Wednesday, November 22, 2006

தேன்கூடு போட்டி - இலவச சர்வே

நாளுக்கு நாள் புதிய வலைப்பூக்கள் அறிமுகம் ஆகிக் கொண்டேயிருக்கிறது. எத்தனை வலைப்பூக்கள் தொடர்ந்து பதியப் படுகிறது என்பது கேள்விக்குறியாக இருந்த போதும், சில புதியவர்கள் முதல் பதிவிலேயே தனிக்கவனம் பெற்று, 'அட' சொல்ல வைக்கிறார்கள். அந்த வகையில், சமீபமா நா 'அட' சொன்ன புதிய தளம்,

'சர்வே'சன் - ஆக்கியவன் அல்ல அளப்பவன்

சர்வே எப்படியடா பண்ணியிருக்கிறார் என்று பார்த்தால், 'வருகைப் பதிவர்' எண்ணிக்கை போல, இதுவும் ஒரு இலவச உதவிதான்.

'இலவசம்' ங்கிற தலைப்பினை ஒட்டி நடக்கின்ற தேன்கூடு போட்டி குறித்தும், ஒரு சர்வே எடுத்தால் என்ன என்று தோன்றியது. இலவசம் தான, ஒன்னு பண்ணிப் பாத்தா போச்சுன்னுட்டு, உங்கள் முன்னே சமர்பித்தாச்சு. நீங்களும் உங்க கருத்தச் சொல்லுங்க.


பி.கு: சர்வேசருக்கு நன்றி. :)Monday, November 20, 2006

வலைப்பூ...தலைப்பூ...வாழப்பூ (4)

தொடர்ச்சி...கீழே
காட்சி : 7
(போட்டிக் கதைக்கு அதிகப் பின்னூட்டம் வர செயல்படுத்தப் பட்ட அனைத்துத் திட்டங்களும் பெரும் வெற்றியைப் பெற்றுத்தந்தது. போட்டிக்கான இறுதி நாள் முடிந்து, வாசகர்கள் ஓட்டளிக்கும் நாளும் வந்தது.)

வடி: அசத்திபுட்டோம்ல. யப்பா..ஒரு மாசமா விடாம முயற்சி பண்ணி இருக்கோம். எப்படியும் ஜெயிச்சுருவோம்ல. குறஞ்ச பட்சம் ஒரு ரெண்டாவது, மூணாவது இடத்தயாவது புடிச்சிர மாட்டோம்? என்ன நான் சொல்லுறது..

க.கருப்பு: அட என்னண்ணே இப்படி கேட்டு புட்டீக. நீங்க செயிக்காம யாரு செயிப்பாக. சோப்ராஜுக்குத்தான்ண்ணே ஓட்டு. பூலந்தேவிக்கு வேட்டுதாண்ணே.

பெரிசு: தலைவனுக்கு இல்லாத ஓட்டா? வேற எவனுக்கு உளுதுன்னு பாத்துருவேம்ல.

க.கருப்பு: உட்டா சோடா பாட்டில் வீசிடுவே போலிருக்க. பெரிசு, உனக்கும் ஓட்டு இருக்கு. மறக்காம போட்டுடு. வயசுகாலத்துல மறந்துரப் போறே.

வடி: எல்லாப் பயலுவலும் ஒழுங்கா ஓட்டப் போட்டுரணும். ஆமா சொல்லிபுட்டேன். என்ன இந்த மயிலுப்பயல காணோம்.

(மயில்சாமி உள்ளே நுழைகிறார்)

மயிலு: வணக்கம் பாஸ்.

வடி: என்னடா..இவ்வளவு நேரம்.

மயில்: இல்ல பாஸ். உங்களுக்காக மயிலாப்பூர் கபாலிசுவரர் கோயில்ல அர்ச்சனை பண்ணிட்டு வரேன். பிரசாதம் எடுத்துக்கோங்க.

வடி: அடடடா.. என்னா பாசம்..என்னா பாசம்.. நீதாண்டா என்னோட வாரிசு.

மயில்: ஹ..ஹா...தாங்க் யூ பாஸ். உங்களுக்காக, ஈமெயில்ல ஓட்டு கேன்வாஸ் பண்ணிட்டு வாரேன். இன்னிக்குத்தான ஓட்டுப் போட கடைசி நாள், யாரும் மறந்துரக் கூடாதில்லயா. அதான் பாஸ்.

வடி: ரிசல்ட் என்னக்கிடா தெரியும்? ரெண்டு நாள்ல சொல்லிடுவாங்களா?

க.கருப்பு: அதுக்கு ரெண்டு, மூணு நாள் ஆவும்னே. எழுபது எம்பது பேரு எழுதுனா அவ்வளவு நாள் ஆகும்லாண்ணே.

வடி: அதுவும் சரிதாண்டா... அப்ப நாமளும் மூணு நாளு கழிச்சு பாக்கலாம்டா. இவ்வளவு நாள் டென்சனா வேலை பாத்திருக்கீங்க. ஓட்டப் போட்டுட்டு ரெஸ்ட் எடுங்கடா.

பெரிசு: தலைவன் தலைவந்தாண்டா.. நம்ம கஷ்ட நஷ்டம் புரிஞ்சிருக்காரு. தலவரே..சம்பளத்த கட் பண்ணிட மாட்டீரே..

க.கருப்பு: பெரிசுக்கு எப்பவுமே சந்தேகப் புத்தி.. சந்தேகப் படாம போ.. வெற்றி விழால பாப்போம்..காட்சி - 8

(தேன்கூடு போட்டி முடிவுகள் வெளியாகும் நாள். நால்வர் கூட்டணி டென்சனாக இருக்கிறது. வடிவேலு நகத்தைக் கடித்துக் கொண்டிருக்கிறார். க.கருப்பும், பெரியவரும் குசுகுசுவெனப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மயில்சாமி கம்ப்யூட்டரில் 'தேன்கூடு' பக்கத்தினை அடிக்கடி ரெப்ரஷ் செய்து கொண்டிருக்கிறார்.)


வடி: ஸ்...ஸ்...யப்பா...இப்பவே கண்ணக் கட்டுதே...

பெரிசு: எலே தலைவனுக்கு மயக்கம் வருதாம்ல...போயி சோடா வாங்கிட்டு வா...

க.கருப்பு: யோவ்..பெரிசு.. அது வழக்கமா நம்ம அண்ணே சொல்றதுதானே.. உனக்கு ரிசல்ட் டென்சன்லே மண்ட குழம்பிப் போச்சா...

வடி: நிறுத்துங்கப்பா..உங்க புராணத்த.. புதுப்படம் ரிலீசாரப்பக் கூட இவ்வளவு டென்சனா இல்ல.. இந்த ரிசல்ட் வர்ரதுக்குள்ள மண்ட வெடிச்சுரும்போல இருக்கே..யப்பா.

(அந்த நேரம் மயில்சாமி....'பாஸ்....ரிசல்ட் வந்திருச்சி...' என்று அலறுகிறார். வடிவேலு,க.கருப்பு, பெரியவர் எல்லோரும் கம்யூட்டர் அருகே செல்ல ஓடுகிறார்கள்)


க.கருப்பு: மயிலு... என்னா அண்ணே முத இடத்த புடிச்சிட்டாரா?

மயில்: பாஸ்.....(இழுக்கிறார்)

வடி: என்னாடா இழுக்கிற.... அப்ப முத இடத்துல வரலயா...

மயில்: கவுத்துட்டானுங்க பாஸ்....கவுத்துட்டானுங்க...

வடி: அட என்னப்பா...அழாம சொல்லு... எனக்கு டென்சனாகுது...

க.கருப்பு: (கம்யூட்டரை எட்டிப் பார்த்து) ....அண்ணே ..உங்களுக்கு ஒன்னாவது இடந்தாண்ணே..

வடி: ஒன்னாவது இடம்னா சந்தோசப் படாம ஏண்டா அழுறான் இவன்...

க.கருப்பு: அது வந்துண்ணே...வந்துண்ணே....

வடி: என்னடா...வந்து..போயின்னு இழுத்துகிட்டு...சொல்லுடா..

க.கருப்பு: நெஞ்சப் புடிச்சுக்குங்கண்ணே....உங்களுக்கு பதினொன்னாவது இடம்ணே..

வடி: என்னாடா சொல்றீங்க...கண்ணுல விளக்கெண்ணெய விட்டுட்டு பாருங்கடா...எவ்வளவு உழைச்சிருக்கோம்..

மயில்: அவன் சொல்லுறது சரிதான் பாஸ்... நாலு ஓட்டுல நீங்க பத்தாவது இடத்த தவற விட்டுட்டீங்கண்ணே... பத்துக்குள்ள வந்திருந்தீங்கன்னா, நடுவர் குழு உங்கள முத மூணுக்குள்ள தேர்ந்தெடுத்திருக்கும்...நாலு ஓட்டு...நாலு ஓட்டு மிஸ் ஆகிடுச்சு பாஸ்..


