Friday, July 28, 2006

நன்றி..நன்றி..
ஜீலை மாத தேன்கூடு போட்டியில் இடம்பெற்ற எனது கதையை படித்த,வாக்களித்த, பின்னூட்டமிட்ட அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி...
வெற்றி பெற்ற படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள்!

Sunday, July 23, 2006

பார்க்க...சிரிக்க

இ-மெயிலில் நண்பர் அருண் அனுப்பியது..நீங்களும் பார்க்க...சிரிக்க.. :))Tuesday, July 11, 2006

மகிழ்வாய் ஒரு மரணம்

(தேன்கூடு போட்டிக்காக..லாஜிக்லாம் பார்க்காம, சும்மா ஜாலியா படிங்க..)

'இன்னைக்கி எப்படியும் வசந்திகிட்ட 'ஐ லவ் யூ' சொல்லிரனும், ரொம்ப நாளாவே நினைச்சுக்கிட்டு இருக்கிறதை, இன்னக்கி 'டப்'புன்னு போட்டு உடைச்சிரனும்' என மனதுக்குள் எண்ணிக்கொண்டே, பைக்கின் கண்ணாடியில் தன் முகம் பார்த்து சிகை அலங்காரம் செய்து கொண்டிருந்தான், சூர்யா.

'தகிக்கும் தேகம்' புத்தகத்தை தூக்கி எறிந்த நாளில் இருந்து, அவன் மனதுக்குள் நெருங்கியவள் வசந்தி. அவளுக்கோ, சுப்ரமணியிடம் ஈர்ப்பு இருப்பதாக நண்பர்கள் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். சூர்யாவிற்கு, அதில் நம்பிக்கையில்லை, தன்னிடம் அவள் காட்டும் அன்பும், பரிவும் அவனை அப்படி எண்ணச் செய்தது. அவன் அம்மாவிற்குப் பிறகு, அவனைக் கவர்ந்த பெண்ணாய் வசந்தி இருந்தாள்.


மனதுக்குள் உற்சாகம் பீரிட, பைக்கை உதைத்தான். போகிற வழியில், சிவாவைப் பார்த்து விட்டுப் போகவேண்டும். இந்த மாத 'தேன்கூடு' போட்டிக்கு 'மரணம்' கதை பற்றி விவாதிக்க அழைத்திருந்தார். போனவாட்டி மாதிரி, ஏதாவது குஜாலா கொடுத்திருந்தா, நமக்கு இருக்கும் 'லவ்' மூடுக்கு கலாய்ச்சியிருக்கலாம், 'மரணம்'-னு கொடுத்தா..அதிர்ச்சியாத்தான் இருக்கு. மனுசன் கொஞ்சம் வயசாளியா இருப்பாரோ..போட்டிருக்கிற போட்டாவப் பாத்தா அப்படித்தான்னு நினைச்சா, தலைப்பும் அப்படித்தான இருக்கு, ஆனா போன போட்டியில ரவுடியாட்டமா கதை எழுதினப்பாத்தா அப்படி தெரியலையே என அசை போட்டுக்கொண்டே பைக்கை ஓட்டியனுக்கு, ஏதோ நெற்றியில் அடித்தது போலிருந்தது.

************
'வாவ்... என்ன இது.. மிக லேசா இருக்கிற மாதிரியிருக்குது. ஹேய்.. நான் பறக்கிறேன்.. வாவ்.. காற்றில் மிதப்பதை அனுபவித்துக்கொண்டே, கீழே பார்க்கிறேன். மேலிருந்து, கீழ் பார்ப்பதே அழகுதான், என்று எண்ணியவன்...
அடடா.... அது என்ன என் பைக் போலிருக்கிறதே... சுற்றி ஒரே கூட்டம் வேற..
அப்ப என் கை பைக்க பிடிக்கலையா.. என் கைகளைப் பார்க்கிறேன்..ஓஓ..எங்கே பைக்..
