரிசல் காண ஆரம்பித்து, அதற்கு மேல் மெல்ல நிலை கொள்ள ஆரம்பித்து கல்யாணம், காட்சி, பிள்ளை குட்டி என்று தொடர ஆரம்பித்து விடுகிறது என்றே சொல்ல வேண்டும்.

சமத்துவ புரமும், சமபந்தி போஜனங்களும், கலப்புத் திருமணங்களும் இதை எல்லாம் போக்கிவிடும் என்பதெல்லாம் உண்மையாகி விடவில்லை.

பாரதியின் பாட்டும், ஒளவையின் செய்யுளும், உயிர்ப்பற்று போய்விடக் கூடாது என்பதற்காகவோ என்னவோ, இந்தச் சமூகமும் அதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கின்றது.

வலைப்பூக்களும், சமூகத்தின் ஒரு பிரதிபலிப்புதானே? இங்கும் சாதீயத்தின் ஆதிக்கம் குறைந்து போய்விடவில்லை. சென்ற வருடத்தின் பின் பாதியிலிருந்து என்ன காரணத்துக்காகவோ தெரியவில்லை, சாதீயப் பதிவுகள் அதிகமாகி விட்டன.

இது குறித்து, பல பதிவுகள் வேதனைப் பட்டு வந்துவிட்டன. இன்று கூட அற்புதன் எழுதியிருக்கிறார். ஆனாலும் இது மாதிரியான சாதீயப் பதிவுகள் நின்று போய்விடவில்லை. எப்படி நிற்கும், சிலருக்கு இதுவே உயிர் மூச்சாய் இருக்கும் பட்சத்தில்? இம்மாதிரி எழுதி, ஒருவருக்கொருவர் இரத்தக் கொதிப்பை ஏத்திக் கொள்வதைத் தவிர, என்ன பயன் தந்திருக்கும், இம்மாதிரியான பதிவுகள்.

இப்படி எழுதப்படுகின்ற வலைப்பூக்கள், திரட்டிகளால் திரட்டப்பட்டு எல்லோர் முன்னும் மேடையேற்றப் படுகின்றபோதுதான், அதன் தாக்கம் அதிகமாகிறது.

தேன்கூடும் திரட்டுகிறது, தமிழ்மணமும் திரட்டுகிறது, ஆனால், தமிழ்மணத்தின் மீதுதான் குற்றச்சாட்டு அதிகமாயிருக்கிறது. எனது சமீபத்திய இரு பதிவுகளில் இது குறித்து வலைநண்பர்கள் சாடியிருந்தனர்.

'வலைஞர்கள் எழுதுவதற்கு திரட்டிகள் என்ன செய்யமுடியும்?' என்ற கேள்வியை பதிலாய்த் தருகின்ற தமிழ்மணம், 'ஏன் தேன்கூட்டின் மீது இம்மாதிரியான குற்றச்சாட்டுகள் எழவில்லை?' என்ற கோணத்தில் யோசிக்கலாமே?

தேன்கூட்டினை விட, தமிழ்மணம் அதிகம் வாசகர்களால் படிக்கப் படுகிறது என்பது மட்டுமே இதற்குக் காரணமாயிருக்க முடியாது.

தமிழ்மணத்தில், பின்னூட்டங்களின் எண்ணிக்கை, முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் பதிப்பிக்கப் படுவது கூட ஒரு காரணமாயிருக்கலாம்.

சாதீயம் பற்றி எழுதப் படுகின்ற இடுகைகளுக்கு கிடைக்கின்ற பின்னூட்டம், கண்ணைப் பறிக்கின்ற விதத்தில் அதிக எண்ணிக்கையோடு முன்னேறுகையில், ஆதரவாளர்கள் அதிகக் களிப்போடு கைதட்டவும், இம்மாதிரி பதிவுகளுக்கு பின்னூட்டம் இடக்கூடாது என்ற எண்ணத்தோடு இருப்பவர்களுக்கு, அவர்களின் கெக்கலிப்பு BP-யைக் கிளறி விட, அவர்களும் வேறு வழியில்லாமல், சங்கைக் கையிலெடுத்து ஊத ஆரம்பித்து விடுகிறார்கள்.

தமிழ்மணத்தில் பின்னூட்டங்களை, தேன்கூடு போல, scroll-ல் சிறியதாகக் காட்டலாம்.

