Monday, June 26, 2006

தேன்கூடு போட்டி கோப்பை!!!
தேன்கூடு போட்டிக் கோப்பையை வென்ற

இளவஞ்சி, இராமசந்திரன்உஷா, நிலா & ராசா விற்கு வாழ்த்துக்கள்!


எனது சிறுகதைக்கு வாக்களித்த(17) அன்பு நெஞ்சங்களுக்கும், படித்தவர்களுக்கும், விமர்சித்த 'பினாத்தல்' சுரேஷ் மற்றும் மூன்றாவதுகண் நண்பர்களுக்கும் நன்றி!

- நெல்லை சிவா


(போட்டி முடிவு காண)

Sunday, June 18, 2006

கரடி உடுறேன்...

அய்யாமாரே..அம்மாமாரே..

நா இன்னக்கி ஒரு மேஜிக் காட்டப்போறேன். என்னா மேஜிக்-னு கேட்பவர்களுக்கு :

ஒரு கரடியை பூனைக்கு பயப்படச் செய்யப் போறேன்.

பூனைக்கு கரடி பயப்படுமா? என்னய்யா கரடி உடுறே? அப்படின்னு கேட்பவர்களுக்கு,

அது நிசந்தான் என்பதைப் பார்க்க, கீழேயுள்ள URL -ஐ சொடுக்கவும்.

http://www.cnn.com/video/player/player.html?url=/video/offbeat/2006/06/13/cat.bear.in.tree.affl


முதலில் ஏதாவது விளம்பரம் வரும், அதற்குப்பின் இந்தத் தகவல் வரும்..கொஞ்சம் பொறுமையா வெயிட் பண்ணுங்க..

Monday, June 12, 2006

'தகிக்கும் தேகம்'

(தேன்கூடு போட்டிக்கான சிறுகதை .. விளக்கங்களுக்கு பார்க்க)

மாணவரும், மாணவியரும் இணைந்து படிக்கும் 'கோ -எட்' பள்ளி அது. அன்று பிளஸ் ஒன் 'பி' பிரிவு வகுப்பறை எல்லாம் ஒரே பரபரப்பு. அதற்குக் காரணம் அந்தப் புத்தகம்., 'தகிக்கும் தேகம்'.

சுப்பிரமணிதான் அந்த புத்தகத்தை கொண்டு வந்திருந்தான். அவன் அப்பா பஜாரிலே தங்க நகைக்கடை வைத்திருந்தார். அவன் கையில் எப்போதும் பணம் இருக்கும். கல்லூரி படிக்க வேண்டியவன், இப்போதுதான் பிளஸ் ஒன்னிற்கே வந்திருக்கிறான். முளையிலேயே விளைந்தவன். தான் பார்த்ததை, தன் சகாக்களும் பார்க்கட்டும் என்று எடுத்து வந்திருந்தான்.

வண்ணத்தில் பெண்கள் உடற்கூறு காட்டும் அப்புத்தகத்தினை, காலையின் முதல் பீரியடிலேயே பார்த்த இரண்டொரு மூத்த மாணவர்கள் (கல்லூரி பயில வேண்டியவர்கள், இன்னும் பிளஸ் ஒன்னிலேயே இருப்பவர்கள்) குசுகுசு என்று பேசிக் கொள்ள, அரசல் புரசலாக அடுத்த வரிசை மாணவர்களை தொற்றிக்கொண்டது.

இன்டர்வெல்லில் புகைய ஆரம்பித்து, மூன்றாவது பீரியடில் வகுப்பில் உள்ள அனைத்து மாணவரிடையேயும் பற்றிக் கொண்டது.

மாணவியர் பிரிவு, சக மாணவரிடையே உள்ள பரபரப்பை உணர்ந்ததே தவிர, என்னவென்று அடையாளம் கண்டு கொள்ள இயலவில்லை. கூடவே சேர்ந்து படித்தாலும், மாணவர் தனியேவும், மாணவியர் தனியேவும் அமர்ந்திருந்தது அதற்கு ஒரு காரணம்.