'ஓ மை காட்' ... ! am I dead?
.. என்ன இது.. ஐயோ.. என்று தரையிறங்குகிறேன். கூட்டத்துக்குள் காற்றாய்ப் புகுகிறேன். அங்கே..ம்ம்.. என் நெற்றியில் இருந்து இரத்தம். என் கை சிதைந்து போய்.. வசந்திக்காக வாங்கியிருந்த ரோஜா என் மேலேயே... ' வசந்தியா, இளவஞ்சியா யாரைப்பற்றி நினைத்துக் கொண்டு போய் விழுந்தேனோ?, ம்..சுப்ரமணிக்கு யோகந்தான், போட்டியில்லாமல் வசந்தியைக் கைப்பிடித்து விடுவான்..ம்ம்...இளவஞ்ச்ச்ச்ச்சி.. வஞ்சித்து விட்டாயே அண்ணா..
ஆற்றாமையுடன் தரையில் என் உயிரற்ற உடலைப் பார்த்துக் கொண்டு இருந்தவன், யாரோ தோளைத் தட்டவே திரும்பிப் பார்க்கிறேன், தலையில் கொம்புடன் இரண்டு பேர் என் இருபுறங்களிலும் பக்கத்திற்கொன்றாக! 'வா தம்பி, போகலாம்' என்றான் அவர்களில் ஒருவன்.
"யாரய்யா நீர்..ஏதாவது சூட்டிங்-கா? தலையில கொம்பெல்லாம் வச்சிருக்க, பாக்கிறவங்க பயப்பட போறாங்கப்பா."
"பயப்படாதே தம்பி, நான் காலன், அவன் தூதன். எம கிங்கரர்கள். இங்கு இருக்கிற மற்றவர் கண்களுக்கு தெரிய மாட்டோம். உனக்கு மட்டுமே தெரிவோம். வா, மேலுலகம் போகலாம்'
'என்னது மேலுலகமா? எதுக்கு? நான் இன்னும் வசந்தியப் பாக்கல..ஐ லவ் யூ சொல்லல..இன்னும் வாழவே இல்லையேயா..அதுக்குள்ள கூப்பிடறீங்களே?. முடியாதுய்யா முடியாது'
'காலா, என்ன இந்த மானுடப் பதருடன் பேச்சு. பேசாமல் இழுத்துச் செல்லலாம் வா' என்ற படியே தூதன் இழுக்க, காலனும் சேர்ந்து கொண்டான். உதற முற்பட்டேன், முடியவில்லை. என்னை இருபுறமும் பிடித்துக்கொண்டே, பல்லக்கில் ஏற்றி பறக்கலானார்கள்.
************
ஏழு கடல்..ஏழு மலை.. தாண்டினோம். தூரத்தே ஏதோ 'டிஸ்னிலேண்ட்' போல பசுமையாய்த் தெரிந்தது. அதற்குள் அதை நெருங்கி விட்டோம். 'ம்..ம்.. இறங்கு' என்றான் தூதன் அதட்டலாக.
'ஏய்யா, உயிரைத்தான் எடுத்தீட்டிங்க.. கொஞ்சம் முகம் காட்டியாவது பேசலாமில்ல, ஏன்யா இவர் சள்ளுபுள்ளுன்னு விழுறாரு" என்றேன் காலனைப்பார்த்து, இறங்கியபடியே!.
ஒரே கூட்டம். அங்குமிங்கும் எங்கும் தலைகள். எல்லா மொழிகளிலும் கதைத்துக் கொண்டு, இருமிக்கொண்டு, கண்ணீர் விட்டுக்கொண்டு.... எல்லாம் பூமியில வசதியாய் இருந்த்துட்டு, இங்க ஒரே மாதிர்யாய் வித்தியாசமில்லாமல் வரிசையாய் க்யூவில் நின்று கொண்டு இருந்தார்கள். ஏழெட்டு க்யூ இருந்தது. எனக்கு அழுகையாய் வந்தது. அடடா, எல்லா உறவுகளையும் விட்டுவிட்டு இங்கே வந்துவிட்டோமே என்று.
