Monday, December 31, 2007

வருகின்ற நாளை வாழ்த்தியே வரவேற்பு பாடுவோம்!


01-01-2008 ....பிறந்திருக்கின்ற புதிய வருடத்தின் முதல் தேதி.. எல்லா 'முதல்'களுமே ஸ்பெஷல்தான், அதுவும் 'புது'சு என்கிறபோது கூடுதல் உற்சாகம்தான்..

பகைமையுணர்வும், தீவிரவாதங்களும் மறைந்து, குழந்தை மனமும், இறைத்தன்மையும், சகோதரத்துவமும், மனிதமும் எல்லோரிடமும் பூத்திருக்க, ஒரு நல்லாண்டாய் இவ்வாண்டு அமையட்டும்.

அனைத்துலக நண்பர்களுக்கும், இவ்வருடத்தின் ஒவ்வொரு நாட்களும், கிழிக்கப்படுகின்ற காலண்டரின் ஒரு தேதியாய் இல்லாமல், சாதனை புரிகின்ற நாட்களாய், நித்தமும் மலர்ச்சியும், மகிழ்வும் தரும் நாட்களாய் அமைய வாழ்த்துக்கள்!


Wishing you all a Happy & Prosperous New Year 2008!

அன்புடன்...
நெல்லை சிவா

Wednesday, October 24, 2007

ஆக்க்ஷன் கிங்...சூப்பர் ஸ்டார்...யார் முதல்?
அட..அட.. என்ன ஒரு முக்கியமான நாட்டுக்குத்தேவையான விசயம்னு யாரோ முணுமுணுக்கிறது எங்காதுல கேக்குது...அட..இது பொழுது போகாத பொம்முக்களுக்காக.. அவங்க மேலே படிக்கலாம், மத்தவங்க.. மேம்போக்கா மேயலாம்.. ஹி...ஹி..ஹி..

போனவாரம் மூணுநாள் 'லாங் வீக் எண்ட்'லா. அமெரிக்கால இருந்தா, எங்கியாவது கார எடுத்துட்டுச் சுத்தலாம், ஆனா இங்க எங்க போக? அதுவும் ஆயுதபூஜை அன்னைக்கு, எங்க பார்த்தாலும் பூசணிக்கா வேற ஒடைச்சு ரோட்டில போட்டிருப்பாக..ஒருவேளை பெரியார் இப்ப இருந்திருந்தா, 'வெங்காயம்'னு அடிக்கடி சொல்லுவாராமே..அதுக்குப் பதிலா பூசணிக்கான்னு சொல்லியிருப்பாரோ?

அட என்னப்பா, சொல்லவந்ததை சீக்கிரம் சொல்லிட்டுப்போப்பான்னு இன்னொருத்தர் முணுமுணுக்கிறாரு..இதோ வந்துட்டம்பா..

ஸோ..'லாங் வீக் எண்ட்'ல, ஊரச் சுத்தாம, வீட்ல இருந்து ஒரு ஒரு சேனல்லயும், சாமியக் கூட கும்பிடவுடாம, விதவிதமா புரோகிராம போடுறத பாக்கலாம்னு முடிவு பண்ணி பார்க்க ஆரம்பிச்சேன்..

அதுல ஒன்னுதான், நம்ம அர்ஜுனோட படம் 'கிரி'. பாத்துகிட்டேயிருக்கையில, ஒரு சீன்ல அர்ஜுன் வில்லனைப் பாத்து ஒரு டயலாக் உடுறாரு. 'பன்னிங்கதான் கூட்டம் கூட்டமா வரும், சிங்கம் சிங்கிளாதாண்டா வரும் நா சிங்கண்டா' அப்படிங்கிறாரு..

அட..இது நம்ம சூப்பர் ஸ்டாரு, லேட்டஸ்டா 'சிவாஜி'ல சொன்னதுல்லா.. ஆனா 'கிரி' அதுக்கு முன்னாடியே வந்துடுச்சே.. அப்படின்னா அர்ஜுன் முதல்ல சொன்ன டயலாக்க, ரஜினிக்கு உபயோகப் படுத்தியிருக்காங்களா? தலைவருக்குன்னு புச்சா சொல்லியிருக்காங்கன்னு நினைச்சா, இப்படி கவுத்துட்டாரே சுஜாதா. (ஸோ..இப்ப தலைப்புக்கு அர்த்தம் புரிஞ்சிடுச்சா...முதல்வன்னாலே அது அர்ஜுன்தான்..இல்ல?)

ஆனா, எது எப்படியிருக்கட்டும், 'ரஜினி' சொன்னதுக்கப்புறம்தான் அந்த டயலாக்குக்கே ஒரு வெயிட்.. நல்ல ரீச் கிடைச்சுருக்கு.

இந்த டயாலாக் 'சிவாஜி'ல கேட்டப்புறம், நம்ம பாஸோட அஞ்சு வயசு பையன் டைனிங்க் டேபிள்ல உக்காந்துட்ட வுட்ட கமெண்ட்டுதான் ஞாபகத்துக்கு வர்ரது... திடிர்னுட்டு சொன்னாம்பாருங்க, 'அம்மா, இனிமே எனக்கு இட்லி வேணாம், எப்பவும் தோசைதான் வேணும்'னான்.

'என்னடா..எப்பவும் இட்லிதாம் பிரியம்னு சொல்லுவ..இப்ப என்ன வந்துச்சாம்?'ன்னு அம்மா கேக்க,

'போம்மா..பன்னிங்கதான் கூட்டம் கூட்டமா வரும், அது மாதிரி இட்லிதான் கூட்டம் கூட்டமா வரும்', தோசைதான் 'சிங்கம்' மாதிரி சிங்கிளா வரும்..அதுனால மாறிட்டேன்னான்' பாருங்க..சும்மா டைனிங்க் டேபிளே அதிருடிச்சில்லே...

Saturday, September 08, 2007

இரைச்சலாய் இசைத்திருந்தால் கேட்டிருக்குமோ?


"இரைச்சலாய்
இசைத்திருந்தால்
கேளாத
செவிகளுக்கும்
கேட்டிருக்குமோ?
மெல்லிசையாய்
இசைத்ததாலேயே
நல்லிசை ஒரமாய்ப்
போனதோ?"
- என்று கேட்கத் தோணுகிறது, நம் மெல்லிசைமன்னரின் இசைக்கு அங்கீகாரம் வழங்கக் கோரும் 'பத்மபூஷனும் விபூஷனனும் ஈயம் பித்தளைக்கு வாங்கரோமுங்கோ... ' என்ற சர்வேசனின் பதிவைப் படித்த போது.

சரி, அங்கீகாரம் வழங்கக் கோரி அவர் எழுப்பியிருக்கிற ஆன்லைன் பெட்டிசன்-ல எத்தனைபேரு கையெழுத்திட்டிருக்காங்கன்னு பாத்தா, மின்மினி மூலமாய் நானிட்ட கையெழுத்தும் சேர்த்து, 60 - தான் வருகிறது.

இப்ப வந்த பசங்க கூட டாக்டர், கம்பவுண்டர் பட்டங்கள எளிதா வாங்கிடறாங்க, ஆனா நம்ம எம்.எஸ்.விக்கு....? என்ன கொடுமை சரவணன் இது?-ன்னுதான் கேட்கத் தோணுது.

இசையில் எவ்வளவோ சாதித்திருந்த போதும், அடக்கமாய் இருப்பவர் அவர், அதனால்தானோ என்னவோ 'விருதார்'கள் கவனிக்காமல் விட்டார்களோ?

நம்ம ஊருல விருது கொடுக்குறதுக்குன்னே சில சட்டதிட்டங்கள் வைத்திருக்காங்க.
1. விருது கொடுக்குறதுனால, தங்களுக்கு பப்ளிசிட்டி கிடைக்கும்னா, வலியக் கூப்பிட்டு வகைக்கொரு பட்டம் கொடுப்பாங்க
2. காசு கொடுத்தா பட்டம் கொடுப்பாங்க
3. பெரிய இடத்து சிபாரிசு இருந்தா பட்டம் கொடுப்பாங்க
4. அனுசரித்துப் போனா, பட்டம் வாங்குறவங்கள விளம்பரப்படுத்த பட்டம் கொடுப்பாங்க
5. நாங்கதான் முதல்ல பட்டம் கொடுத்தோம்-னு சொல்லிக்க, பாப்புலரா இருக்கறவங்களுக்கு முந்தியடிச்சு பட்டம் கொடுப்பாங்க..

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். ம்ம்ம்...MSV இந்த வகை எதிலும் சேர்த்தி இல்லாமல் இருப்பதினாலா என்னவோ, இன்னமும் பட்டம் வாங்காமல் இருக்கிறார். கலையுலகை ஆதரிக்கின்ற எம்ஜியாரும், கருணாநிதியும் கூட கண்டுக்காமல் விட்டது/விட்டுக் கொண்டிருப்பது கூட மன்னிக்கமுடியாதது.

மெட்டுக்கு பாட்டெழுதக் கேட்கிற இசையமைப்பாளர்கள் நடுவே, எழுதுகின்ற கவிஞரின் சிந்தனையைக் கட்டுப்படுத்தாமல் வந்து விழுகின்ற வரிகளுக்கு வாத்தியம் கட்டியவர் அவர்.
'வறுமையின் நிறம் சிகப்பு' படத்தில் வருகின்ற 'சிப்பியிருக்குது ..முத்துமிருக்குது' பாடலைக் கேட்டிருக்கிறீர்களா? இரைச்சலோ, இடியோசையோ இல்லாமல், இனிதாயில்லை?
'பூக்காரி' படத்தில் வருகின்ற, 'காதலின் பொன்வீதியில்....' பாடல் மென்மை கூறுவதாயில்லை?
'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் வருகின்ற 'எங்கேயும்..எப்போதும்..', 'யாதும் ஊரே..', 'சிவ சம்போ' பாடல்களெல்லாம், இன்னைக்கும் உங்கள் காதில் ரீங்காரம் இடவில்லையா?
ஹெட்போனிலோ, ஐ-பாடிலோ அல்லது உங்க கார் ஆடியோவிலோ, 'சம்போ..சிவ சம்போ...' பாடலைக் கேட்டுப் பாருங்கள். அதில் இசைத்திருக்கின்ற கருவிகளும், மெட்டும், குரலும் பின்னிப்பிணைந்திருப்பதை உணர முடியும். பாடல் முடிந்த பிறகும் கூட, உங்கள் காதுகளில் அந்த இசை உங்களை ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும்.

எத்தனையோ பேரைக் கவர்ந்த, 'சிம்லா ஸ்பெசல்' படத்தில் வருகின்ற 'உனக்கென்ன மேலே நின்றாய்' பாடல், இப்போதைய இளைஞர்களையும் வசீகரிக்கக் கூடிய ஒன்று.


KanaKaanumKangazl....
பாலசந்தரின் 'அக்னிசாட்சி' படத்தில் வரும், எஸ்பிபி பாடிய 'கனாக் காணும் கண்கள் மெல்ல' பாடல் கேட்டிருக்கிறீர்களா? காட்சியையும், கதையின் கருவையும், அர்த்தமிக்க வரிகளையும் தாலாட்டும் விதமாய் 'அருமை' என்ற வார்த்தைக்கு இலக்கணமாய் மனதை உலுக்கும். கேட்காதவர்கள், கேட்டுப் பாருங்கள்.
எத்தனை பேருக்குத் தெரியும், 'ஆயர் பாடி மாளிகையில்' பாடலும், 'புல்லாங்குழல் கொடுத்த' - கண்ணன் பக்திப் பாடலும் MSV-யின் இசை வடிவம் என்று?

அவரது பாடல்களில் மனம் கவர்ந்தது என்றால், பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். MSV ஒரு நிஜக் கலைஞன், சக கலைஞர்களை மதிக்கத் தெரிந்த, 'ஈகோ' இல்லாத, இசையை இசையால் ரசிக்கத் தெரிந்த மனிதன்.
நல்ல கலைஞனுக்கு விருதுகளெல்லாம் இரண்டாம் பட்சம்தான், அது கலைஞனின் பார்வையில். கலைஞனின் ரசிகனின் பார்வையில், விருதும் தேவையான ஒன்று.
அவருடைய பாடல்கள் எத்தனையோ நம்முடைய மனதைத் தொட்டிருக்கின்றது, பிசைந்திருக்கின்றது. அவருடைய ஏதாவது ஒரு பாடல், உங்க மனதை தொட்டிருந்தால் கூட, நீங்கள் உங்களுடைய கையொப்பத்தை, இந்த ஆன்லைன் மனுவில் பதிப்பிக்க கடமைப்பட்டவராகின்றீர்கள்.
'விருதார்கள்' போல, மெத்தனமாய் இல்லாமல், சுறுசுறுப்பாய் இரண்டு நிமிடம் செலவழியுங்கள், அந்த முதுபெரும் இசைக் கலைஞனுக்கு.

Tuesday, August 28, 2007

அம்மா இங்கே வா..வா..

வழக்கமாய், வேடிக்கையான ஈ-மெயில்கள் நிறைய பரிமாறப்படும். இந்த முறை, சற்று சீரியசான ஒன்று. உங்களுக்கும் கூட வந்திருக்கலாம். கருணை உள்ளங்களின் எல்லையை விரிவுபடுத்தலாம் என்ற எண்ணத்தில், இங்கு பதிவர்களிடையே, எனக்கு வந்த மின்னஞ்சலை, அப்படியே உங்களின் பார்வைக்கும் சமர்ப்பிக்கிறேன்.


///****///
Hi All, The child in the below photo is Pooja. She was recovered from a beggar who had kidnapped her. The police has arrested the beggar and the child has been put up in the Orphanage called "Nirmala SisuBhavan", Trivandram, Kerala.(contact number -- 0471-2307434) Police could not get any details from the beggar as he is dumb and deaf. These are the details retrieved from the child.
Mother tongue : Hindi
Father's Name : Raju
Mother's Name: Munni Devi
She says that her Hometown is "Nagaluppe" but no such town exists in India. She might not know or she is not pronouncing it correctly. Please circulate this mail to find her parents.
///****///

Image and video hosting by TinyPic
பூஜா என்ற இக் குழந்தை, காதும் கேளாத, வாய் பேச முடியாத பிச்சைக்காரன் ஒருவனால், கடத்தப்பட்டு, பிச்சைக்கு உபயோகப் படுத்தப் பட்டிருக்கின்றாள். கேரளப் போலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டு, தற்சமயம் திருவனந்தபுரத்த்ஹில் உள்ள நிர்மலா சிசு பவனத்தில் ஒப்படைக்கப் பட்டிருக்கின்றார். குழந்தையின் தாய்மொழி இந்தி, தந்தைப் பெயர்: ராஜு, தாய் பெயர்: முன்னி தேவி. பிறந்த இடம் நாகலுப்பி என்று மழலை மொழியில் கூறியிருக்கிறாள்.
செவி வழிச் செய்தியாய், இது பேசப்பட்டு இந்தக் குழந்தை அதன் பெற்றோரிடம் சேருமானால், நல்லதொரு விசயமாய் இருக்கும். இது குறித்து இணையத்தில் உலாவி, தகவல்களை துழாவிய போது, கீழ்க்கண்ட தளத்தில் இது குறித்த தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருப்பது தெரிய வந்தது. இன்னமும், தேடல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது போலும். மேலும் அதிக தகவல்களுக்கு, கீழ்க்கண்ட தளம் பாருங்கள்.

Sunday, August 26, 2007

சென்னை டிராபிக் - லைவ் வீடியோ பாக்கறீங்களா?

பொதுவா டிராபிக் பற்றிய செய்திகளை, FM ரேடியோ மூலமா அப்பப்ப சொல்வாங்க, உபயோகமா இருக்கும். இணைய வசதிகளும், hi-speed cable, DSL வசதிகளும் தருகின்ற உற்சாகத்தில், ஒரு படி மேலே போய், அப்படியே டிராபிக்-ஐ நேரிடை ஒளிபரப்புச் செய்கிறார்கள்.

