Wednesday, November 08, 2006

இலவசம்..சில கனவுகள்..சில நினைவுகள்..

நம்ம ஊரில மார்கட்டுக்குப் போயி காய்கறி வாங்கியிருக்கீங்களா?

கொஞ்சம் சுமாரா காய்கறி வச்சு இருந்தாக் கூட, வாங்குற வாடிக்கையாளருக்கு, கருவேப்பிலை/கொத்தமல்லி கொசுறு கொடுக்கக் கூடியக் காய்கறி கடைக்கார்கிட்டதான் கூட்டம் கூடும். 'இவன் ரொம்ப நல்லவம்பா'ன்னு மனசுல நினைச்சுகிட்டே வாங்குவாங்க.

கொசுறா கிடைக்கிற கருவேப்பிலையே, அவ்வளவு சந்தோசப்படுத்தும்னா, இன்ன பிற இலவசங்கள் தரக்கூடிய சந்தோசத்தப்பத்திச் சொல்ல வேணுமா, என்ன?

Image and video hosting by TinyPic
இலவசம்ங்கற வார்த்தையைக் கேட்டாலேயே போதும், கண்ணும், காதும்
கூர்மையாகி விடாதா, என்ன? இலவசம்கிறது, சின்னப் பசங்கள்ள இருந்து, வயசான பெரிய மனுசங்க வரை எல்லா தரப்பு மக்களையும் லேசில வசியம் பண்ணிடும்.

சின்ன வயசுல லாலா கடைக்குப்(சுவீட் ஸ்டாலுக்குப்) போய், காசு கொடுத்து திண்பண்டம் பொட்டலம் வாங்கிட்டு, கொஞ்சம் கையில வேற இனாம் கேட்போம். இப்பவும், திருநெல்வேலி இருட்டுக்கடையில போயி அல்வா சாப்பிட்டீங்கன்னா, கொஞ்சம் காரம் இனாமாத் தருவாங்க. அந்தக் கொசுற வாங்கி, சகோதரருடன் பகிர்ந்துகிட்டதும் ஒரு சுகம்தான்.

கண்ணாடி வாங்கினா, சீப்பு இலவசம். சூடன் வாங்கினா, பொம்மை டப்பா இலவசம்னு சின்ன வயசுல, இந்த இலவசங்களை கண்கொத்திப் பாம்பா பார்த்ததுண்டு. பணம்ங்கிறது, பற்றாக் குறையாய் இருக்கின்ற காலத்தில், ஒன்னு வாங்கினா, ஒன்னு இலவசம்ங்கிற இந்த சில இலவசங்கள் வரப்பிரசாதம்தான்.

கடந்த எட்டு/ஒன்பது வருடங்களுக்கு முன் உலகக்கோப்பைக் கிரிக்கட் போட்டி நடந்தபோது, எனது நண்பர் ஒருவருக்கு இலவசமாய், பிரபல பிஸ்கட் கம்பெனி ஒன்றின் போட்டி மூலமாய், இலண்டன் சென்று கிரிக்கட் பார்க்க டிக்கட் இலவசமாய்க் கிடைச்சது. 'மச்சம்டா உனக்கு'ன்னு, நான் சொல்ல, 'அட பைத்தியக்காரா.. போட்டியெல்லாம் நம்பிகிட்டு இருக்கியா நீ. நா என்ன சின்னப்புள்ளையா பிஸ்கட்டு போட்டின்னு கூப்பன் கலெக்ட் பண்ண..எனக்கு டீலரு தெரியும். அவர் மூலமா வந்தது தாண்டா.'ன்னு சொன்னார். அது எனது சின்ன வயசு ஞாபகங்களைக் கிளறி விட்டது.

சோப்பு வாங்கி, மூன்று வண்ண அட்டைகள் சேத்தா, 'சிங்கப்பூர்' பயணம் இலவசம்னு விளம்பரம் பாத்து, உருப்படாத சோப்புகள் வாங்கி, அதன் அட்டையைச் சேகரித்து கனவிலேயே அப்பா, அம்மாவோட சிங்கப்பூர் போயிட்டு வந்தது ஒரு சுகம்.

அப்போதெல்லாம் ஒரு எதிர்பார்ப்பு. சொன்னா செய்வாங்கன்னுட்டு. சின்ன வயசுல, வெளுத்ததெல்லாம் பால்'னு நம்பிய காலம். வளர வளரத்தான புத்திக்குத் தெரியுது, எவ்வளவு தகிடுதத்தம் பண்ணுறாங்கன்னு.

