Friday, June 02, 2006

தமிழ் கட்டாயப்பாடம். மேலும் சில தேவைகள்

தமிழ் கட்டாயப்பாடம் மட்டுமல்ல, மேலும் சில தேவைகள் இருக்கிறது, தமிழ் வளர..அது குறித்து என் எண்ணங்களின் ஒரு பதிவு..

நம்முள் சில அடிப்படை எண்ண மாறுதல்கள் ஏற்பட வேண்டும். இன்றைய சூழலில், அனைவரும், பொருளாதார ரீதியாக பின் தங்கிய குடும்பங்கள் உட்பட, கஷ்டப்பட்டாவது தங்கள் பிள்ளைகள் ஆங்கில வழிக்கல்வி கற்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். மம்மி, டாடி என்று பிள்ளைகள் அழைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். தமிழ்வழிக் கல்வியை வெறுக்கிறார்கள் என்று சொல்லவில்லை, ஆங்கிலவழிக் கல்வியை மோகிக்கிறார்கள் என்று சொல்ல வருகிறேன். ஆரம்ப நிலை ஆங்கிலவழிக்கல்விக்கூடங்களில், பிள்ளைகள் மனனம் செய்யவே கற்கிறார்களே அன்றி, வேறல்ல. ஆங்கிலவழிக் கல்வியைக் குறை கூறவில்லை. ஆங்கில மொழியும் தேவையானது தான். தம்தம் தாய்மொழி வழியில் பயில்கின்ற பாடங்கள், கற்கின்ற பாடங்களின் சிந்தனையைத் தூண்ட வல்லது என்பது உண்மை. இதை பெற்றோரும் உணர வேண்டும். தமிழ்க்குழந்தைகள் தமிழை நன்கு பேச, கற்க, எழுத உதவ வேண்டும்.

அடுத்து கற்பிக்கின்ற ஆசிரியர் வட்டம். பயிற்றுவிக்கின்ற ஆசிரியர்களும் ஆர்வத்தோடு, மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாக தமிழ் வகுப்புகளைக் கையாள வேண்டும். (இந்த வகையில் நான் மிகவும் கொடுத்து வைத்தவன், எனக்கு கிடைத்த எல்லா தமிழ் மற்றும் கணித ஆசிரியர்கள் மிக வல்லவர்கள் ). அதுவே மாணவர்களுக்கு மேலும் கற்க, ஆர்வம் தரும். கதை, கவிதை, கட்டுரை எழுத, வாசிக்கத் தூண்ட வேண்டும். இவையெல்லாம், வெறும் கடமைக்காக மட்டுமின்றி, தமிழார்வத்தோடு செய்பவராயிருத்தல் வேண்டும். 'தமிழ் தானே' என்ற மனப்பான்மையோடு கற்போரும், கற்பிப்போரும் இருத்தல் கூடாது.

அடுத்து பல்வேறு துறை வல்லுநர்கள், தம்தம் துறையில் பயன்படுத்துகின்ற ஆங்கில வழிச்சொற்களுக்கு, இணையான தமிழ்ச்சொற்களை அடையாளம் காண வேண்டும். அவற்றை நடைமுறைப் படுத்த வேண்டும். இச் சொற்கள், தமிழகராதியில் சேர்க்கப்பட வேண்டும், அது எல்லோரும் அறியும் விதமாக இருக்க வேண்டும். தமிழ் கட்டாயப்பாடத்தோடு, இந்த மாறுதல்களும் நடைமுறைப்படுத்தப் பட்டால்தான், தமிழின் வளர்ச்சி நிலையாகும்!

3 Comments:

said...

தமிழ் வளர தமிழ் மீடியத்தில்தான் படிக்க வேண்டும் என்று யார் சொன்னது?

ஆங்கிலம் இந்த அளவுக்கு உலகம் முழுதும் பேசப்படுகிறதே, இதில் எத்தனை பேர் ஆங்கில மீடியத்தில் படித்தார்கள் சார்?

இங்கிலீஷ் படிப்பு மோகம் எல்லா பாஷையிலும் தான் இருக்கிறது. நான் இருந்த மிடில் ஈஸ்டிலும் இப்படித்தான். ஐரோப்பாவிலும் கூட எல்லோருக்கும் ஆங்கிலத்தின் அருமை தெரிந்திருக்கிறது.

