Monday, June 12, 2006

'தகிக்கும் தேகம்'

(தேன்கூடு போட்டிக்கான சிறுகதை .. விளக்கங்களுக்கு பார்க்க)

மாணவரும், மாணவியரும் இணைந்து படிக்கும் 'கோ -எட்' பள்ளி அது. அன்று பிளஸ் ஒன் 'பி' பிரிவு வகுப்பறை எல்லாம் ஒரே பரபரப்பு. அதற்குக் காரணம் அந்தப் புத்தகம்., 'தகிக்கும் தேகம்'.

சுப்பிரமணிதான் அந்த புத்தகத்தை கொண்டு வந்திருந்தான். அவன் அப்பா பஜாரிலே தங்க நகைக்கடை வைத்திருந்தார். அவன் கையில் எப்போதும் பணம் இருக்கும். கல்லூரி படிக்க வேண்டியவன், இப்போதுதான் பிளஸ் ஒன்னிற்கே வந்திருக்கிறான். முளையிலேயே விளைந்தவன். தான் பார்த்ததை, தன் சகாக்களும் பார்க்கட்டும் என்று எடுத்து வந்திருந்தான்.

வண்ணத்தில் பெண்கள் உடற்கூறு காட்டும் அப்புத்தகத்தினை, காலையின் முதல் பீரியடிலேயே பார்த்த இரண்டொரு மூத்த மாணவர்கள் (கல்லூரி பயில வேண்டியவர்கள், இன்னும் பிளஸ் ஒன்னிலேயே இருப்பவர்கள்) குசுகுசு என்று பேசிக் கொள்ள, அரசல் புரசலாக அடுத்த வரிசை மாணவர்களை தொற்றிக்கொண்டது.

இன்டர்வெல்லில் புகைய ஆரம்பித்து, மூன்றாவது பீரியடில் வகுப்பில் உள்ள அனைத்து மாணவரிடையேயும் பற்றிக் கொண்டது.

மாணவியர் பிரிவு, சக மாணவரிடையே உள்ள பரபரப்பை உணர்ந்ததே தவிர, என்னவென்று அடையாளம் கண்டு கொள்ள இயலவில்லை. கூடவே சேர்ந்து படித்தாலும், மாணவர் தனியேவும், மாணவியர் தனியேவும் அமர்ந்திருந்தது அதற்கு ஒரு காரணம்.

ஒரு மேஜையிலிருந்து, அடுத்த மேஜைக்கு அந்தப்புத்தகம், தாவிக் கொண்டிருந்தது. பார்த்த ஒவ்வொரு மாணவரிடையேயும் ஒரு மிரட்சி, திரும்பத்திரும்ப பார்க்க ஆவல், குறுகுறுப்பு. சில மாணவர்கள், அந்தப்புத்தகத்தின் வழவழப்பினை தொடுவது போல், அதிலுள்ள படத்தினை தொட்டுப்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

சூர்யாவின் மனதும் அடித்துக் கொண்டது, எப்போது அந்தப்புத்தகம், அவன் மேஜையை அடையுமென்று. அவனது ஒரு மனது சொல்லியது, பார்க்கக் கூடாதென்று, இன்னொரு மனதோ எப்ப வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

அடிப்படையில் சூர்யா ஒரு புத்தகப்பூச்சி. வகுப்பில் நன்கு படிக்கும் மாணவருள் ஒருவன். மாணவர் மட்டுமல்ல, மாணவியரும் சகஜமாக சந்தேகங்களை நிவர்த்தி செய்ய அவனை அனுகுவர்.

அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது, 'நாமா இந்த புத்தகத்தினை பார்க்க ஆசைப்படுகிறோம்?' என்று. ஆனாலும், என்ன செய்ய. அந்த புத்தகத்தினைப் பற்றி நினைக்கையிலேயே, மனசு கிளர்ந்த்தது. என்னவென்று சொல்ல இயலாமல் உடல் புல்லரிக்கச் செய்தது. அவன் என்ன செய்வான், அவன் வயதின் கோளாறிற்கு.

'ஐயோ, இதோ வந்து விடும், சண்முகம் பார்த்துக் கொண்டு இருக்கிறான், அடுத்து அவன்தான். ஒரு புறம் பரபரப்பு, மறு புறம் பயம். நேரம் கிட்ட வரவர, சூர்யாவின் மனது திடமடைந்து அப்புத்தகத்தை புறக்கணிக்கத் தயாரானது. ஆனால், அதற்குள் மதிய இடைவேளைக்கான மணியடிக்கவே, ஆசிரியர் வெளியே செல்ல, சுப்பிரமணி எழுந்து வந்து சண்முகத்திடம் இருந்து புத்தகத்தைப் பிடுங்கிக் கொண்டான்.