பொருட்களை விற்க, வியாபாரிகளுக்கு இலவசம் ஒரு யுக்தி. ஆனா அத எத்தனை பேர் ஒழுங்காச் செய்யுறாங்கன்றது கேள்விக்குறி.


அமெரிக்காவில இந்த இலவசங்கள் எல்லாம், ஓரளவுக்கு முறைப்படி நடப்பதாகத்தான் தோணுகிறது. X-box-ங்கிற விளையாட்டுச் சாதனம், மார்கட்டுக்கு வருவதாக விளம்பரப் படுத்த பட்டுக் கொண்டு இருக்கையில், கோகோ கோலா கம்பெனியும் கலந்து கொண்டு, அவர்கள் பானத்தின் மூடியில், X-box -க்கான அடையாளம் இருந்தால், அவர்களுக்கு இலவசமாய் X-box சாதனம் கோகோ-கோலா சார்பாக அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்கள்.

சரியாய் அந்தப் போட்டி முடிவதற்கு முந்தைய தினம், விளையாட்டாய் என் நண்பன் இரண்டு பாட்டில்கள் வாங்க, இரண்டில் ஒன்றில் x-பாக்ஸ்க்கான அடையாளம் இருக்க, அந்த விளையாட்டுச் சாதனம் பொது விற்பனை மார்கட்டுக்கு வருமுன்பே, அவரது வீட்டிற்கு வந்துவிட்டது.

இன்னொரு நண்பரின் பெற்றோர், அமெரிக்காவிலிருந்து சிங்கப்பூர் விமானம் மூலமாக இந்தியா செல்ல இருந்தார்கள். 'எகனாமி' வகுப்பு டிக்கட் எடுத்திருந்தார்கள். விழாக் காலமாகையால், 'ப்ளைட் ஓவர் புக்-ஆகியிருந்தது. சிங்கப்பூர் விமான ஊழியர் ஒருவர், நண்பரின் பெற்றோரை அணுகி, 'உங்கள் பயணத்தை, நாளை ஒத்திப் போட சம்மதிப்பீர்களென்றால், உங்களுக்கு 'முதல் வகுப்பில்' நாளை செல்வதற்கான இலவச upgrade பண்ணித்தருகிறோம்' என்றார். இதைக்கேட்ட நண்பர், உடனே அதற்குச் சம்மதிக்க, மறுநாள் அவர் பெற்றோர் முதல் வகுப்பில் பயணித்தனர்.

இந்தமாதிரியான இலவச அப்கிரேடு, இந்திய ரயில்வேயிலும் கொண்டுவர இருப்பது வரவேற்கத்தக்க முயற்சி.

இந்த மாதிரியான இலவசங்கள், கிடைப்பதும் அவ்வளவு எளிதல்லவே.

இலவசங்கள் கிடைப்பதற்கும் 'லக்கிலுக்' வேண்டும்....அட அதிர்ஷ்டப்பார்வை வேண்டும்ங்கிறேன். அதிர்ஷ்டம் இருந்தாத்தாங்க, இந்த மாதிரி இலவசங்கள் எல்லாம் கை கூடும்.

இந்தியாவிலிருந்து, ஒரு மாத கால பணிக்காக வந்த நண்பர் ஒருவர், ஏ.ஓ.எல் வழங்கிய ஒரு மாதத்திற்கான இலவச 'இண்டர்நெட்' சேவையைப் பயன்படுத்தினார். ஒரு மாதம் முடியுமுன், அந்தச் சேவையை துண்டிக்க மறந்து போய், இந்தியா சென்றுவிட, மாதாமாதம் இருபத்தியிரண்டு அமெரிக்க டாலர்கள் வீதம் மூன்று மாதத்திற்கு, அவரது கிரெடிட் கார்டில் வசூலித்துவிட்டனர். நண்பர் முழித்துக் கொண்டு, சேவையை துண்டிக்க இரண்டு மாத காலம் ஆனது. இலவச 'எலிப்பொறி', 60+ அமெரிக்க டாலர்களை விழுங்கியது.

இலவசங்களைப் பெறுவதிலும் ஒரு கவனம் வேண்டும்.

இந்த மாதிரி இலவசங்கள் எல்லாம், மழையில் முழைக்கின்ற காளான் போல..அவ்வப்போது சில சலனங்களையும், சில சந்தோசங்களையும் கொடுத்துப் போகும்.