ஒரு மேஜையிலிருந்து, அடுத்த மேஜைக்கு அந்தப்புத்தகம், தாவிக் கொண்டிருந்தது. பார்த்த ஒவ்வொரு மாணவரிடையேயும் ஒரு மிரட்சி, திரும்பத்திரும்ப பார்க்க ஆவல், குறுகுறுப்பு. சில மாணவர்கள், அந்தப்புத்தகத்தின் வழவழப்பினை தொடுவது போல், அதிலுள்ள படத்தினை தொட்டுப்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

சூர்யாவின் மனதும் அடித்துக் கொண்டது, எப்போது அந்தப்புத்தகம், அவன் மேஜையை அடையுமென்று. அவனது ஒரு மனது சொல்லியது, பார்க்கக் கூடாதென்று, இன்னொரு மனதோ எப்ப வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

அடிப்படையில் சூர்யா ஒரு புத்தகப்பூச்சி. வகுப்பில் நன்கு படிக்கும் மாணவருள் ஒருவன். மாணவர் மட்டுமல்ல, மாணவியரும் சகஜமாக சந்தேகங்களை நிவர்த்தி செய்ய அவனை அனுகுவர்.

அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது, 'நாமா இந்த புத்தகத்தினை பார்க்க ஆசைப்படுகிறோம்?' என்று. ஆனாலும், என்ன செய்ய. அந்த புத்தகத்தினைப் பற்றி நினைக்கையிலேயே, மனசு கிளர்ந்த்தது. என்னவென்று சொல்ல இயலாமல் உடல் புல்லரிக்கச் செய்தது. அவன் என்ன செய்வான், அவன் வயதின் கோளாறிற்கு.

'ஐயோ, இதோ வந்து விடும், சண்முகம் பார்த்துக் கொண்டு இருக்கிறான், அடுத்து அவன்தான். ஒரு புறம் பரபரப்பு, மறு புறம் பயம். நேரம் கிட்ட வரவர, சூர்யாவின் மனது திடமடைந்து அப்புத்தகத்தை புறக்கணிக்கத் தயாரானது. ஆனால், அதற்குள் மதிய இடைவேளைக்கான மணியடிக்கவே, ஆசிரியர் வெளியே செல்ல, சுப்பிரமணி எழுந்து வந்து சண்முகத்திடம் இருந்து புத்தகத்தைப் பிடுங்கிக் கொண்டான்.

'சூர்யா, லஞ்சுக்கப்பறம் பாரு-ன்னு சொல்லிக்கிட்டு எடுத்துப் போய்விட்டான். 'அப்பாட தப்பித்தோம்' என்றிருந்தது சூர்யாவிற்கு.

'வாங்கடா சாப்பிடலாம்' என்றழைத்த நண்பர் கூட்டத்தோடு சாப்பிடப் போனான். வழக்கமாக சாப்பிடுகையில் ஆசிரியரையோ அல்லது சக நண்பர்களையோ கிண்டலடித்துக் கொண்டு சாப்பிடும் அவர்களிடையே, அன்று 'தகிக்கும் தேகமே' ஹாட் டாபிக் -ஆனது.

சூர்யாவின் மனது மீண்டும் துடிக்க ஆரம்பித்தது. சரி, 'யாருக்கும் தெரியாமல் படிச்சிரலாம்', நம்ம டர்ன் வருகையில 'வேண்டாம்'னு சொல்லிரலாம் என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, 'சரிடா, நான் கிளாஸுக்குப் போறேன், நீங்க பேசிட்டு வாங்கன்னு' சொல்லிப் பிரிந்தான். 'புத்தகப்பூச்சி, இந்தப்புத்தகத்தையும் படிடா...' என்று கிண்டலடித்த நண்பர் கூட்டத்தை சட்டை செய்யாது வேகமாக வகுப்பறை நோக்கி நடந்தான்.

