Saturday, November 18, 2006

வலைப்பூ... தலைப்பு...வாழப்பூ (3)

காட்சி - 5


(போட்டிக்காக வடிவேலு எழுதிய சோப்ராஜும், சொக்கத்தங்கமும் கதை பிரபல்யமாகி, பின்னூட்டங்களும் அதிகமாக வரத்தொடங்கிவிட்டது. மயில்சாமியும், வடிவேலும் பின்னூட்டங்களுக்கு பதிலளிப்பது குறித்து விவாதித்துக் கொண்டு இருக்கின்றனர். திருநெவேலிப் பெரியவர், ஏதோ தனக்குள்ளேயே பேசிக் கொண்டு இருக்கிறார். அப்போது கஞ்சா கருப்பு, உள்ளே நுழைகிறார்.)

க.கருப்பு: என்னா பெரிசு..என்ன உமக்குள்ளேயே பேசிக்கிட்டு இருக்க

பெரிசு: நம்ம தலயோட கதைக்கு இதுவரைக்கும் ஐம்பது அறுபது பின்னூட்டம் வந்துருச்சாம்.. படிச்ச எல்லாப் பயலுவலும் ஒரு பின்னூட்டமாவது போட்டுறானாம். தல ஒரே குஷியா இருக்கு. தல செஞ்சுரி அடிச்சா இன்னும் குஷியாகும்லா.

க.கருப்பு: அது ரொம்ப சிம்பிள் பெரிசு, சுஜுபி மேட்டரு..

பெரிசு: சிம்பிளா..? அதெப்படில ரொம்ப லேசா சொல்லுத..

க.கருப்பு: அட பெரிசு, ஒரு ஒரு பின்னூட்டத்துக்கும், ஒரு பதில் போட்டா, இன்னொரு அறுபது கிடைக்குமா? மொத்தம் நூத்தியிருபது..தல இப்பவே செஞ்சுரி அடிச்சாச்சில்ல.

பெரிசு: அட போப்பா.. இந்த பாலிடிக்ஸ மயிலு ஏற்கனவே சொல்லித்தான், இப்ப அறுபது வந்திருக்கு. நீ ஏதாவது புதுசா சொல்லுவேன்னு பாத்தா..

(அப்போது மயிலு 'ஆபத்து..ஆபத்து' என அலறுகிறார். க.கருப்பும், பெரியவரும் அருகே ஓடுகிறார்கள்.)

வடிவேலு: என்ன...என்ன ஆச்சு. இப்படி ஆபத்து ஆபத்துன்னு கத்துற..

மயில்: பாஸ்.. உங்க கதைக்குப் போட்டி கத வந்துருக்கு பாஸ்.

வடி: என்னாடா சொல்லுற.. எல்லாப் பயலுவலும்தான் போட்டிக்கு எழுதுறான். எங்கதைக்கு போட்டின்னா?

மயில்: பாஸ்.. நீங்க சோப்ராஜ வச்சு எழுதியிருக்கீங்க. இவன் 'பூலந்தேவிய' வச்சு கத எழுதியிருக்கான் பாஸ். கதயோட தீம் அதேதான் பாஸ்.

க.க: அட பாவிகளா, நம்ம கதயே 'ஜென்டில்மேன்' காப்பி. காப்பிக்கு காப்பியா? அதுனால நமக்கு என்ன அப்பு ஆபத்து?

மயில்: இருக்குடா புரியாதவனே. கத இப்பதான் வந்துருக்கு, அதுக்குள்ள பாரு நாப்பது பின்னூட்டம் வாங்கியிருக்கான்.

வடி: இது என்னடா எளவு? கத போட்டு ஒரு வாரம் ஆன நமக்கே முப்பதுதான் வந்துருக்கு. அவனுக்கு எப்படிடா நாப்பது?

மயில்: அவனுக்கு நிறய பேன்ஸ் பாஸ். எல்லாரும் நல்லாருக்கோ, நல்லா இல்லையோ , வந்து 'ஆஜர் சார்' சொல்லிட்டுப் போயிடுவாங்க. அதுல ஒரு கவுண்ட் ஏறிடும்.

க.க: ஹே..அப்ப நம்ப அண்ண பெட்டரு. அண்ணனுக்கு வந்துருக்கிற தெல்லாம், கதய பத்துன கமெண்டுதான.

பெரிசு: எல.. கவுன்ட்ட பத்தி பேசுனா, நீ குவாலிட்டி பத்தி பேசுதா? எதுகை மோனையோட எழுதுனவங்களுக்கு எல்லாம், மூணு நாளு பின்னூட்டம், எகத்தாளமா எழுதியிருக்கிற நம்ம தல கதைக்கு முப்பது இதுக்கு என்னா சொல்லுற.

க.க: பெரிசு..நீ என்ன சொல்ல வர்றே.. நம்ம தலயே வாரிவுடுறே..

