Sunday, October 08, 2006

ராஜகுமாரன் - தேன்கூடு போட்டிக்கு

"காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
நேத்து வர சேர்த்து வச்ச ஆசைகள் வேகுதடி
நீயிருந்து நான் அணச்சா நிம்மதி ஆகுமடி"

மொட்டைமாடியில் டேப் ரிகார்டர் பாடிக்கொண்டிருந்தது.

Image and video hosting by TinyPic


'ஏய்..மனோ, இந்த அஞ்சுதான் சத்தமா மொட்ட மாடில பாட்டு கேட்டுகிட்டு இருக்கான்னு நினைக்கிறேன்..கொஞ்சம் சத்தத்த குறைச்சு வச்சு கேக்கச் சொல்லு, பெரியக்கா வந்தா கத்தப் போகுது. " -அடுப்பிலிருந்த குழம்பைக் கிண்டியபடி வினோதினி சிடுசிடுத்தாள்.

"விடுக்கா.. சின்னப்புள்ள தானே.."

"ம்க்கும்.. காலேஜ் கடைசி வருசம் கடைசிப் பரீட்சை எழுதியாச்சு..இன்னும் என்னடி சின்னப்புள்ள.. நாங்கள்ளாம் இப்படியா வளர்ந்தோம்.. கிடைக்கிற சுதந்தரத்த காப்பாத்திக்க தெரியணும், பெரியக்கா வந்து கத்திச்சுன்னா, கண்ணக் கசக்கிட்டு நிக்கும், அப்பவும் நாமதான் 'அழாதேடி'ன்னு சமாதானம் பண்ணனும். போ..போய் சொல்லி கூட்டிக்கிட்டு வா"

"சரிக்கா..நீ டென்ஷனாகாத.." என்றபடியே தங்கையை அழைத்துவர மாடிக்குப் போனாள், மனோ.

------00000------

அஞ்சு அந்த வீட்டின் செல்லப் பெண். ஐந்தாவது பெண் என்பதால், அஞ்சனா என்று வைத்தப் பெயர், அஞ்சு என செல்லப் பெயராயிற்று. 'அஞ்சு பெத்தா அரசனும் ஆண்டி'-ன்னு பழமொழி. ஆண்டின்னு சொல்ற அளவிற்கு இல்லாமல், சிறுசிறு சிரமங்களோடே அவர்கள் குடும்பம் நடந்து கொண்டிருந்தது. அஞ்சு பொண்கள்ள, ஒருத்திக்குக் கூட கல்யயணம் செய்து வைக்க முடியலையே, என்ற அப்பாவின் வருத்தம், அவரின் சித்த சுகவீனத்திற்கு வித்திட்டது. அம்மாவும், மூத்த அக்கா முத்துவும்தான் கண்டிப்புடன் குடும்ப நிர்வாகிகள். அம்மாவைவிட, முத்தக்காவிடம் எல்லோருக்கும் பயம். அரசு அலுவலகமொன்றில், மூத்த கணக்கராகப் பணி. வயது முப்பத்தியெட்டாகிறது. திருமணக் கனவுகளை கலைத்துவிட்டு, தங்கையரே குழந்தைகள் என்ற எண்ணத்தில் காலத்தை ஓட்டிக்கொண்டிருப்பவர்.

------00000------

மாடிப்படியேறி வரவர சத்தம் அதிகமாகிக் கொண்டே வந்தது. நிசமாலுமே சத்தம் அதிகம்தான். 'முத்தக்கா வந்தா, இந்தப் பாட்டுக்கு மேலேயே பாட்டு வாங்க வேண்டியதுதான், இவ்வளவு சத்தமா வச்சிட்டு என்ன பண்ணிகிட்டு இருக்கா' என்று எண்ணிக் கொண்டே, மேலே வந்து அவளறியாமல் மெல்ல எட்டிப் பார்த்தாள். யாரையோ பார்த்து கையசைத்துக் கொண்டிருந்தாள், அஞ்சு. ஆச்சரியமானவளாக, 'ஏய்...அஞ்சு..யாருக்குடி கை காட்டுறே' என்று சினேகிதமாகக் கேட்டபடியே வந்தவள், அஞ்சு பார்த்துக் கொண்டிருந்த திசை நோக்க, 'வேகவேகமாக எதிர் வீட்டு பையன் உள்ளே போனது தெரிந்தது.

