Tuesday, October 24, 2006

ஒரு CTRL+ALT+DEL -க்கு 'ஓ' போடலாமா?


நல்லா வேலை பண்ணிக்கிட்டு இருக்கிற கம்ப்யூட்டர் திடீர்னு மக்கர் பண்ணிச்சுன்னா என்னா பண்ணுவீங்க?

'சொன்னபடி கேளு...மக்கர் பண்ணாதே'-ன்னு கமல் மாதிரி பிரம்ப எடுத்துட்டு பாட முடியுமா என்ன?

மூக்கணாங் கயிறைப் பிடிச்சி இழுக்கிற மாதிரி, உடனேயே கம்யூட்டர் தட்டச்சு பலகையின் 'CTRL+ALT+DEL' - கீயை அமுக்கிட மாட்டீங்க?

ஜம்பமா ஓடிக்கிட்டு இருக்கிற சாப்ட்வேர்களை எல்லாம் ஒரு மூலைக்கு அனுப்பிவிட்டு, 'கம்யூட்டரை நிறுத்தனுமா? என்னா செய்யனும்' னு கேக்க வைக்கிற அந்த கமெண்ட்-க்கு சொந்தக்காரர் யார் தெரியுமா?

'டேவிட் பிராட்லி' என்ற IBM இன்ஜினியர்தான் அதன் காரணகர்த்தா. 1980களில், சொன்ன பேச்சைக் கேக்காத கம்யூட்டர்களை, வழிக்குக் கொண்டுவரும் முயற்சியில் பிராட்லி உட்பட 12 இன்ஜினியர்கள் ஈடுபட, முடிவாய் பிராட்லி 1 நிமிடம் 23 செகண்ட்ஸ்-ல் அதற்கான புரோகிராமை எழுதிமுடித்தாராம்.

இதன்பின்னர் வேறு என்னவோ கண்டுபிடிப்பெல்லாம் செய்தாலும் அவரைப் பிரபலமடையச் செய்ததென்னவோ இந்தக் கண்ட்ரோல்+ஆல்ட்+டெல் தான்.

இது குறித்த பேட்டி ஒன்றில், பிராட்லி கூறியது: "கண்டு பிடிச்சது என்னவோ நானென்றாலும், இதற்குப் புகழ் சேர்த்த பெருமை பில்கேட்ஸ்க்குத்தான். ஒவ்வொருமுறை விண்டோஸ் மக்கர் பண்ணும்போதும், துணை வருவது இந்தக் கண்ட்ரோல்+ஆல்ட்+டெல் தானே, அவர் எப்ப எல்லாம் தோற்கிராறோ, அப்போதேல்லாம் நான் ஜெயிக்கிறேன்" என்றாராம். குசும்புதான் போங்க...

(முன்னரே தெரிந்த தகவலென்றால் மன்னிக்க, இது மற்றவர்கள் ரசிக்க.)

Monday, October 23, 2006

சமூகப் பொறுப்புணர்த்தும் பதிவுகள்

வலையுலகம் மிகப் பரந்தது. இந்தப் ப்ளாக்கும் அப்படித்தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆவல், எதிர்பார்ப்பு.

சிலருக்கு சினிமா. சிலருக்கு இலக்கியம். சிலருக்கு ஆன்மீகம். சிலருக்கு விளம்பரம். சிலருக்கு அரசியல். சிலருக்கு தனிமனித தாக்குதல். சிலருக்கு அரட்டை. சிலருக்கு கொள்கை பரப்பு செயல். சிலருக்கு சமூக ஆர்வம்.

இதில் என்னைப் பொறுத்தவரை, சமூக ஆர்வம் தவிர மற்றவைகள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நின்று போய்விடுகின்றன. சமூக ஆர்வலர்கள், எல்லை தாண்டி வியாபிப்பவர்கள். அது போன்றவர்களின் கருத்துக்கள், இவ்வலையுலகம் ஏறுவது அரிது. சமூக ஆர்வம் இருப்பவர்களுக்கு, அதை வெளிப்படையாய்ச் சொல்வதற்கு பயம் கூட. இதையும் தாண்டி பதிப்பவர்கள் குறைவுதான்.

சமீபமாய் நான் படித்த பதிவுகளில், இரண்டு பதிவுகள் என்னைக் கவர்ந்தது. (மேலும் நிறைய பதிவுகள் இருக்கலாம், நான் படித்ததைச் சொல்கிறேன். உங்களைக் கவர்ந்தவைகள் இருந்தாலும் சொல்லுங்கள்...)

முதலாவது: துள்ளி வருகுது வேல்

"இனி, உன் விழிகள் சிவந்தால்.... உலகம் விடியும்", என்ற கம்யூனிச சிந்தனை எண்ணச் சிதறல்களோடு புதிதாய்த் துவக்கப் பட்டிருக்கிறது. சபாபதி சரவணன் இதற்குச் சொந்தக்காரர்.

