Saturday, September 23, 2006

நவராத்திரி கொலு ஆரம்பம்


நவராத்திரி கொலு ஆரம்பித்து விட்டது. சின்னப்பையனா இருக்கும் போது, வீடுவீடாக போயி, கொலு பார்த்து பாட்டு பாடி சுண்டல் சாப்பிட்ட ஞாபகம். ..ம்ம்..அது ஒரு அழகிய கனாக்காலம்...இப்போது கொலு ஆரம்பித்த போது மனதினில் உலாப் போகுது.. உங்களுக்கு?...

வாழ்த்துக்கள், நவராத்திரியின் இனிய துவக்கத்துக்கு..

Thursday, September 21, 2006

வான்ட் டு டூ வாண்டூஸ் மேத்ஸ்?


வாண்டூஸ் போட்ட கணக்குகளைப் பார்க்கிறீங்களா? (ஏற்கனேவே உங்களில் சிலர் பார்த்திருக்கலாம், பார்க்காதவர்களுக்கு)


நன்றி:இ-மெயில் நண்பர்கள்
Friday, September 15, 2006

விண்டோஸ் விஸ்டா - இலவசம்

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அடுத்த வெளீயீடான, விண்டோஸ் விஸ்டா-வின் மாதிரி வடிவம், இலவசமாக தரவிறக்கம் செய்ய அனுமதிக்கிறார்கள். இதனை ஜுன் 01,2007 வரை நீங்கள் பயன் படுத்திக் கொள்ளலாம். அமெரிக்காவிலுள்ளவர்கள், இதனை DVD-யாகப் பெற்றுக் கொள்ளலாம்.

மேலதிக விபரங்களுக்கு: க்ளிக் செய்க

Tuesday, September 12, 2006

சூர்யா - ஜோதிகா மெஹந்தி புகைப்படங்கள்சூர்யா-ஜோதிகா திருமணப்படங்கள் பார்த்தவர்கள், மெஹந்தி புகைப்படங்களும் பார்க்க வேண்டாமா..இதோ இங்கே...
படங்கள் உதவி: இ-மெயில் நண்பர்கள்.

Saturday, September 09, 2006

ஓவியப்பாவை

Tuesday, September 05, 2006

சில்லென்று ஒரு காதல்

தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தான் சூர்யா. மணி நள்ளிரவு இரண்டு மணி. இன்னமும் தூக்கம் வரவில்லை. வழக்கமாய் படுத்தால் தூங்கிவிடும் பழக்கமுள்ள அவனுக்கு, இன்று என்னவோ தூக்கமே வரவில்லை. சென்ற வாரம் செங்கல்பட்டில் இருந்து, சென்னை வந்து, அம்மா,அப்பா, அக்கா உட்பட எல்லோரும் பார்த்து திருப்திபட்டிருந்த பெண்ணை, நாளை 'பெண்' பார்க்கப் போவது குறித்த சிந்தனை மனதில் ஓடியபடி இருந்தமையால், அவனால் தூங்க முடியவில்லை.

அம்மாவிற்கு பெண்ணை மிகவும் பிடித்திருந்தது. அதுவும் அவள் கூந்தலழகை அடிக்கடி மெச்சிக்கொண்டிருந்தது மனதில் ஓடியது. 'ச்..சே, போட்டோவாவது கேட்டு வாங்கி பார்த்திருக்கலாம். ஆனால், அம்மா, 'போட்டோல பார்க்கிறத விட, நேர்ல அழகாயிருக்கா, அதனால நேர்லயே பாத்துக்கோ'-ன்னு சொல்லிட்டதால, மீற முடியலை. அக்காவும், 'ஆமாடா, பொண்ணு லட்சணமாயிருக்கா, சினேகா மாதிரி. உனக்கு கண்டிப்பாய் பிடிக்கும்' என்று ஆமோதிக்க, அப்போதே அவன் மனது ரெக்கை கட்ட ஆரம்ப்பித்திருந்தது.

சூர்யாவும் பார்க்க லட்சணமான பையன்தான். சாஃப்ட்வேர் கம்பெனியில், கை நிறைய சம்பாதிப்பவன். சொந்தம் தவிர, பிற பெண்கள் என்றால் கொஞ்சம் அலர்ஜி. அதுபாதி, அவன் தூக்கம் போனதற்கு காரணம்.

"நாளைக்குப் பார்க்கப் போற பெண், எப்படி இருப்பாள், தனியாக பேசச் சொன்னால், என்ன பேசுவது" போன்ற சிந்தனைகள் அவனது தூக்கத்தை அலைக்கழித்தன. அவளும் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில்தான் பணிபுரிகிறாள். வசந்தின்னு முழுப்பெயர் சொல்லி கூப்பிடலாமா, இல்லல 'வசு' ன்னு அழைக்கலமா? ஒருபுறம் பெண்ணின் அருகாமை என்ற சிந்தனை கிளர்ச்சியூட்டினாலும், மறுபுறம் இனமறியா பயமும்,தயக்கமும் அலைக்கழித்தன. எப்போது தூங்கினான் என்று தெரியாது, பாதி கனவிலும், பாதி நினைவிலுமாக 'பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்' என்று சினேகாவுடன் ஆடிப்பாடியபடியே தூங்கிப்போனான்.