தமிழ்மணத்தில் 'இடுகையை தடை செய்ய' வசதியிருக்கிறது. இது எந்த அளவில் உபயோகப் படுத்தப் படுகிறது என்பது தெரியவில்லை. இதன் உபயோகம் விரிவாக விளக்கப்படுமானால், இதை உபயோகித்துக் கூட, இம்மாதிரியான பதிவுகளைத் தவிர்க்கலாம். இம்மாதிரி கிடைக்கும் எதிர்ப்புகளை, எல்லோரும் அறியத்தரலாம்.

இது போன்ற விசயங்கள் ஒரு புறமிருக்க, தெரிந்தே சில விசயங்கள் தமிழ்மணம் அனுமதிக்கின்றதோ என எண்ணும் விதமாய், இம்மாத விவாதக் களத்திற்கு 'தமிழக அரசியலில் சாதீயம் - தேவைதானா? என்று தலைப்பிட்டு துவக்கியிருக்கிறார்கள். அரசியலும் சாதீயமும் என்றோ பிரிக்க இயலாத ஒன்றாக ஆகிவிட்ட வேளையில், இந்த விவாதக்களம் என்ன புதுச் சிந்தனையைத் தோற்றுவிக்கும்? ஒருவேளை, விவாதக்களம் பிரபல்யமாக உதவலாம்.

எனக்குத் தோணியதை உங்களோடு பகிர்ந்திருக்கிறேன். இது எல்லாம் ஒரு ஆரோக்கியமான வலையுலக அனுபவம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதியது. 'சேவல் கூவியே விடியாத பொழுதுகள், காக்கை கூவியா' விடியப் போகிறது? இருந்தாலும், 'ஊதுகிற சங்கை ஊதி வைப்போம், கேக்குகிற காது மட்டும் கேக்கட்டும்' என்ற எண்ணம்தான்.

உங்கள் எண்ணத்தையும் பகிருங்கள், ஆரோக்கியமான வலையுலகம் படைக்க!

Wednesday, January 17, 2007

அயோத்தியாமண்டபமும்,தமிழ்மண மண்டபமும்

தலைப்பைப் பார்த்தவுடனேயே புரியுமே..எதப் பத்தி பேச வாரேன்னு? எல்லாம் நம்ம சுஜாதாவோட கதையை வச்சு, 'சூடா' போண்டா, பஜ்ஜி போட்டு கதைச்சிகிட்டு இருக்கிறத பத்திதான்..

வலையுலகில் உங்க பேர் சீக்கிரம் பாப்புலர் ஆகணுமா? 'நான் பிராமணன்'னோ, இல்லா 'பாப்பான்னா உதைப்பேன்'னோ ஒரு தலைப்பு வச்சு ஒரு பதிவு போடுங்க. ஹிட்-டு பிச்சிகிட்டு போகும். அப்படி ஒரு 'ஹாட்' சப்ஜக்ட் அது.

சும்மாவே மென்னுகிட்டு இருக்கிறவங்களுக்கு, 'அவாள்' (அதாங்க அவல்)..கிடைச்சா மாதிரி சுஜாதாவோட கதை கிடைச்சிருக்கு சும்மா விட்டுடுவாங்களா என்ன?

என்னதான் இருக்கு அந்த கதையிலன்னு, ஆவலைத் தூண்டி படிக்க வச்ச வலை நண்பர்களுக்கு நன்றி. படிச்சதுக்கு அப்புறம் நம்ம கருத்தச் சொல்லலேன்னா எப்படி?

இது மாதிரி நிகழ்வுகளின் தாக்கத்தில் நடப்பது போன்ற நிறைய கதைகளை ஏற்கனவே சுஜாதா எழுதியிருக்கிறார். அத்தோடு இதுவும் போயிருக்கும், வலைஞர்களின் ஆதரவால், மிகைப்படுத்தப்பட்ட விளம்பரம் கிடைத்திருக்கிறது இக்கதைக்கு. என்னைப் பொறுத்தவரையில், இது ஒரு சாதாரணச் சிறுகதை, தேவையற்ற விளம்பரத்திற்கு ஆளாகியிருக்கிறது.