பெரிசு:....தலைவரே....தலைவரே...ம்ம்..ம்ஹும்..ம்ஹும்..(அழுகிறார்)

க.கருப்பு: ஏம் பெருசு அழுறே...அண்ணனே வருத்தத்துல இருக்காப்பல...

பெரிசு: நா(ந்) துரோகம் பண்ணிட்டேன் தலவரே...லீவு கொடுத்து காசும் கொடுத்தியளா... சந்தோசத்தில, சரக்கு வாங்கி அடிச்சுட்டு தூங்கிட்டந்தலவரே...ஓட்டு போட மறந்துட்டன்..

க.கருப்பு: சரி பெரிசு...அதுக்குப் போயி நீ எதுக்கு அழுறே... நீ மட்டும் போட்டாலும், ரெண்டு ஓட்டுல தோத்துருப்பாரு..இதுக்குப் போயி ஏன் அழறே...

வடி: என்ன கருப்பு... சொல்லுறே... அவரு ஒருத்தரு போடலேண்ணா மூணு ஓட்டுலதான தோக்கனும்...கணக்கு தெரியாமச் சொல்லுறியா.....ஆமா...நீ ஒழுங்கா ஓட்டுப் போட்டியா...இல்ல..

க.கருப்பு: நா...நா....நா..போட்டேண்ணே....ஓட்டு போட்டேண்..

வடி: என்னடா...இழுக்கிற...ஓட்டுப் போட்டது சரி...எனக்குத்தான போட்ட...

க.கருப்பு: அண்ணே மன்னிச்சுருங்கண்னே...அங்கதாண்ணே தெரியாம தப்பு நடந்துபோச்சி... போட்டிக்கத பூலந்தேவிய நினச்சுகிட்ட இருந்தனா, ஓட்டு போடறப்ப அங்க போயி போட்டுட்டண்ணே...மன்னிச்சுருங்கண்ணே...

வடி: அடப்பாவிகளா...தண்ணி உட்டுள்ளாடா வளத்தேன்...இப்படி தெளிவா ஆப்பு வச்சிட்டீங்களடா...உங்கள...(அடிக்க எத்தனிக்கிறார்)

மயில்: அவனுங்கள அடிக்காதீங்க பாஸ்...

வடி: பின்ன இவனுங்கள கொஞ்சச் சொல்றியா..என்ன்ன வேல பண்ணியிருக்கானுக...ஏமாத்திப் புட்டான்யா...

மயில்: பாஸ்.. அவனுங்க பண்ணுனது தப்புன்னா...நா பண்ணுனதும் தப்புதான்...

வடி: என்னடா ..சொல்லுற..அதிர்ச்சி மேல அதிர்ச்சியா கொடுக்கிறீங்களடா..

மயில்: பதறாதீங்க பாஸ்.. உங்களுக்கு ஓட்டு போடணும்னுதான் தேன்கூட்டுக்குப் போனேன்.. வரிசையா எல்லார் கதயும் இருந்துதா. உங்க கதை எங்க இருக்குன்னு பாத்துகிட்டே வந்தேன். கடைசில 'Vote Now' ன்னு ஒரு பட்டன் இருந்துச்சு. யாருக்கும் ஓட்டு போடாம, 'Vote Now' ங்குற பட்டனத் தட்டுனா, ஏதாவது 'Error Message' சொல்லுறாங்களான்னு பாக்கலாம்னு டெஸ்ட் பண்ணுற ஐடியாவுல, உங்க கதைய செலக்ட் பண்ணாம 'Vote Now'ங்குற பட்டனத் தட்டிட்டேன். ஆனா, அது எந்த 'Error Message' ம் சொல்லாம, உங்க ஓட்டு சேக்கப்பட்டது, நன்றின்னு சொல்லி, என் ஓட்ட செல்லாத ஓட்டாக்கிடுச்சு பாஸ். அதுக்கு அப்புறம் என்ன ஓட்டு போட விடல...என்ன மன்னிச்சுடுங்க பாஸ்.

வடி: யூ..டூ ப்ரூட்டஸ்? உனக்கு டெஸ்ட் பண்ண என் ஓட்டு தானாடா கிடைச்சுது. எல்லாப் பயலுவலும் நம்ப வச்சு கழுத்தறுத்தீட்டிங்கள்..... ஏய்....(யோசித்தபடியே) ..இரு..இரு... நா ஓட்டுப் போடலயில 'Vote Now'ங்கிற பட்டன பாக்கலியேடா....

மயில் & க.க: என்னது 'வோட் நவ்' பட்டனப் பாக்கலியா... அப்ப எப்படித் தல ஓட்டப் போட்டீங்க...'

வடி: இது என்னடா புதுக்கதையா இருக்கு.... நம்ம கதைக்கு மேல... ஸ்டார்..ஸ்டாரா ..கைய மேலத் தூக்கி ஒன்னு.. கைய கீழக் காட்டி ஒன்னுன்னு இருக்குமே..அதுல ஆள்காட்டி விரல மேலத் தூக்கி வச்சிருக்குமே அதுலதான் க்ளிக் பண்ணி என் ஓட்டப் போட்டேன்.. அதுவும் 'உங்கள் ஓட்டு சேர்க்கப்பட்டது நன்றி' ன்னு அழகாச் சொல்லிச்சே...

க.கருப்பு: என்னண்ணே...உங்க தலையிலே நீங்களே மண்ண வாரிப் போட்டுட்டீக.. அது ஓட்டுலயே சேந்திருக்காதே..

மயில்: ஆமாம் பாஸ்...நீங்க தப்பு பண்ணீட்டீங்க.. அது தமிழ்மணத்தோட கருவிப்பட்டை. உங்க கத படிச்சவங்க, உடனடியா புடிச்சிருக்கு, இல்லைங்கறதச் சொல்றதுக்குதான் அத வச்சிருக்காங்க. நீங்க ஓட்டுப் போட வேண்டியது தேன்கூட்டில...

வடி: போங்கடா...புண்ணாக்குத் தலையங்களா....சொல்லிக் கொடுக்கிறத ஒழுங்காச் சொல்லிக் கொடுக்க மாட்டீங்களாடா. என்னயும் முட்டாளாக்கிட்டீங்களாடா..

க.கருப்பு: பரவாயில்லண்ண விடுங்க... உங்களுக்கு 'முட்டாள்களின் தலைவன்'னு பட்டம் குடுத்துரலாம்...

வடி: எனக்கு வேணும்...எனக்கு வேணும்...(நொந்து கொள்கிறார்)

மயில்: கவலப் படாதீங்க பாஸ். அடுத்த போட்டியில ஜெயிச்சிரலாம்.

க.கருப்பு: ஆமாண்ணே.. நம்மள மாதிரி உள்ளவங்களுக்குத்தான தேன்கூடு அறிவிப்புல சொல்லியிருக்காங்க.."வெற்றி, ஒரு உற்சாக உந்துதல். ஆனால் முடிவுகள் முழுமையானதல்ல"ன்னு.. மனசத் தேத்திக்கிட்டு அடுத்த வாட்டி மோதிப் பாக்கலாம்ணே..

வடி: போதும்டா சாமி...இதுக்கே இந்த பாடு...இன்னொரு போட்டியா...இத விட நா கூட்டாளிங்க அடி வாங்கிக்கறேன்.. நீங்க பாருங்கடா....நா எம் பொழப்ப பாக்குறேன்... (யம்மா...ஆங்...இப்படி நொங்கிப் புட்டாய்ங்களே..இனி இந்தப் பக்கம் வருவே...யம்மா..முனகிக் கொண்டே செல்கிறார்)
*--முற்றும்--*
(ஒரு வழியாய் முற்றும் போட்டுட்டனா? பொறுமையாப் படிச்ச உங்களுக்கு நன்றி.)


Saturday, November 18, 2006

வலைப்பூ... தலைப்பு...வாழப்பூ (3)

காட்சி - 5


(போட்டிக்காக வடிவேலு எழுதிய சோப்ராஜும், சொக்கத்தங்கமும் கதை பிரபல்யமாகி, பின்னூட்டங்களும் அதிகமாக வரத்தொடங்கிவிட்டது. மயில்சாமியும், வடிவேலும் பின்னூட்டங்களுக்கு பதிலளிப்பது குறித்து விவாதித்துக் கொண்டு இருக்கின்றனர். திருநெவேலிப் பெரியவர், ஏதோ தனக்குள்ளேயே பேசிக் கொண்டு இருக்கிறார். அப்போது கஞ்சா கருப்பு, உள்ளே நுழைகிறார்.)

க.கருப்பு: என்னா பெரிசு..என்ன உமக்குள்ளேயே பேசிக்கிட்டு இருக்க

பெரிசு: நம்ம தலயோட கதைக்கு இதுவரைக்கும் ஐம்பது அறுபது பின்னூட்டம் வந்துருச்சாம்.. படிச்ச எல்லாப் பயலுவலும் ஒரு பின்னூட்டமாவது போட்டுறானாம். தல ஒரே குஷியா இருக்கு. தல செஞ்சுரி அடிச்சா இன்னும் குஷியாகும்லா.