-----00000-----

'சில்லென்று ஒரு காதல்..சில்லென்று ஒரு..'...டிவியில் பாடல் சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது. திடுக்கிட்டு விழித்தான் சூர்யா. படுக்கைக்கு எதிரே இருந்த கடிகாரத்தைப் பார்த்தான். மணி 9.40... அலறிக்கொண்டு எழுந்தான். நண்பர்கள் எல்லோரும் அலுவலகத்துக்கு கிளம்பிச் சென்று இருந்தனர். பேச்சிலர் பசங்களா வீடெடுத்துத் தங்கியிருந்தார்கள். செங்கல்பட்டிலிருந்து தினமும் வருவது கடினம் என்பதால், சூர்யாவும் அவர்களோடு தங்கியிருந்தான். பெண் பார்க்கப் போவதால், அவன் அன்று விடுப்பு எடுத்திருந்தான். செல்போனை எடுத்துப் பார்த்தான். மூன்று 'மிஸ்ஸ்டு' கால்ஸ். அக்காதான் அழைத்திருந்தது. அப்படியே டயல் செய்தான். மறுமுனையில் அக்காதான் எடுத்தது.

'எட்டுமணில இருந்து கூப்பிட்டுகிட்டே இருக்கேன், அப்புறம் லேண்ட் லைன்ல கால் பண்ணப்ப விக்ரம் சொன்னான், இன்னும் தூங்கிகிட்டு இருக்கேன்னு. என்னடா, ஒரே ட்ரீமா? இப்பதான் எழுந்தியா?'

'ஆமாங்கா, தூங்கிட்டேன். என்ன விசயம்?'

'நாலு நாலறைக்கு, மைலாப்பூர் மாமா வீட்டுக்கு வந்திரு. அங்கிருந்து மாமா,நீ, நா மூணுபேரும் போலாம், பொண்ணு பாக்க'.

'ஆர்த்தி வரலயா, அவளும் பாக்கணும்னு சொன்னாளே....'. ஆர்த்தி சூர்யாவின் +2 படிக்கும் தங்கை.

'அது எதுக்குடா, வாயாடி ஏதாவது உன்ன கிண்டல் பண்ணிகிட்டு இருக்கப்போறா...'

'இல்லக்கா அவளும் வரட்டும்..நீங்க முதல்ல போனப்பவே கூட்டிட்டுப் போகலன்னு குறைப்பட்டா....'

'அதான் அம்மா ஸ்கூலுக்குப் போன்னு சொல்லியும் லீவு போட்டுட்டு உக்காந்திருக்கு, சரி நீ ரெடியாயிட்டு சொல்லு. ஷேவ் எல்லாம் பண்ணிக்கோ. வழக்கம் போல காலை டிபனை அவாய்ட் பண்ணாத. எதாவது சாப்பிடு, இல்ல முகம் சோர்வா தெரியும். '

'சரிக்கா..'

'வர்ரப்ப பாண்டி பஜார் வழியே வா.. நாயுடு ஹால் பக்கத்துல மூணு மணிக்கெல்லாம் ஃப்ரெஷ் மல்லிப்பூ வந்திருக்கும். ஒரு 20 முழம் வாங்கிக்கோ. அது போக ஒரு 5 முழம் தனியா வாங்கிக்கோ.'இந்தா, உன் லூசு தங்கச்சி ஏதோ பேசணுமாம், சட்டுபுட்டுன்னு பேசிட்டு ரெடியாகு'

'என்னண்ணா, நேத்து நைட்லாம் தூங்கியிருக்க மாட்டியீயே, அக்கா 'சினேகா'ன்னு சொன்னதால, 'பல்லாங்குழியின்..னுட்டு டூயட் பாடியிருப்பீயே. எனக்கு கலகல-ன்னுதான் அண்ணிவேணும் ஜோதிகா மாதிரி'

'யேய்.. அதிகப்பிரசங்கி...சொல்லுடி..என்ன?'

'நானும் பொண்ணு பாக்க வருவேன்...அம்மாவும்,அக்காவும் வேண்டாம்னுட்டு இருக்காங்க..ஆனா நா வருவேன், நீதான் சொல்லணும் அம்மாகிட்ட..'

'சரி..சரி...வம்பு பண்ணாத..நா ரெடியாகணும்'

'ஓகே...ஓகே...பொண்ணு பாக்க, நா இங்க இருந்து டீ சர்ட்/ஜீன்ஸ் எடுத்து வாரேன். மாமா வீட்ல, நீ டிரஸ் மாத்திக்கிடலாம். நீ ஏதாவது வெள்ளையும்,சொள்ளையுமா வரப்போறே..'

'ஏய்..பேண்ட்..சர்ட் தான் சரியாயிருக்கும்..'

'போண்ணா, நா சொல்றத கேளு..'