ஆனால் பிரதிபலன்கள் எதிர்பாராமல் கொடுக்கப்படும் சில இலவசங்கள் நிலைத்து நின்று பலன் கொடுக்கும். சில சேவை நிறுவனங்கள் மூலமாக நடத்தப்படும் மருத்துவ நிலையங்கள், கல்விக்கூடங்கள் இதற்குச் சான்று.

நடந்து முடிந்த தேர்தல் கூட ஒரு இலவச மழைத்தேர்தல்தான். ம்..இலவசத் திட்டங்கள் சோம்ப்பேறியாக்காமல், உதவியாய் இருக்கும் பட்சத்தில் வரவேற்க வேண்டிய ஒன்றுதான்...


(என்ன சிவா..இந்த முறை தேன்கூடு போட்டிக்கு கதை எழுதாம, கட்டுரை எழுதியிருக்கீங்கன்னு யாரோ முணுமுணுக்கிறாப்பல இருக்கு..இருங்க..இருங்க... இந்தக் கட்டுரையை படிச்ச உங்களுக்கு ஒரு கதையை இனாமாத் தரலாம்னு இருக்கேன்.. இன்னும் இரண்டொரு நாள் பொறுங்க.. :) )

17 Comments:

said...

"இந்தமாதிரியான இலவச அப்கிரேடு, இந்திய ரயில்வேயிலும் கொண்டுவர இருப்பது வரவேற்கத்தக்க முயற்சி."

அட..அப்படியா..?

தகவலுக்கு நன்றி.

said...

---இலவசம்ங்கற வார்த்தையைக் கேட்டாலேயே போதும், கண்ணும், காதும்
கூர்மையாகி விடாதா, என்ன---

அதானே... நானும் ஓடி வந்தேன்.

இலவசமாய் ஒரு நல்ல கட்டுரை.

said...

நல்லா எழுதியிருக்கீங்க சிவ. ஏன் என் நண்பர்களுக்கு இலவசமே கிடைக்கிறதில்லன்னு தெரியல.

எனக்கு எவரெடி போட்டில ட்ரூ லைஸ் படம் பாக்க ரெண்டு டிக்கட் கெடச்சுது. நான் மறந்து போக என் அண்னன் போயிட்டு இன்னொரு டிக்கட்ட கறுப்பா வித்துட்டான்.

:)

said...

சுவையான பதிவு

said...

நல்ல கட்டுரை!

10 ரூபா சம்பாதிக்கரவன் ஆனாலும், 10 ஆயிரம் சம்பாதிக்கரவன் ஆனாலும் சும்மா கெடச்சா எதையும் விட மாட்டான்.

பவுடர் வாங்கினா சோப்பு இலவசம்னு போட்டிருக்கும். நாடார் உஷாரா இலவச சோப்ப தனியா மீட்டர் போட்டு விப்பாரு.
இலவசம்னு இருக்கர ஸ்டிக்கர் காமிச்சு அவர் கிட்ட சண்ட போட்டு வாங்கரதுக்குள்ள மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கும். இருந்தாலும், வாங்காம விட மாட்டோம்ல்ல.

//இந்தக் கட்டுரையை படிச்ச உங்களுக்கு ஒரு கதையை இனாமாத் தரலாம்னு இருக்கேன்//

சீக்கரம் தாங்க. வெயிட்டிங்க்!

said...

என்னதான் சொல்லுங்க இன்னமும் என்னை மாதிரி குடும்பத்தலைவிகளுக்கு இலவசமோகம் முற்றிலுமாய் போகல..ஹார்லிக்ஸுக்கு ஒரு எவர்சில்வர் கப் இனாம் என்றால் உடனே போர்ன்விடாக்கு டாட்டாதான்! ஆயிரம் எவர்சில்வர் கப்புகள் வீட்ல இருந்தாலும் இலவசமா கிடைப்பதை வேண்டாம்னு ஒதுக்கிடறதில்ல! நல்ல பதிவு உங்களுது
ஷைலஜா

said...

மணியன்,

எப்பங்க தனி வலைப்பதிவு ஆரம்பிக்கப் போறீங்க. சொல்லிகிட்டே இருக்கீங்க, பண்ண மாட்டேன்றீங்களே. ப்ளாக்கர் கூட இலவசம்தாங்க. :)

கருத்துக்கு நன்றி.

said...