க.கருப்பு: அது ரொம்ப சிம்பிள் பெரிசு, சுஜுபி மேட்டரு..

பெரிசு: சிம்பிளா..? அதெப்படில ரொம்ப லேசா சொல்லுத..

க.கருப்பு: அட பெரிசு, ஒரு ஒரு பின்னூட்டத்துக்கும், ஒரு பதில் போட்டா, இன்னொரு அறுபது கிடைக்குமா? மொத்தம் நூத்தியிருபது..தல இப்பவே செஞ்சுரி அடிச்சாச்சில்ல.

பெரிசு: அட போப்பா.. இந்த பாலிடிக்ஸ மயிலு ஏற்கனவே சொல்லித்தான், இப்ப அறுபது வந்திருக்கு. நீ ஏதாவது புதுசா சொல்லுவேன்னு பாத்தா..

(அப்போது மயிலு 'ஆபத்து..ஆபத்து' என அலறுகிறார். க.கருப்பும், பெரியவரும் அருகே ஓடுகிறார்கள்.)

வடிவேலு: என்ன...என்ன ஆச்சு. இப்படி ஆபத்து ஆபத்துன்னு கத்துற..

மயில்: பாஸ்.. உங்க கதைக்குப் போட்டி கத வந்துருக்கு பாஸ்.

வடி: என்னாடா சொல்லுற.. எல்லாப் பயலுவலும்தான் போட்டிக்கு எழுதுறான். எங்கதைக்கு போட்டின்னா?

மயில்: பாஸ்.. நீங்க சோப்ராஜ வச்சு எழுதியிருக்கீங்க. இவன் 'பூலந்தேவிய' வச்சு கத எழுதியிருக்கான் பாஸ். கதயோட தீம் அதேதான் பாஸ்.

க.க: அட பாவிகளா, நம்ம கதயே 'ஜென்டில்மேன்' காப்பி. காப்பிக்கு காப்பியா? அதுனால நமக்கு என்ன அப்பு ஆபத்து?

மயில்: இருக்குடா புரியாதவனே. கத இப்பதான் வந்துருக்கு, அதுக்குள்ள பாரு நாப்பது பின்னூட்டம் வாங்கியிருக்கான்.

வடி: இது என்னடா எளவு? கத போட்டு ஒரு வாரம் ஆன நமக்கே முப்பதுதான் வந்துருக்கு. அவனுக்கு எப்படிடா நாப்பது?

மயில்: அவனுக்கு நிறய பேன்ஸ் பாஸ். எல்லாரும் நல்லாருக்கோ, நல்லா இல்லையோ , வந்து 'ஆஜர் சார்' சொல்லிட்டுப் போயிடுவாங்க. அதுல ஒரு கவுண்ட் ஏறிடும்.

க.க: ஹே..அப்ப நம்ப அண்ண பெட்டரு. அண்ணனுக்கு வந்துருக்கிற தெல்லாம், கதய பத்துன கமெண்டுதான.

பெரிசு: எல.. கவுன்ட்ட பத்தி பேசுனா, நீ குவாலிட்டி பத்தி பேசுதா? எதுகை மோனையோட எழுதுனவங்களுக்கு எல்லாம், மூணு நாளு பின்னூட்டம், எகத்தாளமா எழுதியிருக்கிற நம்ம தல கதைக்கு முப்பது இதுக்கு என்னா சொல்லுற.

க.க: பெரிசு..நீ என்ன சொல்ல வர்றே.. நம்ம தலயே வாரிவுடுறே..

மயில்: டேய்..நிறுத்துங்கடா ஒங்க சண்டையை. யோசிக்க வுடுங்கடா

வடி: ஏண்டா மயிலு.. இந்தப் பின்னூட்டத்துக்கு அவ்வளவு முக்கியம் கொடுக்கணுமா? கத நல்லாருந்தா செயிக்காதா என்ன?

மயில்: அவனவன் பொண்டாட்டி திட்டுனாக் கூட பரவாயில்லன்னு, திருடன் மாதிரி கொட்ட முழிச்சு ராத்திரி பகல் பாராம, பின்னூட்டம் வருதா, வரலையான்னு தவங்கிடக்கான். அதோட மகிம தெரியலையா உங்களுக்கு. நீங்களும்தான வந்துருக்கா, வரலையான்னு கேட்டுகிட்டு இருக்கீங்க.

வடி: அட ஆமாடா. அது ஒரு ஆர்வத்துல கேக்குறது. அதுக்கும் செயிக்குறதுக்கும் என்னடா சம்பந்தம்.

மயில்: அட முட்டாள் பாஸ். பாப்புலாரிட்டிக்கு பின்னூட்டம் வேண்டாமா? அப்பப்ப கமெண்டு வந்தாத்தான், உங்க பேரு முன்னால வரும். நிறய பேரு கமெண்டு பாக்க வருவாங்க. அப்படியே உங்க கதய படிப்பாங்க. வோட்டுப் போட சான்ஸ் இருக்கு

வடி: இம்புட்டு விசயம் இருக்கா? அப்ப கமெண்ட் நிறய வர ஏதாவது வழி பன்ண வேண்டியதுதான்.

மயில்: ஆமாம். அதுதான் நாம அடுத்து பண்ண வேண்டிய வேலை. முத பிளான், பெரிசுக்கும், கருப்புக்கும் ஒரு ப்ளாக் ஐடி கிரியேட் பண்ணிக் கொடுக்கவேண்டியது.

க.க: ஐய்யா.. எனக்கு ப்ளாக்.. பெரிசு ஜாலிதான்.

மயில்: மாங்கானுங்களா.. அது உங்களுக்கு எழுதுறதுக்கு இல்லை. அத வச்சுகிட்டு, பாஸ் கதைக்கு நீங்க பின்னூட்டம் போடனும்.

க.க & பெரிசு: ஆஹா...ஐடியா புரிஞ்சிடுச்சு.. ஆனா எனக்கு என்னா எழுதனும்னு தெரியாதே அப்பு.

மயில்: என்ன வேணா எழுதுங்க. நீ ஒரு கேள்வி கேளு. அதுக்கு பெருசு ஒரு பதில் சொல்லட்டும். அவரு கேப்பாரு. நீ பதில் சொல்லு.

க.கருப்பு: ஆமா பெரிசு. சரவணபவன்ல வெஜுடேரியன் சாப்பாடு சாப்பிட போலாமான்னு கேளு. நா இல்ல முனியாண்டி விலாஸ் போய் பிரியாணி சாப்பிடலாம்பேன்..இஷ்டத்துக்கு எழுதலாம்ல

பெரிசு: அப்படின்னா.. அது என்னமோ சாட்டிங்குங்கிறானுகளே.. அது மாதிரில்லா ஆயிடும். கதைக்கும், இந்த பின்னூட்டத்துக்கும் என்ன சம்பந்தம்னு எவனாவது கேப்பாம்லா?

மயில்: அதப் பத்தி நீ கவலப்படாத.. பாஸும், நானும் பாத்துக்குறோம். அப்புறம் உங்க சைட்ல, வலைப்பதிவர் மட்டும்தான் கமெண்ட் போடலாம்ங்கிறத எடுத்துட்டு, எல்லாரையும் அலோ பண்ணனும். அதுனால, அனானிஸ் எல்லாம் வந்து ஓட்டு போட முடியும்.

வடி: அனானிஸா? அப்படின்னா யாருடா?

க.க: அதுதாண்ணே... பேரு கீரு சொல்லாம வந்து திட்டிட்டு போவாய்ங்களே அவங்கதான் அது.

வடி: (அதிர்ச்சியாக) ஏய்ய்.... எவனாவது கன்னா பின்னான்னு திட்டிடப் போறான்யா..

மயில்: பாஸ். அனானிஸுக்கு எல்லாம் ஒரு சங்கம் இருக்கு. நல்ல பதிவுலாம் வந்தா அதுல இருந்து வந்து சப்போர்ட் பண்ணுவாங்களாம். நீங்க ஒன்னும் வம்பு தும்பா எழுதலையே..அப்புறம் ஏம் பாஸ் பயப்படுறீங்க. அப்படியே எந்த அனானியாவது திட்டுனா, நீங்க கமெண்ட்-அ போடாம தடுத்துறலாம். லகான் உங்க கையிலதான் பாஸ்.

வடி: பரவாயில்லடா.. உனக்கு நிறைய விசயம் தெரிஞ்சிருக்கே.

மயில்: அப்புறம் உங்களுக்கு ஒரு வேலை பாஸ். போட்டிக்கு வந்திருக்கிற மத்த கதையை நீங்களும் படிக்கணும்.

வடி: ஏய்..அது என்ன எழுபது, எம்பதுன்னு அனுமார் வால் கணக்கா நீண்டுகிட்டுல்லா போறது. எல்லாத்தையும் படிக்கணும்னா, முடியுமாப்பா?