'சரிம்மா..அதயே போட்டுக்கறேன். இப்ப என்னய விடுறயா...எனக்கு நேரமாவுது..நா ரெடியாரேன்..'

'சரி..பை..பை..'

-----00000-----

அப்படி,இப்படி என்று ஒரு வழியாய் கிளம்ப மணி மதியம் இரண்டரை ஆயிற்று. செல்போனைத் தேடி எடுத்துக் கொண்டவன், தன் ஸ்ப்ளெண்டரை ஸ்டார்ட் செய்தான். மதிய வெயிலுக்கு சென்னையின் சாலை காத்து வாங்கியது. பாண்டிபஜாரை நெருங்குகையில் சற்று கூட்டம். மூன்று மணிக்கும், நாயுடு ஹால் அருகே கூட்டம் இருந்தது. வண்டியை நிறுத்திவிட்டு, பூ விற்பவர்களைத் தேடினான். மதிய வெயிலுக்கு, கடையின் கதவு திறந்து மூடுகையில் வெளியே வந்த 'ஏசி' குளிரும், மல்லிகை மணமும் இதமாயிருந்தது.

'பூ வேணுமா?' என்றது அருகிலிருந்த பூக்காரியின் குரல்.

'ஆமாம்மா, 20 முழம் ஒரு பேக்-கும், 5 முழம் தனியாகவும் கொடுங்க' என்ற படியே நூறு ரூபாய்த்தாளை நீட்டினான்.

'சில்லறை கொடு அய்யரே'

'தி நகர்,பாண்டி பஜார்-னாலே, வாங்கற எல்லோரும் உங்களுக்கு அய்யருங்க தானா' என்று கேலி செய்தபடியே சில்லறையை கொடுத்து, பூவை வாங்கிக் கொண்டு வண்டியருகே வந்தவன், சற்று தயங்கியபடி நின்றான். காரணம், அங்கு நின்று கொண்டிருந்த தேவதை. நீல நிற ஜீன்ஸும், 'பிங்க்' நிற டாப்ஸும் அணிந்திருந்தாள். மெலிதான உதட்டுப் பூச்சு. ஒற்றைக் கத்தையாய் ஒரு சில முடிக் கொத்துக்கள், அவள் அசைகையில் அது முன் கன்னங்களைத் தொட்டுச் சென்றது அழகாயிருந்தது.

அவன் பார்வை அவளைத் துளைத்திருக்க வேண்டும், 'யாரோ பார்க்கிறார்கள்' என்ற எண்ணம் ஏற்பட, அருகில் வந்து கொண்டிருந்த அவனை நோக்கினாள்.

'எக்ஸ்கியூஸ் மீ..கொஞ்சம் நகர்ந்துக்கிறீங்களா, வண்டிய எடுக்கணும்' என்றான் அருகில் வந்தபடி.

'ஓ..ஸாரி..' என்றபடியே சிறு புன்முறுவலுடன் சற்று நகர்ந்து, அவன் வண்டியை எடுக்க வழிவிட்டாள்.

பூவை பாக்ஸில் வைத்து, கிளம்ப முயன்றவனை, மீண்டும் பார்க்கத் தூண்டியது, அவள் முகம்.

சற்றே திரும்பியவனைப் பார்த்து, 'எக்ஸ்கியூஸ் மீ சார்...'உங்களுக்கு ஆட்சேபனை இல்லன்னா, உங்களோட 5 நிமிடம் எடுத்துக்கலாமா?' என்று வினவ, புருவம் உயர்த்தி, 'ஏன்' என்பது போல் பார்த்தான்.

'ஐ யம் பூஜா..பைனல் இயர் எம்.ஏ சைக்காலஜி ஸ்டூடண்ட்.. பைனல் இயர் புராஜக்ட்-ஆ, 'திருமணம்/வாழ்க்கைத்துணை' பற்றி இந்தக்கால இளைஞர்களின் சிந்தனை குறித்து டேட்டா, கலெக்ட் பண்றோம். அதுக்கான கேள்விகளுக்கு, உங்களோட பதில் தேவை..கொஞ்சம் உங்க டைம் கிடைக்குமா, ப்ளீஸ்' என்றாள் கொஞ்சலாக.

சும்மாவே பொண்ணுங்ககிட்ட பேசத் தயங்குகிறவன், கேள்வி-பதிலில் எசகு பிசகாக மாட்டிக்குவோமோ என்று பயந்தான். 'இல்லீங்க..அவசரமா மைலாப்பூர் போறேன்..ஸாரி' என்றபடியே விலக முயற்சித்தான்.

''உங்களுக்கு ஆட்சேபம் இல்லைன்னா, நான் ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் போகனும், போற வழியில என்னை ட்ராப் பண்ணமுடியுமா? அப்படியே, நான் எனக்கு வேண்டிய டேட்டாவினை பைக்கிலேயே கலெக்ட் பண்ணிக்குவேன்..ப்ளீஸ் சார், கோ-அபரேட் பண்ணுங்க சார். ஒரு ஸ்டுடண்-டுக்கு ஹெல்ப் பண்ணின மாதிரியிருக்கும்''

அழகின் கெஞ்சலை, அசட்டை பண்ணமுடியவில்லை. வேண்டியவர்கள் யாரும் பார்த்து தவறாக எண்ணிவிடுவார்களோ என்ற அச்சம் லேசாய் எட்டிப்பார்த்தாலும், 'சரி வாங்க.. போலாம்.' என்றான். தேவதை பின் அமர, வண்டி பயணித்தது.