சென்னையின் கத்திப் பாரா சந்திப்பு, கோடம்பாக்கம் சந்திப்பு, திருவான்மியூர், மற்றும் கீழ்பாக்கம் சிக்னல்களை நேரிடை ஒளிபரப்புச் செய்கிறார்கள். வெளிநாடு
வாழ் தமிழர்கள் கத்திப் பாரா மேம்பால வேலைப்பாடுகளைக் பார்க்கவாவது, இந்தக் லைவ் ஒளிபரப்பைப் பாருங்க. (கத்திப்பாரா தொடர்பு கிடைக்க தாமதமாகிறது. மற்ற சிக்னல் தொடர்புகள் உடன் கிடைக்கின்றது. )

http://chennailive.in/chennailive_morevideos.php?cat_id=14491011&Category=Traffic

நல்ல முயற்சிக்கு வாழ்த்துவோம்!

Saturday, August 25, 2007

யாஹூ புகைப்படச் சேவைக்கு மூடுவிழா

யாஹு(yahoo) வழங்கும் சேவைகளைப் பற்றி அவ்வப்போது சில வதந்திகள் கிளம்புவதுண்டு. 'சாட்' சேவைக்கு கட்டணம் வசூலிக்கப் போவது, மெயில் சேவைக்கு கட்டணம் வசூலிக்கப் போவதாக..எனப் பல வதந்திகள். அதுமாதிரிதான் இதுவும் இருக்கும்னு நினைச்சுராதீங்க.

நிஜமாலுமே யாஹு இலவசமாய் வழங்கிய புகைப்படச் சேவையை, செப்டம்பர் 20,2007-உடன் நிறுத்திக் கொள்ளப் போகிறார்கள். இது விசயமாய், உங்கள் யாஹு மின்னஞ்சலுக்குத் தகவல் வந்திருக்கும்.

நீங்கள் சேகரித்து வைத்து இருக்கும் புகைப்படங்களை flickr போன்ற பிற தளங்களுக்கு மாற்ற அவர்களே வழி செய்து தருகிறார்கள்.

மேலதிக தகவல்களுக்கு, கீழேயுள்ள நிரலைச் சொடுக்கவும்.

http://help.yahoo.com/l/us/yahoo/photos/photos3/closing/closing-02.html


நான் மாறிட்டேன், அப்ப நீங்க? :)

Saturday, July 07, 2007

கனவு இல்லம்...கனவேவா? - 2இப்படி 'ஹாட் கேக்'-காக இருக்கும் நிலங்களை பார்த்தால், ஏமாற்றுகிற கும்பலுக்கு ஆசை வராதா? ஏற்கனவே யார் பெயரிலோ இருக்கின்ற நிலத்தினை, ஏமாற்றி இன்னொருவருக்கு விற்றுவிடுகிற கதையும் மிகச் சாதாரணமாய் விட்டது.
இந்தத் திருட்டு கும்பலிடம் இருந்து தப்புவிக்க, இப்போதெல்லாம், மக்கள் நிலத்தை வாங்கி வேலி போட்டு விடுவதோடு நில்லாமல், 'நில உரிமையாளர் xxxx, தொடர்பு எண் xxxx' என்று நிலத்தில் போர்டு மாட்டி வைக்கின்றனர். இவ்வளவு முன்னெச்சரிக்கையோடு இருந்தும், நிலத் திருட்டு நடக்கத்தான் செய்கிறது.
சென்ற வருடத்தை விட, இந்த வ்ருடத்தில், இதுமாதிரியான திருட்டுக்கள் இரட்டிப்பாகி இருப்பதாகச் சொல்கிறது, சென்னைக் காவல்துறை புள்ளிவிபரம். இதில் அவர்களுக்கும் பங்கிருப்பதாகச் சொல்கிறது பொதுஜனம்.

நிலங்களின் விலை என்னவோ அவ்வளவு உயர்ந்து கொண்டு போனாலும், அதற்கேற்ப வசதிவாய்ப்புகள் இருக்கின்றனவா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், அரசு இயந்திரங்கள் இதனை திட்டமிட்ட தொலைநோக்கோடு அனுகாததே. முதலில் ரோடைப் போடுவது, பிறகு வரிசையாக டெலிபோன்,குடிநீர் வாரியம், கழிவு நீரகற்று வாரியம் என ஒன்று மாற்றி ஒன்று, தேவைக்காக நன்கு போடப்பட்ட சாலையை உடைத்து பாழ்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.


சென்னைக்குள் இருக்கின்ற பகுதிகளில் நிலங்கள் கிடைப்பதே அரிதாகி விட்டதால், இன்னொரு புதிய அனுகுமுறையுடன் வீடு விற்பனை முறையைக் கையாளுகிறார்கள் சில குட்டி பில்டர்கள்.
சென்னையின் பிரதான நகர்ப்புறங்களில் இருக்கின்ற 15/20 வருடங்களுக்குள்ளாக இருக்கின்ற அபார்ட்மெண்ட்களை மார்பிள்,டைல்ஸ்,ஏசி என நவீன அமைப்புடன் ரீமாடல் செய்து, புதிய அபார்ட்மெண்ட் போலாக்கி, புதிய அபார்ட்மெண்டின் விலையை விட 20-25% சதவிகிதம் குறைத்து விற்கின்றனர்.
இந்த மாதிரியான வீடுகளுக்கும் வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால், உள்ளூர்வாசிகளிடையே வரவேற்பு கம்மியாக இருப்பதால், இந்த பில்டர்கள் இது மாதிரியான வீடுகளைப் படம் எடுத்து, சிங்கப்பூர், மலேசியா, அரபு நாடுகளில் உள்ள மக்களுக்கு தங்கள் மார்கெட்டிங்க் ஏஜென்சி மூலமாக அனுப்பி, அங்குள்ளவர்களிடம் விற்பனை செய்கிறார்கள்.பின்னர் வாங்கிய பார்ட்டிகளிடம் ஒரு டீல் போட்டுக்கொண்டு, உள்ளூர் பார்ட்டிகளுக்கு 12,000 -15,000 ரூபாய்களுக்கு வாடகைக்கு விட்டு, அதிலும் கமிஷன் பார்த்து விடுகின்றனர். வெளிநாட்டு பார்ட்டிகளுக்கு ப்ரைம் ஏரியாவில், வீடு வாங்கிய சந்தோஷமும், வாடகையும் வருவது ரெட்டிப்புச் சந்தோஷமாகிவிடுகிறது. வாடகை தராமல் ஏமாற்றுகின்றவர்களை, வீடு காலி செய்ய மறுக்கிறவர்களை எல்லாம் இந்த ஏஜென்சியே 'கவனிப்பதால்' வெளிநாடு வாழ் உரிமையாளருக்கு எல்லாம் சுளுவாக, 'ஏஜென்சி சர்வீஸ் சார்ஜ்'ஜிலேயே அடங்கி விடுகிறது. இப்படி ஒரு கிளை வியாபாரமும் நடந்து கொண்டுதானிருக்கின்றது.


இப்போது சென்னன 'ரியல் எஸ்டேட்' மார்கெட் விற்போருக்குச் சாதகமாக இருக்கின்றது. இந்த நிலை இப்போது சற்று மந்தமாகத் தொடங்கி யிருக்கின்றது. முன்புபோல், அடிபிடியாக போட்ட உடனேயே விற்றுத் தீர்வது என்பது, சற்று இழுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை, பில்டர்கள் வட்டம், சரியாக உணரத் தொடங்கி, அடுத்த கட்ட 'கவர்ச்சியாய்' நீச்சல் குளம், உடற்பயிற்சி நிலையம், பார்ட்டி ஹால் என எல்லாம் இருக்கும் விதமாய் அபார்ட்மெண்ட்கள் கட்டத் துவங்கியுள்ளனர். இதற்கான விலையை அபார்ட்மெண்ட் விலையில் ஏற்றி கவர்ச்சிகரமாக விற்கத் துவங்கியுள்ளனர். அப்படியும், இன்னமும் எல்லா ப்ளாட்களும் புக்காகாத நிலைமைதான். வளர்கின்ற வட்டிவிகிதமும், வீடுகளின் விலைக்கேற்ப வளராத 'வீட்டு வாடகை'யும், உள்ளூர் பார்ட்டிகளை யோசிக்கச் செய்து, இந்தக் கவர்ச்சிகளை வலுவிழக்கச் செய்கிறது.


இதனால், இப்போது வெளிநாடுவாழ் இந்தியர்களை குறிவைத்து 'Road Show' நடத்த ஆரம்பித்திருக்கின்றனர் பிரபல பில்டர்கள். இப்போதுள்ள நிலைமையில் சென்னை மற்றும் மும்பை ரியல் எஸ்டேட் மார்கெட் அபரிமித வளர்ச்சியால் பாதிக்கப் பட்டுள்ளது. இனியும் அது முன்பிருந்த வேகத்தில் பயணிக்கும் என்பது அடுத்த இரண்டு ஆண்டுகளில் இருக்காது. 2008/2009 வருடங்களில், இந்தப் பாதிப்பு வெளிப்படையாய்த் தெரியவரும்.


இப்போதே, அதற்கான சரிவின் துவக்கம் தெரிய ஆரம்பிப்பதாய் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். Plot-களின் விற்பனையும், விலையும் குறையத் துவங்கியிருக்கின்றது. ஆனாலும், தினமும் ஒரு புதிய புராஜெக்டுகளுக்கான விளம்பரங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றது. நிஜங்கள் புரிய, இன்னும் சில மாதங்கள் ஆகலாம், அதுவரை சற்றுப் பொறுத்து இவ்விசயத்தில் இறங்குவதே பயனளிப்பதாக இருக்கும். Buyer Market வரும்வரை பொறுத்திருப்போம்.

'சற்றுமுன்' போட்டிக்கு எழுதவேண்டும் என நினைத்தது, இப்பதான் நேரம் கிடைத்தது.
----00000-----


Friday, July 06, 2007

கனவு இல்லம்...கனவேவா?


'காணி நிலம் வேண்டும்..பராசக்தி காணி நிலம் வேண்டும்'னு கவி பாடிய கனவு போலாகிவிட்டது இன்றைக்குச் சென்னையில் வீடு வாங்குவது. லட்சங்களில் புரண்டு கொண்டிருந்த 'ரியல் எஸ்டேட்' வியாபாரம், இன்றைக்கு கோடிகளில் புரளுகிறது.

நடுத்தர வர்க்கங்கள், கனவுலகில்தான் சென்னையில் வீடு வாங்க வேண்டும், அதுவும் கூட சென்னையின் எல்லைக்கோட்டைத்தாண்டித்தான் வாங்க வேண்டும் போலிருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களில், நிலங்களில் விலை 100 சதவிகிதத்திற்கும் அதிகமாகியிருக்கிறது.

சென்னையின் திடக்கழிவுகள் எரிக்கப்படுகின்ற பகுதியாயிருந்த கிராமமாகக் கருதப்பட்ட பெருங்குடியில், 2003-2004 வருடங்களில் ஒரு கிரவுண்ட் (2400 சதுர அடி) நிலம் 3 - 5 லட்சங்களுக்கு விற்பனையாகிக் கொண்டிருந்தது. இப்போது பழைய மகாபலிபுரம் சாலையில் பெருகுகின்ற பல்நாட்டு கணிணி நிறுவனஙகளின் அலுவலங்களின் காரணமாய், ஒரு கிரவுண்ட் நிலம் 50-60 லட்சங்களுக்கு விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது, என்றால் வளர்ச்சி விகிதத்தை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

யுகம் யுகமாக 'code' எழுதி சம்பாதித்தால் கூட, அவ்வளவு சுலபமாய் கோடிகளில் புரள முடியாது. நாலு கிரவுண்ட் வாங்கி வைத்திருந்தீர் களென்றால், கோடு எழுதிச் சம்பாதித்ததை விட அதிகமாய்ச் சம்பாதித்து ரிடையர்மெண்ட் வாங்கி இருக்கலாம்.

இந்த அளவு நிலங்களின் விலை உயர்வதற்கு பெரிதும் துணை போனது, கணிணித்துறைதான் என்பது பெரும்பாலானவர்களின் கருத்தாய் இருக்கிறது. யோசித்துப் பார்த்தால், அது ஒரு தூண்டுகோலாக இருந்திருக்கலாமே தவிர, அதுவே முழுக்காரணமாய் இருக்கும் என்று தோன்றவில்லை.

அப்போது, வீடு வாங்குவதற்கான கடனின் வட்டி விகிதங்கள் குறைவாக இருந்தமையும் ஒரு காரணம். வாடகை கொடுப்பதைவிட சற்று அதிகமாக EMI கட்டினால் போதும், என்ற வங்கிக் கடன் வாரியங்களின் விளம்பரமும் துணைபோனது. 'ரியல் எஸ்டேட்'டின் ஆரம்ப நிலை வளர்ச்சிக்கு, நியாமான காரணங்கள்தாம்.

மக்களின் 'கனவு இல்லம்' ஆசை, ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களின் மூளையை முடுக்கிவிட, ஊருக்குள் இருக்கின்ற இரண்டு/மூன்று கிரவுண்ட் நிலத்தோடு இருப்பவர்களை அணுகி, கணிசமான பணத்தையும், ஒரு ஃபிளாட்டையும் கொடுத்து, அதற்கான விலையை இதர ப்ளாட் விலையில் ஏற்ற ஆரம்பித்தனர்.

இது ஒரு பக்கமிருக்க, புரோக்கர்கள் இன்னொரு பக்கம்.. யாராவது நிலம் வாங்க/விற்க வந்தால், அவர்களுக்கு கமிஷன் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, ஒன்றுக்கு ரெண்டாக விலை சொல்ல ஏற்றினர்.

தேவைக்கு வாங்குவோர்/விற்போர் போக, வங்கிகள் டெபாசிட்களுக்கு தரும் முதலீட்டை விட, நிலத்திலான முதலீடு அதிகப் பணம் ஈட்டித்தருவது புரிய ஆரம்பிக்க, பணம் வைத்திருப்போர் (NRI உட்பட) நிலத்தில் முதலீடு செய்வது அதிகரித்ததும், விலை ஏற ஒரு காரணம்.

இதிலும் புரோக்கர்களின் அட்டகாசம்... வீடு விற்க நினைக்கிற ஆசாமிக்கு அதிக விலை வாங்கித்தருவதாகக் கூறி, வாங்குவதற்கு ஆள் ஏற்பாடு பண்ணுவர்கள். அந்த ஆளிடம், அந்த வீடு வாங்குகிற அளவுக்கு மொத்தமாகப் பணம் இருக்காது. ஆனாலும், விற்கிற பார்ட்டியை சம்மதிக்க வைத்து சேல் அக்ரிமெண்ட் போட்டுவிடுவார்கள். வாங்கிய பார்ட்டி பணத்தை புரட்டுவதாகக் கூறி ஒரு ரெண்டு மூணு மாசம் தாமதிக்க வேண்டியது..அதற்குள் அடுத்த பார்ட்டி பிடித்து, விலையை ஏற்றி ரெண்டாவது நபருக்கும், மூணாவது நபருக்கும் அக்ரிமெண்ட் போட்டு, அதில் அடுத்த செட் கமிசன் வாங்கி, முதல் பார்ட்டியை செட்டில் பண்ணுவது....இந்தச் செயின் இப்படியே தொடர்ந்ததும் விலை உயரக்காரணம்.
'சற்றுமுன்' போட்டிக்கு எழுதவேண்டும் என நினைத்தது, இப்பதான் நேரம் கிடைத்தது.

Saturday, June 16, 2007

சிவாஜி - The BOSS

ஷங்கரின் படம் என்றாலேயே அழுத்தமாய் ஏதாவது ஒரு சோஷியல் மெஸேஜ்-ஐ தொட்டுச் செல்லும் படமாக இருக்கும். ஆரவாரத்துடன் ரிலீஸாகி இருக்கும் 'சிவாஜி'யும் அதற்கு விதிவிலக்கில்லாமல், 'கறுப்புப் பணப் பிரச்னையைத் தொட்டுச் செல்கிறது. ஆனால், வழக்கமான 'ஷங்கர்' டச் மிஸ்ஸிங்.