மயில்: உங்க கதய எல்லாரும் படிக்கிறாங்கள்ள.. அது மாதிரி நீங்களும் எல்லார் கதையையும் படிக்கணும். படிச்சு கமெண்ட் போடணும். அப்பதான் போட்டி ஆரோக்யமா இருக்கும். அத உட்டுட்டு, எழுதுறதுதான் என் வேலைன்னுட்டு ஓரமா போயி கையக் கட்டிட்டு நிக்கக் கூடாது.

பெரிசு: ஆமாந்தல.. தமிழ வளக்கனும்னு சொல்றீயள, இந்த மாதிரி புதுசா எழுதுறவுகள ஊக்குவிக்கிற மாதிரி நாலு வார்த்த சொல்றது கூட நல்லதுதான.

வடி: சரிங்கப்பா...நல்ல விசயந்தான், செய்யறேன். இன்னொரு ஐடியா கூட தோணுதுடா. நம்ம கலைஞரு 'தமிழ்ப் படத்துக்கு தமிழ்ல டைட்டில் வச்சா, வரி கிடையாதுன்னு சொன்னா மாதிரி, வலையில நல்ல தமிழ்ல டைட்டில் வச்சா, நல்ல தமிழ்ல எழுதுனா' இரண்டு பின்னூட்டம் இலவசம்னு போடலாம்.

க.க: சூப்பர் ஐடியான்னே... இத ஒரு தனிப் பதிவாவே போட்ருலாம்னே.

மயில்: சூப்பர் பாஸ். எல்லாத்தையும் இப்பவே அமுல் படுத்த ஆரம்பிக்கலாம்.

வடி: ஆமாண்டா...எல்லாம் அவங்கவங்களுக்கு ஒதுக்குன வேலையப் பாக்க ஆரம்பிங்க..சோப்ராஜா, பூலந்தேவியா பாத்துரலாம்.


காட்சி: 6


(பின்னூட்டத்திற்காக வகுத்த திட்டங்கள், வடிவேலு கூட்டணிக்கு ஆரம்பத்தில் பெரும் வெற்றியைக் கொடுக்கிறது. போட்டியின் இறுதிநாள் நெருங்க நெருங்க, பின்னூட்டங்கள் குறைய ஆரம்பிக்கிறது. )

மயில்: என்ன பாஸ், சோகமா இருக்கீங்க.

வடி: இல்லடா, போட்டி இறுதிக்கான நாள் நெருங்குதே. இப்ப எல்லாம், பின்னூட்டம் குறைய ஆரம்பிக்குதே. வோட்டு வருமா?

க.கருப்பு: அண்ணே..ஒரு ஐடியாண்ணே..

வடி: என்னடா..சொல்லு...

க.கருப்பு: நாமளும் 'ஏவிஎம்' ஸ்டைல்ல, நம்ம கதையப் படிச்சு 'திருட்டுப் பய' ஒருத்தன் திருந்திட்டான்னு போடலாம்.

வடி: போடா...போடா.. எந்த திருட்டுப் பய, கதயப் படிச்சு திருந்தப் போறான். உருப்படியா ஏதாவது யோசனை சொல்லு.

மயில்: பாஸ் ..அவன் சொல்றது நல்ல ஐடியா தான் பாஸ்.

வடி: என்னப்பா சொல்றே.. அவன் என்ன சொன்னாலும், மட்டந்தட்டுவே. .என்னா புது ஐடியாவக் கண்டுட்ட?

மயில்: பாஸ், அவன் சொன்னத இன்னொரு பதிவா போட்டுறலாம், நிசமா நடந்ததோ?ன்னு படிக்கிறவன யோசிக்க வச்சுட்டு, கடைசியில 'அவன் சோப்ராஜும் சொக்கத்தங்கமும்' கத படிச்சு திருந்துறா மாதிரி கனவு கண்டதன் விளைவு-ன்னு முடிச்சிரலாம். காமெடிக்கு காமெடி. உங்க பதிவுக்கு விளம்பரம்..எப்படின்னே ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.

பெரிசு: எனக்கும் ஒரு ஐடியா தோணுது.

வடி: ஆளாளுக்கு ஐடியா தோணுது பாரேன். ஒரு ப்ளாக் எழுத ஆரம்பிச்ச உடனேயே நம்ம பயலுவ புத்திசாலியாயிடுறான் பாரேன். சொல்லு பெரிசு

பெரிசு: உங்க கதக்கு வந்திருக்கிற பின்னுட்டங்கள்ள சிறந்த பின்னூட்டம் எதுங்கறத, வாசகர்களாலேயே தேர்தெடுக்க வச்சு, அப்படி சிறப்பா வர்ர பின்னூட்டத்துக்கும், தேர்ந்த்தெடுத்த நபருக்கும் பரிசுன்னு போட்டி வைக்கலாம்.

வடி: யோசனை நல்லாதான் இருக்கு. பரிசா என்னா கொடுக்கலாம்.

க.க: அட எண்ணன்னே, சிட்டியில உங்க படம் எத்தன படம் ஓடுது.நீங்க நடிச்சு ஏதாவது காத்து வாங்குற படத்தோட புரடியூசர்கிட்ட பேசி மூணு நாலு ஓசி டிக்கட் வாங்கி கொடுத்துட வேண்டியதுதான. ஒரே கல்லுல மூணு மாங்கா ஆயிடும்.

பெரிசு: ஹே..ஹே.. என்னச் சொல்லிட்டு இவன் ராங் சைடுல போயிட்டான் பாருல. தல படம் உனக்கு ஓடாத படமால? (வடிவேலு முறைக்கிறார்)

க.கருப்பு: அய்யோ அண்ணே... யோசனை வந்த வேகத்துல அப்படிச் சொல்லிட்டண்ணே.. முறைக்காதீங்கண்ணே

வடி: ம்..ம்.. ஏதோ பொழச்சுப் போ.. யோசனை நல்லாதான் இருக்கு. ரெண்டையும் செயல்படுத்திடலாம்.

க.கருப்பு : மயிலண்ணே...போடுங்கப்பு பதிவ..

(மயில் யோசனையைச் செயல்படுத்த, ப்ளாக் எழுதப் போகிறார்)

(இன்னக்கி இங்க நிறுத்திக்குவோம். போட்டிக்கு இறுதி நாள் நெருங்குதே. நாளக்கி முடிச்சிடலாம்)

Thursday, November 16, 2006

வலைப்பூ... தலைப்பு...வாழப்பூ (2)


காட்சி - 2


(வலைப்பூ... தலைப்பு...வாழப்பூ ப்ளாக் தொடங்கிய வேகத்திலேயே பிரபல்யமாகத் தொடங்கிற்று. வெற்றிக் களிப்பில் நால்வர் கூட்டணி)

க.கருப்பு: அண்ணே... நம்ம மயில்சாமி சொன்னா மாதிரி, நம்ம ப்ளாக் செம பாப்புலர்ன்ணே.

வடி: பாப்புலரா.. என்னடா சொல்லுற நீயி.. எப்படி பாப்புலர்னு சொல்லுறே?

பெருசு: அட அது ஒன்னுமில்ல தலவரே. எழுதுனத படிச்சிட்டு போறவுக எல்லாம், பின்னூட்டம் போடுவாக. (பின்னூட்டமா..அப்படின்னா என்பது போல முழிக்கிறார் வடிவேலு) பின்னூட்டம்னா அதான் தலைவர கமண்டு போடுவாக. அது 60 கமெண்ட் கிட்ட வந்துருக்கு. அத வச்சுதான் சொல்றான்.


வடி: அறுபது பேரு படிச்சுருக்கானுங்களா, பரவாயில்லயே.. ரொம்ப ஆர்வமாத்தான் இருக்காய்ங்க போல..

மயில்: பாஸ்.. எல்லாத்தையும் பால்னு நினைக்காதீங்க. போட்டோவ பாத்த உடனே ஜொள்ளு வுட்டு, ஜொள்ள பின்னூட்டத்துலயும் காட்டியிருக்காங்க. உயிரக் கொடுத்து, தகவல் சேகரிச்சு எழுதுறவங்களுக்கெல்லாம், 5-10 பின்னூட்டமே கஷ்டம் பாஸ். உங்க முத ரெண்டு பதிவுக்கே, இவ்வளவு பின்னூட்டம்னா எல்லாம் போட்டோ பண்ணுற மாயம் பாஸ்.

வடி: போட்டோவுக்காடா இந்த ஜொள்ளு வுடுறாங்க, ஆஹா.. இப்படியே போட்டோ போட்டு கூட்டம் சேக்கணும்னா நமக்கு இந்தப் பொழப்பு வேணாம்டா சாமி. ஆள வுடுங்கப்பா.. நா வரலடா இந்த விளையாட்டுக்கு.. வில்லங்கத்துல மாட்டி உட்டுருவீக போல..

