Saturday, September 02, 2006

தவிப்பு - தேன்கூடு போட்டி

மணி காலை ஒன்பது பதினைந்து. ஆழ்வார்பேட்டையில் இருந்த அந்த சாஃப்ட்வேர் அலுவலகம் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கியிருந்தது .

"டேய் ஜெய் மச்சி, இன்னக்கி எதும் 'கிளையன்ட் சைட்' போறீயாடா?"

"எதுக்குடா கேக்குறே, காரியம் இல்லாம காத கடிக்க மாட்டியடா நீ"

"இல்லடா, பாரீஸ் கார்னர்-ல இருக்கற என்னோட கிளையன்ட் சைட் வரைக்கும் போகனும், பஸ்ல போனா, போக வர லேட்டாயிடும், அதான் உன் பைக்க குடுத்தா சட்டுனு போயிட்டு, பட்டுன்னு வந்துருவேண்டா" என்றான் சூர்யா.

"ஏண்டா, நாயே, உங்கிட்டதான் லைசென்ஸ்ஸே கிடையாதே, அதுவும் இப்பதான் கியர் வண்டிய ஓட்ட கத்துகிட்டு இருக்கே, அதுக்குள்ள மவுண்ட் ரோடு சவாரி கேக்குதோ, போடா ஒழுங்கா பஸ்ஸிலேயே போ"

"அவசரம் புரிஞ்சிக்க மாட்டியேடா, போற வழியிலே என் ஆள பிக்கப் பண்ணி, ஒரு காபி சாப்பிட்டுட்டு அவ எழுதப்போற எக்ஸாம்க்கு 'ஆல் த பெஸ்ட்' சொல்லிட்டு காலேஜ்ல ட்ராப் பண்ணனும்டா, கொஞ்சம் கருணை பண்ணுடா, மச்சி"

"என்னக்கி அவ அப்பன்கிட்ட மாட்டிகிட்டு உத வாங்கப்போறியோ தெரியலை, சரிசரி..இந்தா கீ.. மாசக் கடைசி, மாமா -கிட்ட மாட்டிக்கிடாம ஜாக்கிரதையாகப் போ"

எச்சரிக்கையோடு நண்பன் கொடுத்த சாவியை வாங்கிக்கொண்டு யமாஹாவை உதைத்துக் கிளம்பினான் சூர்யா.

யமாஹா-ன்னாலேயே ஒரு கிக்-தான், அதோட சத்தமே ஒரு செக்ஸி-தான்..ம்ம் எப்ப இந்த மாதிரி ஒரு வண்டி வாங்கப்போறமோ?" என்று மனதில் எண்ணியபடி வண்டியை ஓட்டியவன், அவள் வழக்கமாய் வரும் பஸ் நிறுத்தத்திற்கு சற்று முன்னர் ஓரமாக நிறுத்தினான்.

பஸ் நிறுத்தத்தில் வசந்தி நிற்கிறாளா? என்று பார்த்தான். பத்து நிமிடம் ஒடியிருக்கும்.

"சினேகிதனே..சினேகிதனே ரகசிய சினேகிதனே..." - மொபைல் சிணுங்கியது. வசந்திதான் அழைத்திருந்தது.

"ஹாய் வசந்தி, 'ஆல் த பெஸ்ட் பார் த எக்ஸாம்' மா. கொஞ்சம் லேட்டாயிடுச்சி...எங்க இருக்க நீ இப்ப?" என்றான் கனிவாய்.

"மண்ணாங்கட்டி...உனக்காக எவ்வளவு நேரம் காத்து நிக்கறது.. எக்ஸாமுக்கு நேரமாயிடுச்சுன்னு சுசிலாவோட வந்திட்டேன். அட்லீஸ்ட் லேட்டாகும்னுவாது சொல்லியிருக்கலாமில்ல...யோசிக்கவே மாட்டியா இங்க ஒருத்தி காத்துகிட்டு இருக்காளேன்னு..."

"ஹேய்..அது வந்து ..ஃபிரண்டு கிட்ட உனக்காக கியர் வண்டி வாங்க லேட்டாயிடுச்சு..." முடிக்கும்முன்னரே மறுமுனை அலறியது..

"மண்ணாங்கட்டி...லைசன்ஸ் வாங்க முன்னாடி, எதுக்கு இது மாதிரியெல்லாம் பண்ற..உன்கிட்ட இந்த பந்தா எல்லாம் கேட்டனா....என்னக்காவது போலிஸ்ல மாட்ட போற...போ.. சரி, எனக்கு நேரமாச்சு, நான் எக்ஸாம் ஹாலுக்குப் போறேன். சாயந்திரமாவது நேரத்துக்கு வா" என்று சொல்லி துண்டித்தது மறுமுனை.