கால,தூதன் சகிதமாக நானும் ஒரு க்யூவில் நின்றேன். க்யூ கவுன்டருக்கு அருகில் வர, காலன் மூன்று கார்டுகளைப் பெற்றுக் கொண்டு, சிரித்துக்கொண்டே என்னிடம் நீட்டினான், ஒரு கீரின், ஒரு யெல்லோ கார்ட், ஒரு ரெட் கார்ட் என மூன்று இருந்தன.
'என்னய்யா இது, எண்ட்ரன்ஸ் டிக்கட் மாதிரி?'
'ஆம், இது எண்ட்ரன்ஸ் டிக்கட்தான், உன் பாவ புண்ணிய கணக்குக்கு!
'பாவ புண்ணியமா? அப்ப இந்த எண்ணய்சட்டியெல்லாம் இருக்கா? அதெல்லாம் நிசந்தானா?' என்று கேட்ட என் கேள்விக்கு, பதில் சொல்லாமல் 'வா.. எமன் சபைக்கு போகலாம்' என்று விறைப்பாய் முன்னே கொண்டு சென்றார்கள்.உள்ளே நுழைந்தால், அங்கே எமன் ஒய்யாரமாக!
'வணக்கம் எம மகாராஜா! சூர்யா என்கிற இம்மானுடனின் ஆயுற்காலம் இன்றுடன் 24 முடிகிறது. தங்கள் கட்டளைப்படி கொண்டுவந்திருக்கிறோம்." என்றான் காலன் எமனைப்பார்த்து!
'ஹ்ஹாஹ்ஹா.. என்று கனைத்த எமனைப்பார்த்து. 'வணக்கம் வினு' என்றேன்.
'வணக்கம் வினுவா? வணக்கம் எம மகாராஜா' என்று சொல் - என்று முறைத்தான் தூதன்.
'தூதா, இவரப் பார்த்தால், எங்க ஊரு வினுச்சக்கரவர்த்தி ஞாபகம் வருது, அதான் அப்படிச் சொல்லிவிட்டேன்'
''ம்ம்ம்.. ' என்று கனைத்தபடியே என் சீட்டுகளை வாங்கினான் எமன். அதை அங்கிருந்த கம்யூட்டர் போலிருந்த ஒரு இயந்திரத்தில், பதிந்தான். துளையிட்ட அந்த என்னிடம் கொடுத்தபடியே, 'சமமாக வாழ்ந்திருக்கிறாய், மானுடா' என்றான் எமன்.
'எனக்கு ஒன்னும் புரியலையே, வினு'
'அடேய் மானுடா..உன்னோட வாழ்நாள எட்டு எட்டு வருசமா பிரிச்சி, அதுக்குள்ள நீ பண்ணிய பாவ புண்ணியங்களுக்கு கணக்கு பார்த்து, இந்த கார்டு கொடுப்போம். இதுக்கு ஏத்த மாதிரி உனக்கு நரகத்துக்கோ, சொர்க்கத்துக்கோ போவாய். அதயெல்லாம், சித்ரகுப்தர் பாத்துக்குவார்.'
'ஒ..ஓ..அதுதான் சூப்பர் ஸ்டார் 'எட்டு எட்டா மனுச வாழ்வ பிரிச்சிக்கோன்னு பாடினாரா?'
'கால,தூதா..இந்த மானிடன் வாய்துடுக்கா இருக்கான், சித்ரகுப்தனிடம் கொண்டு செல்லுங்கள், இவனை' என்று கட்டளையிட்டான்.