'சூர்யா, லஞ்சுக்கப்பறம் பாரு-ன்னு சொல்லிக்கிட்டு எடுத்துப் போய்விட்டான். 'அப்பாட தப்பித்தோம்' என்றிருந்தது சூர்யாவிற்கு.

'வாங்கடா சாப்பிடலாம்' என்றழைத்த நண்பர் கூட்டத்தோடு சாப்பிடப் போனான். வழக்கமாக சாப்பிடுகையில் ஆசிரியரையோ அல்லது சக நண்பர்களையோ கிண்டலடித்துக் கொண்டு சாப்பிடும் அவர்களிடையே, அன்று 'தகிக்கும் தேகமே' ஹாட் டாபிக் -ஆனது.

சூர்யாவின் மனது மீண்டும் துடிக்க ஆரம்பித்தது. சரி, 'யாருக்கும் தெரியாமல் படிச்சிரலாம்', நம்ம டர்ன் வருகையில 'வேண்டாம்'னு சொல்லிரலாம் என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, 'சரிடா, நான் கிளாஸுக்குப் போறேன், நீங்க பேசிட்டு வாங்கன்னு' சொல்லிப் பிரிந்தான். 'புத்தகப்பூச்சி, இந்தப்புத்தகத்தையும் படிடா...' என்று கிண்டலடித்த நண்பர் கூட்டத்தை சட்டை செய்யாது வேகமாக வகுப்பறை நோக்கி நடந்தான்.

அவன் ஆர்வத்தை அதிகப்படுத்தும் விதமாக, வகுப்பறையில் எவரும் இருக்க வில்லை. , நல்ல வேளை என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டே, வேகமாக சுப்ரமணியின் இடத்தை அடைந்தவன், அப்புத்தகத்தை சுப்ரமணியின் பைகளில் தேடினான். கைகள் நடுங்கின. ஒரு வழியாய் கண்டு பிடித்து எடுத்தவனுக்கு, மனம் 'திக்திக்' என்றடித்தது. புத்தகத்தை எடுத்துக் கொண்டு, அவன் இருக்கைக்கு ஒடினான். மதியத்தின் முதல் வகுப்பான, தமிழ்ப்புத்தகத்தை எடுத்து, அதன் நடுவில் 'தகிக்கும் தேகத்தை' வைத்துப் பக்கங்களைப் புரட்டலானான். அவனது காது மடல்கள் உஷ்ணத்தால் சிவந்தது. அவனது தேகமும் தகித்தது. சில நிமிடங்கள் போயிருக்கும். திடிரென அருகில் நிழலாடவே, என்னவென நிமிர்ந்து பார்த்தவனுக்கு, 'பக்' கென்றிருந்தது. எதிரே கிளாஸ்மேட் வசந்தி நின்றிருந்தாள்.

'என்னடா, இன்னக்கி எல்லாப் பசங்களும் ரகசியம் பேசிக்கிட்டிருந்தீங்க'ன்னு கேட்டுகிட்டு அருகில் வந்தவளைக் கண்டதும், அவசர அவசரமாகப் புத்தகத்தை மூடினான்.

'என்ன நான் கேக்கறேன், ஒன்னும் சொல்ல மாட்டேங்கிற..'. வசந்தி இன்னும் அருகே வந்தாள்.

'வ்வ் வசந்தி..' என்று குழறியபடியே புத்தகத்தை மறைக்க முற்பட்டான். அதற்குள், அவனது தடுமாற்றத்தை உணர்ந்த வசந்தி, சந்தேகத்துடன் அவன் கையில் இருந்த புத்தகத்தைப் பிடுங்க முற்பட, புத்தகம் தந்த படபடப்பும் அவள் வருகையின் அதிர்ச்சியும் சூர்யாவைப் பலமிழக்கச் செய்ய, தமிழ்ப் புத்தகத்துடன் 'தகிக்கும் தேகம்' அவள் கைகளில்.