சத்தம் செய்யாமல் வண்டி 'ஸ்மூத்' ஆகச் செல்ல, மவுனத்தைக் கலைக்கும் விதமாய் பூஜாவின் குரல்.

'முத கேள்வி திருமணம் பற்றி சார்.. எம்மாதிரியான திருமணம் உங்களுடைய இஷ்டம். காதல் திருமணமா? பெரியவங்க பாத்து நிச்சயிக்கபடுற திருமணமா? உங்களது சாய்ஸ்க்கான காரணம்?"

'ம்..ம்..பெரியவங்க பார்த்து முடிக்கற கல்யாணம்தான். லவ் மேரேஜ்-ல, காதலிக்கும்போதே எல்லாத் திரில்லும் முடிஞ்சிரும். ஆனா, அரேஞ்ச்டு மேரேஜ்-ல கல்யாணத்துக்கப்புறம்தான் வாழ்க்கையே ஆரம்பிக்கிறதானல த்ரில் அதிகமிருக்கும்னு நினைக்கிறேன்'

'சார் ரொம்ப ஹோம்லி டைப்னு நினைக்கிறேன்..என்று சிரித்தவளாக, 'காதல் கல்யாணம்/அரேஞ்ட் மேரேஜ்..எதுவானாலும், கணவன் - மனைவியிடையே காதல் நிலைத்திருக்க என்ன தேவைன்னு நினைக்கிறீங்க?'

'யோசிக்க வைக்கிறீங்களே..ம்..ம்...பரஸ்பரம் மதிப்பும்,நட்பும் பாசமும் இருந்தா, கண்டிப்பாக நிலைத்திருக்கும்னு சொல்லலாம்..முக்கியமா ஈகோ இல்லாம இருக்கணும்"

'ம்...ஒகே..அடுத்தது..உங்க வாழ்க்கைத்துணைகிட்ட கண்டிப்பா இருக்கணும்னு நினைக்கிற குணாதிசயங்கள் மூணு சொல்லமுடியுமா?'

'யா..முதல் தேவை..அனுசரித்துப் போகிற குணம். அப்புறம் யார் பத்தியும் குறை கூறாம எதையும் பாசிட்டிவா பார்க்கிற பக்குவம்..தேவைக்கு செலவழிக்கிற எண்ணம்..'.

'ஏன் சார்..நீங்க 30+ஆ..' என்று அவள் கேட்டு சிரிக்க. 'ஏங்க..பிராக்டிகலா இல்லையா?..பட்..நீங்க எக்ஸ்பெக்டேஷன் தானே கேக்கறீங்க..' என்று சிரித்தான். 'கண்டிப்பா இருக்க கூடாதுன்னு ஏதாவது குணாதிசயம்னு ஏதாவது கேள்வியிருக்கா, அப்படின்னா 'அழுகை'-ன்னு போட்டுக்கங்க என்றான்.

'இம்பாஸிபிள்..சார்..கண்ணீர்தானே சார் பெண்களோட முக்கிய ஆயுதம்..'

'கருத்துச் சுதந்திரம்..அந்த சுதந்திரம் இந்த சுதந்திரம் வேணும்னு கேக்கற அளவுக்கு வளர்ந்து இருக்கறீங்க, ஏங்க இன்னும் பொண்ணுங்க கண்ணீர ஆயுதமா நம்பிகிட்டு இருக்கணும். அந்தக்காலத்துல படிப்பு கிடையாது..இப்பதான் படிச்சு மேலே வர்ரீங்களே..புத்தியை வச்சு, சமமா சமாளிக்கணும். பெண்களின் கண்ணீர் எனக்கு பிடிக்காத ஒன்று'. பேசிக் கொண்டே வந்தவன், ரெட் சிக்னல் விழுவதை உணர்ந்தவனாக, பிரேக் அடித்தான். மெல்லியதாய் தோள்கள் உரசின.

'தேங்க்ஸ் பார் த சிக்னல்.. எங்க நீங்க போற வேகத்துக்கு சீக்கிரம் என்னை இறங்க வேண்டிய இடத்துல ட்ராப் பண்ணிடுவீங்களோன்னு பார்த்தேன்..அப்புறம் மிச்ச கேள்விய கேக்க முடியாது' என்றாள் சிரித்தபடியே..

'அப்ப இன்னும் முடியலையா..கேள்வி கேக்கறது சுலபம்ங்க..பதில் சொல்றதுதான் கஷ்டம்'

'இது இலகுவான கேள்விதான் சார்.. மெளனராகத்தில, உங்களுக்கு 'கார்த்திக்-ரேவதி' காதல் புடிச்சுதா, இல்லை 'மோகன் - ரேவதி' காதலா? ஏன்?'