க.க: அட என்னண்ணே நீங்க. சினிமால நயன்தாராவ ஒரு பாட்டுக்கு கூட்டி ஆட்டம் போட கூட்டம் சேக்கிறீங்கள்ளாண்ணே.. அதுமாதிரித்தாண்ணே இதுவும். கூட்டத்த கூட்டியாச்சில்ல, இன்னக்கி மயிலண்ணே 'எல்லாம் டமாசு'ன்னு ஒரு பதிவப் போட்டு, உங்கள 'இண்ட்ரடியூசு' பண்ணி உடுவாருண்ணே.. அப்புறம் உங்க மதுரைச் சங்கத் தமிழ்லே சூப்பர் பண்ணலாம்னே.

வடி: அடப்பாவிகளா... ஏமாந்த பயலுவ எல்லாம் என்ன நொங்கு எடுக்கவாடா இண்ட்ரடியூசு பண்ணப்போறீங்க.. ஆழந்தெரியாம கால உட்டுட்டனோ?'

மயில்: என்னா பாஸ், இப்படிச்சொல்லிட்டீங்க. நீங்க ஒரு லீடிங் காமெடியன். "ஆரம்பமே தமாசு பண்ணி, 'வாழப்பூ' ஆரம்பிக்கணும்னு முடிவு பண்ணி, இப்படி பண்ணினேன்..மக்களே. மன்னிச்சுக்கோங்க.. இனி இனிய தமிழ் பேசலாம்..வளக்கலாம்..னு.. ஸ்மூத் பண்ணிடலாம். உங்க பாப்புலாரிட்டிக்கு, மன்னிச்சு தோஸ்த்-ஆயிடுவாங்க.

வடி: (ஆஹா..ஒரு செட்டப்பாதான் இருக்காய்ங்க போல என்று மனசுக்குள் முணுமுணுத்தவாறே). என்னமோடா, இதுவும் நல்லாதான் இருக்கு. இன்னும் கொஞ்சம் ஆடித்தான் பாக்கலாமே..போடு..போடு..பதிவப் போடு..

(நாட்கள் நகருகிறது. வடிவேலுவும், ப்ளாக்கால் வசீகரிக்கப் படுகிறார். சில மாதங்களுக்குப் பிறகு...)காட்சி - 3


(வடிவேலு அலுவலகக் கம்ப்யூட்டரில் பின்னூட்டம் வந்திருக்கிறதா, என்று பாத்துக்கொண்டிருக்கிறார். உடன் கஞ்சா கருப்பு பக்கத்தில். மயில்சாமியும், பெருசும் உள்ளே நுழைகிறார்கள்.)


மயில்: வணக்கம் பாஸ், என்ன கால்ஷீட் ஷெட்யூல் பாத்துட்டு இருக்கீங்களா?
வடி: வந்துட்டான்யா.. வந்துட்டான்யா.. உன்னத்தான் எதிர் பாத்துட்டு இருந்தேன்..

மயில்: எதுக்கு பாஸ்? பாங்குக்கு போணுமா? பணம் ஏதும் வித்டிரா பண்ணனுமா?

வடி: அட ..அதெல்லாம் இல்லப்பா.. சொன்னா கிண்டல் பண்ணப்படாது..

மயில்: இல்ல பாஸ். சொல்லுங்க.

வடி: நக்கல் பண்ணப் படாது...சொல்லிருவேன்..

மயில்: என்ன்ன பாஸ்.. டென்சன் பண்ணுறீங்கள..

வடி: இல்லப்பா ...அது வந்து...

க.க: அட.. என்ன அண்ணே வந்து போயின்னு இழுத்துக்கிட்டு.. டப்புன்னு போட்டு உடைப்பீங்களா. அத உட்டுட்டு ஏம்ப்பு.. அண்ண தேன்கூடு போட்டி பத்தின அறிவிப்ப படிச்சிருச்சி. அதான், போட்டிக்கு கத எழுதலாமான்னு யோசிச்சிட்டுருக்கு.. அதச் சொல்லத்தான் இப்படி இழுக்கிறாரு..இல்லண்ணே..

பெருசு: கதயா.. நேத்து கண்ணாடி போட்டுட்டு டைரக்டர்னுட்டு கத சொல்லிட்டுருந்தான... அந்தக் கதையையா எழுதப் போறீங்க தலைவரே..

க.க: ஓ...அதான் அண்ணே கத .கத ன்னு காலயில இருந்து பொழம்புறாரோ? அண்ணே..இந்தக் களவாண்ட கதயெல்லாம் வேண்டாம்ணே..இப்பதான் இம்சை அரசன் கதப் பிரச்சினை...

மயில்: டேய்... அது வேற..இது வேற... அவனவன் அங்கே இங்கே கேட்ட/படிச்ச கதையையே சொந்தக் கத மாதிரி மாத்தி எழுதிட்டு இருக்கான்.. நம்ம பாஸ் எழுதினா தப்பா என்ன? நீங்க சொல்லுங்க பாஸ்..

வடி: ஏம்ப்பா..ஏம்ப்பா...கொஞ்சம் பொறுமையய இருக்கப்படாதா? ஒரு வார்த்த சொல்லி முடிக்கறதுக்குள்ள நீங்களா கத கட்டுனா எப்படிப்பா? அவன் சொன்னா மாதிரி, இந்த மாசத் தேன்குடு போட்டிக்கி இலவசம்னு டைட்டில் கொடுத்துருக்காங்க. ஏதாவது கத கவித எழுதலாம்னு பாக்கிறேம்ப்பா...நீ என்னா சொல்ற..ஏதாவது தீம் வச்சிருக்கயா?


க.கருப்பு: ஏதாவது ஹைகூ எழுதுங்கண்ணே..

வடி: அதென்னதுடா ஹைகூவுன்னுட்டு... சத்தமா கூவுறதா?

க.கருப்பு: அய்யோ..அய்யோ..தமிள வளக்கப் போறேன்னு சொல்றீய..இப்படி கேட்டா. ஹைகூவுங்கறது ஒரு வகைக் கவிதைன்னே..

பெருசு: ஏலே..நீ என்ன ஒம் புத்திசாலித்தனத்த தலைவர் கிட்ட காட்டுறியோ? கவிதைன்னா என்னான்னு தெரியுமால உனக்கு?

க.கருப்பு: யோவ்..பெரிசு..என்னா சவால் உடுறியா? இப்ப படிக்கிறேன் கேளு..


'கழிவறை அருகே
காமப் பெண்டிரின்
காதல் பார்வை
கவிழ்ந்தான் அவன்
கிடைத்தது
எய்ட்ஸ்
இலவசமாய்'

க.க: இது எப்படியிருக்கு?


பெருசு: எலே.. இது கவிதையால...ரயில்வே டிபார்ட்மெண்ட்ல 'எய்ட்ஸ்' விளம்பரத்துக்கு எழுதுன மாதிரில்லா இருக்கு. இலக்கிய ரேஞ்சுக்கு போணும் சொல்லிட்டு இருக்குற தலைய கிண்டல் பண்ணுறயோ?

மயில்: பாஸ்..நாம ஒரு கொள்ளக் கூட்டக் கத எழுதலாம் பாஸ்.

க.க: நினச்சேன்..ஏம்ப்பு... நீ பாஸ்..பாஸ்னு சொல்றப்பவே நினைச்சேன். இந்தக்
கததான் சொல்லுவேன்னு. ஆளுகளயும் ..மூஞ்..

வடி: யப்பா. புலவர் பெருமானே..கொஞ்சம் நிறுத்துறயா.. சல சலன்னு நமக்குள்ளேயே புலம்பிகிட்டு.. அவன் கதய கேளு. நீ சொல்லுப்பா..சுருக்கமாச் சொல்லு. இதுவே ரொம்ப நீளமா போகுது..

மயில்: ஓகே பாஸ்.. நம்ம கதைக்கு டைட்டில் 'சோப்ராஜும், சொக்கத்தங்கமும்' வச்சிரலாம். சோப்ராஜ்தான் நம்ம கதையோட கதாநாயகன். ஊர்ல உள்ள பணக்காரங்ககிட்ட எல்லாம் கொள்ளையடிச்சு காசு புடுங்குறதுதான் அவன் வேலை.


க.க.: அத அப்புறம் ஏழைங்களுக்கு கொடுப்பானாக்கும்.. ஹே..இது ஜெண்டில்மேன் கதையாச்சே..


மயில்: டேய்..எல்லாக் கதயும் எங்கயாவது படிச்ச பாத்த மாதிரிதாண்டா இருக்கும். ப்ரெசெண்டேசந்தாண்டா வித்தியாசப் படும். பாஸ்..இவன் என் மூடைக் கெடுக்கறான் பாஸ்.

வடி: அய்யய்ய்ய்ய்யோ... டேய்.. வாயப் பொத்திக்கிட்டு சும்மா இருடா..அவன் கதயச் சொல்லட்டும்.