சமீபத்திய பதிவு: இதோ மற்றொரு குழந்தை நமது வன்முறைக்கு பலியாகிவிட்டது
இதோ மற்றொரு குழந்தை நமது வன்முறைக்கு பலியாகிவிட்டது


இன்னொன்று: BadNewsIndia - மெத்தனமாக இருக்காதீர்கள்
'நாம் அன்றாட வாழ்க்கையில் எவ்வளவு அலட்சியமாக இருக்கிறோம் என்பதை சுட்டிக்காட்டும் பதிவுகள்!!" என்ற சராசரி உணர்வோடு துவக்கப்பட்டிருக்கின்ற விழிப்புணர்வுப் பதிவு.

அரட்டைகளுக்கும், ஆர்ப்பரிப்புகளுக்கும் இடையே இப்பதிவுகள் என்ன சாதிக்கப் போகின்றன என்பது கேள்விக்குறியாயினும், சில நற்சிந்தனைகளை வலைஞரிடையே தோற்றுவிக்குமானால், அதுவே இவர்களின் வெற்றியாயிருக்கும். அரசியல்வாதிகளைத் திருத்த முடியுமா என்பதனைக் கேள்விக்குறியாக்கி, தனி மனித வாழ்வைத் நற்சிந்தனையாக்கினாலே அது நல்லெதிர்காலத்திற்கு விதையிடும் என எண்ணுகிறேன்.

நான் முன்னரே கூறியது போல், இந்த வலையுலகம் என்பது படிப்பறிவில்லா பாமரர்களால் எழுதப்படுபவை அல்ல. படித்துத் திறனுள்ளவர்களாலேயே எழுதப்படுவன. இந்த வலையுலகம் இப்போது எல்லோரது கவனத்தையும் ஈர்க்கத் துவங்கியுள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இதையுணர்ந்து எல்லோரும் நற்சிந்தனை விதைத்தால் நலம்தான்.

நிறைய பத்திரிக்கையாளர்களும் இப்போது ப்ளாக் பக்கம் வருகிறார்கள். அவர்கள் ப்ளாக்குகள் மூலமாக கேள்விப்படுகின்ற சில நற்சிந்தனைகளை அல்லது எழுப்படுகின்ற பிரச்னைகளை மேலும் விரிவாக்குவார்களேயானால், அது இந்தச் சமூகத்திற்குச் செய்கின்ற நற்செயலாய் இருக்கும். சம்பந்தப்பட்டவர்கள் சிந்திப்பார்களாக.

'பழி சொல்லுதல் எளிது, வழி சொல்லுதல் கடினம்'. - யாரையும் குறை சொல்லுவது என் நோக்கமல்ல. நல்லன நடக்க சில முயற்சிகள் 'ப்ளாக்' மூலம் நடந்தால் நலம் என்பதே என் நோக்கம்.

உங்கள் எண்ணங்களைச் சொல்லுங்கள்...

Friday, October 20, 2006

ஆஹா..வந்திருச்சி..

'ஆஹாங்..ஹாங்..ஆஹாங் வந்திருச்சி...'

'என்னல வந்திருச்சி..ட்ரெய்னா? இல்ல சவாரி எதுனாச்சுமா? '

'அடா...இன்னா பெரிசு நீ..எப்ப பாத்தாலும் சவாரி சவாரின்னு உழைச்சுகினு...தீபாவளி வர்தேன்னு குஜால் மூட்ல ஒரு பாட்ட எட்த்து விடலாம்னான்னா.. நீ குறுக்கால புகுந்துக்கீனு ப்ரேக் போடறீய...பாட விடுமா நீ'

'ஏலே...நீ சும்மானாச்சும் கூவினாலே அத்த பாட்டும்பீய.. '

'பெர்சு..சும்மா வாராதே...வாத்யாரே ட்யூன் போட்ருக்காரு..'ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காதுன்னு' ..ஏதோ சவாரி வார வரைக்கும் நீயும் கேப்பியேன்னுட்டு பாடுனா..ஓவராத்தான் நக்கல் பண்றீயே..'

'ச்சரில..பாண்டி..சரி....எட்த்து விடு ...கேக்கறம்ல..'..

'அப்படி வளிக்கி வா நைனா..இப்பக் கேளு...ம்க்கும்... 'ஆஹாங் வந்திருச்சு...ஆசையில் ஓடிவந்தேன்....பாலோ பலமோ தேவயில்ல..தூக்கமில்ல...'

'ஏலே....நிறுத்துல.. என்னா நீ பழைய பாட்ட படிக்கா?'