"இதன் நாயகி அடாவடியாகவும், கோபக்காரியாகவும் சித்தரிக்கப் பட்டு இருப்பதாகச் சொல்கிறார்கள். அவள் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவள் என்பதால், எல்லா பிற்படுத்தப் பட்டவர்களும் அப்படியே என வாசகர்கள் எண்ணிவிடுவார்கள்" - என்பது இக்கதையின் மீதான குற்றச் சாட்டு.

இந்தக் கதையை படித்தபிறகு சத்தியமாய் அப்படித் தோன்றவில்லை. சகஜமான துடுக்கான பெண்ணாகத் தெரிகிறாரே தவிர, குற்றச்சாட்டில் கூறுவது போலான தோற்றம் கண்டிப்பாக இல்லவே இல்லை.

அது அடாவடியாக, கோபமாக பேசுவதும் கூட, கட்டினவனின்
குடும்பத்தாரின் ஆசிர்வாதம் வாங்கத்தான் என்பது, புரிகிற மாதிரிதான் எழுதியிருக்கிறார். அந்த கோபம் கூட பாசிடிவாகத்தான், அந்தப் பெண்மேல் தெரிகிற மாதிரி எழுதியிருக்கிறார். இறுதியில் அந்தப் பெண், அமெரிக்கா ட்ரிப்-பைத் தள்ளி வைத்து, அடிபட்ட பெரியவருக்கு ஆதரவாக அருகிலேயே இருகிறார். இந்தச் சூழலில், எப்படி பாலபாரதிக்கு அதுமாதிரியான பார்வை பட்டது என்பது புரியவில்லை.

இன்றைக்கு திரைக்கு வருகின்ற பெரும்பாலான படங்களின் நாயகிகள், சுட்டிப் பெண்ணாகத்தான் காட்டப் படுகிறார்கள். சில படங்களில், வில்லியாகக் கூட காட்டப்படுகிறார்கள். மூன்று மணிநேரப் படங்களில், தெரிந்துவிடாத சாதீய உணர்வா இதில் வெளிப்பட்டு விடுகிறது? மிகைப் படுத்தப்பட்ட கற்பனையாகவே படுகிறது, இக்கதை குறித்த குற்றச்சாட்டு.

சுஜாதாவின் பெரும்பாலான கதைகளின் முடிவில், வாசகன் எதிர்பாராத 'ட்விஸ்ட்' இருக்கும், இந்தக் கதையிலும் அது மாதிரி 'அயோத்தியா மண்டப அடிஉதை பெட்ரோல் குண்டு வீச்சு' சம்பவத்தை நினைவுறுத்தியிருக்கிறார்.

'பெரியார் சிலையை' யாரோ உடைத்தற்கு, சென்னையில் ஒரு அயோத்தியா மண்டபம் அடிக்கப் படுமானால், அது தப்பில்லையா? அதையேதான், அந்தப் பெரியவரின் குரலில், ‘‘எதுக்கு என்னை அடிச்சா? எதுக்கு கடையை எரிச்சா? நான் யாருக்கும் துரோகம் பண்ணலையே’’ ன்னு கேட்டிருக்கிறார். மிக யதார்த்தமான கேள்வியது. உணர்வுப்பூர்வமாக பார்க்காமல், அறிவுப் பூர்வமாக பார்த்தால் புரியும். அயோத்தியா மண்டபச் சம்பவம் படித்த எல்லோர் மனதிலும், கண்டிப்பாக எழுந்திருக்கும் அந்தக் கேள்வி.

இதில் எங்கு பிழை என்பது புரியவில்லை. இந்தக் கதையை எழுதியது 'சுஜாதா' என்ற பிராமணர், வெளியிட்டது 'குமுதம்' என்ற திமுக - தி.க பிடிக்காத பத்திரிக்கை. இது மாதிரியான பார்வைகள், இந்தக் கதையை திசை திருப்பி விட்டதோ? எது எப்படியோ, வழக்கமான சுஜாதவின் சிறந்த கதைகளுக்குக் கூட கிடைக்காத விளம்பரம், மிகச் சுமாரான இந்தக் கதைக்கு கிடைத்திருக்கிறது.