மயில்: டேய்..நிறுத்துங்கடா ஒங்க சண்டையை. யோசிக்க வுடுங்கடா

வடி: ஏண்டா மயிலு.. இந்தப் பின்னூட்டத்துக்கு அவ்வளவு முக்கியம் கொடுக்கணுமா? கத நல்லாருந்தா செயிக்காதா என்ன?

மயில்: அவனவன் பொண்டாட்டி திட்டுனாக் கூட பரவாயில்லன்னு, திருடன் மாதிரி கொட்ட முழிச்சு ராத்திரி பகல் பாராம, பின்னூட்டம் வருதா, வரலையான்னு தவங்கிடக்கான். அதோட மகிம தெரியலையா உங்களுக்கு. நீங்களும்தான வந்துருக்கா, வரலையான்னு கேட்டுகிட்டு இருக்கீங்க.

வடி: அட ஆமாடா. அது ஒரு ஆர்வத்துல கேக்குறது. அதுக்கும் செயிக்குறதுக்கும் என்னடா சம்பந்தம்.

மயில்: அட முட்டாள் பாஸ். பாப்புலாரிட்டிக்கு பின்னூட்டம் வேண்டாமா? அப்பப்ப கமெண்டு வந்தாத்தான், உங்க பேரு முன்னால வரும். நிறய பேரு கமெண்டு பாக்க வருவாங்க. அப்படியே உங்க கதய படிப்பாங்க. வோட்டுப் போட சான்ஸ் இருக்கு

வடி: இம்புட்டு விசயம் இருக்கா? அப்ப கமெண்ட் நிறய வர ஏதாவது வழி பன்ண வேண்டியதுதான்.

மயில்: ஆமாம். அதுதான் நாம அடுத்து பண்ண வேண்டிய வேலை. முத பிளான், பெரிசுக்கும், கருப்புக்கும் ஒரு ப்ளாக் ஐடி கிரியேட் பண்ணிக் கொடுக்கவேண்டியது.

க.க: ஐய்யா.. எனக்கு ப்ளாக்.. பெரிசு ஜாலிதான்.

மயில்: மாங்கானுங்களா.. அது உங்களுக்கு எழுதுறதுக்கு இல்லை. அத வச்சுகிட்டு, பாஸ் கதைக்கு நீங்க பின்னூட்டம் போடனும்.

க.க & பெரிசு: ஆஹா...ஐடியா புரிஞ்சிடுச்சு.. ஆனா எனக்கு என்னா எழுதனும்னு தெரியாதே அப்பு.

மயில்: என்ன வேணா எழுதுங்க. நீ ஒரு கேள்வி கேளு. அதுக்கு பெருசு ஒரு பதில் சொல்லட்டும். அவரு கேப்பாரு. நீ பதில் சொல்லு.

க.கருப்பு: ஆமா பெரிசு. சரவணபவன்ல வெஜுடேரியன் சாப்பாடு சாப்பிட போலாமான்னு கேளு. நா இல்ல முனியாண்டி விலாஸ் போய் பிரியாணி சாப்பிடலாம்பேன்..இஷ்டத்துக்கு எழுதலாம்ல

பெரிசு: அப்படின்னா.. அது என்னமோ சாட்டிங்குங்கிறானுகளே.. அது மாதிரில்லா ஆயிடும். கதைக்கும், இந்த பின்னூட்டத்துக்கும் என்ன சம்பந்தம்னு எவனாவது கேப்பாம்லா?

மயில்: அதப் பத்தி நீ கவலப்படாத.. பாஸும், நானும் பாத்துக்குறோம். அப்புறம் உங்க சைட்ல, வலைப்பதிவர் மட்டும்தான் கமெண்ட் போடலாம்ங்கிறத எடுத்துட்டு, எல்லாரையும் அலோ பண்ணனும். அதுனால, அனானிஸ் எல்லாம் வந்து ஓட்டு போட முடியும்.

வடி: அனானிஸா? அப்படின்னா யாருடா?

க.க: அதுதாண்ணே... பேரு கீரு சொல்லாம வந்து திட்டிட்டு போவாய்ங்களே அவங்கதான் அது.

வடி: (அதிர்ச்சியாக) ஏய்ய்.... எவனாவது கன்னா பின்னான்னு திட்டிடப் போறான்யா..

மயில்: பாஸ். அனானிஸுக்கு எல்லாம் ஒரு சங்கம் இருக்கு. நல்ல பதிவுலாம் வந்தா அதுல இருந்து வந்து சப்போர்ட் பண்ணுவாங்களாம். நீங்க ஒன்னும் வம்பு தும்பா எழுதலையே..அப்புறம் ஏம் பாஸ் பயப்படுறீங்க. அப்படியே எந்த அனானியாவது திட்டுனா, நீங்க கமெண்ட்-அ போடாம தடுத்துறலாம். லகான் உங்க கையிலதான் பாஸ்.