'யோவ்..பெர்சு..த்திருப்பி த்திருப்பி நீ நம்மள ராங் சைட்ல க்ராஸ் பண்ற பாரு. நா(ன்) பாட்ட பாடுறனா..இல்ல படிக்கிறனா?

'எல..நீ பாடத்தாம்லா செய்தா..எங்க ஊர்ல பாட்ட படிக்கன்னுதாம்ல சொல்லுவோம்..'

'என்னா ஆளுங்கய்யா நீங்க.. பஸ்ஸு நிக்கி..வயிறு பசிக்கி..பாட்டு படிக்கி..'ம்பீங்க...எத்தயும் முள்சா சொல்லத் தெரியாதா?'

'ஆமாலெ...நீங்க மெட்ராஸ்ல இஸ்துக்குனு..குந்திக்குனு-ன்னு பேசுவீக...நாங்க நிக்கி..பசிக்கி..படிக்கி-ன்னு சொல்றதெல்லாம் உங்களுக்கு குத்தமா தான்ல தெரியும், இங்கிலீசுல 'ப்ரெஸெண்ட் கண்ட்னியூயஸ்' ன்னு சொல்ற மாதிரி..இன்னமும் நடந்துக்கின்னு இருக்கின்னுட்டு அர்த்தம்' பஸ்ஸு நின்னுகிட்டு இருக்கு, வயிறு பசிச்சுகிட்டு இருக்கு..பாட்டு படிச்சுகிட்டு இருக்குன்னு.... நெல்லைத்தமிழ் ஒரு இலக்கணத் தமிழ்ல..'


'பெரிசு...சும்மா அந்தக்கால எட்டாங் கிளாஸ் படிச்சுட்டேன்னுட்டு....தமிழு..இங்கிலிசுன்னுட்டு கண்ட்னியூட்டின்னு' பீலா வுட்டுக்கினு இருக்காத..நானாச்சும் ஒழுங்கா ஒரு லோக்கல் பாஷை பேசிக்குனு இர்க்கேன்..உனக்கு எதுனாச்சும் ஒழுங்கா வர்தா.. மெட்ராசையும், திருநவேலியையும் போட்டு குழப்பிக்குனு இருக்கே'


'சரிலே..சரிலே.. இளவட்ட ராசா நீ...உங்கிட்ட பொல்லாப்பு எதுக்குல.. பழைய பாட்ட படிக்கிறீயேன்னு கேட்டதுக்கு இம்புட்டு பேசறீயே'

'பெரிசு.. எம்ஜியார், சிவாஜி, கமலு, ரஜினின்னுட்டு பழைய பஞ்சாங்கம் பாடிக்கிட்டு இருக்காத.. இத்து லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவோட பாட்டு. அவரே பாடியிருக்காரு. சும்மா சூப்பர் ஹிட்டு பெர்சு..நம்ம குரல்ல பாட்னாக் கூட சூப்பராகீது''என்னது சிம்புவோட பாட்டா?'

'அட என்னா பெரிசு நீ..இவ்ளோ அவுட் டேட்டா இர்க்கே நீ', 'சும்மா நச்சுன்னு நயன் தாரா உதட்ட கவ்வி இழுத்துக்கின்னு ஒரு ஸ்டில் குடுத்துதே..நீ கூட வாயப் பொழந்துக்கினு பாத்தியே..'

'எலே..பெரிசு..பெரிசுன்னு சொல்றீய தவிர..மரியாத குடுக்க மாட்டக்கா பாத்தியா'

'சும்மா ஃபீலிங் உடாத பெரிசு..நீ என்ன கலாய்க்கலியா.. அத்த மாதிரிதான் இதுவும்..சரி மேட்டருக்கு வா. 'நயனுக்கு லிப்-டு-லிப் கடிச்ச போஸ்டர் பாத்தல்ல..அந்தப் படத்துலதான் பாடியிருக்காரு. படம் பேரு 'வல்லவன்'. தீபாவளிக்கு வருது.'

'எலே..அது கல்யாணராமன்ல..மலேசியா வாசுதேவன் பாடுன பாட்டுல்லா, அதே பாட்டையா இதுலயும் போட்டிருக்கானுவ'

'ஆமாம் பெரிசு...அது இளையராஜா போட்ட ட்யூனு. அத்த அவரு புள்ளையாண்டான் யுவன் சங்கர் ரீமிக்ஸ் பண்ணி 'வல்லவன்'ல போட்டிருக்காரு'

'அப்பா 'சகலகலாவல்லவன்' கமலுக்கு போட்ட ட்யூன, புள்ள 'வல்லவன்'னு சிம்புவுக்கு போட்டுருக்காக்கும்.'