அவன் ஆர்வத்தை அதிகப்படுத்தும் விதமாக, வகுப்பறையில் எவரும் இருக்க வில்லை. , நல்ல வேளை என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டே, வேகமாக சுப்ரமணியின் இடத்தை அடைந்தவன், அப்புத்தகத்தை சுப்ரமணியின் பைகளில் தேடினான். கைகள் நடுங்கின. ஒரு வழியாய் கண்டு பிடித்து எடுத்தவனுக்கு, மனம் 'திக்திக்' என்றடித்தது. புத்தகத்தை எடுத்துக் கொண்டு, அவன் இருக்கைக்கு ஒடினான். மதியத்தின் முதல் வகுப்பான, தமிழ்ப்புத்தகத்தை எடுத்து, அதன் நடுவில் 'தகிக்கும் தேகத்தை' வைத்துப் பக்கங்களைப் புரட்டலானான். அவனது காது மடல்கள் உஷ்ணத்தால் சிவந்தது. அவனது தேகமும் தகித்தது. சில நிமிடங்கள் போயிருக்கும். திடிரென அருகில் நிழலாடவே, என்னவென நிமிர்ந்து பார்த்தவனுக்கு, 'பக்' கென்றிருந்தது. எதிரே கிளாஸ்மேட் வசந்தி நின்றிருந்தாள்.

'என்னடா, இன்னக்கி எல்லாப் பசங்களும் ரகசியம் பேசிக்கிட்டிருந்தீங்க'ன்னு கேட்டுகிட்டு அருகில் வந்தவளைக் கண்டதும், அவசர அவசரமாகப் புத்தகத்தை மூடினான்.

'என்ன நான் கேக்கறேன், ஒன்னும் சொல்ல மாட்டேங்கிற..'. வசந்தி இன்னும் அருகே வந்தாள்.

'வ்வ் வசந்தி..' என்று குழறியபடியே புத்தகத்தை மறைக்க முற்பட்டான். அதற்குள், அவனது தடுமாற்றத்தை உணர்ந்த வசந்தி, சந்தேகத்துடன் அவன் கையில் இருந்த புத்தகத்தைப் பிடுங்க முற்பட, புத்தகம் தந்த படபடப்பும் அவள் வருகையின் அதிர்ச்சியும் சூர்யாவைப் பலமிழக்கச் செய்ய, தமிழ்ப் புத்தகத்துடன் 'தகிக்கும் தேகம்' அவள் கைகளில்.

ஒரு வினாடிதான். வெட்கமோ, கோபமோ அவள் முகமும் சிவந்தது. ..'ச்ச்சீ..' என்று சொல்லியவாறே புத்தகத்தை தூக்கி வீசினாள்.புத்தகம் ஆசிரியர் அமரும் இருக்கையின் பின்னால் உள்ள பலகையின் இடுக்கில் முக்கால்வாசி மறைந்து, கால்வாசி தெரியத் தொங்கியது. படபடப்போடு அவள் இருக்கைக்கு ஓடினாள்.

சூர்யாவுக்கு, படபடப்பெல்லாம் அடங்கி, கண்களில் கண்ணீர் தளும்பியது. எழுந்து சென்று புத்தகத்தை எடுத்து, சுப்ரமணி பையில் வைத்து விடலாமா? என்று எண்ணியவன், மெல்ல வசந்தியின் இருக்கை நோக்க, அவள் இவனை முறைத்துக் கொண்டிருக்கவே, அந்த எண்ணத்தைக் கைவிட்டான்.