அமெரிக்காவில் சம்பாதித்த பணத்தைக் கொண்டு, சமூகநல எண்ணத்தோடு இலவசக் கல்லூரி,மருத்துவமனை துவக்க எண்ணுகிற ரஜினிக்கு, கல்வி வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கும் 'சுமன்' மூலமாய் தடைகள் வர, ஒரு ரூபாயுடன் வீதிக்கு வந்துவிடுகிறார். தடைகளைத் தகர்த்து, எப்படி நினைத்ததை முடிக்கிறார் என்ற சுஜாதாவின் நூலிழைக் கதையில், ஷ்ரேயாவுடன் காதலையும், ஷங்கரின் பிரம்மாண்டத்தையும் இணைத்து 'ரஜினி ஃபார்முலாவில் படம் பண்ணியிருக்கிறார்கள்.


வழக்கமாய் ஷங்கரின் படத்தின் முக்கிய கரு, கதையின் போக்கில் மெல்ல மெல்ல புரிய வரும். ஆனால், இதில் கதையின் கரு ஆரம்பத்திலேயே ரஜினியின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிடிபட்டுப் போய்விடுவதால், படத்தின் சுவாரஸ்யம் குறைந்து போய்விடுகிறது. ஒத்த ரூபாயில், எப்படி முன்னேறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும், ஒரு 'அனானி' மிரட்டல் போன்காலில் அனைத்து கறுப்புப் பண ஆவணங்களையும் கைப்பற்றுகிற அரதப் பழசான டெக்னிக் அந்த எதிர்பார்ப்பை பிசுபிசுக்க வைத்துவிடுகிறது.


சுமன் தான் பிரதான வில்லன். ஆனால், காட்சியமைப்புகள் அவரை மிகப் பெரிய வில்லனாக தோன்றச் செய்யாதது பெரிய மைனஸ். கறுப்பு பணம் வைத்திருந்தது தவிர வேறு ஏதும் கொடுரம் நிறைந்தவராக காட்டப்படாத வில்லனை, ஹீரோ கொலை செய்வது என்பதும் ஒட்டவில்லை.


பொதுவாக ரஜினி படங்களில், ரஜினி ஹீரோயின் பின்னாடி போக மாட்டார், அது இந்த படத்தில் மாறியிருக்கிறது. ரஜினியின் காதலை மறுக்கும் ஷ்ரேயாவுக்காக, விவேக்குடன் சேர்ந்து அவர் அடிக்கும் லூட்டிகள் சுவாரஸ்யம் என்றாலும், சற்று அலுப்பு தட்டுவது என்னவோ உண்மை. குடும்ப்பப் பாங்காய் தமிழ் பண்பாட்டுடன் கூடிய பெண்தான் வேண்டும் என்கிற ஹீரோவுக்கு, 'தமிழ்ச்செல்வி' என்ற பெயருடன் ஷ்ரேயா. பாடல் காட்சிகளில் என்னவோ 'ஆங்கிலச் செல்வி'யாய் காட்சி அளிக்கிறார்.


ரஜினி அனுபவித்து நடித்திருக்கிறார். இடைவேளைக்குப் பிறகுதான் ரஜினியின் துள்ளல். காசை சுண்டும் ஸ்டைலும், எம்.ஜி.யாராக வரும் ஸ்டைலும் ரசிக்கும்படி இருக்கிறது. பாடல் காட்சிகள் மிகப் பிரமாதம். கே.வி ஆனந்தின் துல்லியமான ஒலிப்பதிவும், ரஹ்மானின் இசையும் படத்தின் மிகப் பெரிய ப்ளஸ். சஹாரா பாடலும், காட்சியமைப்பும், ஷ்ரேயாவின் நடனமும் அருமை. 'பல்லேலக்கா' பாடலும் சூப்பர். திரைக்கதையின் ஏமாற்றத்தை, ஈடு செய்வது பாடலும், பாடலின் காட்சியமைப்பும்தான்.


ரஜினி-ஷங்கர்-சுஜாதா-ரஹ்மான் கூட்டணியும், படத்திற்கு கொடுக்கப்பட்ட விளம்பரமும் கொடுத்த எதிர்பார்ப்பினை, படம் பூர்த்தி செய்ததா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

சட்டுன்னு சொல்லனும்னா, 'நத்திங் ஸ்பெஷல்'.

Saturday, April 28, 2007

Super World Cup, Congrats Aussies!

வல்லவன் தோற்கணும் என பெரும்பாலோனோர் எண்ணியபோதும், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், திடமாய் கலக்கி விட்டார்கள் ஆஸ்திரேலியர்கள். 'சேம்பியன்' என்ற பட்டத்துக்கு முழுத் தகுதியுடையவர்கள். சேம்பியன் என்ற வார்த்தையை மாற்றி, 'ஆஸ்திரெலியன்' ன்னு சொல்லலாம் போல.

இவ்வளவு வலுவான அணி இதுவரை பார்த்ததேயில்லை. ஆடிய அனைத்து ஆட்டங்களிலும், வலுவான ஸ்ஹோர். எதிரணியினரை கிட்ட நெருங்க விட்டதேயில்லை.

ஆடிய நிதானமும், வெற்றி நமக்குத்தான் என்ற நம்பிக்கையும், அபரிமிதமாய் பாவனைகளை வெளிக்காட்டாமல், அருமையாய் ஆடினார்கள்.

கடைசி 15 நிமிடத்திற்கு முன்பே வெற்றி என்று தீர்மான பிறகு, மீண்டும் அழைத்து ஆட வைத்து 'கேம்'மை முழுமையாக்கினார்கள்.

ஸ்ரீலங்காவும், நல்ல எதிரணியாய்ச் செயல்பட்டனர்.

வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துக்கள், விடாமுயற்சியுடன் தளராது ஆடிய அருமை ஸ்ரீலங்காவுக்கும் வாழ்த்துக்கள்.

Wednesday, April 25, 2007

வலைப்பதிவர் சந்திப்பு - ஒரு புதிய தொடக்கம்

ஒவ்வொரு முறையும் வலைப்பதிவர் சந்திப்பு குறித்த அறிவிப்பு வரும்போது ஆர்வமாயிருக்கும். புதியதாய் ஏதாவது ஒரு நற்பலன் அந்தக் கூட்டத்தின் பயனாய் விளையும் என்ற நம்பிக்கையும் இருக்கும். ஆனால், கூட்டம் முடிந்த பின், அதைத் தொடர்ந்து வரும் பதிவர் கூட்டம் சார்ந்த பதிவுகளை படிக்க நேரும் போது, ஒரு வித ஏமாற்றமே எதிரொலிக்கும்.

இது குறித்து நண்பர் ரவிசங்கர் ஏற்கனவே, 'வலைப்பதிவர் சந்திப்பால் என்ன பயன்?" என்ற கேள்விக்கணையோடு ஒரு பதிவு எழுதியிருந்தார். அதில் நானிட்ட பின்னூட்டத்தின் ஒரு பகுதி கீழே:

//நானும் கூட உங்கள் சிந்தனையோடு ஒத்துப் போகிறேன்,புதுசா கல்லூரி திறந்து ஓரிரு வாரங்கள் ஜாலியாகப் போவதில்லையா, அதுமாதிரிதான் இதுவும் என நினைக்கிறேன்.ஆரம்பகால சந்திப்புகள், இப்படித்தான் போகும், போகப்போக ஆக்கமாய் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. //

இம்முறை வெளிவந்த/வந்துகொண்டிருக்கின்ற வலைப்பதிவர் சந்திப்பு குறித்த பதிவுகளைப் படிக்கும் போது, எனது நம்பிக்கைகள் காக்கப் பட்டிருக்கின்ற சந்தோஷம் கிட்டுகிறது.

'பொன்ஸ்' அவர்களின் பதிவும், லக்கிலுக்-கின் பதிவும் படிக்க, நேர்முக வர்ணணை போலிருக்கின்றது.

படித்த வரையில், எனக்குப் பிடித்த சில பகுதிகளை 'ஹைலைட்' பண்ணி, மீட்டிங்க் அட்டெண்ட் பண்ணாத குறையை தீர்த்துக்கிறேன்


"வலைபதிவுகளை எழுதுபவர்களே படிப்பவர்கள் என்ற நிலையை மாற்றி நம்மைத் தவிர்த்த சமுகமும் வலைபதிவுகளைப் படிக்கத் தொடங்கும் பொழுது தான் இவற்றிற்கு ஒரு பயன் இருக்கும். அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையாக கோவையில் நடத்தப் போகும் ப்ளாக் கேம்ப் வழிவகுக்கும்" - செல்லா

மாணவர்களை வலைபதிவுக்கு அழைத்து வரவேண்டும், அழைத்து வரும் பணிகளில் ஏற்கனவே சிலர் ஈடுபட்டிருக்கிறார்கள் - பாலபாரதி

"சிறுவர்கள் படிக்கும் அளவுக்கு முதலில் வலைபதிவுகளை ஆரோக்கியமாக்குவோம், அதன்பின் அவர்களை அழைத்துவருவது நல்லது"
- ஓகைரசித்த நகைச்சுவை:

//"எனக்கு Writing-ஐவிட Visualதான் ஸார் அதிகம் பிடிச்சது.." என்றார் ஓசை செல்லா. இதற்கும் ஒரு ஏவுகணையை உடனே வீசினார் மா.சி. "அப்புறம் எதுக்கு ஸார் இங்க வந்தீங்க.. விஷ¥வல்தான் முக்கியம்னா நீங்க இங்க வந்திருக்கவே கூடாது. இங்க இருக்குறவங்க writers.." என்று ஆணித்தரமாக தன் வாதத்தை எடுத்து வைத்தார் மா.சி. "பெண் பதிவர்களும் நிறைய பேர் உங்க தளத்துக்குள்ள வர்றாங்க.. நீங்க இப்படி பண்ணா யார் பின்னூட்டம் போடுவாங்க..?" என்று மா.சி. 'உடன்பிறப்பாகவே' மாறி உணர்ச்சி பொங்க.. உள்ளன்போடு கண்டிப்பான குரலில் கேட்க.. இதை ஆமோதிப்பதைப் போல் சகோதரி பொன்ஸ், ஓசை செல்லாவை நிமிர்ந்து பார்க்காமலேயே 'ஆமாம்' என்று தலையாட்ட.. செல்லா அமைதியானார்//


'குங்குமம்' கவரேஜ், 'மக்கள் டிவி கவரேஜ்' என வலையுலகை வெளியுலகிற்கு பிரபலப் படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகளும் பாராட்டுக்குரியது.

அடுத்த கட்ட நம்பிக்கைக்கு 'வலைஞர் கூட்டத்தை' முன்னேற்றிய பாலபாரதிக்கும், தெளிவாய் நிகழ்வை படம் பிடித்துக்காட்டிய சகோதரி பொன்ஸுக்கும் Special Thanks!

Saturday, April 07, 2007

சீறி வரும் சிவாஜி

மே மாதம் அக்னி நட்சத்திர வெயிலில் சும்மாவே அனல் பறக்கும், இந்த அனலோடு, தணல் பறக்க மே 17-ல் வெளிவர இருக்கிறது சூப்பர் ஸ்டாரின் சிவாஜி. சும்மாவே ரஜினி படமென்றால், ஆளாளுக்கு ஒரு 'ஹைப்' கிரியேட் பண்ணுவாங்க, அத்தோடு இது 'பிரம்மாண்டம்' புகழ் ஷங்கரின் இயக்கம் வேறு, ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்புக்குக் கேட்கவா வேணும்?

Image and video hosting by TinyPic 'பாய்ஸில்' கோட்டை விட்ட ஷங்கர், 'அன்னியனில்' எழுந்து நின்றார். அந்த வெற்றியில், உற்சாகமாய் உழைத்திருப்பது வெளிவந்திருக்கும் 'சிவாஜி' புகைப்படங்களைப் பார்க்கையில் தெரிகிறது.

ரஜினிக்கும் அதே போல்தான், 'பாபா'வின் அதிர்ச்சி தோல்விக்குப் பிறகு, சந்திரமுகியின் வெற்றி, தொடர்ந்து நடிக்க ஆசையைத் தூண்டியிருக்க வேண்டும். சிவாஜி பிலிம்சின் சந்திரமுகி வெற்றிக்கு நன்றியாய், இந்த படத்திற்கு 'சிவாஜி' என்றே பெயர் வைத்து விட்டாரோ?

ஹாரிஸை விட்டுவிட்டு மீண்டும் ரஹ்மானை நாடியிருக்கிறார் ஷங்கர், தயாரிப்பு 'ஏவிஎம்' என்பதாலும் இருக்கலாம். பொதுவாக ரஹ்மான் பாடல்கள், கேட்ட முதல் நாளே இனிப்பதில்லை, 'சிவாஜி'யின் இசை கொஞ்சம் விதிவிலக்கு. சஹாரா டூயட்டும், பல்லேலக்காவும் கேட்ட மாத்திரத்திலேயே பிடித்துப் போனது. பல்லேலக்கா பாடல் கொஞ்சம் சந்திரமுகி 'தேவுடா' பாடலை நினைவுபடுத்திகிறது. எஸ்பிபியும், அதே ஸ்டைலில் பாடியிருப்பதால் அப்படித் தோன்றலாமோ?

ஏவிஎம்-ஷங்கர்--ரஜினி-ரஹ்மான் எனப் பிரம்மாண்டங்கள் இணைந்திருப்பதில் எதிர்பார்ப்புகள் கூடியிருக்கும் அதே வேளையில், எதிர்ப்புகளும் சம அளவு விளம்பரம் பெறுகின்றன. அது சரி, காய்ச்ச மரத்தில்தானே கல்லடி படும்!

அதிக பொருட்செலவில் தயாராவதால், சீக்கிரமே போட்ட முதலை எடுக்க, டிக்கெட் விலையை, திரையிட்ட சில நாட்களுக்கு அதிகமாக விற்க முயற்சிக்கின்றனர் விநியோகஸ்தர்கள், அப்படி விற்றால் 'போராடுவேன்' என்று வீர முழக்கமிடுகிறார் விஜய.டி.ராஜேந்தர்.

Image and video hosting by TinyPic இன்னொரு பக்கம், காவிரி பிரச்னையை வைத்து ரஜினியின் சார்புநிலையை விமர்சித்து 'தமிழினத் துரோகி' பட்டம் கட்டுகிறது ஒரு கூட்டம். கன்னடத்தில், ''சிவாஜியை'த் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட அமைப்பொன்று முழக்கமிட்டுக் கொண்டிருக்கின்றது.

சிவாஜியின் திரைப்பாடல்கள், காட்சிகள் முறையாக வெளிவரும் முன்பே, இணையம், சிடி என அங்கங்கே கசிந்து கொண்டிருக்கின்றது.

சந்திரமுகியின் வெற்றிக்குப் பிறகு வருவதால், 'சிவாஜி'யின் வெற்றி பெரிதாக எதிர்பார்க்கப் படுகிறது. வெளிவந்திருக்கின்ற ஸ்டில்ஸ்கள், ரஜினியின் பொலிவையும், ஸ்டைலையும் காட்டுகிறது. பாடல்களும் அவ்விதமே, கதைக்களமோ, கருவோ தென்படவில்லை. பொதுவாக, ஷங்கரின் படத்தின் கருவில், ஏதாவது ஒரு அழுத்தமான 'மெஸேஜ்' இருக்கும். இந்தப் படத்தில் அது என்னவாய் இருக்கும் என்பது சஸ்பென்சாகவே வைக்கப்பட்டிருக்கின்றது.

Image and video hosting by TinyPic
ரஜினியைப் பொறுத்த வரையில் வெற்றிப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டாலும், ஷங்கரைப் பொறுத்த வரையில் இன்னொரு ஜெண்டில்மேனாக, 'இந்தியனா'க, 'முதல்வனா'க, தமிழ்த் திரையுலகிற்கு ஒரு முன் மாதிரியாக இருக்குமா என்பது, ஸ்டில்ஸ்களைப் பார்க்கும் போது, நம்பிக்கையாய்த் தெரியவில்லை.

