Wednesday, August 30, 2006

இன்டெர்நெட் தொலைபேசி

கணிணியின் உபயோகம் பல்வேறு துறைகளுக்கு பல்வேறு விதமாக பயன்பட்டுக்கொண்டிருக்கையில், தொலைத்தொடர்புத் துறையில் அதன் பங்கு அதி முக்கியமாகிக் கொண்டுஇருக்கிறது.

யாஹூ,எம்எஸ்என்,கூகுள் என வார்த்தை 'சாட்'டில் தொடங்கிய செயல்பாடுகள், ஒலிவடிவத்துக்கு மாறியன. கடந்த ஒரிரு வருடங்களாக தொலைத்தொடர்புதுறைகளும், கணிணி மூலமான 'Voice Over IP' பயன்பாடுகளை வேகப்படுத்த தொடங்கியுள்ளன. இந்தியாவில் இதன் வேகம், அந்த அளவிற்கு வரவில்லை. இப்போதுதான், அதிவேக இன்டெர்நெட் வசதிகள் வரத்தொடங்கியுள்ளன.

அமெரிக்காவில், இதன் வளர்ச்சி குறிப்பிடதக்க அளவில் இருக்கிறது. கடந்த கால் இறுதி ஆண்டில் மட்டும் 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இன்டெர்நெட் தொலைபேசிகள் விற்பனையாகியிருக்கின்றன. சென்ற வருடத்தை விட இது 42% சதவிகித வளர்ச்சி.

அமெரிக்காவில் இருக்கும், பிரபல நிறுவனங்களின் வாய்ப்(VoIP) பங்குகள் குறித்து, இணையத்தில் தேடியபோது கிடைத்த தகவல் கீழே:

 1. Vonage - 53.9%
 2. Verizon Voicewing - 5.5%
 3. AT&T - SBC CallVantage - 5.5%
 4. SunRocket -4.0%
 5. Lingo - 2.6%
 6. NetZero Voice - 2.5%
 7. Broadvoice - 2.2%
 8. AOL - 1.6 %
 9. 8x8 (Packet8) - 1.1 %
 10. Earthlink - 0.9%
 11. Other - 20.5%

சரி, இதெல்லாம் எதுக்கு நமக்குங்கிறீங்களா? நம்ம தோஸ்த், ஒரு மூணுமாச புராஜக்ட்டுக்காக அமெரிக்கா வந்தவர், இங்குள்ள நண்பர்களிடையே தொடர்புகொள்ள 'CallingCard' வாங்கனும்னார். அவருக்கு இந்த வாய்ப்(VoIP) சேவை குறித்துச் சொல்லி, இதனை தற்காலிகமாக இலவசமாக வழங்கும் ஒரு சில நிறுவனங்களின் URL கொடுத்துதவினேன்.

அது போல இங்கு வருகைதருபவர்களுக்கும், ஏன் இங்கு இருப்பவர்களுக்கும் உதவுமேயேன இங்கு பதிகிறேன். இந்த URL மூலமாக, மென்பொருளை உங்கள் கணிணியில் இறக்கம் செய்து கொண்டு, பின் டயல் செய்து பேசவேண்டியதுதான்...மற்ற விபரங்களுக்கு, அந்தந்த இணையத்திலேயே தகவல் அறிந்து கொள்ளுங்கள்..

http://www.packet8.net/about/softalk.asp

http://www.skype.com/download/

Saturday, August 26, 2006

வேட்டையாடு விளையாடு


'இதோ வருது...அதோ வருது' என்ற எதிர்பார்ப்புகளைக் கிளப்பிவிட்டுக் கொண்டிருந்த 'வேட்டையாடு..விளையாடு' ஒரு வழியாய் தடைகளைத் தாண்டி வந்து விட்டது. 'கமல் படம்' என்ற எதிர்பார்ப்பு தியேட்டருக்கு இழுத்து வர, அந்த எதிர்பார்ப்பை ஈடு செய்யும் விதமாய், பரபரப்பாய் படத்தை நகர்த்திச் சென்றிருக்கும் கெளதமிற்கு ஒரு சபாஷ். சும்மா சொல்லக் கூடாது, டெக்னிகலாக படம் நன்றாக வந்திருக்கிறது.