'ஏய்..என்னடி..அஞ்சு.. அவனுக்கா நீ கை காட்டுனே..' - மனோவின் குரலில் அதிர்ச்சி தெரிந்தது.

'கத்தாத மனோக்கா.. மெல்லப் பேசு. கீழே சின்னக்காவுக்கு கேக்கப் போகுது' - பயந்தவளாக அஞ்சு.

'சரி..சரி...நீ இப்ப என்ன பண்ணின.. அதச் சொல்லு'

'ஆமா..அவனுக்குத்தான் கையக் காட்டுனேன்..நீ யார் கிட்டேயேயும் சொல்லாதே..'

'என்ன தைரியம்டி உனக்கு. முத்தக்காவுக்கு தெரிஞ்சா, கொன்னே போட்ரும்.. நா ஏதோ பாட்டு சத்தத்த குறைச்சு கேளுன்னு சொல்லிட்டுப் போலாம்னு வந்தா, நீ இந்த வேல பண்ணிக்கிட்டு இருக்கே..'

'இது அவன் வாங்கிக் கொடுத்த கேசட்தான். அவனுக்கும் கேக்கட்டுமேன்னுதான் சத்தமா வச்சேன்'

'ஓ..ஓ..அப்ப இது ரொம்ப நாளா நடக்குது போல..' என்றபடியே கேசட் டப்பாவை எடுத்துப் பார்க்க, 'ஜெயச்சந்திரனின் காதல் கீதங்கள்' - அன்புடன் வசந்தி' என்று எழுதப்பட்டிருந்தது. கூர்ந்து பார்த்தபோது, 'வசந்த்' திருத்தி எழுதப்பட்டு வசந்தியாகியிருப்பது தெரியவந்தது.

'பேரு வசந்த்-ஆ'

'ஆமாம்..'

'எத்தன நாளாடி இந்தப் பழக்கம், கடைக்குட்டின்னு சமர்த்துன்னு' அடிக்கடி அக்கா சொல்லுமேடி..இப்படி பண்ணிகிட்டு இருக்கே'

'ஃபைனல் இயர் ஆரம்பிச்சப்போதான் பேச ஆரம்பிச்சது. 'பந்த்'னு திடீர்னு பஸ் ஓடாதப்ப, இவந்தான் பைக்ல கொண்டுவந்து விட்டான். அப்போ பழக ஆரம்பிச்சது. '

'உனக்கு ரொம்பதாண்டி தைரியம். ரெண்டாவது அக்கா சுஜாவுக்கு அந்த ரகு லெட்டர் கொடுத்தப்ப என்ன நடந்தது, உனக்கு நினனவில்லையா? அவனப் பிடிச்சு போலிஸ் கம்ப்ளெயிண்ட் கொடுத்து, அம்மாவும், அக்காவும் ஆர்ப்பாட்டம் பண்ணினது ஞாபகமில்லையா?. இன்ன வரைக்கும், அதத்தான அம்மா குத்திக்குத்திக் காட்டுது. அதுனாலதான்னு நம்ம வீட்டுக்கு ஒரு மாப்பிள்ள கூட வரமாட்டாங்கிறான்னு சொல்லிசொல்லி, அது இப்ப வாயில்லாப் பூச்சியா இருக்கு. அதல்லாம் பாத்துமாடி, இது மாதிரி பண்ணிகிட்டு இருக்கே. இது ரொம்ப அதிகம்டி'

'இல்லடி மனோ.. நாங்க ரொம்ப சீரியஸா லவ் பண்றோம். அவனுக்கும் சதர்ன் ரெயில்வேல கிளார்க் வேலை கிடைச்சிருக்கு. இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்றான்.. அவங்க வீட்ல எல்லாம் சம்மதம் வாங்கியாச்சு...'

'என்னடி..சொல்றே.. '

'போன செமஸ்டர் கடைசி பரீட்சை எழுதி முடிச்சப்போ, அவங்க வீட்டுக்குக் போனோம், அவங்க வீட்ல எல்லோரும் நல்ல மாதிரி. அவங்க அம்மாவுக்கும் பிடிச்சிப் போச்சி. நம்ம கொஞ்சம் உசந்த சாதின்னு பயப்படுறாங்க'

'அடப்பாவி...செல்லம் செல்லம்னு உன்னக் கொஞ்சினா, இப்படி ஊமைக்கோட்டானா இவ்வளவு வேலை செஞ்சு வச்சிருக்கே'

'ப்ளீஸ்..ப்ளீஸ்...இப்போதைக்கு இத வேற யார்கிட்டேயும் சொல்லாதடி..ப்ளீஸ்'

அதற்குள் கீழேயிருந்து வினோதினி குரல் கொடுக்கவே, 'சரி..சரி..அக்கா மேல வரதுக்குள்ளே, கீழே போலாம், அந்த கேசட் டப்பாவை வெளியே தெரியும்படி வைக்காதே..வா' என்றபடியே மனோ முன்னே போக, அஞ்சு தொடர்ந்தாள்.