மயில்: தேங்க்ஸ் பாஸ். அப்படி கொள்ளையடிக்கிற சோப்ராஜ், ஒரு நாள் ராத்திரி ஒரு வீட்ல போய் கொள்ளையடிக்கப் போறான். போன இடத்துல, அந்தக் குடும்பமே தற்கொலைக்கு முயற்சிக்குது. அதப் பாத்த அவன், அதத் தடுக்க நினைக்கிறான். என்ன காரணத்துக்கு தற்கொலை பண்ணிக்கப் போறாங்கன்னு ஆராயறப்ப, இருக்குற மூணு பொண்ணுங்களுக்கும் வரதட்சனை கொடுத்து கல்யாணம் பண்ணி வைக்க முடியாம, கஷ்டத்துல தற்கொலைக்கு முயற்சிக்கிறாங்கன்னு தெரியுது. உடனே அவன், அதுவரைக்கும் கொள்ளையடிச்ச பணத்த அவங்களுக்குக் கொடுத்து, அவங்களுக்கு கல்யாணம் பண்ணிவச்சு, சாவிலிருந்து காப்பாத்தி வாழ வைக்கிறான். 'திருடன்னாலும், சோப்ராஜின் மனசு என்னவோ சொக்கத்தங்கம்தான்'னு டச்சிங்கா முடிச்சிடலாம். எப்படி பாஸ்..

வடி: அடடா...அசத்திபுட்டான்யா. உடம்பெல்லாம் உனக்கு மூளைடா..(மயில் அசடு வழிகிறார்)

பெருசு: எல்லாம் சரிதாண்டே.. இலவசத்துக்கும், இந்தக் கதைக்கும் என்ன சம்பந்தம் இருக்குன்னு யாராவது கேட்டா?

வடி: அட..ஆமா இல்ல?

க.க: அட..பெருசு. சோப்ராஜு அந்தத் தங்கத்த, அந்தக் குடும்பத்துக்கு இலவசமா கொடுத்து, சாவிலிருந்து காப்பாத்திட்டான்'னு கடைசி வரில எழுதிடுவோம்ல.. அப்ப அங்க 'இலவசம்' வந்துடும்லே.. எப்படி?

வடி: என்னமோ அட்ஜஸ்ட் பண்ணுற மாதிரி இருக்கே? மத்த கதைக்கு மத்தியில இது எடுபடுமாடா?

க.க: கல்யாணம்னா என்னான்னு தெரியாமலேயே, ஒரு அர லூசுப் பையன் தாலி கட்டுவானாம், அத பொண்ணு ஏத்துகிட்டு லவ் பண்ணுற சீனை எல்லாம் பாத்து வச்சுருக்காங்கள்ள மக்கள்..அதுக்கே அட்ஜஸ்ட் பண்ணுன மக்கள் இதுக்கு அட்ஜஸ்ட் பண்ண மாட்டாங்களா?

மயில்: பாஸ்.. நீங்க ஏன் பாஸ் இதெல்லாம் பத்திக் கவலைப் படுறீங்க. பாப்புலரா இருக்கறவங்க கதையைத்தான் படிப்பாங்க ஓட்டு போடுவாங்க. நீங்க ஏற்கனவே பாப்புலராயிட்டீங்க. அப்புறம் ஏங்க இதுலாம் யோசிக்கிறீங்க. நிச்சயம் ஹிட்தான் பாஸ். எழுதிரலாம்.

பெரிசு: இது சரியா தல..முதல்ல பொண்ணு படத்தப் போட்டு, சைட்ட ஹிட் பண்ணுனீங்க..இப்ப என்னடான்னா கொள்ளக் கூட்டக் கத எழுதிறீங்க.. அப்புறம் தமிழ்ப்பணி எங்கேன்னு யாரவது கேள்வி கேட்டா?

க.க: யோவ்..பெருசு...என்னாய்யா.. ராங் சைடுல கேள்வி கேட்டு, அண்ணன குழப்புற. (வடிவேலுவைப்பாத்து) அண்ணே..நீங்க கவலைப் படாதீங்கண்ணே..நம்ம கதைதான் ஜெயிக்கும். ஜெயிச்சதுக்கு அப்புறம், தமிழோவியத்துல போயி 'தமிழ்' வளக்கலாம்ணே.. ஏம்ப்பு..நீ எழுதுப்பு...

வடி: சொல்றதும் கேக்கறதும் நல்லாத்தான் இருக்கு.. நடக்குமாப்பா?

மயில்: கவலப்படாத தல..நாங்க இருக்கோம்.
(மயில்சாமி கதை எழுதத் துவங்க, வடிவேலும் இதர சகாக்களும் துணை அமர்கிறார்கள்)

இன்னைக்கு இங்க நிறுத்தி. நாளைக்குத் தொடரலாமா? :)

Sunday, November 12, 2006

வலைப்பூ...தலைப்பு...வாழப்பூ

காட்சி - 1

Image and video hosting by TinyPic (வெளியே மழை பொழிபொழி என்று பொழிந்து கொண்டிருக்கிறது. நடிகர் வடிவேலு, அவரது அலுவலகத்தில் நடந்து கொண்டிருக்கிறார். சக நடிகர்கள் கஞ்சா கருப்பு, மயில்சாமி, திருநெல்வேலி பெரியவர் அங்கங்கே உள்ள இருக்கையில் அமர்ந்திருக்கிறார்கள்.)

'என்னாடா இந்த மழை இப்படி போடு போடுன்னு போட்டுக்கிட்டு இருக்கு..ஒரு பயல வெளிய விடாது போலிருக்க, இன்னைக்குள்ள அவுட்டோர் சூட்டிங் அவ்வளவுதானா' - என்று தன்பாணியில் சொல்லிக்கொண்டே, தன் அலுவலக இருக்கையில் வந்து உட்கார்ந்தார் 'வைகைப்புயல்' வடிவேலு.

கஞ்சா கருப்பு: 'அட போங்கண்ணே..இதுக்குப் போயி வருத்தப்பட்டுகிட்டு. மழை பெஞ்ச்சா, பள்ளிக்கூடம்லாம் லீவு உட்டுருக்காங்கண்ணே..நீங்களும் சாப்பிட்ட முனியாண்டி விலாஸ் பிரியாணி செரிக்க, கொஞ்சம் ரெஸ்ட் எடுங்கண்ணே'

வடி: அடடடா...பாசக்கார பய டா நீ... கொஞ்சம் முதுகுக்கு பின்னாடி வந்து புடிச்சு விடறியா..குறுக்கெல்லாம் வலிக்குதுடா'

(ம்க்கும்..கோழி பிரியாணி கிடைச்சா அமுக்க வேண்டியது..அப்புறம் தொந்தி எங்க குறைய- கஞ்சா கருப்பு முணுமுணுத்தபடி அருகில் வந்து முதுகு பிடித்து விடுகிறார்.)

வடி: என்னடா..முணுமுணுக்கிற...

க.க: அட போங்கண்ணே..எப்ப பாத்தாலும் நீங்க என்ன எடுபிடி வேலைக்குத்தான் கூப்புடறீங்க. மயிலையும், பெரிசையும் பாருங்க..கம்யூட்டர்ல என்னமோ படிச்சுக்கிட்டு இருக்காங்க.

வடி: என்னாது..கம்யூட்டர் படிக்கிறானுங்களா? நல்லா பாத்தியாடா.. இவனுங்க என்னத்தடா படிக்கப் போறானுங்க. அந்த ஆபரேட்டர் செவத்தப் பிள்ளய முறச்சி முறச்சி பாத்துட்டு இருக்கப் போறானுங்க..

க.க: அடப்போங்கண்ணே....அப்படின்னாதான் நானும் போயி இருப்பேனே.. என்னமோ அப்படி எழுது..இப்படி எழுதுன்னு கிறுக்கு கணக்கா பேசிக்கிட்டு என்னமோ கம்யூட்டர்ல பண்ணிட்டு இருக்கானுங்க.

வடி: நிசமாவாடாச் சொல்றே.. நம்ம பயலுவலுக்கு புத்தி வந்துருச்சா.. வா போய் பார்க்கலாம்.

(வடிவேலுவும், க.கருப்பும் பக்கத்து அறைக்குள் நுழைகின்றனர். அங்கே மயில்சாமியும், நெல்லைப் பெரியவரும் கம்யூட்டரில் ப்ளாக் படித்து கமெண்ட் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.)

வடி: கம்யூட்டர்ல என்னாங்கடா பண்ணிகிட்டு இருக்கீங்க. பெரிய ஆளாயிட்டீங்க போல இருக்கு.

மயில்: ஹி..ஹி.. இல்ல பாஸ். சும்மாதான் ப்ளாக் படிச்சுட்டு கமெண்ட் போட்டுட்டு இருக்கோம்

வடி: அதென்னங்கடா கூத்து..ப்ளாக்..வொயிட்டுன்னுகிட்டு.

மயில்: என்ன பாஸ் நீங்க. ப்ளாக்னா என்னான்னு தெரியாம கம்யூட்டர் இல்லிட்டரேட்டா இருக்கீங்க.