அதற்குள் மதிய வகுப்பு அரம்பிக்க மணியடிக்கவே, மாணவர்கள் தம்தம் இருக்கை நோக்கி வர ஆரம்பித்தனர். தமிழாசிரியரும் வந்துவிட்டார். சூர்யாவுக்கு ஓ வென்று அழ வேண்டும் போலிருந்தது. 'ச்சை..ஒழுங்கா சாப்பிட்டுட்டு பசங்க கூடவே இருந்திருந்தா, இம்மாதிரி இக்கட்டு வந்திருக்குமா?, இப்ப எப்படி அந்த புத்தகத்தை எடுக்க, எப்படி தெரியாமல் சுப்ரமணி பையில வைக்க, ஐயோ, கடவுளே' என்று மனசுக்குள் பிதற்றிக் கொண்டிருந்தான்.

அட்டெண்டென்ஸ் எடுத்து முடித்து பாடத்தை துவக்கியிருந்தார் ஆசிரியர். சுப்ரமணி 'தகிக்கும் தேகத்தை'-க் காணவில்லை என சக மாணவரிடையே குசுகுசுப்பது சூர்யாவின் காதில் விழுந்தது. ஆயினும் அவன் கவனமோ, இடுக்கில் மாட்டிக்கொண்டு 'கால்வாசி தெரியும் அந்தப்புத்தகம் ஆசிரியர் கண்களில் பட்டுவிடக்கூடாதே' என்ற கவலையில் இருந்தான். அவ்வப்போது வசந்தியையும் பார்த்துக் கொண்டான்.

செய்யுளின் இலக்கணக் குறிப்பினை விளக்க, ஆசிரியர் எழுந்து போர்டை நோக்கிப் போக, சூர்யா வெலவெலத்தான். 'மானம் கப்பலேறப் போகிறதே' என்று முனகிக்கொண்டே எல்லா இஷ்ட தெய்வங்களையும் வணங்க ஆரம்பித்தான். ஏனோ, அவன் மீது மரியாதையோடு பழகும் சக மாணவ, மாணவியர், அம்மா, அப்பா, தம்பி எல்லோரும் நினைவுக்கு வந்தார்கள்.

இலக்கணக் குறிப்பை எழுதிய ஆசிரியர், சாக்பீஸின் ஒரு துண்டை ஒடித்துப் போட, அது காலடியில் விழவே, அதனை பலகையின் இடுக்கில் தள்ள முற்பட்டார். சூர்யாவிற்கு மயக்கம் வரும்போலிருந்தது. அவன் மாட்டிக் கொண்டுவிட்டான். 'தகிக்கும் தேகம்' அவர் கண்களில் பட்டுவிட்டது.

'ஏன்டா புத்தகத்தை எல்லாம் இங்க போட்டிருக்கிங்க?'ன்னுட்டே புத்தகத்தை எடுத்து புரட்டியவர், ஒரு கணம் திடுக்கிட்டார். அவர் கண்களில் கனல் பறந்தது. மொத்த மாணவரிடையேயும் மயான அமைதி.

சூர்யா எழுந்த விசும்பலை கட்டுப்படுத்தியவாறே, எங்கோ நோக்குவது போல், வசந்தியை நோக்கித் திரும்பினான். அவன் கண்களின் கெஞ்சல் அவளுக்குப் புரிந்திருக்கவேண்டும். சுப்ரமணியோ புத்தகத்துள் முகத்தைப் புதைத்துக் கொண்டிருந்தான்.

கனைத்துக் குரலைச் சரிசெய்து, தன்னைச் சற்று நிதானப்படுத்திக் கொண்டார், தமிழாசிரியர்.