"ம்ம்..ச்சே..எல்லாம் இந்த ஜெய்யால..கொஞ்சம் அலம்பல் பண்ணாம சாவியக் குடுத்திருந்தான்னா, வசந்தியை புடிச்சிருக்கலாம். எல்லாம் நேரம்..காலையிலேயே கடி வாங்கனும்னு. ம்..ம்..அவளும் பாவம்தான், எவ்வளவு நேரம் காத்த்துகிட்டு இருப்பா என்று மனதைச் சமாதானம் செய்து கொண்டு வண்டியை உதைத்தான், பாரீஸ் கார்னரை நோக்கி.

மனதில் காதலின் கனம் குறைய, வேலையின் தாமதம் சிந்தையில் உறைக்க, கவனமாய் வண்டியை சாலையில் செலுத்தினான்.

மவுண்ட் ரோட்டில், சீரான யமஹாவின் சத்தம் நன்றாயிருந்தது. அங்கும் இங்கும் நிறைய ட்ராபிக் கான்ஸ்டபிள் தென்படவே, மெல்ல உஷாரானான். "மாசக் கடைசின்னா சரியா ஆஜராயிடுராங்களே.." என்று நினைத்தவனுக்கு லேசாய் பயம் தொத்திக் கொண்டது. வசந்தி வாயால வேற, 'மாமா கிட்ட மாட்டுவேன்னு' சபிச்சிருக்கா. கவனமாயிருக்கனும், இல்லன்னா, சாயந்திரம் போய் திட்டு வாங்கனும்.

தனியா போனா, ஈஸியா புடிச்சிருவானுக, கூட்டத்தோட நடுவில போயிரனும், என்று திட்டமிட்டு, அது மாதிரியே போனான். இரண்டு சிக்னல் ஒட்டி இருந்த போலீஸ் கும்பலிடமிருந்து தப்பியாகிவிட்டது.

மாட்டினா கொடுக்க காசு இருக்கிறதா என்று யோசித்தான், பர்ஸில் நூறு ரூபாயாய் இருப்பது நினைவுக்கு வந்தது. இருபது ரூபாயாய் சில்லறை இருந்தால், ஒரு இருபது கொடுத்து தப்பிக்கலாம், இப்ப மாட்டினா நூறும் போகுமே என்ற சிந்தனையோடு வண்டி ஓட்டியவன், ஸ்பென்சர் அருகே வந்ததை உணர்ந்தான்.

அடடா..இந்த சிக்னல்லயும் இருக்கானுவளா? என்று நினைத்தவன், ஒரு ட்ராபிக் போலீஸ் கூட்டமே இருப்பதைப் பார்த்தான், ஏற்கனவே பிடிபட்டிருந்தவர்கள் கையைப் பிசைந்து கொண்டிருந்தார்கள்.

"சரி...லாஜிக்கப் புடி.. கூட்டத்தோட போலாம்னு, சட்டுன்னு ஒரு ஆட்டோ பின்னால ஒதுங்கி, ஆட்டோவைப் பின் தொடர்ந்தவன், சிக்னலைக் கவனிக்கத் தவறிவிட்டான். ஆட்டோ 'மஞ்சள்' சிக்னலில் அடித்துச் செல்ல, நம்மால் மஞ்சளில் கடக்க முடியாது என எண்ணியவன் சற்றே 'ப்ரேக்' அடிக்க, அதற்குள் 'சிவப்பு' விளக்கு வரவே வண்டியை நிறுத்த முற்பட்டான். வண்டி இழுத்துக் கொண்டே போய், நிறுத்த வேண்டிய கோட்டைத் தாண்டி நின்றது, சரியாக அங்கு நின்று கொண்டிருந்த ட்ராபிக் கான்ஸ்டபிள் முன்னால்.

சூர்யாவிற்கு 'திக்' கென்றிருந்தது. போச்சுடா..இன்னக்கி நம்ம நேரம் இங்கேயும் வேலை செய்யத் தொடங்கிவிட்டது. வசந்தி மற்றும் ஜெய்யின் ஆசிர்வாதம் பலித்து விட்டதோ?. மெல்ல வண்டியை கோட்டிற்குள் கொண்டு வர எத்தனித்தான்.

அதற்குள், அந்தக் காவலர் அவனைப் பார்த்து, கையசைத்துக் கூப்பிட்டார். சூர்யாவிற்கு முகம் வெளிற ஆரம்பித்தது.