பாஸ்டன் பாலா,

ஓடி வந்ததுக்கு நன்றி. உங்கள் கருத்துக்கள் ஊக்குவிக்கின்றன.

said...

சிறில்,

என் நண்பர்களுக்குத்தான் மச்சம், நமக்கு ஒன்னும் அவ்வளவு மச்சமில்லங்க.

நீங்களும் நம்ம நண்பர் ஆயிட்டீங்கதானுங்களே..உங்களுக்கும் நிறைய மச்சம் அடிக்கட்டும் :)

தங்களின் தகவலுக்கும்,கருத்துக்கும் நன்றி.

said...

நிர்மல்,

உங்களது முதல் வருகைன்னு நினைக்கிறேன்.

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி. அடிக்கடி வாங்க. :)

said...

/என்னதான் சொல்லுங்க இன்னமும் என்னை மாதிரி குடும்பத்தலைவிகளுக்கு இலவசமோகம் முற்றிலுமாய் போகல../

அட என்னாங்க..எல்லா இடத்துலயும் அப்படிதான்..

அது சரி, இந்தப் போட்டிக்கு இன்னும் உங்க கற்பனை ஊற்று, ஊறிக் கொண்டே இருக்குது போல. கதை,கவிதை, மரபுக்கவிதைன்னு ஓடிக்கிட்டே இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

said...

//பவுடர் வாங்கினா சோப்பு இலவசம்னு போட்டிருக்கும். நாடார் உஷாரா இலவச சோப்ப தனியா மீட்டர் போட்டு விப்பாரு.
இலவசம்னு இருக்கர ஸ்டிக்கர் காமிச்சு அவர் கிட்ட சண்ட போட்டு வாங்கரதுக்குள்ள மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கும். இருந்தாலும், வாங்காம விட மாட்டோம்ல்ல.
//

ஆமாங்க. நீங்க சொல்ற அனுபவம் எனக்கும் உண்டு. வர்ர வரைக்கும் காசு.

இலவச வேட்டி சேலையை வாங்கி, வெளியில விக்கிறதில்லையா, அது மாதிரிதான்..

said...

நல்ல பதிவு. வெற்றி பெற வாழ்த்துக்கள்....

//எனக்கு எவரெடி போட்டில ட்ரூ லைஸ் படம் பாக்க ரெண்டு டிக்கட் கெடச்சுது. நான் மறந்து போக என் அண்னன் போயிட்டு இன்னொரு டிக்கட்ட கறுப்பா வித்துட்டான்.//

அலெக்ஸ்!

சத்யம் தியேட்டருல டிக்கெட் கிடைச்சுதா?

கறுப்பா டிக்கெட் வாங்கிப் படம் பார்த்த அப்பாவி நான் தான்...

said...

எங்க ஊர்ல சொல்லுவாங்க "சும்மாக் கொடுத்தா கசக்குதா?" அப்படின்னு...

இப்பலாம் கசந்தாகூட சும்மா கிடைக்குதுன்னா வாங்கனும்னுதான் நெனைக்கிறாங்க/றோம் ;)

வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அருட்பெருங்கோ,லக்கிலுக்.

said...

குழும நண்பர்களின் கருத்துக்கள்

> இலவசமா கிடைச்சா அதன் மதிப்பே தனியில்ல :)


அது இலவசம் இல்லை. இணைப்புதான்

வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)

----
இரண்டு நாள் முன்பே படித்து விட்டேன் . இன்று தான் பின்னூட்டம் இட நேரம்
கிட்டியது. அன்றாட வாழ்க்கையில் நடக்கும் உதாரணங்களை எடுத்துக்காட்டாக அழகாக
எழுதி இருக்கிறீர்கள்...

- பரமேஸ்வரி
------

சிவா கட்டுரை நல்லா இருக்கு, பல உண்மைகளை உணர்த்தி இருக்கீங்க,
வாழ்த்துக்கள்‌

*-rajupandian raju

உண்மைதான் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை உங்களூக்கேயுரிய பாணியில்
வடித்திருக்கும் படைப்பு எங்கள் சின்ன வயசு நினைவுகளையும்
கிளறிவிட்டுப்போய்விட்டதே!..

*--விஜி

said...

அசத்தலான கட்டுரை. கோர்வையாய் வடிவமைத்திருப்பதற்கு ஒரு * போட்டாச்சு. ஓட்டும் போட்டுரலாம்.

-ஸ்ரீ