ஒரு வினாடிதான். வெட்கமோ, கோபமோ அவள் முகமும் சிவந்தது. ..'ச்ச்சீ..' என்று சொல்லியவாறே புத்தகத்தை தூக்கி வீசினாள்.புத்தகம் ஆசிரியர் அமரும் இருக்கையின் பின்னால் உள்ள பலகையின் இடுக்கில் முக்கால்வாசி மறைந்து, கால்வாசி தெரியத் தொங்கியது. படபடப்போடு அவள் இருக்கைக்கு ஓடினாள்.

சூர்யாவுக்கு, படபடப்பெல்லாம் அடங்கி, கண்களில் கண்ணீர் தளும்பியது. எழுந்து சென்று புத்தகத்தை எடுத்து, சுப்ரமணி பையில் வைத்து விடலாமா? என்று எண்ணியவன், மெல்ல வசந்தியின் இருக்கை நோக்க, அவள் இவனை முறைத்துக் கொண்டிருக்கவே, அந்த எண்ணத்தைக் கைவிட்டான்.

அதற்குள் மதிய வகுப்பு அரம்பிக்க மணியடிக்கவே, மாணவர்கள் தம்தம் இருக்கை நோக்கி வர ஆரம்பித்தனர். தமிழாசிரியரும் வந்துவிட்டார். சூர்யாவுக்கு ஓ வென்று அழ வேண்டும் போலிருந்தது. 'ச்சை..ஒழுங்கா சாப்பிட்டுட்டு பசங்க கூடவே இருந்திருந்தா, இம்மாதிரி இக்கட்டு வந்திருக்குமா?, இப்ப எப்படி அந்த புத்தகத்தை எடுக்க, எப்படி தெரியாமல் சுப்ரமணி பையில வைக்க, ஐயோ, கடவுளே' என்று மனசுக்குள் பிதற்றிக் கொண்டிருந்தான்.

அட்டெண்டென்ஸ் எடுத்து முடித்து பாடத்தை துவக்கியிருந்தார் ஆசிரியர். சுப்ரமணி 'தகிக்கும் தேகத்தை'-க் காணவில்லை என சக மாணவரிடையே குசுகுசுப்பது சூர்யாவின் காதில் விழுந்தது. ஆயினும் அவன் கவனமோ, இடுக்கில் மாட்டிக்கொண்டு 'கால்வாசி தெரியும் அந்தப்புத்தகம் ஆசிரியர் கண்களில் பட்டுவிடக்கூடாதே' என்ற கவலையில் இருந்தான். அவ்வப்போது வசந்தியையும் பார்த்துக் கொண்டான்.

செய்யுளின் இலக்கணக் குறிப்பினை விளக்க, ஆசிரியர் எழுந்து போர்டை நோக்கிப் போக, சூர்யா வெலவெலத்தான். 'மானம் கப்பலேறப் போகிறதே' என்று முனகிக்கொண்டே எல்லா இஷ்ட தெய்வங்களையும் வணங்க ஆரம்பித்தான். ஏனோ, அவன் மீது மரியாதையோடு பழகும் சக மாணவ, மாணவியர், அம்மா, அப்பா, தம்பி எல்லோரும் நினைவுக்கு வந்தார்கள்.

இலக்கணக் குறிப்பை எழுதிய ஆசிரியர், சாக்பீஸின் ஒரு துண்டை ஒடித்துப் போட, அது காலடியில் விழவே, அதனை பலகையின் இடுக்கில் தள்ள முற்பட்டார். சூர்யாவிற்கு மயக்கம் வரும்போலிருந்தது. அவன் மாட்டிக் கொண்டுவிட்டான். 'தகிக்கும் தேகம்' அவர் கண்களில் பட்டுவிட்டது.

'ஏன்டா புத்தகத்தை எல்லாம் இங்க போட்டிருக்கிங்க?'ன்னுட்டே புத்தகத்தை எடுத்து புரட்டியவர், ஒரு கணம் திடுக்கிட்டார். அவர் கண்களில் கனல் பறந்தது. மொத்த மாணவரிடையேயும் மயான அமைதி.

சூர்யா எழுந்த விசும்பலை கட்டுப்படுத்தியவாறே, எங்கோ நோக்குவது போல், வசந்தியை நோக்கித் திரும்பினான். அவன் கண்களின் கெஞ்சல் அவளுக்குப் புரிந்திருக்கவேண்டும். சுப்ரமணியோ புத்தகத்துள் முகத்தைப் புதைத்துக் கொண்டிருந்தான்.

கனைத்துக் குரலைச் சரிசெய்து, தன்னைச் சற்று நிதானப்படுத்திக் கொண்டார், தமிழாசிரியர்.