'இத யார் கொண்டுவந்தா? யார் மறைச்சு வச்சா? இதயெல்லாம், நான் கேக்கப் போறது இல்லை, தலைமையாசிரியர்ட்ட சொல்லி தண்டிக்கப் போறதும் இல்லை. ஆனா, இத செஞ்சவங்களுக்காக, வருத்தப் படறேன். இத பசங்கதான் யாரோ கொண்டு வந்திருக்கணும், நீங்க எல்லாரும் வளர்ந்த பசங்க, வளர்ந்துக்கிட்டு இருக்கற பசங்க. இந்த வயசில இது மாதிரியான எண்ணங்கள் வரத்தான் செய்யும், ஆனா அதுல இருந்து மீண்டு வர்ர கத்துக்கணும். இது மாதிரியான புத்தகங்கள் படிக்கறது, கழிவுநீர்த்தொட்டியில முகங்கழுவற மாதிரி. படிச்சி முடிச்ச பின்னும், நாறிக்கிட்டு இருக்கும். உங்க மனசுல இருக்கற, நல் காதல் உணர்வை மறச்சு, வக்கிரமான எண்ணங்களத் தூண்டிவிடும். இந்தமாதிரியான புத்தகங்களைப் படிக்க ஆரம்பிச்சா, உனக்கான கற்பனை வரண்டு, இதிலிருக்கிற தப்பான எண்ணங்கள் மனதை ஆக்ரமிக்கும். காதலோ, காமமோ அது உன்னுடைய உணர்வு, அத இந்த மாதிரியான புத்தகங்கள் சொல்லிக் கொடுக்கிற பாதையில எடுத்துப்போய் உன்னுடைய தனித்துவத்தை இழந்துராதே. சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை, தானே தெரியும், அதுக்கு இந்த மாதிரி புத்தகங்கள் தேவையில்லை. நல்ல காதலையும், காமத்தையும் எத்தனையோ தமிழ் இலக்கியங்கள், பதமாய்-ப்ண்பாய்ச் சொல்லியிருக்கு. ஏன், நம்ம பாடங்கள்ள கூட இருக்கு, அதெல்லாம் படி. இந்த வயதில் காதலும், காமமும் மனசுல வரும்தான். அதெல்லாம் கூடாதுன்னு சொல்ல வரலை, ஆனா, உன்னுடைய எதிர்காலக் கனவ நினைச்சி, இதயெல்லாம் தள்ளிப்போடு. 'உத்தியோகம்தான் புருஷ லட்சணம்', அது நல்ல அமைஞ்சாதான், மற்ற உன் கனவெல்லாம் நனவாகும். நான் சொல்றது யாருக்குப் புரியுதோ இல்லையோ, புரிய வேண்டியவங்களுக்குப் புரிஞ்சா சரி!' என்று சொல்லிக்கொண்டே, 'தகிக்கும் தேகத்தி'னை வகுப்பறையின் சன்னல் வழியே தெரிந்த ஆற்றில் எறிந்தார், 'தகிக்கும் தேகம்' தண்ணீரில் மூழ்கியது.

பயமும் படபடப்பும் ஓடிக்கொண்டிருந்த சூர்யாவின் மனதில், அப்போது ஒரு நல் வளர்சிதை மாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தது!

(கதை பிடிச்சிருக்கா அப்ப வாக்களிக்க .. விபரங்களுக்கு பார்க்க)

Friday, June 09, 2006

விண்டோஸ் - விஸ்டா பேடா மென்பொருள்

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அடுத்த வெளீயீடான, விண்டோஸ் விஸ்டா-வின் மாதிரி வடிவம், இலவசமாக தரவிறக்கம் செய்ய அனுமதிக்கிறார்கள். இதனை ஜுன் 01,2007 வரை நீங்கள் பயன் படுத்திக் கொள்ளலாம். அமெரிக்காவிலுள்ளவர்கள், இதனை DVD-யாகப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு, அனுப்புதல் மற்றும் DVD கட்டணமாக $11 செலுத்தவேண்டும். இதற்கான நிரல்..


http://www.microsoft.com/windowsvista/getready/preview.mspx

Tuesday, June 06, 2006

'ஹம்மிங்பர்ட்'