அதற்குள் சிக்னல் விழுந்துவிடவே, வண்டியை நகர்த்தியவனாக பதிலுரைக்கத் தொடங்கினான். 'மோகன் - ரேவதி காதல்தான். முன்னது படிக்கற காலத்துல துடிப்பில டக்குன்னு வர்ர காதல். ஆனா, பின்னது அனுசரனையோடு அன்பால உணரப்படுற காதல்..அதுதான் எனக்கு பிடிச்சது..இப்ப 30+ன்னு சொல்வீங்களே.. ' என்றான்.

'சத்தியமா...' என்றபடியே பெரிதாய்ச் சிரித்தவள், 'கடைசி கேள்வி சார்.. எப்பவும் உங்களுக்கு பிடிச்ச லவ் டூயட் பாட்டு எது சார்?'

'இது உங்க ஆய்வுக்கேள்வில இருக்கா..இல்ல சொந்தக் கேள்வியா?'

'ஐயோ..ஆய்வுக்கேள்விதான்..சில பேர்..'நிலா காயுது..நேரம் நல்ல நேரம்..னு' கூடச் சொல்லியிருக்காங்க..' என்றபடி கண்சிமிட்ட

'பதில் சொல்றவரோட தரம் பாக்கறீங்களாக்கும்..' என்றவன், 'எனக்குப் பிடிச்சது..எஸ்பிபி-சொர்ணலதா பாடும், 'நெஞ்சைத்தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி..ங்கற பாடல் என்றான்.

'நீங்க கண்டிப்பா 30+ஆ தான் இருப்பீங்க சார்.. ..எனிவே...ரொம்ப தேங்க்ஸ் சார். ரொம்ப பொறுமையா பதில் சொன்னதுக்கு. கரெக்டா, ட்ராப் பண்ற எடத்துல இண்டர்வ்யூவ முடிச்சிட்டேன். சார்..' என்றபடி இறங்கத் தயாரானாள். சூர்யாவும் வண்டியை ஓரமாக நிறுத்தினான்.

வண்டியிலிருந்து இறங்கியவள், 'அவசரமா போற உங்களைத் தொந்தரவு பண்ணிட்டேன். உங்க ஒத்துழைப்புக்கு நன்றி..' என்றாள்.

'ஆமாங்க..அவசரம்தான்..இன்னைக்கி எனக்கு அலையன்ஸ் பார்க்கிறாங்க. வீட்ல இன்னும் வரலையேன்னு நினைச்சுட்டு இருப்பாங்க.'

'ஒ..ஒ..தென் யூ ஆர் மை ரைட் சாய்ஸ். அதான், எல்லா கேள்விக்கும் பதில் தயாரா வச்சிருந்தீங்க போல. ஆல் த பெஸ்ட் சார். ஆனா, பொண்ணு என்ன பாட்டு பிடிக்கும்னு கேட்டா அட்லீஸ்ட் ஏதாவது ஒரு ரஹ்மான் பாட்டு சொல்லுங்க சார். இல்லன்னா, பொண்ணு நீங்க ரொம்ப பழைய காலத்து ஆளுன்னு நினைச்சுடப் போறாங்க'

'அதெப்படிங்க..நீங்க கூடத்தான் ஜுன்ஸ்,டாப்ஸ் போட்டு இருக்கீங்க. அதுக்காக உங்கள 'மாடர்ன் டிரஸ்' மங்காத்தான்னு சொல்றதா..இல்ல, கழுத்தில பிள்ளையார் டாலர் வச்ச செயின் போட்டிருக்கறதால 'மாடர்ன் மகாலட்சுமி'ன்னு சொல்லவா..'

'ஓகே..ஒகே...கூல் சார்..ஜஸ்ட் ஃபன்... ஆல் த பெஸ்ட் அண்ட் தேங்க்ஸ் ஃபார் த லிப்ட்'

'பை...' என்றபடியே பைக்கை உதைத்தான் வீடு நோக்கி. இன்று வசந்தியைப் பெண் பார்க்க போகவில்லையென்றால், இவளிடமே அட்ரஸ் வாங்கி காதலிக்கத் தொடங்கியிருப்பேனோ' என்று எண்ணியவனாக பைக்கை மைலாப்பூர் நோக்கிச் செலுத்தினான்.