'சிறுமை கண்டு பொங்குவாய் வாவா'-ன்னு பாடினதுக்கு ஏற்ப, எங்கு மனிதமும், மனித நேயமும் சிறுமைப்படுத்தப்பட்டாலும், அதற்கு எதிர் குரல் கொடுக்கலாம், அது பார்ப்பனீயத்திலிருந்து வந்தாலும் சரி, அல்லது பண முதலைகளிடமிருந்து வந்தாலும் சரி. அதை விடுத்து, இது போன்ற உப்புச் சப்பற்ற விசயங்களைப் பெரிது படுத்துவது, திரைப்படங்களிலன் தமிழ் தலைப்புக்கு வரிவிலக்கு' என்பது மாதிரி, ஒரு விளம்பரமாகவே பயன்படுமே அன்றி வேறு எந்தப் பயனுமிராது.

Sunday, January 07, 2007

சதாமின் தூக்கு - சிறுவன் பலி?

சதாம் தூக்கிலிடப்பட்டது குறித்து ஆங்காங்கே சில கருத்துப் பரிமாறல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நமது 'சர்வேசரும்' இது குறித்து சர்வே பதிவு செய்து, வெளியிட்ட முடிவில், பெரும்பாலோர் துக்கப்பட்டிருக்கிறார்கள்.

நமது மக்கள் எப்போதுமே உயிர்பலியை ஆதரிப்பதில்லை. என்கவுண்டரில் சுடப்படுகின்ற ரவுடிகளுக்கே கூட பச்சதாபப் படுகிறவர்கள், நிதானமாய் ஆராயாமல், அவசரமாய் நிறைவேற்றப்பட்ட சதாமின் தூக்கினை எப்படி ஆதரிப்பார்கள்?

Image and video hosting by TinyPic

இந்தத் துக்கம் ஒரு புறமிருக்க, இன்னொரு துயரச் செய்தியை கேளுங்கள். சதாம் தூக்கிலிடப்பட்ட செய்தியை, தொலைக்காட்சியில் கண்ட ஸ்பானிஷ் 10 வயது சிறுவன், அது போல 'மிமிக்' செய்ய முயன்று, மரணப்பட்டுப் போயிருக்கிறான். ஆழ்ந்த அனுதாபங்கள். CNN-ல், இந்தச் செய்தித் துளியைப் பாருங்கள்.

தொலைக்காட்சியில் இதனைப் பார்த்தவன், தனது மாமாவிடம் இது குறித்து வினவ, 'சதாம் கெட்டவன், அதனாலேயே அந்தத் தண்டனை' என சாதாரணமாகச் சொல்லியிருக்கிறார், அந்தக் காட்சி அவனைப் பாதித்த அவலம் புரியாமல். வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தவனுக்கு, தூக்கின் காட்சி நினைவில் வந்திருக்க வேண்டும், தொலைக்காட்சியில் கண்டதை, விளையாட்டாய்த் தனக்குத் தானே செய்ய முயற்சித்திருக்கவேண்டும், வினையாகி உயிர் பிரிந்திருக்கிறது.

சதாமின் தூக்கினைவிட, இந்தச் செய்தி மிக வருத்தமளித்தது. மீடியாக்கள் இது போன்ற செய்திகளை, காட்சித்தொகுப்பாய்க் திரும்பத் திரும்ப காட்டுவது, எத்தகைய பாதிப்புகளைக் கொடுத்திருக்கிறது பாருங்கள்? மீடியாக்கள், இது போன்ற செய்திகளை எச்சரிக்கை உணர்வோடு அணுக வேண்டும்.

பெற்றோரும் இது போன்று உளவியல் ரீதியாக பாதிக்கப் படும் என எண்ணுகின்ற செய்திகளை குழந்தைகள் முன்னர் பார்ப்பதனைத் தவிர்க்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்விற்காக, என்னைப் பாதித்த இந்தச் செய்தியினை உங்களோடு பகிர்கிறேன்.

Monday, January 01, 2007

புத்தாண்டு வாழ்த்துக்கள்
போன வருடம்
ஓடியே போச்சு!
புதிய வருடம்
வேகமாய் வருது!வருகின்ற 2007-ம் வருடம்
மகிழ்ச்சி தரும்
அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும்
மலர்க்கிரீடமாய் மலர்ந்திட

மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

மழலையர் மனம்போல எப்போதும் மகிழ்வோடு இருக்க இனிதான
வாழ்த்துக்களுடன்....

- உங்கள் அன்பு மறவா...
நெல்லை சிவா