வடி: பரவாயில்லடா.. உனக்கு நிறைய விசயம் தெரிஞ்சிருக்கே.

மயில்: அப்புறம் உங்களுக்கு ஒரு வேலை பாஸ். போட்டிக்கு வந்திருக்கிற மத்த கதையை நீங்களும் படிக்கணும்.

வடி: ஏய்..அது என்ன எழுபது, எம்பதுன்னு அனுமார் வால் கணக்கா நீண்டுகிட்டுல்லா போறது. எல்லாத்தையும் படிக்கணும்னா, முடியுமாப்பா?

மயில்: உங்க கதய எல்லாரும் படிக்கிறாங்கள்ள.. அது மாதிரி நீங்களும் எல்லார் கதையையும் படிக்கணும். படிச்சு கமெண்ட் போடணும். அப்பதான் போட்டி ஆரோக்யமா இருக்கும். அத உட்டுட்டு, எழுதுறதுதான் என் வேலைன்னுட்டு ஓரமா போயி கையக் கட்டிட்டு நிக்கக் கூடாது.

பெரிசு: ஆமாந்தல.. தமிழ வளக்கனும்னு சொல்றீயள, இந்த மாதிரி புதுசா எழுதுறவுகள ஊக்குவிக்கிற மாதிரி நாலு வார்த்த சொல்றது கூட நல்லதுதான.

வடி: சரிங்கப்பா...நல்ல விசயந்தான், செய்யறேன். இன்னொரு ஐடியா கூட தோணுதுடா. நம்ம கலைஞரு 'தமிழ்ப் படத்துக்கு தமிழ்ல டைட்டில் வச்சா, வரி கிடையாதுன்னு சொன்னா மாதிரி, வலையில நல்ல தமிழ்ல டைட்டில் வச்சா, நல்ல தமிழ்ல எழுதுனா' இரண்டு பின்னூட்டம் இலவசம்னு போடலாம்.

க.க: சூப்பர் ஐடியான்னே... இத ஒரு தனிப் பதிவாவே போட்ருலாம்னே.

மயில்: சூப்பர் பாஸ். எல்லாத்தையும் இப்பவே அமுல் படுத்த ஆரம்பிக்கலாம்.

வடி: ஆமாண்டா...எல்லாம் அவங்கவங்களுக்கு ஒதுக்குன வேலையப் பாக்க ஆரம்பிங்க..சோப்ராஜா, பூலந்தேவியா பாத்துரலாம்.


காட்சி: 6


(பின்னூட்டத்திற்காக வகுத்த திட்டங்கள், வடிவேலு கூட்டணிக்கு ஆரம்பத்தில் பெரும் வெற்றியைக் கொடுக்கிறது. போட்டியின் இறுதிநாள் நெருங்க நெருங்க, பின்னூட்டங்கள் குறைய ஆரம்பிக்கிறது. )

மயில்: என்ன பாஸ், சோகமா இருக்கீங்க.

வடி: இல்லடா, போட்டி இறுதிக்கான நாள் நெருங்குதே. இப்ப எல்லாம், பின்னூட்டம் குறைய ஆரம்பிக்குதே. வோட்டு வருமா?

க.கருப்பு: அண்ணே..ஒரு ஐடியாண்ணே..

வடி: என்னடா..சொல்லு...

க.கருப்பு: நாமளும் 'ஏவிஎம்' ஸ்டைல்ல, நம்ம கதையப் படிச்சு 'திருட்டுப் பய' ஒருத்தன் திருந்திட்டான்னு போடலாம்.

வடி: போடா...போடா.. எந்த திருட்டுப் பய, கதயப் படிச்சு திருந்தப் போறான். உருப்படியா ஏதாவது யோசனை சொல்லு.

மயில்: பாஸ் ..அவன் சொல்றது நல்ல ஐடியா தான் பாஸ்.

வடி: என்னப்பா சொல்றே.. அவன் என்ன சொன்னாலும், மட்டந்தட்டுவே. .என்னா புது ஐடியாவக் கண்டுட்ட?

மயில்: பாஸ், அவன் சொன்னத இன்னொரு பதிவா போட்டுறலாம், நிசமா நடந்ததோ?ன்னு படிக்கிறவன யோசிக்க வச்சுட்டு, கடைசியில 'அவன் சோப்ராஜும் சொக்கத்தங்கமும்' கத படிச்சு திருந்துறா மாதிரி கனவு கண்டதன் விளைவு-ன்னு முடிச்சிரலாம். காமெடிக்கு காமெடி. உங்க பதிவுக்கு விளம்பரம்..எப்படின்னே ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.

பெரிசு: எனக்கும் ஒரு ஐடியா தோணுது.