"என்னா தம்பி..அவ்வளவு வேகமா எங்க போறீங்க..சிக்னல்ல கூட மதிக்காம"

"இல்ல சார், வந்து.. ஆபிஸ்க்கு லேட்டாயிடுச்சு.. அதான்.. " என்று ஏதோ உளறினான். மறுபுறம் ட்ராபிக் கிளியராகி, இவன் புறம் புறப்படத் தயாரானது. கவுண்டவுன் நெருங்கிக் கொண்டிருந்தது.

"யமாஹா வச்சிருந்தாலே, அப்படி இப்படி ஸ்டைல் பண்ணச் சொல்லும். எங்க போறே? லைசன்ஸ் இருக்கா"

"இல்ல..பாரீஸ் கார்னர்-க்கு".. என்று முனகினான். நூறையும் கொடுத்து சமாளிக்க வேண்டியதுதான், என மனதுக்குள் எண்ணினான்.

"402 ..நா இந்த தம்பி கூட சென்ட்ரல்ல இறங்கி அங்க ட்யூட்டியப் பாக்கறேன், நீங்க இங்க கவனியுங்க.." என்ற அந்த காவலர், சூர்யாவிடம், 'சரி தம்பி... என்ன நீங்க சென்ட்ரல்ல இறக்கி விட்டுட்டு போயிருங்க. சிக்னல் விழப் போகுது, வண்டிய எடுங்க. மெதுவா போங்க, தலகால் புரியாம ஓட்டாதப்பா" என்ற படியே பில்லியனில் அமர்ந்தார்.

சூர்யாவிற்கு நடப்பவை புரிய சில நொடிகளாயிற்று, சட்டென புரிந்தவன் 'க்ரேட் எஸ்கேப்' என்று சாயந்திரம் வசந்தியிடம் சொல்ல வேண்டுமென எண்ணிபடி, செல்லமாய் யமஹாவை உதைக்க, சீறிக் கொண்டே வழக்கமாய் மற்ற வாகனங்களை முந்திச் சென்றது யமாஹா.


-----------------------------------------------------------------------------
தேன்கூடு - செப்டம்பர் மாத போட்டிச்சிறுகதை

தேன்கூடு போட்டிக்கு இன்னுமொரு கதை: சில்லென்று ஒரு காதல்

24 Comments:

said...

அந்த சைட் சமாச்சாரங்களைத் தவிர..லைசன்ஸ் இல்லாமலே போலீசுக்கு லிப்ட் கொடுத்த அனுபவம் எனக்கு உண்டு.

நல்ல கதை(?)

வாழ்த்துக்கள்.

said...

சைட் சமாச்சாரத்த தவிர, மத்த என்னோட அனுபவம்தான் இது கதையல்ல..நிஜம்... :)

நன்றி,சிறில்.

இன்னும் உங்க கதையை படிக்கவில்லை, படிச்சுட்டு சொல்றேன்.

said...

எல்லா தலைப்புக்கும் ஒரு சொந்த அனுபவம் வச்சிருக்கீக போல..ம்..ம்..நடத்துங்க..நடத்துங்க..

said...

நல்லா இருந்துச்சு சிவா.

ஒரு டைரிக் குறிப்பு மாதிரி இருந்துச்சு

said...

நன்றி நிர்மல், எனது தளத்திற்கு இதுவே உங்கள் முதல் வருகை என நினைக்கிறேன். வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி.

said...

மணியன், போலிசுக்கு லிப்ட் கொடுத்தது மட்டும்தான் சொந்த அனுபவம், மத்தது இல்லீங்கண்ணா, வில்லங்கத்துல மாட்டிவிட்டுராதீங்க.. :)

said...

நல்லா ஸ்பீடா போற எக்ஸ்பிரஸ் ட்ரெயின் மாதிரி இருக்குங்கோவ் கதை :-)

படைப்புகள் பற்றிய விமர்சனத்திற்கு
இங்கே
பாருங்கள்


வாழ்த்துக்கள் :-)

said...

சோம்பேறிப்பையன் என்று பெயர்வைத்துக்கொண்டு, சுறுசுறுப்பாக சுடச்சுட விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

போட்டியில் கலந்து கொண்டாலும், படிக்கப்படாமலேயே மறைந்து போகின்ற நல்ல எழுத்துக்களை, உங்கள் போன்றோரின் விமர்சனம் வெளிச்சத்துக்கு கொண்டுவர உதவும்.