'இத யார் கொண்டுவந்தா? யார் மறைச்சு வச்சா? இதயெல்லாம், நான் கேக்கப் போறது இல்லை, தலைமையாசிரியர்ட்ட சொல்லி தண்டிக்கப் போறதும் இல்லை. ஆனா, இத செஞ்சவங்களுக்காக, வருத்தப் படறேன். இத பசங்கதான் யாரோ கொண்டு வந்திருக்கணும், நீங்க எல்லாரும் வளர்ந்த பசங்க, வளர்ந்துக்கிட்டு இருக்கற பசங்க. இந்த வயசில இது மாதிரியான எண்ணங்கள் வரத்தான் செய்யும், ஆனா அதுல இருந்து மீண்டு வர்ர கத்துக்கணும். இது மாதிரியான புத்தகங்கள் படிக்கறது, கழிவுநீர்த்தொட்டியில முகங்கழுவற மாதிரி. படிச்சி முடிச்ச பின்னும், நாறிக்கிட்டு இருக்கும். உங்க மனசுல இருக்கற, நல் காதல் உணர்வை மறச்சு, வக்கிரமான எண்ணங்களத் தூண்டிவிடும். இந்தமாதிரியான புத்தகங்களைப் படிக்க ஆரம்பிச்சா, உனக்கான கற்பனை வரண்டு, இதிலிருக்கிற தப்பான எண்ணங்கள் மனதை ஆக்ரமிக்கும். காதலோ, காமமோ அது உன்னுடைய உணர்வு, அத இந்த மாதிரியான புத்தகங்கள் சொல்லிக் கொடுக்கிற பாதையில எடுத்துப்போய் உன்னுடைய தனித்துவத்தை இழந்துராதே. சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை, தானே தெரியும், அதுக்கு இந்த மாதிரி புத்தகங்கள் தேவையில்லை. நல்ல காதலையும், காமத்தையும் எத்தனையோ தமிழ் இலக்கியங்கள், பதமாய்-ப்ண்பாய்ச் சொல்லியிருக்கு. ஏன், நம்ம பாடங்கள்ள கூட இருக்கு, அதெல்லாம் படி. இந்த வயதில் காதலும், காமமும் மனசுல வரும்தான். அதெல்லாம் கூடாதுன்னு சொல்ல வரலை, ஆனா, உன்னுடைய எதிர்காலக் கனவ நினைச்சி, இதயெல்லாம் தள்ளிப்போடு. 'உத்தியோகம்தான் புருஷ லட்சணம்', அது நல்ல அமைஞ்சாதான், மற்ற உன் கனவெல்லாம் நனவாகும். நான் சொல்றது யாருக்குப் புரியுதோ இல்லையோ, புரிய வேண்டியவங்களுக்குப் புரிஞ்சா சரி!' என்று சொல்லிக்கொண்டே, 'தகிக்கும் தேகத்தி'னை வகுப்பறையின் சன்னல் வழியே தெரிந்த ஆற்றில் எறிந்தார், 'தகிக்கும் தேகம்' தண்ணீரில் மூழ்கியது.

பயமும் படபடப்பும் ஓடிக்கொண்டிருந்த சூர்யாவின் மனதில், அப்போது ஒரு நல் வளர்சிதை மாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தது!

(கதை பிடிச்சிருக்கா அப்ப வாக்களிக்க .. விபரங்களுக்கு பார்க்க)

27 Comments:

said...

Hi Siva, You took me to my school days. I was in my 11th Standard and one fine day morning, my english teacher was taking class. He usually took class by sitting in the chair only and I was in the front desk (always...romba nall paiyan). During his class, I noticed him that he was looking the last bench (Maappillai Bench) often and all of a sudden he rushed to the last bench and grabbed a book from one of my clssmates lap. And it was a "Gilma" book and he slapped him in front of all the students (including girls)and kicked him out. And later on he fined him 10 rupees which is cheaper than the gilma book and allow him to attend the class. All girls were curious to know why this teacher kicked him out all of a sudden and none knows as of now except boys.

said...

Thanks abiramam, This story is contesting in this month competition from thenkoodu. for more details,

http://www.thenkoodu.com/contest.php

Thanks for your comments!

said...

நல்ல கதை, கருத்தும் நன்றாயுள்ளது!

said...

உங்கள் கருத்துக்கு நன்றி, வாசகரே.

said...

Very good narration, bringing back the memories of my school days. Good luck,

said...