'பெரிசு..பாட்ட கேட்டியா..போனியான்னுட்டு இல்லாம.. சும்மா அரசியல் பண்ணாத..பாட்ட கேக்கறியா.. டீக்கடை நாயர போடச் சொல்றேன்'

(பெரிசு தலையாட்ட, டீக்கடை நாயரை பாட்டு போடச் சொல்கிறார்,பாண்டி. பாட்டு பாடுகிறது. நீங்க கேக்கணுமா.க்ளிக் பண்ணுங்க')

'எப்பா..எப்பா...போதும்ப்பா..நிறுத்து..நிறுத்து..'

'இன்னா பெரிசு..போதும் போதுங்கற..பாட்டு புடிக்கலியா'

'புடிக்கலியாவா...பின்ன..பாண்டி....இந்தப்பாட்டு அந்தக் காலத்துல எவ்வளவு பேமஸு தெரியுமா? மலேசியா சும்மா அசத்தலா பாடியிருப்பாரு. கமலோட வெகுளித்தன கேரக்டர அப்படியே பாட்ல கொண்டு வந்திருப்பாரு. அதேயே மெச்சூர்டு கமலுக்கும் மலேசியா வித்தியாசம் காட்டி பாடியிருப்பாரு. ரீமிக்ஸ் போட்டு கெடுத்துப் புட்டானே. கோச்சுக்காதே பாண்டி. எப்படித்தான் கேக்கறியோ?'

'போ பெரிசு..உனக்கு பிடிக்கனாங்காட்டியும் ச்சும்மா குறை சொல்லாத.'

'ரீ மிக்ஸ்-ன்னு பாட்டச் சிதைக்காம போட்டா நல்லாருக்கும். முழு பாட்டயும் இப்படி கெடுத்திருந்தா பின்ன என்ன சொல்லுவம்னுல நினைக்கா. இதே யுவன், 'அறிந்தும் அறியாமலும்' படத்துல 'தீ பிடிக்க..தீ பிடிக்க' வித்யாசமா பண்ணியிருந்தாரு. நல்லா இருந்துச்சு. ரஹ்மான் கூட, வாத்யாரோட 'தொட்டால் பூ மலரும்' பாட்ட நல்லா ரீமிக்ஸ் பண்ணியிருந்தாரு. கேக்கற மாதிரி இருந்திச்சு. ஆனா இத்து எனக்குப் புடிக்கல பாண்டி. 'வல்லவன்' சிம்பு இல்ல, இந்தப் பாட்ட 'கொன்னவன்' சிம்பு'' "

'சரி..சரி.. டென்ஷனாவாத.. பழைய பாட்டு ரீமிக்ஸ் கேட்டதுக்கு இம்புட்டு பேசறீயே..கூல்டவுன் ஆகு'

'என்னவே போ பாண்டி..இந்தக் காலத்து பிள்ளலேல்லாம் ஒரு தினுசாத்தான் இருக்கு. ட்ரெய்ன் வார சத்தம் கேக்குது. வா பொழப்பப் பாப்போம்'

பாண்டியும், பெரிசும் ஸ்டேசன் நோக்கி நடக்கத் துவங்குகின்றனர். நாயர் கடையில் 'லூசுப் பெண்ணே..லூசுப் பெண்ணே... பாடல் ஒலிக்கத் துவங்குகிறது.


'அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்'

Sunday, October 08, 2006

ராஜகுமாரன் - தேன்கூடு போட்டிக்கு

"காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
நேத்து வர சேர்த்து வச்ச ஆசைகள் வேகுதடி
நீயிருந்து நான் அணச்சா நிம்மதி ஆகுமடி"

மொட்டைமாடியில் டேப் ரிகார்டர் பாடிக்கொண்டிருந்தது.

Image and video hosting by TinyPic


'ஏய்..மனோ, இந்த அஞ்சுதான் சத்தமா மொட்ட மாடில பாட்டு கேட்டுகிட்டு இருக்கான்னு நினைக்கிறேன்..கொஞ்சம் சத்தத்த குறைச்சு வச்சு கேக்கச் சொல்லு, பெரியக்கா வந்தா கத்தப் போகுது. " -அடுப்பிலிருந்த குழம்பைக் கிண்டியபடி வினோதினி சிடுசிடுத்தாள்.

"விடுக்கா.. சின்னப்புள்ள தானே.."

"ம்க்கும்.. காலேஜ் கடைசி வருசம் கடைசிப் பரீட்சை எழுதியாச்சு..இன்னும் என்னடி சின்னப்புள்ள.. நாங்கள்ளாம் இப்படியா வளர்ந்தோம்.. கிடைக்கிற சுதந்தரத்த காப்பாத்திக்க தெரியணும், பெரியக்கா வந்து கத்திச்சுன்னா, கண்ணக் கசக்கிட்டு நிக்கும், அப்பவும் நாமதான் 'அழாதேடி'ன்னு சமாதானம் பண்ணனும். போ..போய் சொல்லி கூட்டிக்கிட்டு வா"

"சரிக்கா..நீ டென்ஷனாகாத.." என்றபடியே தங்கையை அழைத்துவர மாடிக்குப் போனாள், மனோ.