-----00000-----
பெண்வீடு. அக்கா,மாமா,தங்கை உடன் வர, டாக்ஸி பிடித்து பெண்வீடு வந்தாயிற்று. நல்ல விசாலமாக இருந்தது வீடு. மாப்பிள்ளைக்கெனெ தனி சேர் போட்டிருந்தார்கள். எதிரே ஒரு தனிசேர் காலியாக இருந்தது. வசந்தியின் உறவினர்கள் இடது புறமும், இவன் உறவினர்கள் வலதுபுறமுமாக அமர்ந்து, 'கலகல' வெனெ பஜ்ஜி,சொஜ்ஜி சாப்பிட்டுக்கொண்டே பேசிக்கொண்டிருந்தார்கள். சூர்யாவுக்கு சற்று படபடப்பாக இருந்தது. ஏனோ, "என்ன பாட்டு பிடிக்கும்னு கேட்டா ஏதாவது ரஹ்மான் பாட்டு சொல்லுங்க சார்" என்ற பூஜாவின் குரல் காதில் ஒலித்தது. என்ன பாட்டு சொல்லலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தவனை, 'பொண்ணு வாரா..நல்லா பாத்துக்கடா' என்ற அக்காவின் குரல் நிமிரச் செய்தது. குனிந்த தலை நிமிராமல், பட்டுச்சேலையில் மகாலட்சுமியாக பெண் 'காபி' எடுத்து வந்து கொண்டிருந்தாள். முதல்ல 'மாப்பிள்ளளக்கு கொடும்மா' என யாரோ பெரிசு சொல்ல, சற்றே நிமிர்ந்து அவனைப் பார்த்தவாரே அவனருகில் வந்தாள். நிமிர்ந்து பார்த்த சூர்யா, சற்றே திடுக்கிட்டான், இந்தப் பெண்..இந்தப் பெண்..பூஜா போல இருக்கிறாளே..கனவோ..' என்று எண்ணி சற்று கண்ணைச் சிமிட்டிக் கொண்டு பார்க்க, காபி டிரேயே-யை அவன் முன்னே நீட்டியவள், அவன் காதருகே அவனுக்கு மட்டும் கேட்கும் விதமாய்.. 'என்ன பாட்டு புடிக்கும்னு கேட்டா, 'சில்லுன்னு ஒரு காதல்-னு ரஹ்மான் பாட்டச் சொல்லு' என்று சொல்லி அவளுக்கென்று இருந்த இருக்கையில் போய் அமர்ந்தாள். சூர்யாவிற்கு சற்று 'ஷாக்'காயிருந்தது.

'என்னடா..பொண்ணு பிடிச்சிருக்கா..' - அக்காதான் கேட்டாள். திகைப்பிலிருந்து விடுபடாமலிருந்த சூர்யா, என்ன சொல்வது என்று தெரியாமல், 'அவங்களுக்கு பிடிச்சிருக்கா'ன்னு கேளுங்க' என்றான்.

'பொண்ணுக்கெல்லாம் பிடிச்சிருக்குன்னு அவ முன்னமே சொல்லிட்டா, நீதாண்டா சொல்லனும்'

'எப்ப சொன்னாங்க?' என்று கேட்டவண்ணம் பெண்ணைப் பார்க்க, வசந்தி அலையஸ் பூஜா அவனைப் பார்த்து நளினமாய் புன்னகைத்தாள். அக்காவை நோக்கி, முழித்தவனிடம், 'எல்லாம் உன் தங்கை யோசனைதான். தனியா பேசச் சொன்னா, சங்கோஜப் படுவியோன்னுட்டு 'கேஷுவலா' இருக்கட்டுமேன்னு, தங்கச்சி யோசனைப் படி அனுப்பி வச்சோம். அவ பேசிட்டு ஓகேன்னுட்டா, உனக்கும் ஓகே தானே?'

ஆமோதிப்பவன் போல தலையசைத்தவன், தங்கையைப் பார்த்து முறைக்க, அவளோ, அங்கு ஓடிக்கொண்டிருந்த 'டிவி' பெட்டியை கை நீட்டினாள்.

அங்கே 'ஜோதிகா' 'சில்லுன்னு ஒரு காதல்' பாடல் பின்னணியில் ஆடிக் கொண்டிருந்தார்.

**************************

தேன்கூடு - செப்டம்பர் மாதப் போட்டிக்கு.தேன்கூடு போட்டிக்கு இன்னுமொரு கதை: தவிப்பு

Saturday, September 02, 2006

தவிப்பு - தேன்கூடு போட்டி

மணி காலை ஒன்பது பதினைந்து. ஆழ்வார்பேட்டையில் இருந்த அந்த சாஃப்ட்வேர் அலுவலகம் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கியிருந்தது .

"டேய் ஜெய் மச்சி, இன்னக்கி எதும் 'கிளையன்ட் சைட்' போறீயாடா?"

"எதுக்குடா கேக்குறே, காரியம் இல்லாம காத கடிக்க மாட்டியடா நீ"

"இல்லடா, பாரீஸ் கார்னர்-ல இருக்கற என்னோட கிளையன்ட் சைட் வரைக்கும் போகனும், பஸ்ல போனா, போக வர லேட்டாயிடும், அதான் உன் பைக்க குடுத்தா சட்டுனு போயிட்டு, பட்டுன்னு வந்துருவேண்டா" என்றான் சூர்யா.