வடி: டேய்..நிறுத்து. விசயத்த கேட்டா பதிலச் சொல்லு. இந்தக் குத்துற வேலையெல்லாம் வச்சுக்காதே ஆமா சொல்லிபுட்டேன். (திருநெவேலிப் பெரிசப் பாத்து) ..பெரிசு..உனக்குத் தெரியுமா, தெரிஞ்சா கொஞ்சம் விளக்கறது..

திரு: அட அது ஒன்னுமில்லங்க. கம்யூட்டர் படிச்ச பயலுவ எல்லலம் பொழுது போகாத சும்மா தமிள வளக்கறேன்னுட்டு, என்னத்தயோ கன்னா,பின்னான்னு எழுதுறானுங்கள்ளா. அவனவன், தனக்கோசரமா, ஒரு பத்திரிக்கை நடத்துறதா நினைச்சு ஒரு பேர வச்சிகிட்டு ப்ளாக் எழுதுறானுவ. ப்ளாக் இலவசமா இருக்கிறதால, எழுதுறது சொலபமா போச்சில்லா'

வடி: ஓ..ஒ..இப்படிலாம் கூட தமிழ வளக்கிறாய்ங்களா நம்ம மக்க. ஓசின்னா நாம கூட ஒன்ன ஆரம்பிக்கலாமா?

க.கருப்பு: அண்ணே, ஓசின்னா எனக்கு ஒன்னு ஆரம்பிச்சு கொடுங்கண்ணே..

தி.பெரிசு: எல, சாமியே சைக்கிள்ள போலயாம், அதுக்குள்ள நீ 'பைக்' கேக்கா..

மயில்: ஸ்..ஸ்....சும்மா இருங்கப்பா.. பாஸ், விவேக்குக்கு முன்னாடி, நாம முந்திக்கணும். நீங்க மட்டும் வலைப்பூ ஆரம்பிச்சீங்கன்னா, உங்களுக்கு பீல்டுல ஒரு மாடர்ன் லுக் கிடைக்கும் பாஸ். நீங்க மட்டும் 'ங்'னு ஒரு வார்த்த சொல்லுங்க, 'வைகைப் புயலின் தமிழ்ப்புயல்' ன்னு தலைப்பு வச்சு 'ங்'தமிழ்மணத்துல ரிஜுஸ்டர் பண்ணிடலாம் பாஸ்?

வடி: அது என்னாடா வலைப்பூ....புரியலியே.. இந்தக் கம்யூட்டர்ன்னாலே காசப் புடுங்குவாங்களாடா..நீயும் அது மாதிரி ஏதும் வழி பண்ணுறியா? (விவேக்குக்கே, திருப்பதி ஜாங்கிரி கொடுத்த பார்ட்டியாச்சே நீ..உங்கிட்ட உஷாராத்தான இருக்கணும்.' என்று தனக்குள் முணுமுணுக்கிறார்.)

மயில்: என்ன பாஸ் நீங்க, உங்க கிட்ட போய்..காசு பணம்லாம் கேப்பேனா.வலைப்பூவுக்கு, .'வைகைப்புயலின் தமிழ்ப்புயல்' தலைப்பு புடிச்சிருக்கா சொல்லுங்க..

வடி: அட..என்னப்பா நீ வலைப்பு தலைப்பு வாழப்பூன்னுகிட்டு..

க.கருப்பு: அண்ணே..'வைகைப்புயல' விட, 'வலைப்பூ தலைப்பு வாழப்பூ' நல்லாருக்குண்ணே..

மயில்: டேய் என்ன நீ..கொஞ்சம் டீசண்டா கொண்டு போலாம்னு பாத்தா, வாழப்பூ..மட்டைன்னுகிட்டு..

தி.பெரிசு: எலே மயிலு. வாழப்பூ தான்ல நல்லாருக்கு. உனக்கு வாழப்பூ எப்ப வரும்னு தெரியுமால? வாழை நல்லா வளர்ந்து முத்தி, குலை தள்ளுனாத்தான் வரும். அது மாதிரி, நம்ம வடிவேலுவோட சிந்தனையில முத்திய வாழ்க்கைப் பூக்கள்த்தான் கருத்தா சொல்ல வர்ரார்னு டெம்ப்ளேட்ல போடாலாம்லா' வலப்பு தலப்பு வாழப்பூ தான்பா நல்லாருக்கு.

வடி: அடா..அடா..அடா.. நீங்கச் சொல்லச் சொல்ல ஆசயா இருக்கேடா...

க.கருப்பு: அப்புறம் என்னண்ணே.. 'வலைப்பு..தலைப்பு..வாழப்பூ'ன்னு டைட்டிலப் போட்டுருவோம்ணே..என்னா மயிலு.

வடி: ஆமா..ராசா.. அப்படியே கீழே 'வடிவேலுவின் சிந்தையில் முத்திய சிந்தனைப்பூ' ன்னு ஒரு லைனப் போட்டுர்ரா..

மயில்: சூப்பர் பாஸ். ஆனா ஒரு சஜசன் பாஸ்.. 'வடிவேலுங்கறத' எடுத்துட்டு 'என் சிந்தையில் முத்திய சிந்தனைப்பூ' ன்னு போடலாம் பாஸ்...

வடி:ஏண்டா..எம் பேர இருட்டடிப்புச் செய்யற..

மயில்: அட இருங்கண்ணே..மூணுபதிவு போட்டாதான், நீங்க தமிழ்மண்த்துல ரிஜிஸ்டர் பண்ண முடியும். அதுனால, முதல் முணு பதிவ கவர்ச்சியா போடணும். அப்பதான் எல்லாரும் படிக்க வருவாங்க. அதான் முத பதிவுல ஏதாவது ஒரு பாப்புலராகாத நடிகைப் படத்த போட்டு, அவதான் இந்தப் பதிவுக்குச் சொந்தக்காரி மாதிரி எழுதலாம். அழகா இருந்தா, எல்லாரும் சைட்டடிக்க வருவாங்க..நம்ம சைட்டும் ஹிட்டாகிடும். அப்புறமா, 'அட பாவி மக்கா, ஏமாந்தீங்களாடா'ன்னு தலைப்புல நீங்கதான் இந்தப் பதிவுக்குச் சொந்தக்காரர்னு எழுதலாம்...எப்படி ஐடியா?

வடி: அடப் பாவி மக்கா? என்னடா தமிழ வளக்கலாம்னு சொல்லிட்டு, இப்படியெல்லாம் கவர்ச்சி போட்டு ஏமாத்தச் சொல்றே?

க.கருப்பு: அண்ணே..நாலு பேருக்கு நல்லதுன்னா, என்ன வேணாச் செய்யலாம். இது ஒன்னும் தப்பில்லண்ணே..'

வடி: நாலு பேரா...யாருடா...அந்த நாலு பேரு..

க.கருப்பு: நாம நாலு பேருதாண்ணே அது..நம்ம சைட்டு ஹிட்டானா, நமக்குத்தானேன்னே பாப்புலாரிட்டி.. அது நமக்குத்தானேண்ண நல்லது..

வடி: கிழிஞ்சது போ..ஏண்டா பாப்புலாரிட்டிக்காக இப்படி எல்லாமாடா செய்வாங்க.. தமிழ வளக்கலாம்னா, முதல்ல கவர்ச்சிய காட்டிட்டு அப்புறம் வளக்கலாம்ங்கிறீங்க. என்னமோ, உங்கள நம்பி இறங்கறேண்டா... சினிமாலதான் யார்கிட்டயாவது மாட்டி அடிவாங்க வுடுறீங்க..இங்க அதுமாதிரி யார்ட்டேயும் மாட்டி உட்டுராதீங்கடா.

மயில்,க.கருப்பு,தி.பெரிசு: (கோரஸாக): நாங்க பாத்துக்குறோம் தல..கவலையே படாதீங்க..

(வலைப்பு..தலைப்பு...வாழப்பூ' சைட் தொடங்கி, பதிப்பிக்கத் தொடங்குகின்றனர்)..

- இப்போதைக்கு, இங்க நிறுத்தி, 'தொடரும்' போட்டுக்கலாம். :)


Wednesday, November 08, 2006

இலவசம்..சில கனவுகள்..சில நினைவுகள்..

நம்ம ஊரில மார்கட்டுக்குப் போயி காய்கறி வாங்கியிருக்கீங்களா?

கொஞ்சம் சுமாரா காய்கறி வச்சு இருந்தாக் கூட, வாங்குற வாடிக்கையாளருக்கு, கருவேப்பிலை/கொத்தமல்லி கொசுறு கொடுக்கக் கூடியக் காய்கறி கடைக்கார்கிட்டதான் கூட்டம் கூடும். 'இவன் ரொம்ப நல்லவம்பா'ன்னு மனசுல நினைச்சுகிட்டே வாங்குவாங்க.

கொசுறா கிடைக்கிற கருவேப்பிலையே, அவ்வளவு சந்தோசப்படுத்தும்னா, இன்ன பிற இலவசங்கள் தரக்கூடிய சந்தோசத்தப்பத்திச் சொல்ல வேணுமா, என்ன?