எதுவாயினும், தமிழ்த்திரை ரசிகர்கள், 'மே - மாதத்தில் ஒரு தீபாவளி' காணத்தயாராகிவிட்டார்கள். ஏப்ரல்-14 ரீலிஸிலிருந்து, மே-17 -க்குத் தள்ளிப் போட்டிருக்கின்றார்கள். ஒரு வெற்றி ஒத்திப் போடப்பட்டிருக்கின்றது என்று சொல்லலாமா? பொறுத்திருப்போம்.

Tuesday, April 03, 2007

'ஒரு மாதிரி' எல்லாம் ஒரு மாதிரியா???!!!!

கடந்த சில வாரங்களா தமிழ்ப்பதிவுலகம் 'ஒரு மாதிரி' வியர்டு பதிவுகளா பதிப்பிக்க ஆரம்பிச்சு, இப்பதான் கொஞ்சம் குறையறா மாதிரி இருக்கு. நம்மளயும் வியர்டு பதிவுக்கு அழைத்திருந்தார், சர்வே புகழ் சர்வேசர். கொஞ்சம் வேலை அதிகமிருந்ததால், பதிவிட நேரமில்லாது போனது.

இரண்டு நாளைக்கு முன்னர்தான், 'Happy Feet' DVD ரீலிசாக, அதைப் பார்த்துக் கொண்டிருந்த போதுதான், இந்த வியர்டுக்கான அழைப்பு நினைவுக்கு வந்தது. 'Happy Feet'-ன் பெங்குயினுக்கு, கால் வியர்டாக இருக்க, அது பெங்குயின் கூட்டத்திடமிருந்து ஒரு வகையில் தனிமைப் படுத்தப் படுகிறது. அந்த வியர்டு காலை வைத்து, அது தன் இனம் காக்க எப்படி மெஸேஜ் சொல்லுதுன்னு அழகா படம் புடிச்சிருந்தாங்க.

இது மாதிரியே ஆபிரகாம் லிங்கனின் சிறுவயதுப் பருவம் பற்றி உலவும் கதைகளில் ஒன்றில் அவர், பலூன் வியாபாரியிடம் 'கருப்பு வண்ண' பலூனில் காற்றடைத்தால், பறக்குமா என்று கேட்பார், அதற்கு பலூன் வியாபாரி 'பலூனுக்கு வெளியே உள்ள நிறத்தில் ஒன்றுமில்லை, உள்ளே இருக்கும் காற்றுதான் மேலே பறக்க காரணம் என்பார். இந்தச் சம்பவம், அவர் மனதில் ஓரு ஆழ்ந்த சிந்தனையையும், நம்பிக்கையையும் தோற்றுவித்ததாகக் கூறுவார்கள்.

இதுமாதிரியான வித்தியாசமான சிந்தனைகள், வேறுபடுத்திக் காட்டுவதோடு, வாழ்வின் உயரேயும் கொண்டு செல்கின்றது. இப்படியான சிந்தனைகள் எல்லாம் நமக்கும் வந்தா நல்லாதான் இருக்கும். ஆனா நமக்கு வர்ரதெல்லாம், கிறுக்குச் சிந்தனையா இருக்கே, என்ன பண்ண? :)

எங்க வீட்டுல தங்கஅரளிப் பூமரம் உண்டு. கார்த்திகை, மார்கழி மாதங்களில், மரம் நிறைய பூ பூத்திருக்கும். பச்சை நிற இலைகளினூடே, மஞ்சள் நிறப் பூக்கள், பார்க்க ரம்மியமாய் இருக்கும். இதைப் பார்த்து ரசிப்பதற்காகவே, நண்பன் வீட்டு மொட்டை மாடிக்குச் சென்று, அங்கிருந்து பார்ப்போம். செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் அக்கா கிட்டேயிருந்து ரெக்வெஸ்ட் வரும், 'டேய்..தம்பி.. சாமிக்குக் கொஞ்சம் பூப் பறிச்சுக் கொடுடா' ன்னு கேப்பாங்க. 'பூ மரத்திலே இருந்தாதான் கொத்துக் கொத்தா பார்க்க அழகாயிருக்கு, சாமிக்கு வச்சா இரண்டுமணி நேரத்திலேயே வாடிடும்'னு சொல்லி மாட்டேன்னிடுவேன். சின்னவயசுல பண்ணினது, இப்ப நினைச்சா பறிச்சுக் கொடுத்திருக்கலாமோன்னு இருக்கும். இப்பவும், பூக்களைப் பறிக்காம ரசிக்கிறதுதான் புடிக்குது. ஆனா, ரங்கமணி வந்து வூட்டுல வளர்க்கிற ரோஜாவ பறிச்சுட்டுப் போனா, செடியில இருக்கிறத விட உன் தலையில இருக்கிறதுதான் அழகுன்னு சொல்லோணும்...ம்ம்..

அப்புறம் டிரெஸ் விசயத்திலேயும் கொஞ்சம் கிறுக்கு உண்டு. கலர் கலரா போடப் பிடிக்கும். அதுல கிறுக்கு என்னன்னா, நானா பார்த்து செலக்ட் பண்ணின டிரெஸ்-ஆ இருந்தாதான் அடிக்கடி போடப்பிடிக்கும். இல்லைன்னா, கொடுத்த அந்தச் சமயத்துக்கு போடுவேன், அப்புறம் கொடுத்தவங்க ஞாபகப் படுத்தறப்போதான் அந்த டிரெஸ் ஞாபகத்திற்கு வரும்.

சர்வேசன் தயிர்சாதத்திற்கு, ரசம் ஊற்றி சாப்பிடறதப் பற்றிச் சொல்லியிருந்தாரு, எனக்கும் அந்த டேஸ்ட் உண்டு, ஆனா அதவிட, தயிர் சாதத்திற்கு Fish Fry வச்சு சாப்பிட ரொம்பப் பிடிக்கும். வேலை நிமித்தமா, கல்கத்தாவில் ஆறேழு மாதங்கள் தங்கினப்போ, என்னோட ஃபேவரிட் உணவு தயிர்சாதம்-பச்சை மிளகாய்-Fish Fry. தயிரோட, Fish Fry சேர்த்தா ஜீரணமாறது கஷ்டம்னு சொல்வானுங்க பிரண்ட்ஸுங்க, 'கல்லையும் செறிக்கிற வயசு, போடான்னிடுவேன்.'

படிக்கிறப்ப, பரீட்சை செண்டிமெண்ட் ரொம்பவே உண்டு. காலைல எழுந்திருக்கிறப்ப அம்மாதான் எழுப்பனும், சின்னக்காதான் காலை உணவு தட்டுல எடுத்து வைக்கணும், கடைசிப் பரீட்சை முடிஞ்ச அன்னிக்கு கண்டிப்பாய் ஏதாவது சினிமா பார்க்கணும்..இதெல்லாம் நடந்தாதான் ஸ்கோர் நல்லாருக்கும்னு ஒரு கிறுக்கு. இதே கிறுக்கு, பின்னாடி இந்தியா கிரிக்கெட் ஆடறப்போ இருந்துச்சு. இப்ப இல்லைங்க.

எங்காவது டூர் போயிட்டு வந்தா, அந்தந்த ஊர்களிலே, சில பொருட்கள் வீட்ல உள்ளவங்களுக்குப் பிடிச்ச மாதிரி இருக்கும், வாங்கணும்னு தோணும், ஆனா வாங்கிட்டு வந்து, விலை அதிகமா இருந்துச்சுன்னா, 'உன்ன ஏமாத்திட்டாண்டா'ன்னு சொல்லுவாங்களோன்னுட்டு இருக்கும். அதுனால, சிம்பிளா ஏதாவது வாங்கிக் கொடுத்துட்டு, 'அதப் பாத்தேன்..நல்லா இருந்துது..இதப் பாத்தேன் நல்லா இருந்துது..வாங்கிட்டு வந்தா திட்டுவியோன்னுட்டு வாங்கல'ன்னு சொல்லி, அதுக்கு திட்டு வாங்குவேன். கிப்ட் கொடுக்கிறதும் ஒரு வகையான ஆர்ட், அந்த ஆர்ட் நம்மகிட்ட தயக்கமான ஒன்னு.

அமெரிக்காவுல நிறைய 'வியர்டு'ங்க உண்டு. 'Sony Playstation 3' - வீடியோ விளையாட்டுச் சாதனம் விற்பனைக்கு வந்த புதிதில், நடுங்கும் குளிரில் முந்தைய நாள் நள்ளிரவே கூடாரம் அடித்து, காத்துக் கிடந்து முதல் ஆளாய்ப் போய், US$750 கொடுத்து ப்ளே ஸ்டேசனை வாங்கி, வெளியே வந்து, காத்துக் கிடக்கிற மற்ற எல்லோர்கிட்டேயும் அதக் காட்டி உபயோகிக்காமலேயே போட்டு உடைக்கிற பப்ளிசிட்டி கிறுக்குகளும் உண்டு. அந்தமாதிரி இல்லாம, நவீனமா வருகிற காட்ஜெட்டுகளை வாங்கி உபயோகிக்கிற மோகம் உண்டு.

இன்னும் நிறைய கிறுக்குகள் உண்டு, எல்லாத்தையும் சொல்லி மாட்டிக்க வேணாம்னு இத்தோடு நிறுத்திக்கலாம். இப்ப என் முறைக்கு, நானும் ஒரு ஐந்து பேரோட குணத்த காட்டச் சொல்ல வேணாமா?

1. வினையூக்கி
2.காட்டாறு
3.மாறன்
4.இட்லிவடை
5.நானானி

இவங்க எல்லாம் இதுவரை 'Weird'-ஆ எழுதலைன்னு நினைச்சு கூப்பிட்டிருக்கிறேன். உங்க கால நேரம் பார்த்து எழுதுங்க!

மற்ற வியர்டுங்க குறித்த குறிப்பு வேணுமா? அதுக்குன்னே ஒருத்தர் 'வியர்டு ஆஸ்பத்திரி' கட்டி வச்சு, கேஸ் ஹிஸ்டரி எல்லாம் பதிவுபண்ணியிருக்காரு, போய்ப் பாருங்க!

Sunday, March 25, 2007

ஒரு ப்ளஸ்...இரு மைனஸ்..

சென்ற வாரம் சிந்தாநதியோட வலைச்சரத்திற்கு ஒரு வார ஆசிரியரா போயி இருந்தது மிக்க மகிழ்ச்சியாய் இருந்தது. வலைஞர்களின், பல்வேறுபட்ட திறன்மிகு முகங்கள் தென்பட்டது. சும்மா எழுதுறது ரொம்ப ஈஸி, ஆனா, இன்னொருத்தர் சுட்டும் விதமா எழுதறது, அவ்வளவு சுலபமில்லை. வள்ளுவன் இன்றிருந்தால்,

"சுட்டுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சுட்டும் வண்ணம் எழுதுதல்"
- ன்னுட்டு பாடியிருப்பாரோ?


ம்..ம்.. எப்படியோ, சிந்தாநதியோட நன்முயற்சியில நானும் பங்கெடுத்தது குறித்து எனக்கும் சந்தோஷமே! வலைச்சரம் சுட்டும் நல்லெழுத்துக்கள் மூலமாய், திறன்மிகு எழுத்துக்கள் சிறப்படையட்டும். இதன் விளைவாய், மேலும் பல நல்லெழுத்துக்கள் தமிழ் வலையுலகில் உலா வரட்டும்.

ப்ளஸ்... குறித்துச் சொல்லியாயிற்று, மைனஸ் என்னவாயிருக்கும்னு யோசிக்கிறீங்களா? அ
தாங்க எல்லாரும் துவைச்சி காயப் போட்டிக்கொண்டிருக்கும் நம்ம கிரிக்கெட் அணியின் தோல்விதாங்க அது.

இந்திய அணி ரொம்பப் பிரமாதமா பார்மில் இல்லை என்றாலும், உலகக்கோப்பைக்கு சற்று முந்தைய பந்தயங்களில், நம்பிக்கையாய் விளையாடி இருந்தார்கள். ஆனால், வங்கதேசத்தோடு ஆடிய ஆட்டத்தில் தோல்வியைத் தழுவியபோது, மனசு வெறுத்துத்தான் போனது. அப்போதே, மனதில் தோன்றிவிட்டது, இந்தப்பசங்க சூப்பர் 8-க்குள் போகக்கூடாதென்று. எத்தனை நாளைக்குத்தான் இப்படி அழுதழுது பார்த்துக்கொண்டிருப்பது? அழுத்தமாய், ஆணித்தரமாய், solid-ஆய் வெற்றிதரும் இந்திய அணியை என்றுதான் பார்ப்பது? ம்..ம்..ஆனால், இந்தத் தோல்விக்கு நம்ம தேசத்து மக்கள் காட்டும் ரியாக்சன் கொஞ்சம் ஓவர்தான் என்று தோன்றுகிறது. விளையாட்டு விளையாட்டாய்ப் பார்க்கப்பட வேண்டும், நாம் நம் அணி மீது வைத்திருந்தது அதீத நம்பிக்கை, அவர்களின் பலம் அவ்வளவுதான்! இதில் கிடைத்த ஏமாற்றத்திற்கு, இவ்வளவு எதிர்ப்பு காட்டுகின்ற மக்கள், நம்மகிட்ட ஓட்டு வாங்கி, ஐந்து வருடம் சூப்பரா மக்கள ஏமாற்றி, தானும் தன் சகாக்களும் சுருட்டிக்கொள்ள வகை செய்கிற அரசியல்வாதி தருகின்ற ஏமாற்றத்திற்கு பாடம் புகட்டினால், ஏதாவது பயனுண்டு. 'செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பானாயிற்றே..நம் மக்கள். :)

இரண்டாவது மைனஸ்.. அட..அது ஒன்னுமில்லைங்க.. வியர்டு(weird) சமாசாரந்தாங்க... போட்டோ போட்டியில செயிச்சதுக்கு, இப்படி ஒரு வில்லங்கமான அழைப்பு வரும்னு முன்னமே தெரியாமப் போச்சே.. நம்ம சர்வேசரு 'Hall-of-Fame' - ஆளுங்களுக்கு விட்டிருக்கிற weird - அழைப்பிலே நம்மளயும் சேத்து விட்டு, நம்ம மைனஸ்-ஸ புலம்ப்பச் சொல்றாரு.. ம்...புலம்புவோம்...நாளைக்கு..

Tuesday, March 06, 2007

சமீபத்தில் நான் ரசித்த புதிய ப்ளாக்...

அட..நிறைய பேரு நான் ரசித்த படம்..நான் ரசித்த பாடல் அப்படின்னு பதிவு போட்டுருக்காங்க.. அது மாதிரி, நான் ரசித்த ப்ளாக்-னு ஒன்னு போடலாமுன்னுதான் இந்தப் பதிவு.

'தேன்கூடு' வலைத்தளத்தில், கில்லி பரிந்துரைகள் அவ்வப்போது, பார்ப்பதுண்டு, அப்படி போன வாரம் பார்த்துக் கொண்டிருந்தப்பதான், 'தமிழ் சினிமாவும், அஸிஸ்டெண்ட் டைரக்டர்களும்'-னு சினிமா குறித்த பதிவு கண்ணில் பட்டது.

அத 'க்ளிக்' - பண்ணி, போய் பார்த்தா 'சினிமாவப் பத்தி' -ங்கிற மாறனோட ப்ளாக்.

தமிழ்மாறன் - என்ற பெயரில், எனது சில பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டு, ப்ளாக்கிற்கு அழைப்பும் விடுத்திருந்தார். அப்பவே போய் பாத்து, கமெண்ட்-டும் போட்டுட்டேன், ஆனா, அதே ப்ளாக் நம்ம கில்லியோட பரிந்துரையிலயும் இருந்தது பார்க்குறப்போ, சந்தோஷமா இருந்திச்சு.

ஏற்கனவே, நம்ம கண்மணி வேற, புதிய ப்ளாக்கர வரவேற்கிறதுல நம்மள சிறப்பாச் சொன்னதால, அந்தப் பேர காப்பாத்திக்க வேணாமா, அதான் 'கில்லியோட' கூடுதல் பரிந்துரையில் நானும் சேர்ந்து கொண்டு, நீங்க இந்த ப்ளாக் பக்கம் போயிப் பாருங்கன்னு ஒரு சுட்டிக்காட்டலாம்னுதான் இந்தப் பதிவு.