அட்டகாசமான கதை. துள்ளூவதோ இளமை படம் பார்த்த எஃபெக்ட்.

கிளைமாக்ஸ் very nice.

said...

கொஞ்சம் பேர் சொல்லக்கூடாதா..நா எப்படி கூப்பிட? ம்ம்..நன்றி அனானிமஸ் அண்ணா!

said...

Hey...very Nice...golden memories of school days...Romba nalla ezhudi irukeenga...Vaazhthukkal :)

said...

Thanks Priya, for your comments.

said...

நல்லா எழுதி இருக்கீங்க, வாத்தியார் சாக்பீஸ ஒடைக்கிறது, லஞ்ச் சாப்டறப்ப பேசற பேச்சுக்கள்..அப்படியே பள்ளி நாட்களை நினைவு படுத்தீட்டிங்க..

போட்டியின் தலைப்புக்கு பொருத்தமா எழுதியிருக்கீங்க.

க்ளைமாக்ஸில வாத்தியாரின் பேச்சு, நல்ல டச்சிங். மெஸெஜ் உள்ள ஒரு கதை..

வாழ்த்துக்கள்!

said...

நல்லாருக்கு, சின்ன சம்பவத்தை அழகா கதையா கொண்டாந்துட்டீங்க!

said...

ஆஹா.. அருமை...அந்த பயம்... அந்த கண்ணீர்.. கலக்கிட்டீங்க..

வெற்றி பெற வாழ்துக்கள்

said...

அருமையா இருக்கு சிவா. அதுவும் தமிழ் வாத்தியாரின் அணுகுமுறை வித்யாசம்.
பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்.

said...

நன்றி ஸ்ரீராம்

மனதின் ஓசையாரே, உங்கள் ஓசைக்கும் நன்றி.

தம்பி, உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

எல்லோருக்கும் ஓட்டு உண்டு, தம்பிக்கும்தான்..

மறந்துராம ஓட்டு போடுங்க..

உங்கள் பின்னூட்டங்கள், ஊக்கமளிப்பதாக இருந்தது. நன்றி..நன்றி..

said...

நல்ல பாலியல் விளிப்புணர்வு கதை. எதார்த்தமாக எழுதியிருக்கிறீர்கள் பாராட்டுக்கள்

said...

தமிழ் ஆசிரியர் நன்றாக முடிவெடுத்தார்....உங்களுக்குப் பாராட்டுகள்

said...

நன்றி, சிவஞானம்ஜி, வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

said...

கதை அருமை, பள்ளி நாட்களை நினைவுக்கு கொண்டு வந்துவிட்டீர்கள், வாழ்த்துக்கள்..

said...

அருமை.நல்ல கதை.பள்ளி நாட்களை நினைவு படுத்தீட்டிங்க..
ஓட்டு பெற வாழ்துக்கள்.. கலக்கிட்டீங்க.

said...

நானும் இருக்குற கொஞ்ச நஞ்ச மூளைய கசக்கி, மற்ற எந்த படைப்புகளோட சாயல் வரகூடாதுனு எழுதி பதிஞ்சப்புறம் பார்த்தா போட்டி முடிஞ்சிருச்சு..

உங்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

அப்படியே கொஞ்சம் நம்ம பக்கம் வந்து எப்படி இருக்குனு சொன்ன உதவியா இருக்கும்....

said...

நன்றி, யாத்ரீகன், உங்கள் பதிப்பினை இன்னும் படிக்கவில்லை. வந்து படித்து கருத்துச் சொல்கிறேன்.

மறக்காம ஓட்டு போடுங்க!

said...

கோ.வி.கண்ணன்,அருண்குமார், சிவஞானம்ஜி, தமிழாதமிழா...

அனைவருக்கும் என் நன்றி!

மறந்துடாம, ஓட்டு போடுங்க!

உங்கள் ஊக்கத்துக்கு நன்றி..நன்றி..நன்றி!

said...

கோ.வி.கண்ணன்,அருண்குமார், சிவஞானம்ஜி, தமிழாதமிழா...

அனைவருக்கும் என் நன்றி!

மறந்துடாம, ஓட்டு போடுங்க!

உங்கள் ஊக்கத்துக்கு நன்றி..நன்றி..நன்றி!

said...

Good story, you are on the list

said...

நன்றி கார்த்திக், நன்றி.

said...

Really Kalakal siva


-Karthik Enkira Tamil Pithan

said...

It is good to read, fun time!