போலிஸ் அதிகாரியாக வரும் பிரகாஷ்ராஜ்ஜின் மகள் கற்பழித்து கொலை செய்யப்பட, துயரம் தாளாத மனைவிக்காக, அமெரிக்கா செல்கிறார் பிரகாஷ்ராஜ். அங்கு அவரும்,அவர் மனைவியும் கொல்லப்பட, யாரந்த குற்றவாளி என்பதைக் கமல் கண்டுபிடித்து, பழி வாங்குவதே கதை.
நூலிழை அளவுதான் கதை, என்றாலும் சொல்லியிருக்கும் விதம் அசத்தல். முன்பாதி விறுவிறுப்பும், பின்பாதி காதலும்,கண்டுபிடிப்புமாக நகர்கிறது.

'காக்க காக்க'-வில் 'என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்' ஆபிசர் வாழ்க்கை என்றால், இதில் 'கிரைம் பிராஞ்ச்' ஆபிசர். ஆனால், முன்னதில் இருந்த 'கண்ணியம்', இதில் இல்லை. 'கிரைம்' என்பதால், நடக்கும் கொலைகளும்,கற்பழிப்புகளும், அதைக் காட்டியிருக்கும் விதமும் சற்றே அதிகமோ என எண்ணத் தோன்றுகிறது. இன்னம் கொஞ்சம் நீட்டியிருந்தால், 'குற்றம் - நடந்தது என்ன?' என டி.வி தொடர் போலாகிருக்கும்.

'வசூல் ராஜா'-வில் பார்த்ததைவிட, இதில் அழகாய் இருக்கிறார், கமல். அலட்டாமல், மிகையில்லாமல் கச்சிதமாய்ச் செய்திருப்பது சிறப்பு. குறைந்த நேரமே வந்தாலும், குத்துவிளக்காய் கமலினி முகர்ஜி. 'பார்த்த முதல் நாளே..' பாடலில், கமல்ஹாசன்,காதல்ஹாசன்.

வழக்கமாக துள்ளலாய் வரும் ஜோ, படத்தில் 'இப்பல்லாம் நான் அழுமூஞ்சி ஆயிட்டேன்' என அவரே சொல்லும் வசனம் போல, அமெரிக்க டைவர்ஸியாக அழுகையுடனே அறிமுகமாகிறார். கமல் திடிரென காதலைச் சொல்லும் காட்சியில், பதில் சொல்ல திணறும் ஜோ, மனதில் நிற்கிறார்.

இசை ஹாரிஸ். பாடல்களை விட, பின்னனி இசையில் நன்கு தெரிகிறார். விறுவிறுப்பாகச் செல்லும் படத்திற்கு, ஒளிப்பதிவும் சிறப்பு. க்ளைமாக்ஸ் சேஸிங் சிறப்பு.

கமல் படம் என்று சொல்வதைவிட, கெளதமின் படம் என்று சொல்லவைத்திருக்கும் இயக்குநர், கமலுக்காக வைத்திருக்கும் ஆரம்ப சண்டைக் காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம்.

காமெடியே இல்லாமல், ரசிகர்களை இரண்டரை மணிநேரம் இருக்கையில் கட்டிப்போட்டது டைரக்டரின் சாமர்த்தியம் என்றால்,சைக்கோத்தனமான கொலைகளும்,கற்பழிப்புகளும் வன்முறையாய் காட்டியிருக்கும் விதம் எந்த அளவுக்கு, பெண்கள், மற்றும் குழந்தைகளை திருப்தி படுத்தும் என்பது ஒரு கேள்விக்குறி.

'கிரைம்' சப்ஜக்ட் என்பதால், எந்த அளவிற்கு ரீபிட் ஆடியன்ஸ் கிடைக்கும் என்பது இன்னொரு கேள்விக்குறி.

எது எப்படியாயினும், படம் நன்றாக வந்திருக்கிறது என்பதே என் கருத்து. மத்தத நீங்க பாத்துட்டுச் சொல்லுங்க..