------00000------

அஞ்சு அந்த வீட்டின் செல்லப் பெண். ஐந்தாவது பெண் என்பதால், அஞ்சனா என்று வைத்தப் பெயர், அஞ்சு என செல்லப் பெயராயிற்று. 'அஞ்சு பெத்தா அரசனும் ஆண்டி'-ன்னு பழமொழி. ஆண்டின்னு சொல்ற அளவிற்கு இல்லாமல், சிறுசிறு சிரமங்களோடே அவர்கள் குடும்பம் நடந்து கொண்டிருந்தது. அஞ்சு பொண்கள்ள, ஒருத்திக்குக் கூட கல்யயணம் செய்து வைக்க முடியலையே, என்ற அப்பாவின் வருத்தம், அவரின் சித்த சுகவீனத்திற்கு வித்திட்டது. அம்மாவும், மூத்த அக்கா முத்துவும்தான் கண்டிப்புடன் குடும்ப நிர்வாகிகள். அம்மாவைவிட, முத்தக்காவிடம் எல்லோருக்கும் பயம். அரசு அலுவலகமொன்றில், மூத்த கணக்கராகப் பணி. வயது முப்பத்தியெட்டாகிறது. திருமணக் கனவுகளை கலைத்துவிட்டு, தங்கையரே குழந்தைகள் என்ற எண்ணத்தில் காலத்தை ஓட்டிக்கொண்டிருப்பவர்.

------00000------

மாடிப்படியேறி வரவர சத்தம் அதிகமாகிக் கொண்டே வந்தது. நிசமாலுமே சத்தம் அதிகம்தான். 'முத்தக்கா வந்தா, இந்தப் பாட்டுக்கு மேலேயே பாட்டு வாங்க வேண்டியதுதான், இவ்வளவு சத்தமா வச்சிட்டு என்ன பண்ணிகிட்டு இருக்கா' என்று எண்ணிக் கொண்டே, மேலே வந்து அவளறியாமல் மெல்ல எட்டிப் பார்த்தாள். யாரையோ பார்த்து கையசைத்துக் கொண்டிருந்தாள், அஞ்சு. ஆச்சரியமானவளாக, 'ஏய்...அஞ்சு..யாருக்குடி கை காட்டுறே' என்று சினேகிதமாகக் கேட்டபடியே வந்தவள், அஞ்சு பார்த்துக் கொண்டிருந்த திசை நோக்க, 'வேகவேகமாக எதிர் வீட்டு பையன் உள்ளே போனது தெரிந்தது.

'ஏய்..என்னடி..அஞ்சு.. அவனுக்கா நீ கை காட்டுனே..' - மனோவின் குரலில் அதிர்ச்சி தெரிந்தது.

'கத்தாத மனோக்கா.. மெல்லப் பேசு. கீழே சின்னக்காவுக்கு கேக்கப் போகுது' - பயந்தவளாக அஞ்சு.

'சரி..சரி...நீ இப்ப என்ன பண்ணின.. அதச் சொல்லு'

'ஆமா..அவனுக்குத்தான் கையக் காட்டுனேன்..நீ யார் கிட்டேயேயும் சொல்லாதே..'

'என்ன தைரியம்டி உனக்கு. முத்தக்காவுக்கு தெரிஞ்சா, கொன்னே போட்ரும்.. நா ஏதோ பாட்டு சத்தத்த குறைச்சு கேளுன்னு சொல்லிட்டுப் போலாம்னு வந்தா, நீ இந்த வேல பண்ணிக்கிட்டு இருக்கே..'

'இது அவன் வாங்கிக் கொடுத்த கேசட்தான். அவனுக்கும் கேக்கட்டுமேன்னுதான் சத்தமா வச்சேன்'

'ஓ..ஓ..அப்ப இது ரொம்ப நாளா நடக்குது போல..' என்றபடியே கேசட் டப்பாவை எடுத்துப் பார்க்க, 'ஜெயச்சந்திரனின் காதல் கீதங்கள்' - அன்புடன் வசந்தி' என்று எழுதப்பட்டிருந்தது. கூர்ந்து பார்த்தபோது, 'வசந்த்' திருத்தி எழுதப்பட்டு வசந்தியாகியிருப்பது தெரியவந்தது.

'பேரு வசந்த்-ஆ'

'ஆமாம்..'