------00000------
காதலர்க்கு, நொடிகள் கூட வருடங்களாகும் அவர்கள் அருகிலில்லாத போது, வருடங்கள் கூட நொடிகளாகும் அருகிலிருக்கும் போது. அஞ்சுவுக்கும் அப்படித்தான் இருந்தது. மாதங்கள் இரண்டு வேகமாய் உருண்டு ஓடியது. அஞ்சுவுக்குத்தான் எதிலும் பிடிப்பே இல்லை. தேர்வு முடிவுகள் வெளியாகி, அவளும் தேர்ச்சி பெற்றிருந்தாள். அதை முத்தக்கா, மகிழ்ச்சியாய் கொண்டாடிய போது கூட, இவள் சுரத்தே இல்லாமலிருந்தாள். முத்தக்கா நிர்வாகத்தில் கில்லாடி என்றால், வினோ மற்றவர்கள் மனதைப் படிப்பதில் கில்லாடி. இவளின் முகவாட்டத்தைக் கவனித்தவள், மனோவிடம் 'ஏண்டி..இது எப்ப பாத்தாலும் முகத்த தொங்கப் போட்டுகிட்டே இருக்கு..மேல படிக்கணும்னு நினைக்கிறாளா? என்னான்னு கேளேண்டி..' என்க, 'அதெல்லாம் ஒன்னுமில்லக்கா..வெளியே போய் வந்துக்கிட்டு இருந்தவள, திடீர்னு வீட்டுக்குள்ளேயே இருன்னா..அதான்.. எல்லாம் பழகிடுவா..நீ கவலைப்படாதே..' என்று சொல்லிக்கொண்டே, அஞ்சுவின் இருக்குமிடம் நோக்கிச் சென்றாள்.
------00000------
'ஏண்டி அஞ்சு, எப்ப பார்த்தாலும் முகத்த தொங்கப்போட்டுகிட்டு இருக்கே..வினோக்கா கத்துது பாரு'

'என்னால முடியலடி..நாளைக்கு ரிஜிஸ்டர் ஆபிசுல கல்யாணம் பண்ணிக்க ஏற்பாடு பண்ணியிருக்கான் வசந்த், உங்களுக்கு துரோகம் பண்றனோன்னு இருக்கு' என்றாள் கையிலிருந்த வசந்தின் புகைப்படத்தைப் பார்த்தபடி.

'..சும்மாச்சும்மா அழாதே..,வினோ உள்ள வரப்போகுது..' என்று சொல்லி முடிக்குமுன் அறைவாசலில் வினோ வந்து நின்றாள். 'ஏன் அஞ்சு அழறே..' என்றபடி அருகில் வந்தவள், அவள் எதையோ மறைக்க எத்தனிப்பதை கவனித்தவளாக, 'என்னடி அது' என்று பிடுங்கினாள்.

வசந்தின் போட்டோ, வசமாய் மாட்டிக் கொண்டது அவள் கைகளில்.

'யாருடி இவன்..மூணாவ்து வீட்டுப் பையன் மாதிரி இருக்கான். இது எதுக்கு உங்கிட்ட இருக்கு' என்றபடியே, போட்டோவைத் திருப்பிப் பார்த்தவள், அதில் எழுதியிருந்த வாசகத்தைப் படித்தாள். 'என் நிழல்படத்தோடு சேர்ந்திருக்கும் என் கண்ணே.. நிஜத்தோடு எப்போது சேர்வாய்..வழிமேல் விழியாய்..வசந்த்'

'என்னடி..இது..இப்படி எழுதியிருக்கான்.. லவ்-வா?'.

இருவரும் மொளனமாக இருக்க...'என்னடி..கல்லுளி மங்கிகளா..கேக்கறதுக்கு பதில் சொல்லுங்கடி..'