************
சித்ரகுப்தன் என்னமோ ஒரு கூண்டுக்குள் அடைபட்ட பொம்மை மாதிரி கண்ணாடி மாளிகைக்குள் இருந்தார். வெடுக்கென கார்டுகளை என்னிடமிருந்து பிடுங்கிக்கொண்டு, அவர் அறைக்குள் நுழைந்தார்கள் காலனும்,தூதனும். பலியாடுபோல நானும் உடன் சென்றேன். என்னுடைய கார்டுகளை அந்த இயந்திரத்தில் நுழைத்தார், குப்தர். அது என்ன காட்டியதோ தெரியவில்லை, சித்ரகுப்தனின் முகத்தில் கவலை படர்ந்தது.
'இவனது ஆயுட்காலம் இன்னும் முடியவில்லையே, அதற்குள் ஏனடா கூட்டி வந்தீர்கள்?' என கோபமாய்க் கேட்டார் குப்தர்.
மிரண்டு போன கால,தூதர்கள், 'எமனின் இயந்திரக் குறிப்புப்படிதான் செய்தோம்.?' என்றனர்.
'மட சாம்பிராணிகளே, எனது இயந்திரத்திற்கும் எமனின் இயந்திரத்திற்கும் இடையேயான உடனடித் தொடர்பில் கோளாறு என்பதை ஏற்கனவே எமனுக்குச் சொல்லி, அவனை இயந்திரம் சாரா பதிவேட்டின் மூலமாக உயிர் பறிக்கச் சொல்லியிருந்தேனே, என்ன ஆளுகிறான் அவன்?'
'ஓ..ஓ. on-line interface பிரச்னை இங்கும் இருக்கிறதா? பாவிகளே, data mismatch- லஅவசரப்பட்டு என் உயிரை எடுத்து விட்டீர்களடா? ' என்று கத்தினேன். 'அமைதியாயிரு' என்று அடக்கினர்.
'சூர்யா, தவறு நடந்துவிட்டது. மன்னித்துக் கொள். நான் பிரம்மனிடம் பேசிவருகிறேன். அதுவரை, உன்னை விருந்தாளியாகப் பாவித்து, இவ்வுலகை சுற்றிக்காட்டச் சொல்கிறேன். கால,தூதா, சூர்யாவை கவனித்துக் கொள்ளுங்கள்" என்று கூறி மின்னலென மறைந்து விட்டார்.
'ஏன்யா, தப்பா என் உயிர எடுத்து, என் வசந்திகூட சேர விடாம பண்ணீட்டீங்களே, நீங்க நல்லாயிருப்பீங்களா?'
'அய்யா, சபிக்காதீர். எங்கள் தவறுக்கு தக்க தண்டனை வந்து சேரும். அதற்குப் பிராயச்சித்தமாக தாங்களுக்கு இவ்வுலகை சுற்றிக்காட்டுகிறோம்.' என்றான் காலன்.
'என்னய்யா, அமெரிக்காவுல கஸ்டமர் சர்வீஸ் மாதிரி பண்ணுறீங்க! என்னை பூமிக்கு கொண்டு விடுங்கய்யா'
'அது சித்ரகுப்தன், பிரமனிடம் பேசிய பின் சொல்வார். அதுவரை வாருங்கள். இவ்வுலகம் பார்க்கலாம். பெரும்பாலான மானுடர்கள் போகும் நரகலோகம் பார்க்கிறாயா? என்று கூட்டிச்சென்றனர்.
ஒரேகூட்டம். எங்கும் தலைக்கள். அந்த தலையை எங்கோ பார்த்தமாதிரி இருக்கே..அட நம்ம தொகுதி மந்திரி மன்னார்சாமி. கையில் ஒன்பது சிவப்பு கார்டுகள்.
'வணக்கம் மன்னார் சார்! என்னங்க பூலோகத்துல நீங்க கறைபடாத கையி..நேர்மையின் சின்னமுன்னாங்க..இங்க நரகத்தில நிக்கறீங்களே..'
'யாரு தம்பி நீங்க..நம்ம தொகுதி ஆளுங்களா?. சிவலோக பதவியைலா அனுபவிச்சிட்டிருக்கேன்..இப்படி கேக்கறியே' என கேட்ட கேள்விக்கு பதில் தராமல், மழுப்பலாய் விசாரித்தார்.