'எத்தன நாளாடி இந்தப் பழக்கம், கடைக்குட்டின்னு சமர்த்துன்னு' அடிக்கடி அக்கா சொல்லுமேடி..இப்படி பண்ணிகிட்டு இருக்கே'

'ஃபைனல் இயர் ஆரம்பிச்சப்போதான் பேச ஆரம்பிச்சது. 'பந்த்'னு திடீர்னு பஸ் ஓடாதப்ப, இவந்தான் பைக்ல கொண்டுவந்து விட்டான். அப்போ பழக ஆரம்பிச்சது. '

'உனக்கு ரொம்பதாண்டி தைரியம். ரெண்டாவது அக்கா சுஜாவுக்கு அந்த ரகு லெட்டர் கொடுத்தப்ப என்ன நடந்தது, உனக்கு நினனவில்லையா? அவனப் பிடிச்சு போலிஸ் கம்ப்ளெயிண்ட் கொடுத்து, அம்மாவும், அக்காவும் ஆர்ப்பாட்டம் பண்ணினது ஞாபகமில்லையா?. இன்ன வரைக்கும், அதத்தான அம்மா குத்திக்குத்திக் காட்டுது. அதுனாலதான்னு நம்ம வீட்டுக்கு ஒரு மாப்பிள்ள கூட வரமாட்டாங்கிறான்னு சொல்லிசொல்லி, அது இப்ப வாயில்லாப் பூச்சியா இருக்கு. அதல்லாம் பாத்துமாடி, இது மாதிரி பண்ணிகிட்டு இருக்கே. இது ரொம்ப அதிகம்டி'

'இல்லடி மனோ.. நாங்க ரொம்ப சீரியஸா லவ் பண்றோம். அவனுக்கும் சதர்ன் ரெயில்வேல கிளார்க் வேலை கிடைச்சிருக்கு. இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்றான்.. அவங்க வீட்ல எல்லாம் சம்மதம் வாங்கியாச்சு...'

'என்னடி..சொல்றே.. '

'போன செமஸ்டர் கடைசி பரீட்சை எழுதி முடிச்சப்போ, அவங்க வீட்டுக்குக் போனோம், அவங்க வீட்ல எல்லோரும் நல்ல மாதிரி. அவங்க அம்மாவுக்கும் பிடிச்சிப் போச்சி. நம்ம கொஞ்சம் உசந்த சாதின்னு பயப்படுறாங்க'

'அடப்பாவி...செல்லம் செல்லம்னு உன்னக் கொஞ்சினா, இப்படி ஊமைக்கோட்டானா இவ்வளவு வேலை செஞ்சு வச்சிருக்கே'

'ப்ளீஸ்..ப்ளீஸ்...இப்போதைக்கு இத வேற யார்கிட்டேயும் சொல்லாதடி..ப்ளீஸ்'

அதற்குள் கீழேயிருந்து வினோதினி குரல் கொடுக்கவே, 'சரி..சரி..அக்கா மேல வரதுக்குள்ளே, கீழே போலாம், அந்த கேசட் டப்பாவை வெளியே தெரியும்படி வைக்காதே..வா' என்றபடியே மனோ முன்னே போக, அஞ்சு தொடர்ந்தாள்.

------00000------
காதலர்க்கு, நொடிகள் கூட வருடங்களாகும் அவர்கள் அருகிலில்லாத போது, வருடங்கள் கூட நொடிகளாகும் அருகிலிருக்கும் போது. அஞ்சுவுக்கும் அப்படித்தான் இருந்தது. மாதங்கள் இரண்டு வேகமாய் உருண்டு ஓடியது. அஞ்சுவுக்குத்தான் எதிலும் பிடிப்பே இல்லை. தேர்வு முடிவுகள் வெளியாகி, அவளும் தேர்ச்சி பெற்றிருந்தாள். அதை முத்தக்கா, மகிழ்ச்சியாய் கொண்டாடிய போது கூட, இவள் சுரத்தே இல்லாமலிருந்தாள். முத்தக்கா நிர்வாகத்தில் கில்லாடி என்றால், வினோ மற்றவர்கள் மனதைப் படிப்பதில் கில்லாடி. இவளின் முகவாட்டத்தைக் கவனித்தவள், மனோவிடம் 'ஏண்டி..இது எப்ப பாத்தாலும் முகத்த தொங்கப் போட்டுகிட்டே இருக்கு..மேல படிக்கணும்னு நினைக்கிறாளா? என்னான்னு கேளேண்டி..' என்க, 'அதெல்லாம் ஒன்னுமில்லக்கா..வெளியே போய் வந்துக்கிட்டு இருந்தவள, திடீர்னு வீட்டுக்குள்ளேயே இருன்னா..அதான்.. எல்லாம் பழகிடுவா..நீ கவலைப்படாதே..' என்று சொல்லிக்கொண்டே, அஞ்சுவின் இருக்குமிடம் நோக்கிச் சென்றாள்.
------00000------
'ஏண்டி அஞ்சு, எப்ப பார்த்தாலும் முகத்த தொங்கப்போட்டுகிட்டு இருக்கே..வினோக்கா கத்துது பாரு'

'என்னால முடியலடி..நாளைக்கு ரிஜிஸ்டர் ஆபிசுல கல்யாணம் பண்ணிக்க ஏற்பாடு பண்ணியிருக்கான் வசந்த், உங்களுக்கு துரோகம் பண்றனோன்னு இருக்கு' என்றாள் கையிலிருந்த வசந்தின் புகைப்படத்தைப் பார்த்தபடி.