'ஆமாங்க்கா..நானுந்தாக்கா..' என்றபடியே விசும்பத் தொடங்கினாள் அஞ்சு.

'நீயா...' என்று வாய் பிளந்தவள், 'உனக்கும் தெரியுமாடி..' என்றபடியாய் மனோவை முறைக்க,

'அவளத் திட்டாதக்கா..அவளுக்கு ஒன்னும் தெரியாது.."நாந்தான் எல்லாம் பண்ணினேன்"..என்றபடியாய் எல்லாவற்றையும் சொன்னாள். என்ன மன்னிச்சுருக்கா..எனக்கு வசந்தும் வேணும்..நீங்களும் வேணும்..இப்ப என்ன பண்றதுன்னு தெரியலை' - தேம்பினாள்.

'என்னால நம்ப முடியலடி..நீ எவ்வளவு சின்னப் பொண்ணுன்னு நினச்சிருந்தேன்..இவ்வளவு தேறியிருக்கே, நா இத எதிர்பார்க்கலடி..இவ்வளவு பண்ணினவ ஏண்டி இன்னும் இங்க இருக்கே..அவங் கூடவே ஓடிப்போயிருக்க வேண்டியதுதானே'

'வினோக்கா..என்னக்கா இப்படி பேசறே..'

'பின்ன எப்படிடி சொல்லனும்கிற..நான் கோபத்தில அப்படி பேசல..நிசமாத்தான் சொல்றேன்..' என்ற வினோவைப் பார்த்து,

'என்ன வினோ சொல்ற, சுஜாவோட கதை தெரிஞ்...' என்று ஆரம்பித்த மனோவைத் தொடரவிடாமல், 'தெரியும்டி...மனோ.. அதனாலதான் சொல்றேன்.. லெட்டர் கொடுத்தான்..லெட்டர் கொடுத்தான்னு சொல்லிச்சொல்லியே அவ மனசப் புண்படுத்தி, அது இப்ப நம்மகிட்டயே வாய்கொடுத்து பேசாத பூச்சியா இருக்கு. அதுமாதிரி, இதுவும் இவன லவ் பண்ணிட்டு, விட்டுட்டமேன்னு மூலையில அழுதுகிட்டு இருக்கச் சொல்றியா.. சுஜா என்ன தப்புடி பண்ணினா..மூத்தவளுக்கு வரதட்சனைக்கு கொடுக்க வசதியில்லைன்னுட்டு, கல்யாணம் தள்ளிப்போய்கிட்டு இருக்க, சுஜாவோட அழகப் பார்த்து வரதட்சனையில்லாம கல்யாணம் பண்ணிக்கிறேன்னு லெட்டர் கொடுத்தவன, பண்ணிக்கட்டுமா?ன்னு கேட்டா..அதுக்கு அவ மேலேயும் பழி..அவன் மேலேயும் பழி..கடைசியில யாரு வாழ்ந்தா? அப்புறம் அவள விட்டுட்டு உனக்கு கல்யாணம் பண்றதா..எனக்குப் பண்றதான்னு குழப்பம்.. கல்யாண வயசு காத்திருக்குமா...அது தாண்டிப்போயாச்சு.. அதச் சந்தர்ப்பமா வச்சுகிட்டு ரெண்டாந்தாரமா வர்ரையா..மூணாந்தாரமா வர்ரையான்னு கேக்கற கூட்டம் வேற, இந்தக் கூட்டத்தில நீ சிக்க வேண்டாம் அஞ்சு. ' என்று மூச்சிரைக்கப் பேசியவள், சற்று நிறுத்தினாள்.

'அந்தப் பையனப் பத்தி கேள்விப்பட்டிருக்கேன். அவங்க குடும்பமும் நல்ல குடும்பந்தான். நல்லா வச்சிருப்பாங்கன்னு நம்பிக்கையிருக்கு. நீயும் புத்திசாலிப் பெண்தான். நல்லா வாழ்வேடி. வயசும், வாலிபமும் இருக்கையிலயே வாழ்க்கையை அனுபவிக்கனும். அதத் தொலைக்கிறவங்களோட சோகம் என்னன்னு, அனுபவிக்கிற எனக்குத் தெரியும்டி. நீ எங்களப் பத்திக் கவலப்படாம கிளம்பு. யாரும் கேட்டா, நான் சொல்லிக்கறேன்..'

'இல்லக்கா..முத்தக்கா எம் மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருக்கு..எனக்கு....'