கழிந்த ஞாயிற்றுக்கிழமை நல்ல சாப்பாட்டுக்கு பிறகு, வீடு ஒதுங்க வைக்கணும்னு பிளான். ஆனா, 'அல்வா' பாண்டி 'இன்னைக்கி வேணாண்டா'ன்னு கொட்டாவி விட்டுக்கிட்டே சொன்னாரு. 'அண்ணாச்சி, இதயேதான் ரெண்டு வாரமா சொல்லிட்டு இருக்கிய, இன்னக்கி எப்படியிம் பண்ணிரனும்னு சொல்லிக்கிட்டெ, சும்மா செய்ய ஆரம்பிச்சா போரடிக்க ஆரம்பிச்சிரும்னு, எதாவது பாட்டு ஒன்ன போட்டுட்டே ஆரம்பிக்கலாம்னு சொன்னேன். அப்படின்னா 'ஹரிணி' பாட்டு போட்றா-ன்னார். (பாண்டிக்கு ஹரிணி குரல் பிடிக்கறதுக்கு இன்னொரு காரணம், 'சிம்ரன்'-னுக்கு அந்த வாய்ஸ் ஃபிட் ஆறதும் ஒன்னு. ) எனக்கோ 'ஜானகி' ஹிட்ஸ் போடணும்னு நினைப்பு, ஆனா 'அல்வா' பாண்டிக்கு 'ஹரிணி' ஹிட்ஸ் வேணும்னு ஆசை. எனக்கும் ஹரிணி புடிக்கும்தான், ஆனா, ஜானகி பாட்டு கேக்க ஆசை, என்ன பண்ணுறது! சரிடா மக்கா, 'பூவா/தலையா' போட்டு பாத்து டிசைட் பண்ணலாம்னு சொல்லவே, சரிடான்னு ஒரு 'குவார்ட்டர' எடுத்தோம். (குவார்ட்டர்-னா, அந்த குவார்ட்டர் இல்லங்கண்ணா, டாலர் குவார்ட்டர்). பாண்டியே டாஸ் போட்டாரு, எனக்கு எப்போதும் 'பூ' தான் பிடிக்கும், அததான் கேப்பேன்னு தெரிஞ்சுகிட்டு, அது வராத மாதிரி இருக்க, பூவை வைத்தே டாஸ் பண்ணினாரு. ஆனா, அன்னைக்கு 'லக்' எனக்காச்சே.. விழுந்தது 'பூ'.. அண்ணாத்த டான்ஸப்போட்டுக்கிட்டே, சிடி-யை எடுக்க, 'அல்வா' பாண்டி 'வாழுடா'ன்னு வாழ்த்திக்கிட்டே பொட்டி எடுக்கப்போனார்.

சிடியை போட்டா, மொத பாட்டே, ஜானகியம்மா 'ல லி ல லி ல லோ..' ன்னு ஆரம்பிச்சாங்க.. குறைச்சிருந்த 'வால்யூம' கொஞ்சம் கூட்டினேன். பாண்டி அதுக்குள்ளே எச்சரிக்கை பண்ணினார். அமெரிக்கால அழகழகா சவுண்ட் சிஸ்டம் இருந்தென்ன புண்ணியம், ஒரு பிடிச்ச பாட்ட சத்தம் வச்சி கேக்க முடியுதான்னு முனகிக்கிட்டே, குறைக்கிற மாதிரி குறச்சேன். ஆனாலும், அந்த ஹம்மிங்-க குறைக்க மனசு வரல.. ராஜாவும் கலக்கியிருப்பாரு.. மச்சானப் பாத்தீங்களா-ன்னு அப்படியே மெல்லிய சிரிப்போட பாடுற வாய்ஸ், மழை பெய்யுறப்ப வர்ற மண்வாசம் மாதிரி..அப்படியே ஊருப்பக்கம் கூட்டிக்கிட்டு போயிடுச்சு..

அடுத்த பாட்டு... 'அ ஆங் ஹா..' ன்னு ஜானகியம்மாவோட ஹம்மிங்.. அப்படியெ மனச பிசையற மெலடி. 'அன்னக்கிளி' உன்னத்தேடுதே..'..