இந்த அறிமுகத்துக்கு முன்னாடியே, நம்ம வலையுலகப் பிரபலங்களாகிய, பாலா, துளசி கோபால், சர்வேசன், இலவசக்கொத்தனார், A n& , கார்த்திகேயன் எல்லாரும் படிச்சு, பின்னூட்டமிட்டுருக்காங்க, நீங்களும் படிச்சிருக்கலாம், இல்லேன்னா, ஒரு எட்டு போய்ப் பாருங்க.


புதிய எழுத்துக்களும், புதியவர்களும் வலைப்பூக்களுக்கு அவசியம் தேவை, சில சமயம் அவை, அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பது போன்ற தோற்றங்களிலிருந்து ஒரு மாறுதலைக் காண உதவலாம்.

கொஞ்ச நாள், ஜாலியா போகட்டும் வலைப்பதிவு, ஜாதிச் சண்டைகளையும், மதக் கேலிகளையும் தள்ளிவைத்து, கொஞ்சம் ஜாலியாவும், நட்பாகவும் கொண்டு போகலாம் வலையுலகை. இந்த வகையில், சக பதிவர் 'சர்வேசனுக்கு' விசேஷ நன்றி சொல்லனும், மனுசர் புகைப்பட போட்டி, பாட்டுப் பாட்டு, நேயர் விருப்பம்-னு கலக்கு கலக்கறார். அரட்டை அரங்கம் வேறு வடிவமைத்துக் கொடுத்திருக்கார், இன்னமும் சோதித்துப் பார்க்கவில்லை.

சமிபமா சகபதிவர் 'ரவிசங்கரும்' கருத்தைக் கவரும் விதமா, வலைப்பூக்களுக்கு நலம் சேர்க்கும் விதமா, கண்ணி பற்றி அறியத்தருகிற மாதிரி எழுதி வருகிறார். இவரது முயற்சிகளும் பாராட்டுக்குரியதே.

மாறனோட பதிவு குறித்து, அவர் பதிவில் இட்ட பின்னூட்டம், இங்கும் ஒரு அறிமுகப் பார்வையாக:

//சும்மா கலக்கலா அலசியிருக்கீங்க, தமிழ் சினிமா-வ இங்கிலீஷ் பார்முலால பாத்திருக்கீங்க,

ஆனா, 'சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்' முழக்கமிட்டானே ஒரு கவிஞன், அவன் வாயிலா பார்த்தா, இங்கிலீஷ் படத்த தமிழ்-ல எல்லாரும் பாக்க வச்சிருக்காங்கன்னு ஆறுதல் பண்ணிக்கலாம்.

ஆனா, என்ன இவங்க எல்லாம் சொந்தச் சரக்குன்னு சொல்லுறது தப்பு. அந்த வகையில, உங்க/நம்ம பேவரிட் டைரக்டரு, 'derailed'-ஒட தாக்கத்த சொல்லிதான் படத்த வெளியிட்டு இருக்காரு.

சூப்பரான அலசல், நிறைய புது டைரக்டர்கள் ஏன் புது வலைப்பதிவர்கள் கூட அசத்தலான ஆரம்பத்தக் கொடுத்து, அப்புறம் ஏமாற்றிருவாங்க. நீங்க, அது மாதிரி செய்யாம தொடர்ந்து கலக்கோணும்-னு கேட்டூக்கறேன்//

மாறன், உங்களோட எழுத்தோட்டம், இயல்பா ஒரு நண்பனோட உரையாடுகிற ஸ்டைல்ல இருக்கிறது ஒரு சிறப்பம்சம். சினிமாவப் பத்தி -ன்னு ப்ளாக்-கோட தலைப்பு வச்சிருக்கிறதால, அது பத்தி மட்டும்தான், எழுதணும்னு ஒரு சட்டம் போட்டுக்காம, எழுதத் தோணுறத, எழுத ஆரம்பிங்க. வாழ்த்துக்கள், மாறன்! தொடர்ந்து எழுதுங்க.

Saturday, March 03, 2007

சுடரின் வேகம் போதுமானதா?

மறைந்த நண்பர் 'தேன்கூடு'- சாகரன் அவர்களால் ஏற்றி வைக்கப்பட்ட சுடர், ஒளிர்ந்து கொண்டிருக்கின்றது.

பாலாஜியால் பிப்ரவரி 4-ஆம் தேதி துவக்கிவைக்கப்பட்டு, இன்றுவரை 24 பதிவுகள் இணைக்கப்பட்டிருக்கின்றது. இதில் இரண்டு பதிவுகள் இடைச்செருகல். ஒரு நாளைக்கு இரண்டு பதிவுகளுக்கு மிகாமல், இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு, இரண்டு நாளைக்கு ஒரு பதிவு என்ற வண்ணத்தில் இருப்பது போன்ற தோற்றம். இவ்வளவு 'ஆக்டிவ்'-ஆ இருக்கின்ற வலைப்பதிவில், மொத்தம் 40 பதிவுகளாவது, ஒரு மாதத்தில், வந்திருக்கவேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு.

ஆரம்பத்தில் வேகமாய் நகர்வது போலிருந்த சுடர், தற்போது மெல்லவே நகர்வது
போன்ற தோற்றம் அல்லது பிரமை?!! சுடர் நட்பு வட்டத்தில் சுழலுவதில் தவறில்லை, ஆனால் வேகம் குறையாதிருந்தால் நன்றாயிருக்கும். சுடரை ஒப்படைப்பவர்கள், அதன் துரிதவேகத்துக்கும் உதவ செய்யன செய்தால், 'சாகரனின்' விருப்பம் ஈடேற வகை செய்யும்.

உங்கள் எண்ணம் என்ன? சர்வேசன் வேலையை, நான் கொஞ்சம் எடுத்து அவர் வேலையைக் குறைக்கிறேன். (சர்வேசன்..ஏற்கனவே நீங்க உங்க பதிவுல மார்ச்-ல வேலை அதிகமாகும்-னு சொல்லியிருக்கீங்க..,அதான் :)) )

Wednesday, February 28, 2007

நீங்க 30 ப்ளஸ்-ஆ?

தர்ட்டி ப்ளஸ்-னாலே ஒதுக்கப் படறோமோன்னு நினைக்க ஆரம்பிப்பாங்க, தர்ட்டி ப்ளஸ் தாண்டின இளம் வயோதிகர்கள்? :) அந்த 'தர்ட்டி ப்ளஸ்' அலர்ஜி, தமிழ்மண பின்னூட்ட இடுகைகளுக்கும் வந்தாச்சு.

என்னைப் பொறுத்த வரையில், இது ஒரு நல்ல முயற்சிதான். பரீட்சித்துப் பார்ப்பதில் தவறில்லை. இது ஏதோ, மின்மினியின் பதிவுகள் இளமையாகவே இருப்பதினால் - அதாங்க, 30 மைனஸ் :)) சொல்றேன்னு நினைச்சுக்காதீங்க. ஏற்கனவே, இந்தப் பின்னூட்டங்கள் குறித்து எனது இரு வேறு பதிவுகளில் கருத்துச் சொல்லியிருக்கிறேன். ஒன்று கதை நடையில், இன்னொன்று ஜாதீயம் குறித்த பதிவில்.

சகபதிவர் சேதுக்கரசி மிகச் சரியாய்ச் சொல்லியிருப்பது போல, தமிழ்மணத்தின் இந்தப் முகப்புப் பின்னூட்டப் பகுதி Prime Real Estate-தான். இந்த இடத்தை தக்க வைத்துக்கொள்ள, ஏகப்பட்ட போட்டிகளும், தனக்குத்தானே பின்னூட்டமிடுதலும், அரட்டை கச்சேரிகளும்.. என வகைவகையான யுக்திகளைக் கையாளப்பட்டு வந்தன. இது பறிபோவது, இவர்களுக்கு வருத்தத்துக்குரிய விசயமாக இருக்கலாம்.

ஆனால், தமிழ்மணத்தின் இந்த முயற்சி, ஒரு வகையில் ஜாதீயச் சண்டைகளும், தனிநபர் தாக்குதல்களும் குறைய வாய்ப்பளிக்கும் என்றே தோன்றுகிறது. தேவையில்லாமல், அத்தைகைய பதிவுகள், கண்ணில் பட்டு, எரிச்சலூட்டிக் கொண்டிருக்காது.


இது ஒரு சோதனை முயற்சி என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள் தமிழ்மண நிர்வாகத்தினர். மேலும், சேதுக்கரசி அவர்கள் விடுத்திருக்கும் இன்னொரு வேண்டுகோளான, '24 மணி நேரத்தில் மறுமொழியப்பட்ட இடுகைகள்' பகுதியில் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல், 30+ உட்பட எல்லா மறுமொழிகளும் தெரியவைக்க முயல்கிறோம் என்றும் சொல்லி இருக்கிறார்கள்.

தவிரவும், இம்முயற்சி குழு மனப்பான்மையும், மதவாதங்களும், ஜாதீயமும், தனிநபர் தாக்குதல்களும் மட்டுமே Prime Real Estate-ஐ ஆக்ரமிக்காமல், சில புதிய பதிவர்களின் எழுத்துக்களுக்கும் இடம் கொடுத்து வெளிச்சம் கிட்டச் செய்யும் என்றும் தோன்றுகிறது.

தமிழ்மணத்தாரின் முயற்சிகள், இங்கேயே நின்றுவிடப் போவதில்லை, நல்ல பதிவர்களையும், நல்ல எழுத்துக்களையும் அடையாளம் காண, இன்னமும் முயற்சித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். அந்த வகையில், இந்தச் சோதனை முயற்சியை, சோதனையாகவே எதிர்கொண்டு, தமிழ்மணத்திற்கு உதவலாமே!

Sunday, February 18, 2007

கண்மணியின் முதல் வருகைக்குப் பரிசு - காய்கறிக்கலை - 3


இந்தக் காய்கறிக் கலை படங்களை போட்டு, படம் காட்டிட்டு இருக்கறப்பா, நம்ம கண்மணியின் கண் 'மின்மினி' பக்கம் பட்டுடுச்சு. முதல் வருகைக்கு பரிசு எங்கப்பா?-ன்னு ஒரு கேள்விய போட்டுட்டாங்க, கொடுக்காம போக முடியுமா? அதாங்க, இந்த பாகம் - 3 - ஐ, அவங்களுக்கான ஸ்பெஷலா போட்டிராலாம், திருப்திதானுங்களே கண்மணி.. :))யாரு இந்த கண்மணி-ன்னு கேக்கறவங்க அவங்களோட 'பல்சுவை பக்கம்'
போய்ப் பாருங்க..

"அ....முதல்...ஃ வரை கவிதை...முதல்...கடிஜோக் வரை... கோலம்..முதல்..கோழிகுருமா வரை பழமொழி...முதல்...பாட்டிவைத்தியம் வரை எல்லாம்..பேசுவோம் வாங்க வந்து சிரிச்சிட்டுப் போங்க" -ன்னு கூப்பிட்டு வச்சு விருந்து போட்டிருக்காங்க, போய்ப் பாருங்க.சூப்பரா இதுவரைக்கும் எங்க குடும்பப் படங்கள்ளாம் பாத்தீங்களா? ஜாலியா வந்துட்டுப் போனதுக்கு 'டாங்க்ஸ்-ங்கண்ணா'?

இனிமே சமைக்கிறப்போ, காய்கறி வெட்ட முன்னாடி, என்ன பாவனை காட்டுறோம்-னு பாத்துட்டு வெட்டுறீங்களா?

- முற்றும்


Saturday, February 17, 2007

நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த காய்கறிக் கலை - 2


'கல்லிலே கலை வண்ணம் கண்டார்'னு பாடினவங்க, இந்த காய்கறில வித்தை பண்றவங்கள பாத்திருந்தா மாத்திப் பாடியிருப்பாங்களோ? ஆனா, கல்லிலே கண்ட கலைவண்ணம், காலத்துக்கும் நிலைத்து இருக்கும். காய்கறி வாடிபோகுமே?

ஆனாலும், மக்களுக்கு தோணியிருக்கிற கற்பனை ஊற்று, ஆச்சரியமாத் தானிருக்கு,
எங்க வீட்டு குட்டிப் பசங்க எல்லோருக்கும் இந்தப் படங்கள்ளாம், ரொம்பப் பிடிச்சிருக்கு, அதுலேயும் அந்த மீனும், அழுகிற (cry) ஆரஞ்சும் சூப்பரோ சூப்பர்..ஆவலோட எதிர்பார்த்த உங்க பார்வைக்கு, விடுபட்ட படங்கள் இங்கே..

நீங்க மட்டும் பாக்காதீங்க, உங்க வீட்டுப் பாப்பாவுக்கும் காட்டுங்க. இது மாதிரி விசயங்கள், அவங்களோட கற்பனா சக்தியை கூட்டும்.

இன்னும் மூணு படம் மிச்சமிருக்கு, அதுல தான் அந்த மீனும் வருது. இதுவே, பக்கம் பெரிசானதுனால, அடுத்ததுல போடறேன்.


Friday, February 16, 2007

காய்கறிக் கலை - 1காய்கறி புகைப்பட போட்டி ஜோரா நடந்துட்டுருக்கு, அதுல ஒரு அனானி வாசகர், போட்டிருந்த கமெண்ட் இது.

"சர்வேசாதலைப்பை மாத்து !புகைப்பட வித்தகர் போட்டியா இல்லை வெஜிடபிள் கார்வார் போட்டியா !கார்வ் பண்ணத் தெரியாத ஒரு போட்டியாளன்.( சும்மா டமாஸூக்குத்தான் ):-))"


இது பத்தி யோசிச்சுகிட்டு இருக்கையில, நண்பர் சக்திவேலோட ஈ-மெயில் 'டங்'னு சத்தம் போட்டது.
சில புரபஷனல் கார்வர்ஸ், செம கலக்கு கலக்கியிருக்காங்க. அழகான படங்கள், நீங்களும் பாருங்க.

- இன்னும் வரும்.

Thursday, February 15, 2007

வந்துட்டேண்ணா...வந்துட்டேன்..

சில விசயங்கள் நாம செய்யணும்னு ஆசைப்படறது, ஆனா அத முயற்சிக்கையில ஆசைப்பட்ட அளவு அவ்வளவு எளிதான விசயமாகிவிடாது.


அதுமாதிரிதான், 'வலைஜாலிஞர்' சர்வேசர், பாட்டுக்குப் பாட்டு போட்டிக்குப் பெயர் கொடுக்கையில் எளிதாக இருந்தது . ஆனா, நம்ம ஷைலஜா மேடம் 'ய்'-ல முடிக்க, சர்வேசர் 'ய'கர வரிசையில ஆரம்ப்பிக்கச் சொல்லிட்டார். யகர வரிசையில, பெண்கள் பாடுறதுக்கு நிறைய பாடல் இருக்கு. ஆண்குரலில் பாட, சோகப் பாடல்தான் நினைவுக்கு வந்தது. 'யார் வீட்டு ரோஜா' பாடலாம்னா, சில peak curve அலர்ஜியாகுது. கடைசியா ரெண்டு மூணு, முயற்சி பண்ணி ஏதோ சுமாரா தேறினத அனுப்பியாச்சு.


சர்வேசர் வேற, அதுக்குள்ள 'எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்'னு அறிவிப்பு வேற விட்டுட்டார். ஓசியில ஒரு விளம்பரம் கிடைக்குதே, இன்னொரு அறிவிப்பு வரும் வரை காத்திருக்கலாமான்னு நினச்சேன்.. அடுத்து வரிசையில இருக்கிறவங்க அடிக்க வந்துரக் கூடாதே-ன்னுட்டு அனுப்பி வச்சுட்டேன்.


அவரு ப்ளாக்ல போட்டப்புறம், இங்கேயும் 'லிங்கி'ரலாம். ஏற்கனவே, நிறைய பேர் பாடியிருக்காங்க, கேட்க இங்க 'க்ளிக்' குங்க.