'அஞ்சு..அவ மனசு எனக்கும் தெரியும்..அவ அப்பவே சுஜாவுக்கு ஆதரவாத்தான் பேசினா..எல்லாப் பெரிசும் சேர்ந்து அவளயும், அம்மாவையும் குழப்பிட்டாங்க. அவ அப்ப குழம்பினது, ரெண்டாவது பொண்ணு ஓடிப் போயிட்டா, மத்தப் பொண்ணு வாழ்க்கை பாதிக்குமேன்னுதான்... உனக்கென்னடி...நீதான் கடைக்குட்டி.. நீ ஓடிப்போறது ஒண்ணும் எங்க வாழ்க்கையை பாதிக்கப் போறதில்லை.. ஏற்கனவே பாதிக்கப் பட்டு இருக்கிற எங்க வாழ்க்கையப் பாக்கறப்ப, உன் முடிவு சரிதான்னு புரிஞ்சுக்குவா..அந்தப் பக்குவம் அவகிட்ட இருக்கு.. நீ தைரியாமா போடி..'

'உன் தைரியத்துலதான்...நான் போறேங்க்கா..அம்மா,அக்காகிட்ட என்ன மன்னிச்சிரச் சொல்லுக்கா..தேங்ஸ் வினோக்கா,மனோ' என்றபடியே இருவர் காலிலும் விழுந்தாள்.

விழுந்தவளை ஆசிர்வதித்தவளாக, 'நல்லாயிருடி..என் செல்லமே..எங்க இருந்தாலும் எங்கள நினச்சுக்கோடி..மறந்துராதே. ஒரே ஓரு ரெக்வெஸ்ட்-டி.. எனக்கோ,முத்தக்கா,சுஜாக்கோ இல்லன்னா கூட மனோவுக்காக நீ ஒரு காரியம் பண்ணனும்..'

'என்னக்கா..'

'எங்களோட எண்ணங்கள் மரத்துப் போக ஆரம்பிச்சாச்சு. ஆனா, மனோ இன்னும் சின்னப் பொண்ணுதான்..உன்ன கூட்டிட்டுப் போக ஒரு ராஜகுமாரன் வந்தமாதிரி, அவளுக்கும் இந்த மனப்புழுக்கத்தில இருந்து விடுதலைகிடைக்க ஒரு ராஜகுமாரன் வரணும்னு கடவுளை ப்ரே பண்ணு அஞ்சு...ப்ளீஸ்..டி..' என்றாள் வினோ நெகிழ்ந்த கண்களுடன்.

'சரி' என்பது போல் கலங்கிய கண்களுடன் தலையசைத்த அஞ்சு 'அவளுக்கு மட்டுமில்லக்கா..உங்க எல்லோருக்கும் சேர்த்து கண்டிப்பா பண்ணுவேங்க்கா...' என்று மனதினுள் நினைத்தவளாய், கிளம்பத் துவங்கினாள்.

'மனோ..அஞ்சு எங்கேன்னு அம்மா கேட்டா இன்னைக்கி எதுவும் வாயத்திறக்காத.. மார்க் ஷீட் வாங்க காலேஜ் போயிருக்கான்னு சொல்லு'. 'சரி' - என்பதுபோல் தலையாட்டினாள் மனோ.

------00000------

16 Comments:

said...

உண்மையான விடுதலை யாருக்கு என்றுதான் தெரியவில்லை.
அனுப்பியவர்களுக்கா.
இல்லை
விட்டு விலகிப் போனவளுக்கா?

எல்லொருக்கும்தான்.
நல்ல கதை சிவா.

said...

Enna Siva, intha thadava Magalir special-a? Soga touching-la ezhuthi irukkenga..

said...

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி வல்லிசிம்ஹன்.

said...

ஆமாம் கவிதா, இந்த முறை தலைப்புக்கு தோன்றிய கருத்தினை வைத்து எழுதினேன். இன்னொரு நண்பரும் படித்த பிறகு, மனசு கனத்ததாகச் சொன்னார். இது நிஜத்தில் நடந்தது, கதைக்காக சில மாற்றங்கள் செய்திருக்கிறேன்.

said...

அடப் பாவிகளா, நல்ல புள்ள பேரைக் கெடுத்துடுவீக போல... எங்கம்மா வேற இந்தக் கதையைப் ப்டிச்சிட்டு, ஒரு மாதிரியா என்னைப் பாத்தாங்க... சிங்கத்த சாச்சுட்டீங்களேய்யா.. நல்லா இருந்துச்சுங்க கதை.. கொஞ்சம் சோகத்த ஏற்படுத்திடிச்சு.

said...