பிரெஞ்ச் முதலான நாடுகளில் கூட தன் தாய்மொழியிலேயே தான் பெரும்பாலும் கற்கிறார்கள். ஆனாலும், பிரெஞ்ச் அழிந்து வருவதாக அவர்கள் சொல்கிறார்கள். தாய்மொழிக்கும் மீடியத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

தமிழ் பற்று என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். கதர் வேட்டி மேல்துண்டு வேண்டும். வடமொழி எழுத்துக்களை தவிர்க்க வேண்டும். குழவி, குப்பி போன்ற அபத்தமான அர்த்தம் புரியாத வார்த்தைகளை பேசவேண்டும். எல்லோருக்கும் தெரிந்த பஸ், டாக்ஸி, போன் போன்ற வார்த்தைகள் கூட உபயோகிக்க கூடாது. வடமொழி வார்த்தை உபயோகித்தால் பாப்பான். பிற திராவிட மொழிகளுடன் கூட ஒரு தொடர்பும் இருக்க கூடாது ...

என்றெல்லாம் தமாசு பண்ணும் அரசியல்வாதிகளிடமும் அறுவறுப்பான வெருப்பு கொண்டவர்களிடமும் மாட்டிக்கொண்டு தமிழ் குரல்வளை நெறிக்கப்படுகிறது.

மொழி வாழ அது வளரவேண்டும். அது வளர, அது தினம் தினம் மாற வேண்டும். மாறாத மொழி அழியும்.

இதை யாராலும் தடுக்க முடியாது.

ராமசாமி நாயக்கரின் ஒரு கொள்கையை இவர்கள் கட்டாயமாக கடைபிடிக்கிறார்கள். தமிழ் காட்டுமிராண்டி பாஷை என்றார் அவர். இவர்கள் தமிழை காக்கிறேன் பேர்வழி என்று இவர்கள் நிஜமாலுமே காட்டுமிராண்டிகள்தான் இதை பயன்படுத்துவார்கள் என்று ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்

நன்றி

நன்றி

said...

ஆங்கிலம் தேவையில்லை என்று, எந்த இடத்திலும் சொல்லவில்லை. ஆங்கில மோகம், தமிழைப் பாதிக்கிறது என்று சொல்கிறேன். ஆங்கில அருமையை குறைத்துச் சொல்லவில்லை.

தாய்மொழிக்கும், மீடியத்துக்கும் சம்பந்தமும் இல்லை என்பது சரியல்ல. இன்றைய மாணவர் சமுதாயத்திடம் கேட்டுப் பாருங்கள், அதன் அர்த்தம் அவர்கள் அறிவர்.


//*மாறாத மொழி அழியும்.*/

உண்மை. இதனை வலியுறுத்தவே, புதிய சொற்கள் தமிழகராதியில் சேர்க்கப் படவேண்டும் என்பதனையும் சுட்டிக்காட்டி இருக்கிறேன்.

தங்கள் கருத்துக்கு நன்றி.

said...

நெல்லை சிவா,

எல்லாம் சரி, தமிழ் கட்டாயபாடம் என்பதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளனவே...உதாரணமாக வங்கி ஊளியர்கள் வெளி மாநிலத்தில் பல ஆண்டுகள் பணி புரிகிறார்கள், அவர்களின் குழந்தைகள் நேரே 10ஆம் வகுப்பிற்கு வந்து தமிழில் "தத்திங்கிணத்தோம்" ஆவார்களே! அதற்கு என்ன செய்ய?


//
தமிழ் கட்டாயப்பாடத்தோடு, இந்த மாறுதல்களும் நடைமுறைப்படுத்தப் பட்டால்தான், தமிழின் வளர்ச்சி நிலையாகும்!
//

லிஸ்டில் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்..

அடிப்படை மொழி அறிவு என்று எல்லோரும் (எல்லா நிலையிலும் உள்ள மாணவர்கள்) படிக்கக் கூடிய வகையில், ஐரோப்பாவில் இருப்பது போல், கல்விமுறையிலும் மாற்றம் கொண்டுவந்தால் இந்தத் திட்டம் சிறப்பாக இருக்கும். தமிழில் "ததிங்கிணத்தோம்" ஆவது கஷ்டம்.