'..சும்மாச்சும்மா அழாதே..,வினோ உள்ள வரப்போகுது..' என்று சொல்லி முடிக்குமுன் அறைவாசலில் வினோ வந்து நின்றாள். 'ஏன் அஞ்சு அழறே..' என்றபடி அருகில் வந்தவள், அவள் எதையோ மறைக்க எத்தனிப்பதை கவனித்தவளாக, 'என்னடி அது' என்று பிடுங்கினாள்.

வசந்தின் போட்டோ, வசமாய் மாட்டிக் கொண்டது அவள் கைகளில்.

'யாருடி இவன்..மூணாவ்து வீட்டுப் பையன் மாதிரி இருக்கான். இது எதுக்கு உங்கிட்ட இருக்கு' என்றபடியே, போட்டோவைத் திருப்பிப் பார்த்தவள், அதில் எழுதியிருந்த வாசகத்தைப் படித்தாள். 'என் நிழல்படத்தோடு சேர்ந்திருக்கும் என் கண்ணே.. நிஜத்தோடு எப்போது சேர்வாய்..வழிமேல் விழியாய்..வசந்த்'

'என்னடி..இது..இப்படி எழுதியிருக்கான்.. லவ்-வா?'.

இருவரும் மொளனமாக இருக்க...'என்னடி..கல்லுளி மங்கிகளா..கேக்கறதுக்கு பதில் சொல்லுங்கடி..'

'ஆமாங்க்கா..நானுந்தாக்கா..' என்றபடியே விசும்பத் தொடங்கினாள் அஞ்சு.

'நீயா...' என்று வாய் பிளந்தவள், 'உனக்கும் தெரியுமாடி..' என்றபடியாய் மனோவை முறைக்க,

'அவளத் திட்டாதக்கா..அவளுக்கு ஒன்னும் தெரியாது.."நாந்தான் எல்லாம் பண்ணினேன்"..என்றபடியாய் எல்லாவற்றையும் சொன்னாள். என்ன மன்னிச்சுருக்கா..எனக்கு வசந்தும் வேணும்..நீங்களும் வேணும்..இப்ப என்ன பண்றதுன்னு தெரியலை' - தேம்பினாள்.

'என்னால நம்ப முடியலடி..நீ எவ்வளவு சின்னப் பொண்ணுன்னு நினச்சிருந்தேன்..இவ்வளவு தேறியிருக்கே, நா இத எதிர்பார்க்கலடி..இவ்வளவு பண்ணினவ ஏண்டி இன்னும் இங்க இருக்கே..அவங் கூடவே ஓடிப்போயிருக்க வேண்டியதுதானே'

'வினோக்கா..என்னக்கா இப்படி பேசறே..'

'பின்ன எப்படிடி சொல்லனும்கிற..நான் கோபத்தில அப்படி பேசல..நிசமாத்தான் சொல்றேன்..' என்ற வினோவைப் பார்த்து,

'என்ன வினோ சொல்ற, சுஜாவோட கதை தெரிஞ்...' என்று ஆரம்பித்த மனோவைத் தொடரவிடாமல், 'தெரியும்டி...மனோ.. அதனாலதான் சொல்றேன்.. லெட்டர் கொடுத்தான்..லெட்டர் கொடுத்தான்னு சொல்லிச்சொல்லியே அவ மனசப் புண்படுத்தி, அது இப்ப நம்மகிட்டயே வாய்கொடுத்து பேசாத பூச்சியா இருக்கு. அதுமாதிரி, இதுவும் இவன லவ் பண்ணிட்டு, விட்டுட்டமேன்னு மூலையில அழுதுகிட்டு இருக்கச் சொல்றியா.. சுஜா என்ன தப்புடி பண்ணினா..மூத்தவளுக்கு வரதட்சனைக்கு கொடுக்க வசதியில்லைன்னுட்டு, கல்யாணம் தள்ளிப்போய்கிட்டு இருக்க, சுஜாவோட அழகப் பார்த்து வரதட்சனையில்லாம கல்யாணம் பண்ணிக்கிறேன்னு லெட்டர் கொடுத்தவன, பண்ணிக்கட்டுமா?ன்னு கேட்டா..அதுக்கு அவ மேலேயும் பழி..அவன் மேலேயும் பழி..கடைசியில யாரு வாழ்ந்தா? அப்புறம் அவள விட்டுட்டு உனக்கு கல்யாணம் பண்றதா..எனக்குப் பண்றதான்னு குழப்பம்.. கல்யாண வயசு காத்திருக்குமா...அது தாண்டிப்போயாச்சு.. அதச் சந்தர்ப்பமா வச்சுகிட்டு ரெண்டாந்தாரமா வர்ரையா..மூணாந்தாரமா வர்ரையான்னு கேக்கற கூட்டம் வேற, இந்தக் கூட்டத்தில நீ சிக்க வேண்டாம் அஞ்சு. ' என்று மூச்சிரைக்கப் பேசியவள், சற்று நிறுத்தினாள்.