"ஏண்டா, நாயே, உங்கிட்டதான் லைசென்ஸ்ஸே கிடையாதே, அதுவும் இப்பதான் கியர் வண்டிய ஓட்ட கத்துகிட்டு இருக்கே, அதுக்குள்ள மவுண்ட் ரோடு சவாரி கேக்குதோ, போடா ஒழுங்கா பஸ்ஸிலேயே போ"

"அவசரம் புரிஞ்சிக்க மாட்டியேடா, போற வழியிலே என் ஆள பிக்கப் பண்ணி, ஒரு காபி சாப்பிட்டுட்டு அவ எழுதப்போற எக்ஸாம்க்கு 'ஆல் த பெஸ்ட்' சொல்லிட்டு காலேஜ்ல ட்ராப் பண்ணனும்டா, கொஞ்சம் கருணை பண்ணுடா, மச்சி"

"என்னக்கி அவ அப்பன்கிட்ட மாட்டிகிட்டு உத வாங்கப்போறியோ தெரியலை, சரிசரி..இந்தா கீ.. மாசக் கடைசி, மாமா -கிட்ட மாட்டிக்கிடாம ஜாக்கிரதையாகப் போ"

எச்சரிக்கையோடு நண்பன் கொடுத்த சாவியை வாங்கிக்கொண்டு யமாஹாவை உதைத்துக் கிளம்பினான் சூர்யா.

யமாஹா-ன்னாலேயே ஒரு கிக்-தான், அதோட சத்தமே ஒரு செக்ஸி-தான்..ம்ம் எப்ப இந்த மாதிரி ஒரு வண்டி வாங்கப்போறமோ?" என்று மனதில் எண்ணியபடி வண்டியை ஓட்டியவன், அவள் வழக்கமாய் வரும் பஸ் நிறுத்தத்திற்கு சற்று முன்னர் ஓரமாக நிறுத்தினான்.

பஸ் நிறுத்தத்தில் வசந்தி நிற்கிறாளா? என்று பார்த்தான். பத்து நிமிடம் ஒடியிருக்கும்.

"சினேகிதனே..சினேகிதனே ரகசிய சினேகிதனே..." - மொபைல் சிணுங்கியது. வசந்திதான் அழைத்திருந்தது.

"ஹாய் வசந்தி, 'ஆல் த பெஸ்ட் பார் த எக்ஸாம்' மா. கொஞ்சம் லேட்டாயிடுச்சி...எங்க இருக்க நீ இப்ப?" என்றான் கனிவாய்.

"மண்ணாங்கட்டி...உனக்காக எவ்வளவு நேரம் காத்து நிக்கறது.. எக்ஸாமுக்கு நேரமாயிடுச்சுன்னு சுசிலாவோட வந்திட்டேன். அட்லீஸ்ட் லேட்டாகும்னுவாது சொல்லியிருக்கலாமில்ல...யோசிக்கவே மாட்டியா இங்க ஒருத்தி காத்துகிட்டு இருக்காளேன்னு..."

"ஹேய்..அது வந்து ..ஃபிரண்டு கிட்ட உனக்காக கியர் வண்டி வாங்க லேட்டாயிடுச்சு..." முடிக்கும்முன்னரே மறுமுனை அலறியது..

"மண்ணாங்கட்டி...லைசன்ஸ் வாங்க முன்னாடி, எதுக்கு இது மாதிரியெல்லாம் பண்ற..உன்கிட்ட இந்த பந்தா எல்லாம் கேட்டனா....என்னக்காவது போலிஸ்ல மாட்ட போற...போ.. சரி, எனக்கு நேரமாச்சு, நான் எக்ஸாம் ஹாலுக்குப் போறேன். சாயந்திரமாவது நேரத்துக்கு வா" என்று சொல்லி துண்டித்தது மறுமுனை.

"ம்ம்..ச்சே..எல்லாம் இந்த ஜெய்யால..கொஞ்சம் அலம்பல் பண்ணாம சாவியக் குடுத்திருந்தான்னா, வசந்தியை புடிச்சிருக்கலாம். எல்லாம் நேரம்..காலையிலேயே கடி வாங்கனும்னு. ம்..ம்..அவளும் பாவம்தான், எவ்வளவு நேரம் காத்த்துகிட்டு இருப்பா என்று மனதைச் சமாதானம் செய்து கொண்டு வண்டியை உதைத்தான், பாரீஸ் கார்னரை நோக்கி.

மனதில் காதலின் கனம் குறைய, வேலையின் தாமதம் சிந்தையில் உறைக்க, கவனமாய் வண்டியை சாலையில் செலுத்தினான்.

மவுண்ட் ரோட்டில், சீரான யமஹாவின் சத்தம் நன்றாயிருந்தது. அங்கும் இங்கும் நிறைய ட்ராபிக் கான்ஸ்டபிள் தென்படவே, மெல்ல உஷாரானான். "மாசக் கடைசின்னா சரியா ஆஜராயிடுராங்களே.." என்று நினைத்தவனுக்கு லேசாய் பயம் தொத்திக் கொண்டது. வசந்தி வாயால வேற, 'மாமா கிட்ட மாட்டுவேன்னு' சபிச்சிருக்கா. கவனமாயிருக்கனும், இல்லன்னா, சாயந்திரம் போய் திட்டு வாங்கனும்.