இந்தக் குரலிசைக்கு முன்னோடியா இருந்தது, சிறில் அலெக்ஸ்தான். அவருடைய செய்தி வாசிப்பு பதிவுதான் முதல் குரல் பதிவு. அதைக் கேட்ட பொழுதே அவருக்கு வாழ்த்துச் சொல்லி, விரிவாக பின்னூட்டமிட வேண்டுமென்று நினைத்தேன். (இந்தப் பதிவின் ஆரம்ப வரிகளை ஒரு முறை படிச்சுடுங்க.) இதன் மூலமா சொல்லிக்கிறேன். வித்தியாசமா, முயற்சிக்கிற வலைப்பதிவர்கள்ளே அலெக்ஸும் ஒருவர், 200 பதிவு தாண்டினவரு, இரண்டாயிரமும் தாண்ட வல்லவர். மேலும் பல புதுமைகளை தமிழ் வலைப்பூவுக்கு அறிமுகப் படுத்த வாழ்த்துக்கள், அலெக்ஸ்.


பாட்டுக்குப் பாட்டுக்கு பாட தாமதமானதுக்கு, அடுத்து பாட இருக்கிற பதிவர்கள் மன்னிக்க. இதுவரைக்கும், பாட தயாராகதவங்க, இப்ப ரெடியாகுங்க.. பேர் கொடுக்க சர்வேசனைப் பாருங்க..
மெல்லிசை மன்னர் உடல் நலம் குறித்துச் சொன்ன பிறகே, இந்தப் போட்டியை ஆரம்பித்து இருந்தார், மெல்லிசையார் எனது அபிமான இசை அமைப்பாளர்களில் ஒருவர், இசையில் இளையராஜா என்றால், 'ட்யூனில்' மெல்லிசையார் என்பது மறுக்க முடியாத ஒன்று. அவர் பற்றி தனிப் பதிவு எழுத எண்ணம். மெல்லிசையாரின், உடல்நலம் நன்றாக, கடவுள் அருளட்டும்.

Tuesday, February 13, 2007

போட்டி ஆரம்பிச்சாச்சு, குருமா பண்ணிடலாமா?

என்னா போட்டின்னு கேக்கறீங்களா?

தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்க வச்சு ஆரம்பிச்ச போட்டிக்கு புகைப்படங்கள்ளாம் வந்தாச்சு, சர்வேசன் கட்டம் கட்டி காட்டியிருக்காரு. ஓட்டு போட்டு, போட்டியை 'கமகம''க்க வைங்க பார்க்கலாம்.

ஒருஒரு போட்டோக்கும், சும்மா ஜாலியா கமெண்ட் போடலாமா? போட்டோ எடுத்த அண்ணன்மார்/அக்காமார், கோவிச்சுடாதீங்க.. :))

போட்டோ - A - எங்க நிறம் வேறேன்னாலும், ஒரே கோட்டுக்குள்ள வந்துட்டோம், நீங்களும் வந்துருவீங்கதானே, தமிழர்களே..அட்லீஸ்ட் ஓட்டுபோடவாவது?

போட்டோ - B - நாளக்கி காதலர்தினமாம், நானும் கொண்டாடத்தான் வந்திருக்கேன், ஆனா, உதட்டுலே வெங்காய வாசம், ஒகே வா?

போட்டோ - C - தக்காளிப் பொண்ணு, பல்லவன் பஸ்ஸிலே, வெங்காயப் பசங்க உரசரானுங்கோ, உருளைக்கிழங்கு பொடியங்கோ எஸ்கார்ட்டாம்.

போட்டோ - D - ஒரு கோப்பைக்குள் எங்கள் குடியிருப்பு..

போட்டோ - E - காமாலை கண்ணுக்கு மஞ்சள், இந்தக் காமிராவின் கண்ணுக்குமா? மஞ்சளின் மங்கலம், இந்தப் போட்டோலேயும் தங்கட்டும்.

போட்டோ - F - வெங்காயம் உரிச்சா கண்ணுக்கு அலர்ஜி, இங்க கண்ணுக்கு குளிர்ச்சி?

போட்டோ - G - வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டு..அது எல்லாத்துக்கும்தான்!

போட்டோ - H - நாமிருவர் (தக்காளி,வெங்காயம்), நமக்கு ஒருவர்(உருளை)

போட்டோ - I - கூட்டமாய் ஒரு கும்மாளம்.

போட்டோ - J - அரசியல்வாதியின் கூழைக் கும்பிடு, ஓட்டு போட்டுருங்க!

போட்டோ - K - சர்வேசன் போட்டியில எங்காளுங்க கலந்துக்குறாங்களாம், அதான் குடும்பத்தோட பார்க்க வந்துருக்கோம்!

போட்டோ - L - ஒடுக்கப்பட்ட தக்காளி, ஆர்ப்பரிக்கும் வெங்காயம்!

போட்டோ - M - ஆகாயத் தாமரை அல்ல..வெங்காயத் தாமரை, அல்லித் தக்காளி உடன்

போட்டோ - N - உ.வெ தாத்தா..அதாங்க உருளைக்கிழங்கு, வெங்காய தாத்தா

போட்டோ - O - கொடுவா மீசை கிழங்கு பாரு..ஓட்டுப் போடு தூள்!

போட்டோ - P - தக தக தக தக்காளி வேட்டை!

படங்களோட பாக்கணுமா? இங்க 'க்ளிக்' பண்ணுங்க!

வலைப்பூ வித்தகன் 'சாகரன்' கல்யாண்

'சாகரன்' கல்யாண்...தான் யாரென்றே அறியாதவாறு, தேன்கூட்டின் பின்பலமாய் நின்றவர், 'சட்' டென வந்த காலனால், எல்லோரும் துயருற அறியப்பட்டவர். வருத்தமாய்த்தானிருக்கிறது, 29 - வயது என்ன காலனைச் சந்திக்கும் வயதா?நேற்று மதி அவர்களின் பதிவு மூலமாய், அவர் மறைவு பற்றிய செய்தியுடன், அவர் எழுத்துக்களின் முன்னோட்டமும் கிடைக்க, தொடர்ந்து எழுதிய வலை நண்பர்களின் மூலமாக அவரின் பல்வேறு முயற்சிகள் தெரிய வந்தன.

இத்தனை சிறிய வயதில், எத்தனை ஆற்றல்? அவரின் தமிழ் ஆர்வமும், பிற நண்பர்கள் வலைப்பூ துவக்க உதவி கோரியபோது, போட்டியாளனாய்ப் பார்க்காது, சகஜமாய் உதவியது, தொலைபேசி வழியாக உதவிய போதும், அதற்காக கட்டணமெல்லாம் வசூலிக்காமல், இலவசமாக தமிழுக்கு பணியாற்றியது, என ஒவ்வொரு முகமாய், அவரின் பல்வேறு தமிழ் முகங்கள் புலப்பட்டது.

தேன்கூட்டினை வெறும் வலைதிரட்டியாய் மட்டும் பார்க்கப்படாமல், அதையும் தாண்டி, வலைஞர்களை இணைக்கும் ஒரு கருவியாய் ஆக்கியது, தேன்கூடு சிறுகதைப்போட்டி, சுடர் என வகை வகையாய் வலைப்பதிவர்களின் பசிக்குத் தீனி போட்டுக்கொண்டிருந்த அந்தத் தமிழார்வன், செய்துகொண்டிருந்த புதுமைகளுக்கு காலன் இட்ட புள்ளி, தமிழ் வலையுலகிற்கு பேரிழப்பு.

பரபரப்பாய் விளம்பரம் தேடும் உலகில், அரிய செயல் பல செய்தும் அடக்கமாய் இருந்த அந்தச் சாதனையாளன் மறைவு, நம்முள் ஏற்படுத்துகின்ற தாக்கங்கள், ஆக்கமாய் அவரது இன்னபிற கனவுகளை நனவாக்குவதில் இணையவேண்டுமாய் வேண்டுகிறேன். அதுவே, அந்த ஆன்மாவுக்கு கடன் பட்ட நெஞ்சங்களின் காணிக்கையாய் மாறும்.

இழப்பின் துயரை வார்த்தைகள் ஈடுகட்ட முடியாது, ஆயினும் சற்றே ஆறுதலாவது தரும், அவரை இழந்து தவிக்கின்ற அவர்தம் குடும்பத்தினர்க்கும், அவர்தம் செல்லச் சிறுமகளுக்கும், தேன்கூட்டின் நண்பர்களுக்கும் ஆண்டவன் தாங்கும் திடத்தையும், ஆறுதலையும் அளிப்பானாக!

இன்று மாலை இந்திய நேரப்படி ஆறு மணிக்கு, கூட்டு வழிபாட்டிற்கு நேரம் குறித்து, கருத்துக் கேட்டிருக்கின்றார் நண்பர் முத்துக்குமரன், தொடர்ந்து வெளியாகும் அறிவிப்பினை பின்பற்றி, சாகரனின் ஆன்மா சாந்தியுற பிரார்த்திப்போமாக!


Sunday, February 11, 2007

பச்சைக்கிளி முத்துச்சரம்


'வேட்டையாடு விளையாடு' - வெற்றிக்குப்பிறகு, கெளதமின் இயக்கத்தில் வெளிவர இருக்கின்ற படம் 'பச்சைக்கிளி முத்துச்சரம்'. வழக்கம் போல, ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசை. அந்த ஆர்வத்தில், இணையத்தில் தேடி, அதன் பாடல்களை கேட்டேன்..

மொத்தம் ஐந்து பாடல்கள், ஒரு பாடல் இருமுறை வருகிறது. இரண்டு பாட்டு மிக அருமை. அதிலும் 'பாம்பே ஜெயஸ்ரீயின்' 'உனக்குள் நானே' பாடல் சூப்பரோ சூப்பர். அந்தக் குரலும், ட்யூனும், அவ்வப்போது 'வசீகரா'வை நினைவு படுத்தினாலும், குரலின் வசீகரத்திற்கு மன்னித்து விடலாம், இதே பாடலை 'மதுஸ்ரீ'-யும் பாடியிருக்கிறார், ஆயினும் வசீகரத்தின் வசீகரம் இல்லை.

இன்னொரு இனிமையான பாடல்: 'கருகரு விழிகளால் ஒரு கண்மை எனைக் கடத்துதே' எனத் தொடங்கும் கார்த்திக், கிரிஷ், நரேஷ் பாடிய பாடல். துடிப்பாய் இருக்கிறது. 'தாமரைஇலை நீர் நீதானா..' என்ற வரிகளில், இசையோடு வாய்ஸ் ப்ளெண்ட் ஆகிறமாதிரி பண்ணியிருப்பது அழகாய் இருக்கிறது.

அடுத்து சுமாராய்க் கவர்வது 'உன் சிரிப்பினில்' எனத் தொடங்கும் பாடல்..கெளதமிராவும், ராபியும் பாடியிருக்கிறார்கள், இதற்கு முன்னர் ஏதும் பாடியிருக்கிறாரா தெரியவில்லை. ட்ரெய்லரில் இந்தப்பாடலைத்தான் ஓட விட்டிருக்கிறார்கள். மென்மை தெரிகிற ஆண்குரலிசை, 'சரத்குமாருக்கு' ஒத்துப் போகுமா?

'காதல் கொஞ்சம்' பாடல் அவ்வளவு எனக்குப் பிடிக்கவில்லை.

கெளதம் - ஹாரிஸ் கூட்டணியில் பாடல்கள், இதுவரை நன்றாகவே வந்திருக்கிறது, இதுவும் அப்படியே.

ரஹ்மானின் வாரிசாக வந்தாலும், தனக்கென ஒரு பாணியை கொண்டுவந்துவிட்டார் ஹாரிஸ் என்றே சொல்லவேண்டும். தவிரவும், பின்னனி இசையிலும், ஒரு தனித்துவம் தெரிகிறது.


கெளதம் ஒரு தமிழ்ப் பிரியர், தன் கதாபாத்திரத்திற்கு தமிழ்ப் பெயரே வைப்பார், பாடல்களிலும் அந்தக் கவனம் தெரிகிறது..

சரத் ஒரு 'லைப்' எதிர்பார்த்து இருக்கிறார், 'ஹாட்' ட்ரிக் அடித்த கெளதம் அதைத் தக்கவைத்து, சரத்துக்கு உதவுவாரா? பார்க்கலாம்..

பாட்டு கேக்கணுமா:..இங்கே 'க்ளிக்'குங்க

Saturday, February 10, 2007

எங்காவது ஓர் புள்ளியில் என்றாவது இணைவோமா, என் தமிழா?


"எங்காவது ஓர் புள்ளியில்

என்றாவது இணைவோமா, என் தமிழா?

இணைவோம் என்றால்

அப்புள்ளி எப்புள்ளி?"

இன்றைய இணையத் தமிழ் வலை நடப்புகளைப் பார்க்கும்போது, இப்படித்தான் கேட்கத் தோன்றுகிறது. சென்ற சில நாட்கள், ஓரே போர்முகமாகவே கழிந்தது குறித்து நிறைய தமிழ்வலை ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்தும் பதிவிட்டிருந்தனர்.

போர்முகம் மட்டுமல்ல, சில சபைக்கு அழகில்லாத, பின்னூட்டங்களை சிலர் இடுவது, ஆண் பெண் வித்தியாசம் பாராமல், இத்தகு செயல்களை மின்னஞ்சலிலும் அனுப்புவது - இவை குறித்தும் எனக்கு வருத்தம்தான்.

இயல்பாகவே, நாம் அவ்வளவு எளிதாக நம்மை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டோம், அப்படி இருக்கையில், இது போன்ற செயல்கள், புதிதாக எழுத வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களையும் தூரப் போகச் செய்யும். முக்கியமாக, இணையத் தமிழ் உலகில் பெண்கள் பங்களிப்பும், அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும் நிலையில், இது மாதிரியான செயல்கள், நம் தமிழ்கூறும் நல்லுலகிற்கு நச்சாகும்.

ஏனிந்த இழிசெயல்கள், இதைச் செய்வதும் ஒரு தமிழன் தான்! நம்மைப் பிரித்தாள, ஏகப்பட்ட வழிகள் இருக்கின்றன. அதைத்தான், ஒவ்வொரு அரசியல்கட்சிகளும், அரசியல்வாதிகளும் சாமர்த்தியமாகவோ, இல்லை சாமர்த்தியக் குறைவாகவோ செய்து கொண்டிருக்கின்றார்களே, நாமும் அதற்கு தூபவிட வேண்டுமா? என்று கேட்கத் தோன்றுகிறது.

ஆதிக்கவெறியும், அடக்குமுறையும் நடக்கின்ற இடங்களில், தட்டிக் கேட்கலாம், தப்பில்லை. ஆனால், சும்மா பொழுது போகாமல், கிள்ளிவிட்டு 'ஹிட்' பார்ப்பது கண்டிப்பாய்த் தவறுதான்.

நல்ல விசயங்களை எழுதுவோம், நமக்குள் நட்புப்பாலம் பூக்க வகை செய்வோம், முதலில். எதை எழுதவேண்டும், எதை எழுதக் கூடாது என்பது, அவரவர் சுதந்திரம். ஆனால், எழுதப்படுகின்ற எழுத்து நன்மை பயக்காவிட்டாலும், இன்னலுறுத்தாது இருக்க வேண்டும்.

இந்தப் பதிவினை எழுதத் தூண்டியது, நண்பர்கள் கொழுவி, சிபி, மா.சிவகுமாரின் பதிவுகள்.

ஒரே நேர்கோட்டுச் சிந்தனைக்கு வா தமிழா என்றழைக்க முடியாது, 'நல்லெழுத்து' என்ற சிந்தனையிலாவது இணைவோம் வா தமிழா, என்றழைக்கிறேன்..

Monday, February 05, 2007

இட்லி வடை வராததால் தகராறு??!!

சமீபமா இப்பத்தான் வலைப்பதிவர் சந்திப்பு நடந்து முடிந்தது. இந்த முறை, இட்லிவடையார் அதில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது.

அவர் வராததுனால, அங்க சண்டை வந்ததோ, இல்லை 'போட்டோவை' முன்கூட்டியே வெளிவிட்டுவிட்டார் என்று சண்டை தவிர்க்கப்பட்டதோ என்பது பற்றி அல்ல இந்தப் பதிவு,...