'அந்தப் பையனப் பத்தி கேள்விப்பட்டிருக்கேன். அவங்க குடும்பமும் நல்ல குடும்பந்தான். நல்லா வச்சிருப்பாங்கன்னு நம்பிக்கையிருக்கு. நீயும் புத்திசாலிப் பெண்தான். நல்லா வாழ்வேடி. வயசும், வாலிபமும் இருக்கையிலயே வாழ்க்கையை அனுபவிக்கனும். அதத் தொலைக்கிறவங்களோட சோகம் என்னன்னு, அனுபவிக்கிற எனக்குத் தெரியும்டி. நீ எங்களப் பத்திக் கவலப்படாம கிளம்பு. யாரும் கேட்டா, நான் சொல்லிக்கறேன்..'

'இல்லக்கா..முத்தக்கா எம் மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருக்கு..எனக்கு....'

'அஞ்சு..அவ மனசு எனக்கும் தெரியும்..அவ அப்பவே சுஜாவுக்கு ஆதரவாத்தான் பேசினா..எல்லாப் பெரிசும் சேர்ந்து அவளயும், அம்மாவையும் குழப்பிட்டாங்க. அவ அப்ப குழம்பினது, ரெண்டாவது பொண்ணு ஓடிப் போயிட்டா, மத்தப் பொண்ணு வாழ்க்கை பாதிக்குமேன்னுதான்... உனக்கென்னடி...நீதான் கடைக்குட்டி.. நீ ஓடிப்போறது ஒண்ணும் எங்க வாழ்க்கையை பாதிக்கப் போறதில்லை.. ஏற்கனவே பாதிக்கப் பட்டு இருக்கிற எங்க வாழ்க்கையப் பாக்கறப்ப, உன் முடிவு சரிதான்னு புரிஞ்சுக்குவா..அந்தப் பக்குவம் அவகிட்ட இருக்கு.. நீ தைரியாமா போடி..'

'உன் தைரியத்துலதான்...நான் போறேங்க்கா..அம்மா,அக்காகிட்ட என்ன மன்னிச்சிரச் சொல்லுக்கா..தேங்ஸ் வினோக்கா,மனோ' என்றபடியே இருவர் காலிலும் விழுந்தாள்.

விழுந்தவளை ஆசிர்வதித்தவளாக, 'நல்லாயிருடி..என் செல்லமே..எங்க இருந்தாலும் எங்கள நினச்சுக்கோடி..மறந்துராதே. ஒரே ஓரு ரெக்வெஸ்ட்-டி.. எனக்கோ,முத்தக்கா,சுஜாக்கோ இல்லன்னா கூட மனோவுக்காக நீ ஒரு காரியம் பண்ணனும்..'

'என்னக்கா..'

'எங்களோட எண்ணங்கள் மரத்துப் போக ஆரம்பிச்சாச்சு. ஆனா, மனோ இன்னும் சின்னப் பொண்ணுதான்..உன்ன கூட்டிட்டுப் போக ஒரு ராஜகுமாரன் வந்தமாதிரி, அவளுக்கும் இந்த மனப்புழுக்கத்தில இருந்து விடுதலைகிடைக்க ஒரு ராஜகுமாரன் வரணும்னு கடவுளை ப்ரே பண்ணு அஞ்சு...ப்ளீஸ்..டி..' என்றாள் வினோ நெகிழ்ந்த கண்களுடன்.

'சரி' என்பது போல் கலங்கிய கண்களுடன் தலையசைத்த அஞ்சு 'அவளுக்கு மட்டுமில்லக்கா..உங்க எல்லோருக்கும் சேர்த்து கண்டிப்பா பண்ணுவேங்க்கா...' என்று மனதினுள் நினைத்தவளாய், கிளம்பத் துவங்கினாள்.

'மனோ..அஞ்சு எங்கேன்னு அம்மா கேட்டா இன்னைக்கி எதுவும் வாயத்திறக்காத.. மார்க் ஷீட் வாங்க காலேஜ் போயிருக்கான்னு சொல்லு'. 'சரி' - என்பதுபோல் தலையாட்டினாள் மனோ.

------00000------