'இங்க வந்தும் பதவியை விடாதீங்க...ஒன்பதும் ரெட்கார்டு வச்சிருக்கீங்க..இங்க என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க! எண்ணெச்சட்டில போயி விழாம?'
'இல்ல தம்பி, நம்ம கோவிந்தன் பச்சை கார்டு வச்சிருக்கிறதுல யாரையாவது ஏமாத்தி, கார்ட மாத்திரலாம் வாங்க'ன்னான். அதான்.. இங்க நிக்கறேன்..'
'யோவ்..இங்க வந்தும் திருந்தமாட்டீங்கய்யா நீங்க.., பாத்து..இதுக்கும் சேத்து ஒரு கார்டு கொடுக்கப்போறான். ஏன் காலா, இங்க வந்து தப்பு பண்ணினா, கணக்கு கிடையாதா?' என்றேன்.
'எல்லாத்துக்கும் உண்டு. அது அனுபவிக்கையில் தெரியும்' என்றான்.
'அதுசரி, பூமியில மனுசங்க பண்ணுற தப்பெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?'
'அது கோளுலகம் காட்டும். தூதா, இவனை 'கோளுலகம்' கூட்டிச் செல்லலாம்'
************
கோளுலகம், நம்ம பிர்லா கோளரங்கம் மாதிரி இருந்தது. ஒரே இருட்டு. அங்கங்கே நட்சத்திரம் மின்னிக் கொண்டிருந்தது. 'எந்த கண்டம் வேண்டும், உன் ஊரையே பார்க்கிறாயா?' என்றான். 'காட்டு..காட்டு' என்றேன் ஆவலாய். அருகிலிருந்த ஒரு சுவிட்சைத் தட்டினான். இருட்டு விலகி பெரிய திரை தெரிந்தது. இரண்டு கரை வேட்டிக்காரர்கள், கத்தையாய் பணத்தை எண்ணிக் கொண்டிருந்தார்கள். ஒரு ரவுடிக்கூட்டம் யாரையோ துரத்திக் கொண்டிருந்தது. அடுத்து ஒரு பெண்ணுடன் யாரோ சல்லாபித்துக் கொண்டு இருந்தார்கள். காட்சி மாறி,மாறி ஓடிக் கொண்டு இருந்தது.'
'என்னய்யா இது, மத்தவங்க பண்ற தப்ப, நாங்க பாத்தா தப்புங்கறீங்க..நீங்க மட்டும் இப்படி பாக்குறீங்களே?' சிரித்தார்கள் அவர்களிருவரும். 'தண்டனையை அளவிட, எங்களுக்கு இது தேவை'. '
'என்னமோ போங்க, எங்க ஊரு சென்ஸார் அதிகாரிங்க மாதிரி பேசறீங்க! தப்பு செய்றவங்களுக்கு, செய்யாமலிருக்க ஒரு முன்னெச்சரிக்கை தரலாமில்ல'
'அதுவும்தான் செய்கிறோம்..' என்றபடியே இன்னொரு பட்டனைத்தட்டினான். அதில், நிலவு நண்பனின் ப்லாக் பதிவு தெரிந்தது'
'அட இது ப்லாக். இதுல நீங்க என்ன பண்ணுறீங்க.."
'நாங்க இது போன்ற மனிதர்கள், தளங்கள் மூலமாக நல்லது கெட்டது சொல்கிறோம். கேட்டு,படிச்சு திருந்தறவங்களுக்கு நல்லது. அல்லாதவங்களுக்கு நரகம்தான். இப்போ கூட 'மரணம்' பற்றி எண்ணிப்பார்க்க, 'இளவஞ்சி' மூலமா சொல்லியிருக்கோம்'.