தனியா போனா, ஈஸியா புடிச்சிருவானுக, கூட்டத்தோட நடுவில போயிரனும், என்று திட்டமிட்டு, அது மாதிரியே போனான். இரண்டு சிக்னல் ஒட்டி இருந்த போலீஸ் கும்பலிடமிருந்து தப்பியாகிவிட்டது.

மாட்டினா கொடுக்க காசு இருக்கிறதா என்று யோசித்தான், பர்ஸில் நூறு ரூபாயாய் இருப்பது நினைவுக்கு வந்தது. இருபது ரூபாயாய் சில்லறை இருந்தால், ஒரு இருபது கொடுத்து தப்பிக்கலாம், இப்ப மாட்டினா நூறும் போகுமே என்ற சிந்தனையோடு வண்டி ஓட்டியவன், ஸ்பென்சர் அருகே வந்ததை உணர்ந்தான்.

அடடா..இந்த சிக்னல்லயும் இருக்கானுவளா? என்று நினைத்தவன், ஒரு ட்ராபிக் போலீஸ் கூட்டமே இருப்பதைப் பார்த்தான், ஏற்கனவே பிடிபட்டிருந்தவர்கள் கையைப் பிசைந்து கொண்டிருந்தார்கள்.

"சரி...லாஜிக்கப் புடி.. கூட்டத்தோட போலாம்னு, சட்டுன்னு ஒரு ஆட்டோ பின்னால ஒதுங்கி, ஆட்டோவைப் பின் தொடர்ந்தவன், சிக்னலைக் கவனிக்கத் தவறிவிட்டான். ஆட்டோ 'மஞ்சள்' சிக்னலில் அடித்துச் செல்ல, நம்மால் மஞ்சளில் கடக்க முடியாது என எண்ணியவன் சற்றே 'ப்ரேக்' அடிக்க, அதற்குள் 'சிவப்பு' விளக்கு வரவே வண்டியை நிறுத்த முற்பட்டான். வண்டி இழுத்துக் கொண்டே போய், நிறுத்த வேண்டிய கோட்டைத் தாண்டி நின்றது, சரியாக அங்கு நின்று கொண்டிருந்த ட்ராபிக் கான்ஸ்டபிள் முன்னால்.

சூர்யாவிற்கு 'திக்' கென்றிருந்தது. போச்சுடா..இன்னக்கி நம்ம நேரம் இங்கேயும் வேலை செய்யத் தொடங்கிவிட்டது. வசந்தி மற்றும் ஜெய்யின் ஆசிர்வாதம் பலித்து விட்டதோ?. மெல்ல வண்டியை கோட்டிற்குள் கொண்டு வர எத்தனித்தான்.

அதற்குள், அந்தக் காவலர் அவனைப் பார்த்து, கையசைத்துக் கூப்பிட்டார். சூர்யாவிற்கு முகம் வெளிற ஆரம்பித்தது.

"என்னா தம்பி..அவ்வளவு வேகமா எங்க போறீங்க..சிக்னல்ல கூட மதிக்காம"

"இல்ல சார், வந்து.. ஆபிஸ்க்கு லேட்டாயிடுச்சு.. அதான்.. " என்று ஏதோ உளறினான். மறுபுறம் ட்ராபிக் கிளியராகி, இவன் புறம் புறப்படத் தயாரானது. கவுண்டவுன் நெருங்கிக் கொண்டிருந்தது.

"யமாஹா வச்சிருந்தாலே, அப்படி இப்படி ஸ்டைல் பண்ணச் சொல்லும். எங்க போறே? லைசன்ஸ் இருக்கா"

"இல்ல..பாரீஸ் கார்னர்-க்கு".. என்று முனகினான். நூறையும் கொடுத்து சமாளிக்க வேண்டியதுதான், என மனதுக்குள் எண்ணினான்.

"402 ..நா இந்த தம்பி கூட சென்ட்ரல்ல இறங்கி அங்க ட்யூட்டியப் பாக்கறேன், நீங்க இங்க கவனியுங்க.." என்ற அந்த காவலர், சூர்யாவிடம், 'சரி தம்பி... என்ன நீங்க சென்ட்ரல்ல இறக்கி விட்டுட்டு போயிருங்க. சிக்னல் விழப் போகுது, வண்டிய எடுங்க. மெதுவா போங்க, தலகால் புரியாம ஓட்டாதப்பா" என்ற படியே பில்லியனில் அமர்ந்தார்.

சூர்யாவிற்கு நடப்பவை புரிய சில நொடிகளாயிற்று, சட்டென புரிந்தவன் 'க்ரேட் எஸ்கேப்' என்று சாயந்திரம் வசந்தியிடம் சொல்ல வேண்டுமென எண்ணிபடி, செல்லமாய் யமஹாவை உதைக்க, சீறிக் கொண்டே வழக்கமாய் மற்ற வாகனங்களை முந்திச் சென்றது யமாஹா.


-----------------------------------------------------------------------------
தேன்கூடு - செப்டம்பர் மாத போட்டிச்சிறுகதை

தேன்கூடு போட்டிக்கு இன்னுமொரு கதை: சில்லென்று ஒரு காதல்