இது ஒரு கல்யாண கலாட்டாங்க, கீழேயுள்ள நியூஸைப் படிங்க, செய்தியைப் பெரிதாகப் படிக்க, அதன் மேல் சொடுக்கவும்.


Sunday, February 04, 2007

சூப்பர் பவ்ல் - யாரு செயிப்பாக? - குரங்கு ஜோசியம்


'சூப்பர் பவ்ல்' பத்தி இன்னைக்கு வாசன் எழுதியிருக்கிற பதிவு படிச்சேன். நமக்கு 'வோர்ல்ட் கப் கிரிக்கெட்' மாதிரி, அமெரிக்க மக்களை கட்டிப் போடுகிற விளையாட்டு.Saturday, February 03, 2007

தீபாவளிக்கு அமெரிக்க முத்திரை வேணுமா?


சின்ன வயசு குட்டிப் பசங்கள்ள இருந்து, பெரியவங்க வரைக்கும் ஒரு குதூகலம் கொடுக்கிற பண்டிகை தீபாவளிப் பண்டிகை. வெடி கொளுத்துங்க, இல்ல கொளுத்தாம இருங்க.. எப்படியாயினும், தீபாவளிங்கிறது இன்னைவரைக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான பண்டிகைதான்.


இந்தப் பண்டிகையைச் சிறப்பித்து, அமெரிக்கத் தபால்தலை வெளியிட இந்திய நண்பர்கள் சிலர் முயற்சிக்கிறார்கள், அதற்காக 'ஈ - கையெழுத்து' வேட்டை நடத்துறாங்க. நீங்களும் கூட ஆதரவளிக்கலாம், கீழேயுள்ள URL-ஐ உபயோகிக்கவும்.

Thursday, February 01, 2007

மலைச்சிங்கம் வென்ற மாதரசி?


"காட்டு வழி போற பொண்ணே கவலைப்படாத,
காட்டுப் புலி வழிமறிக்கும் கலங்கி நிக்காத,
மம்பட்டியான் பேரு சொன்னா புலி ஒதுங்கும் பாரு"-ன்னு இளையராசா பாடினது மாதிரி, அமெரிக்காவுலயும் ஒரு மம்பட்டியான் இருந்திருந்தா, ஜிம்-நீல் ஹாம் குடும்பத்தாருக்கு வசதியாய் இருந்திருக்கும்.

ஜிம் (70) - நீல் ஹாம் (65) தம்பதியர் 60 வயதைக் கடந்தவர்கள். அமெரிக்கர்கள்தாம் எந்த வயதிலும் துடிப்போடு உடல்நலம் பேணுவாங்களே, அது மாதிரிதான் இந்தத் தம்பதியரும், மலை ஏற சென்ற வாரம், கலிஃபோர்னியாவில் உள்ள ரெட்வுட் பார்க்குக்குச் சென்றிருக்கின்றனர். இந்த மலைப்பகுதியில், 'பூமா' வகையைச் சார்ந்த மலைச்சிங்கங்கள் உண்டென்பது, இங்கு மலையேற வருபவர்களுக்குத் தெரியும்.பொதுவாகவே, இவ்வகை மலைச்சிங்கங்கள், துரத்தி வேட்டையாடுவதில் ஆர்வமுள்ளவையாம், மனிதனையும் வேட்டையாட வல்லவை என்றாலும், பெரும்பாலும் மனிதனைக் கண்டால் ஓடிவிடுமாம். ஆனால், இவர்கள் துரதிருஷ்டம், இவர்கள் போன வேளையில், இவர்களிருவரையும் கண்ட அது, ஜிம்-மைப் பிடித்துக் கொண்டது. அவரது தலையைக் கவ்வி இருக்கிறது. முறத்தால், புலி விரட்டிய பண்டைய தமிழ்ப்பெண் போல, நீல் ஹாம்தான், அருகிலிருந்த மரக்கிளைகளை ஒடித்து, அதனோடு சண்டையிட்டு, தன் கணவனை மீட்டிருக்கிறார். சாதாரண விசயமில்லை அது!


இருந்தபோதும், ஜிம் இன்னும் அபாய கட்டத்தை தாண்டவில்லை என்றே அவருக்குச் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்தமாதம், இவர்களுக்கு 50 - வது திருமணநாளைக் கொண்டாட இருக்கிறார்கள், நீலின் துணிச்சலான செயல், வீண்போகாமல் சீக்கிரமே உடல் தேற இறைவன் அருளட்டும்.

Sunday, January 28, 2007

புது பிளாக்கருக்கு மாறீட்டேங்க!

ரொம்ப நாளா ஆசை..புது பிளாக்கருக்கு மாறணும்னு. ஆனா, மாறினவங்க எல்லாம், அங்க பிரச்னை, இங்க பிரச்னைன்னு சொல்லவே, பயமா இருந்துச்சு. சரி, கொஞ்ச நாளாகட்டும்னு விட்டுட்டேன்.

அப்புறம் பாத்தா, நம்ம பாலாஜி, அவரோட பதிவுல 'புதிய பிளாக்கருக்கு மாறலாம் வாங்க!!! ன்னு அழைப்பு விடுத்திருந்ததைப் படிச்சேன். சூப்பரா சொல்லியிருந்தாரு, தேங்க்ஸ்ங்கண்ணா! புதிய பொலிவில், அவரது ப்ளாக்கும் இருக்கிறதைப் பாத்துட்டு, உடனே செயல்ல இறங்கினேன். அதன் விளைவுதான் புதுப் பொலிவில் 'மின்மினி'
http://vettipaiyal.blogspot.com/2007/01/blog-post_1921.html

டெம்ப்ளேட்-ஐ மாற்றிய பிற்பாடு, ஏற்கனவே பின்னூட்டம் இட்டவங்க பேரெல்லாம், பூச்சிபூச்சியாய்த் தெரிய, 'அடடான்னு' வாயைப் பிளக்கிறப்ப, வந்தாரு நம்ம 'ஜெகத்', சரியான கைக்கண்ணாடியாய். அவரு காட்டிய வழியைப் பின்பற்றி, பூச்சியை அடிச்சனுப்பியாச்சு.
http://kaiman-alavu.blogspot.com/2007/01/blog-post_23.html

அதுக்கப்புறம், 'தமிழ்மண்த்தின்' பதிவு அட்டையை சரிபடுத்த வேண்டியிருந்தது. அதுக்கும் அவங்க ஒரு குறிப்பேடு, எளிதாய்க் கொடுத்திருந்தாங்க. அத முடிச்சேன்.
http://blog.thamizmanam.com/archives/51

அப்புறம், தேன்கூட்டின் 'கமெண்ட்'-க்காக வேண்டியவற்றைச் சரிபடுத்தினேன். அவங்களும் குறிப்பு கொடுத்திருக்காங்க.
http://www.thenkoodu.com/wiki/doku.php?id=betablogger_pinger_code


அப்புறம், ஏற்கனவே, எழுதியிருந்த பதிவுகளுக்கெல்லாம், 'Label'-இட்டு, அதையும் முகப்பில கொண்டு வந்தாச்சு.

ஆக, அப்படி, இப்படி எல்லாத்தையும் முடிக்க கிட்டதட்ட, இரண்டு மணிநேரம் ஆனது, எல்லாத்தையும் முடிக்க. எப்படி இருக்குன்னு சொல்லுங்க!


இதற்கு காரணமாக இருந்த, பாலாஜி,ஜெகத்,தமிழ்மணம்,தேன்கூட்டிற்கு நன்றி!..


நான் மாறிட்டேன்...அப்ப நீங்க!!!!!!?

Thursday, January 25, 2007

கடவுளுடன் ஒரு சந்திப்பு?

வழக்கமா வெள்ளிக்கிழமை-ன்னாலேயே நிறைய 'பார்வர்டு' இ-மெயில் வரும். வெள்ளிக்கிழமைன்னாலே, நம்ம மக்கள் 'குஜால்' ஆகிடுவாங்க. சனி,ஞாயிறு விடுமுறை வருதுன்னுட்டு. அதுவும், இந்த முறை குடியரசுதினம் வேற 'வெள்ளிக்கிழமையில வந்ததுனால, கூடுதலா ஒரு நாள் லீவு. நிறைய பார்வர்டு இ-மெயில் வந்தது, அதுல இந்த மெயில் என்னைக் கவர்ந்தது,

நீங்களும் பார்க்க, இங்க 'க்ளிக்' பண்ணுங்க..

வலையன்பர்களுக்கு 'மின்மினியின்' குடியரசுதின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்! வாழ்க பாரதம்!

Wednesday, January 24, 2007

2006 ன் சிறந்தத் தமிழ் வலைதிரட்டி எது?

கடந்து போன இரண்டாயிரத்து ஆறாம் வருடம், வலையுலகிற்கு ஒரு சிறப்பான வருடமாயிருந்திருக்கும். நிறைய புதுப்புது வலைஞர்கள் உருவானார்கள். ஒரு புதிய உலகம் பிறந்தது போலிருந்தது.

கூகிளில் தமிழ் என்று தேட, தமிழ்மணம் பார்வைக்கு வந்து விழ, உள்ளே எட்டிப் பார்த்தால், 'கலகல' - என தமிழின் மணம். ஒரே சந்தோஷம் தாங்க. அப்போதைய தமிழ்மண டெம்ப்ளேட் நல்லாயிருந்த மாதிரி ஞாபகம். அப்புறம், எழுதியிருந்த மக்களின் ப்ளாக் மூலமாக, தேன்கூடு அறிமுகமானது.

இந்த இரு வலைதிரட்டிகளின் செயல்பாடுகளும், மிகவும் பாராட்டுக்குரியது. பணி நிமித்தமாய், நாடு விட்டு நாடு தாண்டி, நம் மொழி பேசுவோர் இருப்பாரா என்று தேட விடாமல், virtual-ஆய் ஒரு நண்பர் குழாமை அடிச்சிக்கவும், புடிச்சிக்கவும் தேடிக் கொடுக்கின்ற இந்தத் தளங்கள் பாராட்டுக்குரியவை. இலவசமாக எழுதப் படுகின்ற ப்ளாக்கிற்கு, மேடை அமைத்து, விளம்பரமும் தேடிக் கொடுக்கின்ற இவர்களது தமிழ்ப்பணிக்கு வாழ்த்துக்கள்!

துவக்கத்தில், இந்த இரண்டு வலைதிரட்டிகளில் தமிழ்மணம் என்னைப் பெரிதும் கவர்ந்தது. எழுதவேண்டும் என்ற ஆர்வத்தை அதிகப்படுத்துவதாய், வந்து கொண்டிருந்த பதிவுகளும், சூடாகப் போய்க் கொண்டிருந்த தேர்தல் விவகாரங்களும் ஒரு காரணமாயிருக்கலாம்.

அப்போது பார்க்கையில், தேன்கூடு ஒரு சிறு கூடு போலத்தான் தோன்றியது. தவிரவும் தமிழ்மணத்தில் பதிப்பிக்கப் படுபவைதான் அங்கும் இருக்கும் என்பதால், விசேஷமான கவர்தல் இல்லாமலிருந்தது. ஆனால், திடிரென்று ஒரு வேகம் எடுத்தாற்போல, நிறைய செயல்பாடுகள் தோன்றியது.

அவர்களது தேன்கூடு-தமிழோவியம், இணையப் போட்டி வலைஞரிடையே ஒரு எதிர்பார்ப்பைத் தோற்றுவித்து , மின்மினி போன்ற நிறைய வலைப்பூக்களுக்கு தீனி கொடுத்தது என்றால் மிகையில்லை. ஒவ்வொரு மாதப் போட்டியும் ஒருஒரு எதிர்பார்ப்பையும், கதாசிரியர்களையும், விமர்சகர்களையும் உருவாக்கிக் கொடுத்தது. அது ஒரு 'ஹைலைட்'-ஆன விசயம். ஒரு புதிய நட்புறவை, இந்தப் போட்டி உருவாக்கியது என்பதும், இதன் சிறப்பம்சம்.

டெம்ளேட்டையும் கவர்ச்சிகரமாய் ஆக்கியதோடு, வலைஞர்களின் பதிவுகளில் பதியப் படுகின்ற படங்கள், முகப்பில் தெரியச் செய்து அலங்கரித்தது. பெட்டகம், பிடித்தவர்களின் பதிவுகளை கொண்டு 'என் தேன்கூடு', திரட்டிஜி என குட்டிகுட்டி 'Tools'- பயனர்களின் உபயோகித்ததற்கு அளித்தது, என 'டெக்னிகலாக' - மேம்பட ஆரம்பித்தது.

சமீபத்தில், எத்தனை 'க்ளிக்' உங்கள் பதிவுக்கு கிடைத்தது, எத்தனை மறுமொழிகள் கிடைத்தன என்பனவற்றை எல்லாம் பதிவுக்குப் பக்கத்திலேயே தெரிய வைத்தது என சின்னச்சின்ன பரிசு எனலாம்.

தமிழ்மணம், இது போன்ற டெக்னிகலான விசயங்களில், அதிக முன்னிறுத்தலைத் தராவிடினும், 'பூங்கா' , விவாதக்களம் போன்ற இன்னொரு உலகினைப் படைப்பிக்க முயற்சி எடுத்தது. தமிழ்மண நிர்வாக மாற்றமும், 'சாதீயக் குற்றச் சாட்டுகளும்' இதன் கவனங்களை சற்று தாமதிக்கச் செய்துவிட்டனவோ, தெரியவில்லை. இருப்பினும், இன்னமும் இதுதான் அதிக வாசகர்களைக் கொண்டிருக்கின்றது.

சர்வேசன், சென்ற வருடத்திய சிறந்த பதிவர்களுக்குச் சர்வே வைத்தார், ஆனால் நம் பதிவுகளை மக்களைச் சென்றடைய வைத்த திரட்டிகளை ஏன் மறந்தார் என்று தெரியவில்லை, அதனால என்ன, நமக்கெல்லாம் ஏணியா இருக்கிற இந்தத் திரட்டிகளுக்கு, நாம ஒரு சர்வே வச்சிரலாம்? :)

என்னைப் பொறுத்தவரையில், தேன்கூட்டில் 'டெக்னிகலாகச் சிறந்தாகவும், புதிதுபுதிதாய் செய்யத் துடிக்கின்ற ஆர்வத்தையும் பார்க்க முடிகின்றது, அது தமிழ்மணத்தில் மிஸ்ஸிங்.

இது போன்ற கருத்துக்களை, விமர்சன நோக்கோடு எடுத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் இதனைப் பதிகிறேன், எதிர்வினை இருக்காது என்ற நம்பிக்கையில்.

சரி, நீங்களும் உங்க கருத்தச் சொல்லுங்க..


Friday, January 19, 2007

வலைதிரட்டிகளும் சாதீயமும்

'சாதி இரண்டொழிய வேறில்லை' - என்று மூத்த புலவர் ஒளவையாரும், 'சாதிகள் இல்லையடி பாப்பா' - என்று பின் வந்த பாரதியாரும் பாடிய போதும், கற்காலம் தொட்டு இக்காலம் வரை, இந்தச் சாதிப் பித்து மட்டும் மனுசனை விட்டுப் போகவே மாட்டேங்குது. அது போவதற்கான சாத்தியக் கூறுகள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவே இல்லை.

பத்தாம் வகுப்பு வரை ஒரளவுக்கு இந்தச் சாதிகள் அறிந்தும் அறியாமல் இருப்பமையால், சக மாணவர்களோடு தோழமை உணர்வோடு இருக்கிறது. அதன் பிறகு மேல்படிப்பு, இட ஒதுக்கீடு என விரிசல் காண ஆரம்பித்து, அதற்கு மேல் மெல்ல நிலை கொள்ள ஆரம்பித்து கல்யாணம், காட்சி, பிள்ளை குட்டி என்று தொடர ஆரம்பித்து விடுகிறது என்றே சொல்ல வேண்டும்.

சமத்துவ புரமும், சமபந்தி போஜனங்களும், கலப்புத் திருமணங்களும் இதை எல்லாம் போக்கிவிடும் என்பதெல்லாம் உண்மையாகி விடவில்லை.