வடி: ஆளாளுக்கு ஐடியா தோணுது பாரேன். ஒரு ப்ளாக் எழுத ஆரம்பிச்ச உடனேயே நம்ம பயலுவ புத்திசாலியாயிடுறான் பாரேன். சொல்லு பெரிசு

பெரிசு: உங்க கதக்கு வந்திருக்கிற பின்னுட்டங்கள்ள சிறந்த பின்னூட்டம் எதுங்கறத, வாசகர்களாலேயே தேர்தெடுக்க வச்சு, அப்படி சிறப்பா வர்ர பின்னூட்டத்துக்கும், தேர்ந்த்தெடுத்த நபருக்கும் பரிசுன்னு போட்டி வைக்கலாம்.

வடி: யோசனை நல்லாதான் இருக்கு. பரிசா என்னா கொடுக்கலாம்.

க.க: அட எண்ணன்னே, சிட்டியில உங்க படம் எத்தன படம் ஓடுது.நீங்க நடிச்சு ஏதாவது காத்து வாங்குற படத்தோட புரடியூசர்கிட்ட பேசி மூணு நாலு ஓசி டிக்கட் வாங்கி கொடுத்துட வேண்டியதுதான. ஒரே கல்லுல மூணு மாங்கா ஆயிடும்.

பெரிசு: ஹே..ஹே.. என்னச் சொல்லிட்டு இவன் ராங் சைடுல போயிட்டான் பாருல. தல படம் உனக்கு ஓடாத படமால? (வடிவேலு முறைக்கிறார்)

க.கருப்பு: அய்யோ அண்ணே... யோசனை வந்த வேகத்துல அப்படிச் சொல்லிட்டண்ணே.. முறைக்காதீங்கண்ணே

வடி: ம்..ம்.. ஏதோ பொழச்சுப் போ.. யோசனை நல்லாதான் இருக்கு. ரெண்டையும் செயல்படுத்திடலாம்.

க.கருப்பு : மயிலண்ணே...போடுங்கப்பு பதிவ..

(மயில் யோசனையைச் செயல்படுத்த, ப்ளாக் எழுதப் போகிறார்)

(இன்னக்கி இங்க நிறுத்திக்குவோம். போட்டிக்கு இறுதி நாள் நெருங்குதே. நாளக்கி முடிச்சிடலாம்)

8 Comments:

said...

இது என்ன வலைப்படமா? அங்கங்கே நடப்பதை படம்பிடித்திருப்பது போலிருக்கிறது. அடுத்த காட்சிக்கு ஆவலாய் இருக்கிறேன்.

said...

நன்றி மணியன். அடுத்த காட்சி இன்று வரும்.

said...

குழும நண்பர் மஞ்சூர் ராசா சொல்லியது:

அசத்தலான கூட்டம்...

said...

'தமிழ்ப் படத்துக்கு தமிழ்ல டைட்டில் வச்சா, வரி கிடையாதுன்னு சொன்னா மாதிரி, வலையில நல்ல தமிழ்ல டைட்டில் வச்சா, நல்ல தமிழ்ல எழுதுனா' இரண்டு பின்னூட்டம் இலவசம்னு போடலாம்

நல்ல ஐடியாவா இருக்கே :))

said...

அமர்களமாக வந்திருக்கு நெல்லை சிவா.
வெற்றி கிட்ட வாழ்த்துக்கள்.

said...

/சரவணபவன்ல வெஜுடேரியன் சாப்பாடு சாப்பிட போலாமான்னு கேளு. நா இல்ல முனியாண்டி விலாஸ் போய் பிரியாணி சாப்பிடலாம்பேன்./*

/நம்ம கலைஞரு 'தமிழ்ப் படத்துக்கு தமிழ்ல டைட்டில் வச்சா, வரி கிடையாதுன்னு சொன்னா மாதிரி, வலையில நல்ல தமிழ்ல டைட்டில் வச்சா, நல்ல தமிழ்ல எழுதுனா' இரண்டு பின்னூட்டம் இலவசம்னு /

செம லொள்ளுபா உனக்கு.

said...

திறமையாகவும் நீளமாகவும் எழுதி இருக்கீங்க...வெற்றிக்கு வாழ்த்து....(ஏற்க்கனவே உனக்கு ஓட் போட்டேன் பா )

said...

நன்றி அனானி,

நன்றி பிஎன்ஐ. வாழ்த்துக்கு நன்றி.

நன்றி செந்தழல் ரவி. ரொம்ப நீளமா போயிடுச்சு. சுருக்கி எழுத நினைத்தேன், கடைசியில் இயல்பு ஓட்டத்திற்கே விட்டுவிட்டேன்.

ஓட்டு போட்டதுக்கு நன்றி..ஆமா வோட்டு போட்டத சொல்லலாமா? நானுந்தான்.... :)