Image and video hosting by TinyPic
இலவசம்ங்கற வார்த்தையைக் கேட்டாலேயே போதும், கண்ணும், காதும்
கூர்மையாகி விடாதா, என்ன? இலவசம்கிறது, சின்னப் பசங்கள்ள இருந்து, வயசான பெரிய மனுசங்க வரை எல்லா தரப்பு மக்களையும் லேசில வசியம் பண்ணிடும்.

சின்ன வயசுல லாலா கடைக்குப்(சுவீட் ஸ்டாலுக்குப்) போய், காசு கொடுத்து திண்பண்டம் பொட்டலம் வாங்கிட்டு, கொஞ்சம் கையில வேற இனாம் கேட்போம். இப்பவும், திருநெல்வேலி இருட்டுக்கடையில போயி அல்வா சாப்பிட்டீங்கன்னா, கொஞ்சம் காரம் இனாமாத் தருவாங்க. அந்தக் கொசுற வாங்கி, சகோதரருடன் பகிர்ந்துகிட்டதும் ஒரு சுகம்தான்.

கண்ணாடி வாங்கினா, சீப்பு இலவசம். சூடன் வாங்கினா, பொம்மை டப்பா இலவசம்னு சின்ன வயசுல, இந்த இலவசங்களை கண்கொத்திப் பாம்பா பார்த்ததுண்டு. பணம்ங்கிறது, பற்றாக் குறையாய் இருக்கின்ற காலத்தில், ஒன்னு வாங்கினா, ஒன்னு இலவசம்ங்கிற இந்த சில இலவசங்கள் வரப்பிரசாதம்தான்.

கடந்த எட்டு/ஒன்பது வருடங்களுக்கு முன் உலகக்கோப்பைக் கிரிக்கட் போட்டி நடந்தபோது, எனது நண்பர் ஒருவருக்கு இலவசமாய், பிரபல பிஸ்கட் கம்பெனி ஒன்றின் போட்டி மூலமாய், இலண்டன் சென்று கிரிக்கட் பார்க்க டிக்கட் இலவசமாய்க் கிடைச்சது. 'மச்சம்டா உனக்கு'ன்னு, நான் சொல்ல, 'அட பைத்தியக்காரா.. போட்டியெல்லாம் நம்பிகிட்டு இருக்கியா நீ. நா என்ன சின்னப்புள்ளையா பிஸ்கட்டு போட்டின்னு கூப்பன் கலெக்ட் பண்ண..எனக்கு டீலரு தெரியும். அவர் மூலமா வந்தது தாண்டா.'ன்னு சொன்னார். அது எனது சின்ன வயசு ஞாபகங்களைக் கிளறி விட்டது.

சோப்பு வாங்கி, மூன்று வண்ண அட்டைகள் சேத்தா, 'சிங்கப்பூர்' பயணம் இலவசம்னு விளம்பரம் பாத்து, உருப்படாத சோப்புகள் வாங்கி, அதன் அட்டையைச் சேகரித்து கனவிலேயே அப்பா, அம்மாவோட சிங்கப்பூர் போயிட்டு வந்தது ஒரு சுகம்.

அப்போதெல்லாம் ஒரு எதிர்பார்ப்பு. சொன்னா செய்வாங்கன்னுட்டு. சின்ன வயசுல, வெளுத்ததெல்லாம் பால்'னு நம்பிய காலம். வளர வளரத்தான புத்திக்குத் தெரியுது, எவ்வளவு தகிடுதத்தம் பண்ணுறாங்கன்னு.

பொருட்களை விற்க, வியாபாரிகளுக்கு இலவசம் ஒரு யுக்தி. ஆனா அத எத்தனை பேர் ஒழுங்காச் செய்யுறாங்கன்றது கேள்விக்குறி.


அமெரிக்காவில இந்த இலவசங்கள் எல்லாம், ஓரளவுக்கு முறைப்படி நடப்பதாகத்தான் தோணுகிறது. X-box-ங்கிற விளையாட்டுச் சாதனம், மார்கட்டுக்கு வருவதாக விளம்பரப் படுத்த பட்டுக் கொண்டு இருக்கையில், கோகோ கோலா கம்பெனியும் கலந்து கொண்டு, அவர்கள் பானத்தின் மூடியில், X-box -க்கான அடையாளம் இருந்தால், அவர்களுக்கு இலவசமாய் X-box சாதனம் கோகோ-கோலா சார்பாக அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்கள்.

சரியாய் அந்தப் போட்டி முடிவதற்கு முந்தைய தினம், விளையாட்டாய் என் நண்பன் இரண்டு பாட்டில்கள் வாங்க, இரண்டில் ஒன்றில் x-பாக்ஸ்க்கான அடையாளம் இருக்க, அந்த விளையாட்டுச் சாதனம் பொது விற்பனை மார்கட்டுக்கு வருமுன்பே, அவரது வீட்டிற்கு வந்துவிட்டது.

இன்னொரு நண்பரின் பெற்றோர், அமெரிக்காவிலிருந்து சிங்கப்பூர் விமானம் மூலமாக இந்தியா செல்ல இருந்தார்கள். 'எகனாமி' வகுப்பு டிக்கட் எடுத்திருந்தார்கள். விழாக் காலமாகையால், 'ப்ளைட் ஓவர் புக்-ஆகியிருந்தது. சிங்கப்பூர் விமான ஊழியர் ஒருவர், நண்பரின் பெற்றோரை அணுகி, 'உங்கள் பயணத்தை, நாளை ஒத்திப் போட சம்மதிப்பீர்களென்றால், உங்களுக்கு 'முதல் வகுப்பில்' நாளை செல்வதற்கான இலவச upgrade பண்ணித்தருகிறோம்' என்றார். இதைக்கேட்ட நண்பர், உடனே அதற்குச் சம்மதிக்க, மறுநாள் அவர் பெற்றோர் முதல் வகுப்பில் பயணித்தனர்.

இந்தமாதிரியான இலவச அப்கிரேடு, இந்திய ரயில்வேயிலும் கொண்டுவர இருப்பது வரவேற்கத்தக்க முயற்சி.

இந்த மாதிரியான இலவசங்கள், கிடைப்பதும் அவ்வளவு எளிதல்லவே.

இலவசங்கள் கிடைப்பதற்கும் 'லக்கிலுக்' வேண்டும்....அட அதிர்ஷ்டப்பார்வை வேண்டும்ங்கிறேன். அதிர்ஷ்டம் இருந்தாத்தாங்க, இந்த மாதிரி இலவசங்கள் எல்லாம் கை கூடும்.

இந்தியாவிலிருந்து, ஒரு மாத கால பணிக்காக வந்த நண்பர் ஒருவர், ஏ.ஓ.எல் வழங்கிய ஒரு மாதத்திற்கான இலவச 'இண்டர்நெட்' சேவையைப் பயன்படுத்தினார். ஒரு மாதம் முடியுமுன், அந்தச் சேவையை துண்டிக்க மறந்து போய், இந்தியா சென்றுவிட, மாதாமாதம் இருபத்தியிரண்டு அமெரிக்க டாலர்கள் வீதம் மூன்று மாதத்திற்கு, அவரது கிரெடிட் கார்டில் வசூலித்துவிட்டனர். நண்பர் முழித்துக் கொண்டு, சேவையை துண்டிக்க இரண்டு மாத காலம் ஆனது. இலவச 'எலிப்பொறி', 60+ அமெரிக்க டாலர்களை விழுங்கியது.

இலவசங்களைப் பெறுவதிலும் ஒரு கவனம் வேண்டும்.

இந்த மாதிரி இலவசங்கள் எல்லாம், மழையில் முழைக்கின்ற காளான் போல..அவ்வப்போது சில சலனங்களையும், சில சந்தோசங்களையும் கொடுத்துப் போகும்.

ஆனால் பிரதிபலன்கள் எதிர்பாராமல் கொடுக்கப்படும் சில இலவசங்கள் நிலைத்து நின்று பலன் கொடுக்கும். சில சேவை நிறுவனங்கள் மூலமாக நடத்தப்படும் மருத்துவ நிலையங்கள், கல்விக்கூடங்கள் இதற்குச் சான்று.

நடந்து முடிந்த தேர்தல் கூட ஒரு இலவச மழைத்தேர்தல்தான். ம்..இலவசத் திட்டங்கள் சோம்ப்பேறியாக்காமல், உதவியாய் இருக்கும் பட்சத்தில் வரவேற்க வேண்டிய ஒன்றுதான்...


(என்ன சிவா..இந்த முறை தேன்கூடு போட்டிக்கு கதை எழுதாம, கட்டுரை எழுதியிருக்கீங்கன்னு யாரோ முணுமுணுக்கிறாப்பல இருக்கு..இருங்க..இருங்க... இந்தக் கட்டுரையை படிச்ச உங்களுக்கு ஒரு கதையை இனாமாத் தரலாம்னு இருக்கேன்.. இன்னும் இரண்டொரு நாள் பொறுங்க.. :) )