பாரதியின் பாட்டும், ஒளவையின் செய்யுளும், உயிர்ப்பற்று போய்விடக் கூடாது என்பதற்காகவோ என்னவோ, இந்தச் சமூகமும் அதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கின்றது.

வலைப்பூக்களும், சமூகத்தின் ஒரு பிரதிபலிப்புதானே? இங்கும் சாதீயத்தின் ஆதிக்கம் குறைந்து போய்விடவில்லை. சென்ற வருடத்தின் பின் பாதியிலிருந்து என்ன காரணத்துக்காகவோ தெரியவில்லை, சாதீயப் பதிவுகள் அதிகமாகி விட்டன.

இது குறித்து, பல பதிவுகள் வேதனைப் பட்டு வந்துவிட்டன. இன்று கூட அற்புதன் எழுதியிருக்கிறார். ஆனாலும் இது மாதிரியான சாதீயப் பதிவுகள் நின்று போய்விடவில்லை. எப்படி நிற்கும், சிலருக்கு இதுவே உயிர் மூச்சாய் இருக்கும் பட்சத்தில்? இம்மாதிரி எழுதி, ஒருவருக்கொருவர் இரத்தக் கொதிப்பை ஏத்திக் கொள்வதைத் தவிர, என்ன பயன் தந்திருக்கும், இம்மாதிரியான பதிவுகள்.

இப்படி எழுதப்படுகின்ற வலைப்பூக்கள், திரட்டிகளால் திரட்டப்பட்டு எல்லோர் முன்னும் மேடையேற்றப் படுகின்றபோதுதான், அதன் தாக்கம் அதிகமாகிறது.

தேன்கூடும் திரட்டுகிறது, தமிழ்மணமும் திரட்டுகிறது, ஆனால், தமிழ்மணத்தின் மீதுதான் குற்றச்சாட்டு அதிகமாயிருக்கிறது. எனது சமீபத்திய இரு பதிவுகளில் இது குறித்து வலைநண்பர்கள் சாடியிருந்தனர்.

'வலைஞர்கள் எழுதுவதற்கு திரட்டிகள் என்ன செய்யமுடியும்?' என்ற கேள்வியை பதிலாய்த் தருகின்ற தமிழ்மணம், 'ஏன் தேன்கூட்டின் மீது இம்மாதிரியான குற்றச்சாட்டுகள் எழவில்லை?' என்ற கோணத்தில் யோசிக்கலாமே?

தேன்கூட்டினை விட, தமிழ்மணம் அதிகம் வாசகர்களால் படிக்கப் படுகிறது என்பது மட்டுமே இதற்குக் காரணமாயிருக்க முடியாது.

தமிழ்மணத்தில், பின்னூட்டங்களின் எண்ணிக்கை, முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் பதிப்பிக்கப் படுவது கூட ஒரு காரணமாயிருக்கலாம்.

சாதீயம் பற்றி எழுதப் படுகின்ற இடுகைகளுக்கு கிடைக்கின்ற பின்னூட்டம், கண்ணைப் பறிக்கின்ற விதத்தில் அதிக எண்ணிக்கையோடு முன்னேறுகையில், ஆதரவாளர்கள் அதிகக் களிப்போடு கைதட்டவும், இம்மாதிரி பதிவுகளுக்கு பின்னூட்டம் இடக்கூடாது என்ற எண்ணத்தோடு இருப்பவர்களுக்கு, அவர்களின் கெக்கலிப்பு BP-யைக் கிளறி விட, அவர்களும் வேறு வழியில்லாமல், சங்கைக் கையிலெடுத்து ஊத ஆரம்பித்து விடுகிறார்கள்.

தமிழ்மணத்தில் பின்னூட்டங்களை, தேன்கூடு போல, scroll-ல் சிறியதாகக் காட்டலாம்.

தமிழ்மணத்தில் 'இடுகையை தடை செய்ய' வசதியிருக்கிறது. இது எந்த அளவில் உபயோகப் படுத்தப் படுகிறது என்பது தெரியவில்லை. இதன் உபயோகம் விரிவாக விளக்கப்படுமானால், இதை உபயோகித்துக் கூட, இம்மாதிரியான பதிவுகளைத் தவிர்க்கலாம். இம்மாதிரி கிடைக்கும் எதிர்ப்புகளை, எல்லோரும் அறியத்தரலாம்.

இது போன்ற விசயங்கள் ஒரு புறமிருக்க, தெரிந்தே சில விசயங்கள் தமிழ்மணம் அனுமதிக்கின்றதோ என எண்ணும் விதமாய், இம்மாத விவாதக் களத்திற்கு 'தமிழக அரசியலில் சாதீயம் - தேவைதானா? என்று தலைப்பிட்டு துவக்கியிருக்கிறார்கள். அரசியலும் சாதீயமும் என்றோ பிரிக்க இயலாத ஒன்றாக ஆகிவிட்ட வேளையில், இந்த விவாதக்களம் என்ன புதுச் சிந்தனையைத் தோற்றுவிக்கும்? ஒருவேளை, விவாதக்களம் பிரபல்யமாக உதவலாம்.

எனக்குத் தோணியதை உங்களோடு பகிர்ந்திருக்கிறேன். இது எல்லாம் ஒரு ஆரோக்கியமான வலையுலக அனுபவம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதியது. 'சேவல் கூவியே விடியாத பொழுதுகள், காக்கை கூவியா' விடியப் போகிறது? இருந்தாலும், 'ஊதுகிற சங்கை ஊதி வைப்போம், கேக்குகிற காது மட்டும் கேக்கட்டும்' என்ற எண்ணம்தான்.

உங்கள் எண்ணத்தையும் பகிருங்கள், ஆரோக்கியமான வலையுலகம் படைக்க!

Wednesday, January 17, 2007

அயோத்தியாமண்டபமும்,தமிழ்மண மண்டபமும்

தலைப்பைப் பார்த்தவுடனேயே புரியுமே..எதப் பத்தி பேச வாரேன்னு? எல்லாம் நம்ம சுஜாதாவோட கதையை வச்சு, 'சூடா' போண்டா, பஜ்ஜி போட்டு கதைச்சிகிட்டு இருக்கிறத பத்திதான்..

வலையுலகில் உங்க பேர் சீக்கிரம் பாப்புலர் ஆகணுமா? 'நான் பிராமணன்'னோ, இல்லா 'பாப்பான்னா உதைப்பேன்'னோ ஒரு தலைப்பு வச்சு ஒரு பதிவு போடுங்க. ஹிட்-டு பிச்சிகிட்டு போகும். அப்படி ஒரு 'ஹாட்' சப்ஜக்ட் அது.

சும்மாவே மென்னுகிட்டு இருக்கிறவங்களுக்கு, 'அவாள்' (அதாங்க அவல்)..கிடைச்சா மாதிரி சுஜாதாவோட கதை கிடைச்சிருக்கு சும்மா விட்டுடுவாங்களா என்ன?

என்னதான் இருக்கு அந்த கதையிலன்னு, ஆவலைத் தூண்டி படிக்க வச்ச வலை நண்பர்களுக்கு நன்றி. படிச்சதுக்கு அப்புறம் நம்ம கருத்தச் சொல்லலேன்னா எப்படி?

இது மாதிரி நிகழ்வுகளின் தாக்கத்தில் நடப்பது போன்ற நிறைய கதைகளை ஏற்கனவே சுஜாதா எழுதியிருக்கிறார். அத்தோடு இதுவும் போயிருக்கும், வலைஞர்களின் ஆதரவால், மிகைப்படுத்தப்பட்ட விளம்பரம் கிடைத்திருக்கிறது இக்கதைக்கு. என்னைப் பொறுத்தவரையில், இது ஒரு சாதாரணச் சிறுகதை, தேவையற்ற விளம்பரத்திற்கு ஆளாகியிருக்கிறது.

"இதன் நாயகி அடாவடியாகவும், கோபக்காரியாகவும் சித்தரிக்கப் பட்டு இருப்பதாகச் சொல்கிறார்கள். அவள் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவள் என்பதால், எல்லா பிற்படுத்தப் பட்டவர்களும் அப்படியே என வாசகர்கள் எண்ணிவிடுவார்கள்" - என்பது இக்கதையின் மீதான குற்றச் சாட்டு.

இந்தக் கதையை படித்தபிறகு சத்தியமாய் அப்படித் தோன்றவில்லை. சகஜமான துடுக்கான பெண்ணாகத் தெரிகிறாரே தவிர, குற்றச்சாட்டில் கூறுவது போலான தோற்றம் கண்டிப்பாக இல்லவே இல்லை.

அது அடாவடியாக, கோபமாக பேசுவதும் கூட, கட்டினவனின்
குடும்பத்தாரின் ஆசிர்வாதம் வாங்கத்தான் என்பது, புரிகிற மாதிரிதான் எழுதியிருக்கிறார். அந்த கோபம் கூட பாசிடிவாகத்தான், அந்தப் பெண்மேல் தெரிகிற மாதிரி எழுதியிருக்கிறார். இறுதியில் அந்தப் பெண், அமெரிக்கா ட்ரிப்-பைத் தள்ளி வைத்து, அடிபட்ட பெரியவருக்கு ஆதரவாக அருகிலேயே இருகிறார். இந்தச் சூழலில், எப்படி பாலபாரதிக்கு அதுமாதிரியான பார்வை பட்டது என்பது புரியவில்லை.

இன்றைக்கு திரைக்கு வருகின்ற பெரும்பாலான படங்களின் நாயகிகள், சுட்டிப் பெண்ணாகத்தான் காட்டப் படுகிறார்கள். சில படங்களில், வில்லியாகக் கூட காட்டப்படுகிறார்கள். மூன்று மணிநேரப் படங்களில், தெரிந்துவிடாத சாதீய உணர்வா இதில் வெளிப்பட்டு விடுகிறது? மிகைப் படுத்தப்பட்ட கற்பனையாகவே படுகிறது, இக்கதை குறித்த குற்றச்சாட்டு.

சுஜாதாவின் பெரும்பாலான கதைகளின் முடிவில், வாசகன் எதிர்பாராத 'ட்விஸ்ட்' இருக்கும், இந்தக் கதையிலும் அது மாதிரி 'அயோத்தியா மண்டப அடிஉதை பெட்ரோல் குண்டு வீச்சு' சம்பவத்தை நினைவுறுத்தியிருக்கிறார்.

'பெரியார் சிலையை' யாரோ உடைத்தற்கு, சென்னையில் ஒரு அயோத்தியா மண்டபம் அடிக்கப் படுமானால், அது தப்பில்லையா? அதையேதான், அந்தப் பெரியவரின் குரலில், ‘‘எதுக்கு என்னை அடிச்சா? எதுக்கு கடையை எரிச்சா? நான் யாருக்கும் துரோகம் பண்ணலையே’’ ன்னு கேட்டிருக்கிறார். மிக யதார்த்தமான கேள்வியது. உணர்வுப்பூர்வமாக பார்க்காமல், அறிவுப் பூர்வமாக பார்த்தால் புரியும். அயோத்தியா மண்டபச் சம்பவம் படித்த எல்லோர் மனதிலும், கண்டிப்பாக எழுந்திருக்கும் அந்தக் கேள்வி.

இதில் எங்கு பிழை என்பது புரியவில்லை. இந்தக் கதையை எழுதியது 'சுஜாதா' என்ற பிராமணர், வெளியிட்டது 'குமுதம்' என்ற திமுக - தி.க பிடிக்காத பத்திரிக்கை. இது மாதிரியான பார்வைகள், இந்தக் கதையை திசை திருப்பி விட்டதோ? எது எப்படியோ, வழக்கமான சுஜாதவின் சிறந்த கதைகளுக்குக் கூட கிடைக்காத விளம்பரம், மிகச் சுமாரான இந்தக் கதைக்கு கிடைத்திருக்கிறது.

'சிறுமை கண்டு பொங்குவாய் வாவா'-ன்னு பாடினதுக்கு ஏற்ப, எங்கு மனிதமும், மனித நேயமும் சிறுமைப்படுத்தப்பட்டாலும், அதற்கு எதிர் குரல் கொடுக்கலாம், அது பார்ப்பனீயத்திலிருந்து வந்தாலும் சரி, அல்லது பண முதலைகளிடமிருந்து வந்தாலும் சரி. அதை விடுத்து, இது போன்ற உப்புச் சப்பற்ற விசயங்களைப் பெரிது படுத்துவது, திரைப்படங்களிலன் தமிழ் தலைப்புக்கு வரிவிலக்கு' என்பது மாதிரி, ஒரு விளம்பரமாகவே பயன்படுமே அன்றி வேறு எந்தப் பயனுமிராது.

Sunday, January 07, 2007

சதாமின் தூக்கு - சிறுவன் பலி?

சதாம் தூக்கிலிடப்பட்டது குறித்து ஆங்காங்கே சில கருத்துப் பரிமாறல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நமது 'சர்வேசரும்' இது குறித்து சர்வே பதிவு செய்து, வெளியிட்ட முடிவில், பெரும்பாலோர் துக்கப்பட்டிருக்கிறார்கள்.

நமது மக்கள் எப்போதுமே உயிர்பலியை ஆதரிப்பதில்லை. என்கவுண்டரில் சுடப்படுகின்ற ரவுடிகளுக்கே கூட பச்சதாபப் படுகிறவர்கள், நிதானமாய் ஆராயாமல், அவசரமாய் நிறைவேற்றப்பட்ட சதாமின் தூக்கினை எப்படி ஆதரிப்பார்கள்?

Image and video hosting by TinyPic

இந்தத் துக்கம் ஒரு புறமிருக்க, இன்னொரு துயரச் செய்தியை கேளுங்கள். சதாம் தூக்கிலிடப்பட்ட செய்தியை, தொலைக்காட்சியில் கண்ட ஸ்பானிஷ் 10 வயது சிறுவன், அது போல 'மிமிக்' செய்ய முயன்று, மரணப்பட்டுப் போயிருக்கிறான். ஆழ்ந்த அனுதாபங்கள். CNN-ல், இந்தச் செய்தித் துளியைப் பாருங்கள்.

தொலைக்காட்சியில் இதனைப் பார்த்தவன், தனது மாமாவிடம் இது குறித்து வினவ, 'சதாம் கெட்டவன், அதனாலேயே அந்தத் தண்டனை' என சாதாரணமாகச் சொல்லியிருக்கிறார், அந்தக் காட்சி அவனைப் பாதித்த அவலம் புரியாமல். வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தவனுக்கு, தூக்கின் காட்சி நினைவில் வந்திருக்க வேண்டும், தொலைக்காட்சியில் கண்டதை, விளையாட்டாய்த் தனக்குத் தானே செய்ய முயற்சித்திருக்கவேண்டும், வினையாகி உயிர் பிரிந்திருக்கிறது.

சதாமின் தூக்கினைவிட, இந்தச் செய்தி மிக வருத்தமளித்தது. மீடியாக்கள் இது போன்ற செய்திகளை, காட்சித்தொகுப்பாய்க் திரும்பத் திரும்ப காட்டுவது, எத்தகைய பாதிப்புகளைக் கொடுத்திருக்கிறது பாருங்கள்? மீடியாக்கள், இது போன்ற செய்திகளை எச்சரிக்கை உணர்வோடு அணுக வேண்டும்.

பெற்றோரும் இது போன்று உளவியல் ரீதியாக பாதிக்கப் படும் என எண்ணுகின்ற செய்திகளை குழந்தைகள் முன்னர் பார்ப்பதனைத் தவிர்க்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்விற்காக, என்னைப் பாதித்த இந்தச் செய்தியினை உங்களோடு பகிர்கிறேன்.

Monday, January 01, 2007

புத்தாண்டு வாழ்த்துக்கள்
போன வருடம்
ஓடியே போச்சு!
புதிய வருடம்
வேகமாய் வருது!வருகின்ற 2007-ம் வருடம்
மகிழ்ச்சி தரும்
அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும்
மலர்க்கிரீடமாய் மலர்ந்திட

மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

மழலையர் மனம்போல எப்போதும் மகிழ்வோடு இருக்க இனிதான
வாழ்த்துக்களுடன்....

- உங்கள் அன்பு மறவா...
நெல்லை சிவா