பரிசு கிடைக்கிறதோ இல்லையோ, நமது எழுத்துக்களும் படிக்கப் படுகின்றன,விமர்சிக்கப் படுகின்றன என்பதே ஒரு எழுத்தாளனை உற்சாகப் படுத்தக்கூடிய ஒரு விசயம் தான்.

படைப்புகள் மட்டுமல்ல, பின்னூட்டங்களிலிருந்தும் 'ஹைலைட்' பண்ணுவது உங்கள் முத்திரையை காட்டியிருக்கிறது!


தொடரட்டும் உங்கள் பணி செவ்வனே!
விமர்சனத்திற்கும் அது தருகின்ற ஊக்கத்திற்கும் நன்றி!

said...

நல்ல விறுவிறுப்பாக ஒடிற்று கதை.
லிஃப்ட் போலீஸ்காரருக்கே கொடுத்திங்களா.
பின்னுட்டங்களைப் பார்த்தால் எல்லோருக்கும் இதே அனுபவமா.
வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
ஸ்பீட் 3 படித்த அனுபவம்.

said...

'யமஹா'வின் விளம்பர கதையா? ;-)
வாழ்த்துக்கள்.

said...

நன்றி வள்ளி அவர்களே! உங்கள் வருகையைத் தெரிவிக்கும் முதல் பின்னூட்டமிது. உங்கள் கருத்துக்கும், ஊக்கத்துக்கும் நன்றி.

said...

நன்றி ஜெஸிலா, யமாஹா-விற்கு விளம்பரமா? அது கல்லூரிக் கனவு. போலிசுக்கு மட்டுமல்ல, ஒரு முறை 10-11 வயது சிறுவனுக்கும் பள்ளி செல்ல லிப்ட் கொடுத்திருக்கேன். வழி நெடுக அவனது கேள்வி எல்லாம், யமாஹா பற்றிதான். ஆனா, இப்ப உள்ள மாடல் அவ்வளவு வெற்றிகரமா இல்லைன்னு கேள்வி.

said...

Nice Story. I don't know why guys like much, Yamaha.

said...

நல்லா வந்திருக்கு..வாழ்த்துக்கள் சிவா.

-ஸ்ரீ

said...

படிச்சதே தெரியல..விறுவிறுப்பாக இருந்தது.

said...

police-ta maattaama thappiccha thirupthi, padicha enakkum kedaichuthu!! :)

Nalla kathai!!

said...

Thanks Sarav, for your comments!

said...

விறுவிறுப்பா இருக்குன்னு எல்லாரும் சொல்லிட்டாங்க.. நான் என்ன புதுசா சொல்ல..

ஆனா, முடிவு இன்னும் கொஞ்சம் சுருக்கமா ஒரே பத்தியில் வந்திருந்தால் இன்னும் நச்சென்றிருந்திருக்கும்..

அத்துடன், சஸ்பென்ஸ் கூட்டும் விதமாக இன்னும் ஒரு சிக்னலில் வேறு ஏதாவது பிரச்சனை சேர்த்திருக்கலாம்..

said...

நிஜ சம்பவம் போல வார்த்தைகளை யதார்த்தமாக செதுக்கியிருக்கின்றீர்கள்

said...

நன்றி, பொன்ஸ். சொன்னா மாதிரியே எல்லா கதைகளையும் படிக்க ஆரம்பிச்சீட்டீங்கன்னு தெரியுது. வோட்டு முடியறதுக்குள்ள எல்லாத்தையும் படிச்சு, மறக்காம ஓட்டு போட்டுருங்க.

உங்களது கருத்துக்கு நன்றி, சொன்ன தகவல்கள், இனிவரும் படைப்புகளில் உபயோகிக்க முயற்சிக்கிறேன்.

said...

நிஜ சம்பவத்தின் அடிப்படையில்தான் இந்தக் கதையே. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. உங்களது படைப்புகள் குங்குமத்தில் வெளியாயிருப்பது குறித்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

said...

ஹா ஹா... மேட்டரு சூப்பர். ஒன் லைன்ல மனசில பட்டதை சொல்லிருக்கேன். பாருங்க...

said...

நன்றி முரட்டுக்காளை. எல்லாக் கதையும் படிச்சு ஓட்டு போட்டிருக்கிற உங்களுக்கு வாழ்த்துக்கள்.

said...

வாக்களித்த 25-1=24 பேருக்கு மனமார்ந்த நன்றி.

வாசகர் மதீப்பீட்டில் பதினொராவது இடம் பெற்றிருக்கிறது இச்சிறுகதை.

வாக்களித்த எல்லா மனங்களுக்கும், புதிய வெற்றியாளர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்!