'ம்..பண்ணுங்க..பண்ணுங்க...எங்க டெக்னாலஜி வளர்ச்சி உங்களுக்கும் உதவுதா, அப்படியே இந்த போலிகள் நடமாட்டத்துகுக்கும் ஏதாவது பண்ணுங்களேன்' என்றேன். சரி, இந்த சொர்க்கலோகம் கொஞ்சம் கூட்டிப் போங்களேன், ரம்பா, ஊர்வசி எல்லாம் பார்க்கலாமே' என்றேன், ஆவலாய்.
'ஏன் சூர்யா, வசந்தியை மறந்துவிட்டாயா?' ஏளனமாய்க் கேட்டான் தூதன்.
'என்னய்யா நீர்..பார்ப்பது தப்பா. அழகை ரசி. அடைய விரும்பாதேன்னு ஒரு கவிஞன் சொல்லியிருக்கான்யா!'
'சரி..சரி..வா பிரமனிடம் இருந்து அழைப்பு வந்துவிட்டது. அவர் இருப்பதும் சொர்க்கபுரியில்தான்'..என்று திரையைப் பார்த்தவாரே சொன்ன கால,தூதர்கள் சொர்க்கலோகம் அழைத்துச் செல்லத் தயாரானார்கள்.
************
எங்கும் ஒளிவெள்ளம். குளுமை, சிலுசிலுவென்ற நறுமண காற்று. வெகு சில தலைகளே தென்பட்டன. பிரமனின் சபையை அடைந்தோம்.
'தம்பி சூர்யா, எமனின் கணக்கு தவறாயிற்று. சித்ரகுப்தன் சொன்னான். பிழையாய் உம்மைக் கூட்டிவந்துவிட்டார்கள். அதற்காக, வருந்துகிறோம். இன்னமும் நாற்பத்தைந்தாண்டுகள் உமக்கு வாழ்க்கை இருக்கிறது. உம்மை மீண்டும் பூவுலகம் அனுப்ப இருக்கிறோம். எங்கள் தவறுக்கு பிராயச்சித்தமாய், உமக்கு ஒரு வரம் தருகிறோம். என்ன வேண்டும், கேள்..' என்றார் பிரமன்.
'என்னங்க நீங்க.. சாதாரணாமாச் சொல்லிட்டீங்க. ஆனாலும் படைப்புக்கடவுள் நீங்க..நான் என்ன சொல்றது.. எந்த வசந்தியோட அன்புக்காக பூவை வாங்கிட்டுப் போனேனோ, அந்த வசந்தியோட அன்பு முழுமையா எனக்கு கிடைக்கச் செய்யுங்க' என்றேன்.
'அப்படியே செய்கிறேன் சூர்யா..நீ அவளது மகனாகப் பிறக்கச் செய்கிறேன். உனக்கு அவள் சூர்யா என்று பெயரிடவும் அருளுகிறேன்'
'அய்யோ பிரம்மா... என்ன சதி செய்கிறீர்கள்...நான் அவள் காதல் துணையாய் வேண்டும் என்றல்லவா அவள் அன்பைக்கேட்டேன்..'
'இல்லை சூர்யா. நீ இங்கு வந்த மூன்று தினங்கள் கழிந்தது. இவ்வுலகின் மூன்று தினங்கள், பூவுலகின் மூன்று வருடங்களுக்குச் சமானம். உன் வசந்திக்கும், சுப்ரமணிக்கும் இப்போது திருமணமாகி இரண்டு வருடங்கள் கழிந்துவிட்டது. குழந்தையாய் நீ, உனக்கு அவள் அன்பு முழுமையாய் கிடைக்கச் செய்கிறேன்'
'ங' என்று விழித்தேன் நான்..
மண்ணைக் குழைக்க ஆரம்பித்தார், பிரம்மன். ஒரு மரணம் ஜனிக்கத் தயாரானது!
************
(தேன்கூடு போட்டிக்காக..லாஜிக்லாம் பார்க்காம, சும்மா ஜாலியா படிங்க..)