ஒவ்வொரு தலைப்புக்கும் ஒரு ஒரு நிஜ சம்பவமா? எல்லாரும் சொல்றாப்போல, சோகமாத்தான் இருக்கு. எல்லோருக்கும் நல்லது நடந்தா சரி.

- ஸ்ரீ

said...

வசந்த் உங்க நல்ல பெயருக்கு ஏத்த விதமா, ஒருத்தருக்கு விடுதலை குடுத்திருக்கீங்க..உங்கள திட்ட மாட்டாங்க :))...

வசந்த் - ஒரு வசந்தமான பெயராய், அந்தப் பெண்ணின் வாழ்க்கைக்கு வசந்தம் கொடுப்பவராய் இருக்கும் என்பதால், அந்தப் பெயர் வச்சேன்..

நன்றி வசந்த், உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்.

said...

நன்றி ஸ்ரீ.

said...

idhuvum nijak kadhayaa? eppadi sir ivlo varietyaa vishayam nadakkudhu unga lifela?

anyway, it was a good reading.

namba side'um vandhuttup ponga.

said...

அன்பின் BNI,

நம் வாழ்க்கையையும்,நம்மைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையையும் சற்று கவனித்தாலேயே போதும், நிறைய விசயங்கள் கற்றுத்தரும்.

உங்கள் பெயர் சொன்னால், எளிதாக இருக்கும். அதுவரை BNI, என்று சொல்கிறேன்.

இன்னமும் உங்கள் கதையைப் படிக்கவில்லை, படித்து பின்னூட்டமிடுகிறேன்.

உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

said...

நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.

எனது கதையும் சுற்றி நடக்கும் விஷயங்களின் கலவையே.

பெயரில் என்ன இருக்கிறது.
BNI நல்லாத்தான் இருக்கு. வேறு நல்ல புனைப்பெயர் கிடைத்தால் சொல்கிறேன்.

said...

This time the contest is not seems to be so intresting. This is applicable both for the readers and to the participants. I don't know how you feel. :(.

said...

- தேன்கூடு அக் 06 படைப்புகள் விமர்சனம் By யதா


முதிர் கன்னிகளின் பிரச்சனை - மனப்புழுக்கத்திலிருந்து விடுதலை கிடைக்க பிரார்த்தனை என்ற விதத்தில் எழுதியிருக்கிறார் ஆசிரியர். சரளமான எழுத்து. படிக்கும் போது, 5 பெண்கள் என்பதால், யார் என்ன என்ற குழப்பம் வருகிறது. மற்றபடி மிகவும் நல்ல கதை என்று தான் சொல்லவேண்டும். படித்து முடிக்கும் போது, கடைசி பெண்ணுக்குத் திருமணம் என்ற சந்தோசத்தைவிட, இத்தனை பெண்களுக்கும் திருமணம் நடக்க வில்லையே என்ற வேதனைதான் மனதில் நிற்கிறது. இது படைப்பின் வெற்றியா தோல்வியா?! தெரியவில்லை.

said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மணியன்

said...

முதிர் கன்னிகளின் பிரச்சனையை முன்வைத்துதான் எழுதியிருக்கிறேன், ஆகையால், இறுதிப் பெண்ணின் திருமணம் சந்தோஷம் என்பது, அந்தச் சகோதரிகளுக்குத்தான், வாசகர்களுக்கு மற்ற சகோதரிகளின் வாழ்க்கைதான் முன்னிற்க வேண்டும். அந்தவகையில், இதை படைப்பின் வெற்றியாகத்தான் கருதுகிறேன், யதா. :)

said...

வெற்றி பெற்ற அக்டோபர் மாத படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள்!

போட்டியில் கலந்துகொண்டு படைப்புகளை கொடுத்த சக படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள். விடாமுயற்சியுடன், மீண்டும் தெம்புடன் அடுத்த மாதப்போட்டிக்கு ஆயத்தமாக அழைப்பும் உரியதாகட்டும்.

வாக்களித்த அனைத்து வலைப்பதிவர்களுக்கும், வலையில்லா வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

லக்கிலுக் கலாய்க்க ஏதுவாக ஜாலியான தலைப்பாக கொடுப்பாராக! :)