அடுத்த பாட்டு 'சிங்கார வேலனே தேவா'ன்னு நாதஸ்வரத்தோடு, இணைஞ்சி பாடற பாட்டு.. என்ன படம்னு தெரியல, யாருக்குப் பிண்ணனி பாடுனாங்கன்னு தெரியல..அப்படியெ ஒரு கண்ணியமான இளம் பெண்ணுக்கு பாடற மாதிரி சின்னத்துறுதுறுப்புடன் பாடியிருப்பாங்க..

ஒவ்வொரு பாட்டா அங்க நின்னு, இங்க நின்னு கேட்டுக்கிட்டு இருக்கறதப்பாத்த 'அல்வா' பாண்டி, 'எல என்னா, எல்லாத்தயும் எந் தலயில கட்டிக்கிட்டு, நீ சோக்கா பாட்டு கேக்க' ன்னு சத்தம் போடவே, கொஞ்சம் குற்ற உணர்ச்சியுடன் 'இதோ வந்துட்டம்வே-ன்னு சொல்லிக்கிட்டே கூடமாட ஒத்தாச பண்ணப்போனேன்..

அந்த 'ல லி ல லோ' மட்டும் காதுக்குள்ளேயே ஒலிச்சிக்கிட்டிருந்தது..

Friday, June 02, 2006

தமிழ் கட்டாயப்பாடம். மேலும் சில தேவைகள்

தமிழ் கட்டாயப்பாடம் மட்டுமல்ல, மேலும் சில தேவைகள் இருக்கிறது, தமிழ் வளர..அது குறித்து என் எண்ணங்களின் ஒரு பதிவு..

நம்முள் சில அடிப்படை எண்ண மாறுதல்கள் ஏற்பட வேண்டும். இன்றைய சூழலில், அனைவரும், பொருளாதார ரீதியாக பின் தங்கிய குடும்பங்கள் உட்பட, கஷ்டப்பட்டாவது தங்கள் பிள்ளைகள் ஆங்கில வழிக்கல்வி கற்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். மம்மி, டாடி என்று பிள்ளைகள் அழைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். தமிழ்வழிக் கல்வியை வெறுக்கிறார்கள் என்று சொல்லவில்லை, ஆங்கிலவழிக் கல்வியை மோகிக்கிறார்கள் என்று சொல்ல வருகிறேன். ஆரம்ப நிலை ஆங்கிலவழிக்கல்விக்கூடங்களில், பிள்ளைகள் மனனம் செய்யவே கற்கிறார்களே அன்றி, வேறல்ல. ஆங்கிலவழிக் கல்வியைக் குறை கூறவில்லை. ஆங்கில மொழியும் தேவையானது தான். தம்தம் தாய்மொழி வழியில் பயில்கின்ற பாடங்கள், கற்கின்ற பாடங்களின் சிந்தனையைத் தூண்ட வல்லது என்பது உண்மை. இதை பெற்றோரும் உணர வேண்டும். தமிழ்க்குழந்தைகள் தமிழை நன்கு பேச, கற்க, எழுத உதவ வேண்டும்.

அடுத்து கற்பிக்கின்ற ஆசிரியர் வட்டம். பயிற்றுவிக்கின்ற ஆசிரியர்களும் ஆர்வத்தோடு, மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாக தமிழ் வகுப்புகளைக் கையாள வேண்டும். (இந்த வகையில் நான் மிகவும் கொடுத்து வைத்தவன், எனக்கு கிடைத்த எல்லா தமிழ் மற்றும் கணித ஆசிரியர்கள் மிக வல்லவர்கள் ). அதுவே மாணவர்களுக்கு மேலும் கற்க, ஆர்வம் தரும். கதை, கவிதை, கட்டுரை எழுத, வாசிக்கத் தூண்ட வேண்டும். இவையெல்லாம், வெறும் கடமைக்காக மட்டுமின்றி, தமிழார்வத்தோடு செய்பவராயிருத்தல் வேண்டும். 'தமிழ் தானே' என்ற மனப்பான்மையோடு கற்போரும், கற்பிப்போரும் இருத்தல் கூடாது.

அடுத்து பல்வேறு துறை வல்லுநர்கள், தம்தம் துறையில் பயன்படுத்துகின்ற ஆங்கில வழிச்சொற்களுக்கு, இணையான தமிழ்ச்சொற்களை அடையாளம் காண வேண்டும். அவற்றை நடைமுறைப் படுத்த வேண்டும். இச் சொற்கள், தமிழகராதியில் சேர்க்கப்பட வேண்டும், அது எல்லோரும் அறியும் விதமாக இருக்க வேண்டும். தமிழ் கட்டாயப்பாடத்தோடு, இந்த மாறுதல்களும் நடைமுறைப்படுத்தப் பட்டால்தான், தமிழின் வளர்ச்சி நிலையாகும்!

உங்கள் பணிகளை திட்டமிட ஒரு மென்பொருள்.

சமீபமாய் இந்த 'TimeTo' மென்பொருளை இறக்கம் செய்து உபயோகித்து வருகிறேன். மிகப் பயனுள்ளதாக இருக்கிறது. மென்பொருள் பயன்படுத்துவோருக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் பயன்படும் என்றே தோன்றுகிறது. செய்ய வேண்டிய பணிகளை, முன்னதாக திட்டமிட்டு இதில் பதிவு செய்து விட்டால், அந்தந்த நாட்களில் அதுவே நினைவு படுத்தும். நாட்குறிப்பில் திட்டமிடுவோர், அதனை இதில் பதிவு செய்தால், சுலபமாக நினைவுபடுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு முறை இந்த மென்பொருளை, திறக்கும் போதும், இன்னும் நிறைவு பெறாப் பணிகளை உங்களுக்கு நினைவு படுத்தும். கடன் காரரிடம் கடன் வசூலிக்க வேண்டுமா? அல்லது மின்வரி கட்ட வேண்டுமா?, அந்த வேண்டிய நாளை முன்கூட்டியெ இதில் குறித்து விட்டால், அந்த நாளில் அதனை நினைவு படுத்தும். ஒரு நாளில் முடிக்க வேண்டிய பணிகள் அதிகமா, அதனைச் சமமாக பங்கிட வேண்டுமா?, அதனைச் செய்ய பரிந்துரை செய்யும். இப்போதுதான், கணிணியின் பயன்பாடு எல்லோர் வீடுகளுக்கும் வரத்துவங்கிவிட்டதே!, இந்த ஒரு பயன்பாட்டுக்கும் உதவட்டுமே!

இந்த மென்பொருள் இயங்க, மிகக் குறைந்த அளவே இடம் தேவை. இது ஒரு 'Flash Drive'-லிருந்தே இயங்க வல்லது. (Flash Drive பற்றிய முன்னோட்டம் கான : http://vinmathi.blogspot.com/2006/05/flash-drive.html) மின்னல் தட்டில் (Flash Drive) பதிவு செய்து, அதில் இருந்தே இம்மென்பொருளை உபயோகிக்கலாம். எனவே, உபயோகிக்கின்ற எல்லாக் கணிணிகளிலும் இந்த மென்பொருள் பதியப்பட வேண்டிய அவசியம் இல்லை.

மிகக் குறைந்த அளவே இதன் பண்புகளைச் சொல்லியிருக்கிறேன், மீதியை இம்மென்பொருளுடன் வரும் 'வழிகாட்டி'யின் உதவியை நாடுங்கள். இது விண்டோஸில்தான் இயங்கும். இது இலவச மென்பொருளாய் இருப்பது, இன்னும் சிறப்பு.

இம்மென்பொருளை இறக்கம் செய்ய, கீழுள்ள நிரலை உபயோகியுங்கள்.

http://davidberman.com/software/timeto.php